கேள்வி பதில்கள்

WhatsApp Image 2025 02 25 at 16.03.47 e2c2a753

ஆசிரியர்: டி. யஷ்வந்த் குமார்

தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்

(1 கொரிந்தியர் 14:33-35), (1 தீமோத்தேயு 2:11-12) ஆகிய இரண்டு வசங்களை வாசித்த பிறகு, பெண்கள் எக்காரணத்தை கொண்டும் திருச்சபையில் பேசக்கூடாது. (அமைதியாக இருக்கவேண்டும்) என்று அப். பவுல் சொல்கிறாரா? என்ற சந்தேகம் வரக்கூடும், நாம் இந்த வசனங்களை சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் மிக கவனமாக வேதத்தை ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும்.

1 கொரிந்தியர் 14:33-35

வசனம் 33. தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

வசனம் 34. சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.

வசனம் 35. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

இந்த அதிகாரத்தில் அப். பவுல் கொரிந்து திருச்சபையில் உள்ள ஒரு பிரச்சனையை எடுத்துரைக்கிறார். கொரிந்தியர்கள் சபையாக கூடி வரும்போது கலவரம் செய்தனர் (வசனம். 33). கொரிந்து திருச்சபையில் உள்ளவர்கள் தங்கள் விரும்பும்போல் என்ன வேண்டுமென்றாலும் செய்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஒழுங்குமுறை எதுவுமின்றி தன்னிச்சையாக செயல்பட்டனர். வேற்று மொழிகளை (அந்நிய பாஷை) பேசும் வரமுள்ள ஒருவான் பேசும்போது, அந்த வேற்று மொழியை விளக்குவதற்கு யாரும் இல்லாததால், அதே நேரத்தில் தீர்க்கதரிசன வரமுள்ள மற்றொரு மனிதன் தேவனின் வெளிப்பாட்டை உரத்த குரலில் அறிவிக்கிறான்.

சபை கூடுகையின் போது இப்படிப்பட்ட சூழ்நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். யார் பேசுகிறார்கள், என்ன சொல்கிறார்கள், எதுவுமே சரியாகக் கேட்காமல், ஒன்றும் புரியாமல், எல்லாம் குழப்பமாக இருக்கும். அத்தகைய கூடுகையில் கலந்துக் கொள்பவர்களுக்கு எந்தவித பயனும் வருவதில்லை. இந்த நிலைமையை சரிசெய்யவே, அப். பவுல் கொரிந்து சபைக்கு இந்த அதிகாரத்தின் வார்த்தைகளை எழுதினார். அதனால்தான், “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.” என்று சொல்லி இந்த அதிகாரத்தை முடித்தார். (1 கொரிந்தியர் 14:40) மேலும் அப். பவுல் முக்கியமாக மூன்று பேரை அமைதியாக இருக்கச் சொல்கிறார்.

“முதலாவதாக, வேற்று மொழி (அந்நிய பாஷை) பேசும் நபர். ஒருவேளை அந்த சமயத்தில் வேறொருவர் பேசினால், அர்த்தம் சொல்லும் நபர் இல்லையென்றால், இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்நிய பாஷைகளில் பேசுபவர் அமைதியாக இருக்க வேண்டும். “யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.” (2 கொரிந்தியர் 14:27-28).

“இரண்டாவதாக, தீர்க்கதரிசி” ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லும்போது, ​​மற்ற தீர்க்கதரிசிகள் அமைதியாக இருக்க வேண்டும். “தீர்க்கதரிசிகள் இரண்டு பேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்.” (2 கொரிந்தியர் 14:34,35).

“மூன்றவதாக பெண்கள், “உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும், அதாவது சபையாக கூடி வரும்போது மௌனமாக இருக்கவேண்டும்.” (2 கொரிந்தியர் 14:34,35) இனி பெண்கள் மௌனமாய் இருப்பதைப் பற்றி சிந்திப்போம். கொரிந்து சபையில் நிலைமை மோசமாக இருப்பதால், அப். பவுல் இந்த வார்த்தைகளை கொரிந்து சபைக்கு மட்டுமே எழுதுகிறார் என்று நினைக்க முடியாது. ஏனெனில், 33 - வது வசனத்தில் அப். பவுல் இவ்விதமாக கூறுகிறார். “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.” எல்லா திருச்சபைகளையும் மனதில் வைத்துத்தான் அப். பவுல் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார் என்று நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும் இந்தக் கண்ணோட்டத்தை வலுப்படுத்தும் விதமாக  (1 கொரிந்தியர் 4:17) – ம் வசனத்தில் அப். பவுல் இவ்விதமாக சொல்லுகிறார்.

“கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.” அப். பவுல், ஒவ்வொரு சபைக்கும் வெவ்வேறான விதிமுறை அல்லாமல் எல்லா சபைகளிலும் ஒரே விஷயத்தைப் போதிக்கிறார், என்பதாக நமக்கு புரிகிறது. அப். பவுலின் வார்த்தைகளை இப்படியும் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. 'மீதமுள்ள எல்லா சபைகளும் கண்ணியமாகவும், ஒழுங்காகவும் திருச்சபையை நடத்தும் போது, ​​நீங்கள் (கொரிந்துவில் உள்ள நீங்கள்) தேவனின் கட்டளைக்கு எதிராகச் சென்று பெண்களை அதிகாரத்துடன் கற்பிக்கும் ஊழியத்திற்கு அனுமதிக்கிறீர்கள். எனவே இந்த விதிமுறை அனைத்து உள்ளூர் திருச்சபைக்கும் பொருந்தும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த வசனப் பகுதியில், பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நியமத்தை கொரிந்து திருச்சபைக்கு அப். பவுல் குறிப்பிடுகிறார். சபையாக பெண்கள் ஒன்று கூடும் போது தீர்க்கதரிசனம் சொல்லும் ஊழியத்தையோ அந்நிய பாஷைகளில் பேசும் ஊழியத்தையோ செய்ய முடியாது என்கிறார். இந்த விதியைச் சுட்டிக் காட்டிய பிறகு, அதற்குப் பின்னால் உள்ள காரணங்களை விளக்கி, திருச்சபையில் இருக்க வேண்டிய தேவனின் ஒழுங்கு முறைகளை பற்றி கூறுகிறார். "சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.” இந்த விதிமுறைகள் முதலில் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டது. இப்போது இது புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் அல்லது நியபிரமானத்தில் கூறப்பட்டுள்ள படி யூதர்கள் தங்கள் ஜெப ஆலயங்களிலும் இந்த விதியை கண்டிப்பாக பின்பற்றினார்கள். ஜெப ஆலயங்களில் பெண்கள் வேதத்தை வாசிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. படிக்கத் தெரிந்த குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் பெண்கள் அதற்கு அனுமதிக்கப்படவில்லை.

(ஆதியாகமம் 3:16) “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.” இது ஏவாளின் மீது தேவனின் சாபம். இதன் பொருள் 'நீ உன் கணவனை ஆள முயற்சி செய்வாய், & நீ அவன் மீது அதிகாரம் செலுத்த முயற்சி செய்வாய், ஆனால் அவன் உன்னை ஆளுகை செய்வான். அல்லது அவன் உன்னை அடக்க முயற்சித்து, உன்னை அவனுடைய கைக்குள் வைத்து உங்களை ஆளுகை செய்வான். இந்த சாபத்தைப் பற்றி மேலும் அறிய ஆதியாகமம் 3- ம் அதிகராத்தின் விளக்கத்தைப் வாசியுங்கள்.

இந்த சாபத்திற்கு மாறாக, பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தேவனுடைய நியபிரமானத்தில் கூறினார். அப். பவுலும் இதையே நினைவுபடுத்தி, திருச்சபையாக கூடும் போது பிரசங்கிப்பதும் அல்லது போதிப்பதும் அதிகாரத்தோடு கூடிய பணி, எனவே அத்தகைய ஊழியத்தை பெண்கள் செய்யக்கூடாது, ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறுகிறார். வேதத்தில் தேவன் சில பெண்களை எழுப்பி, அந்தந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறான தேவன் அவர்களைத் தம்முடைய பணியில் பயன்படுத்தியதைக் காணலாம். உதாரணமாக: தெபோராள், உல்தாள், அன்னா. இவர்கள் யாரும் சபையில் பிரசங்கிக்கும் ஊழியத்தை செய்யவில்லை எனவே, பெண்கள் திருச்சபையில் பிரசங்கிக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை உறுதிப்படுத்த அவர்களின் உதாரணங்களை நாம் எடுத்துக்கொள்ள முடியாது.

(1 தீமோத்தேயு 2:11-14) வசனப் பகுதியில் அப். பவுல் ஆதியாகமத்தின் முதல் மூன்று அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதே விஷயங்களை நினைவுபடுத்துவதன் மூலம் இந்த விதியை உறுதிப்படுத்த முயற்சிக்கிறார். அந்த வசனத்தை பிறகு சிந்திப்போம்.

இன்று பெரும்பாலான திருச்சபைகளில் கொரிந்து சபையைப் போலவே பெண்களை பிரசங்கிக்க அனுமதிக்கின்றன. இது தற்செயல் நிகழ்வு அல்ல. இத்தகைய திருச்சபைகள் மற்றும் சபை பிரிவுகளை நிறுவியவர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு செய்தல் என்பது மனிதனுக்கு மட்டும் தேவன் வழங்கிய பாத்திரத்தையும் பதவியையும் கைப்பற்றுவது அல்லது அபகரிப்பதாகும். இது முற்றிலும் வேதத்திற்கு எதிர்மறையான அணுகுமுறை. அது மேலும் பல முரண்பாடான செயல்களுக்கு வழிவகுக்கிறது. திருச்சபையில் உள்ள சில பெண்களுக்கு சிறந்த வகையில் போதிக்கும் திறமை இருக்கலாம், மேலும் பல வரங்களும், தலைமைத்துவ திறன்களும் மற்றும் தலைமைத்துவ குணங்கள் இருக்கலாம், ஆனால் சபையில் உள்ள ஆண்களுக்கு எதிராக அவர்களைப் பயன்படுத்த முடியாது அவ்வாறு செய்யவது பெண்ணுக்கு மட்டுமின்றி, சபை பெரியவர்களுக்கும், இதுபோன்ற சபைகளைச் சேர்ந்த அனைவருக்கும் அவமானம். என்று அப். பவுல் கூறுகிறார்.

மேலும், “அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்;” ஏதாவது தீர்க்கதரிசனம் குறித்து ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அவைகள் குறித்து சரியான முறையில் கேட்டு தெரிந்துக்கொள்ளும் முறை கொரிந்து திருச்சபையில் இல்லை, ஆதலால், பெண்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அது பாராட்டப்பட வேண்டிய விஷயமாக இருந்தாலும், சபையாக கூடும் போது கேள்வி கேட்பதற்குப் பதிலாக, "வீட்டிற்குச் சென்ற பிறகு, உங்கள் கணவரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்" (வசனம் 35) என்று அப். பவுல் சொல்கிறார். இந்த வார்த்தைகளை மிகவும் கவனமாக விளக்க கொள்ள வேண்டும். பெண்கள் எப்போதும் கேள்விகளைக் கேட்கவே கூடாது என்று சொல்லவில்லை. சபையாக கூடும் போது அவ்வாறு செய்யகூடாது என்கிறார். பொதுவாக, அனைத்து சபை பிரிவுகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் வேதபாட வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதுபோன்ற சமயங்களில் கேள்வி கேட்பதில் பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதேபோல, தன் கணவரிடம் கேட்டு கற்றுக்கொள்ளுங்கள் என்று அப். பவுல் கூறும்போது, ​​கணவர்கள் வேத வார்த்தையின் சத்தியங்களை சரியாகப் புரிந்துகொண்டு தங்கள் மனைவிகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று அவர் சொல்லாமல் சொல்லுகிறார். இது அனைத்து கணவன் மனைவிகளுக்கும் பொருந்தும் பொதுவான விதி. ஒருவேளை மனைவி தெரிந்து கொள்ள விரும்புவதைப் பற்றி கணவனுக்கு சரியான புரிதல் இல்லையென்றால், அவள் திருச்சபை போதகர், மற்றும் சபையின் பெரியவர்கள் அல்லது வேத வார்த்தையின் அறிவு உள்ள வேறு எந்த ஆண்களையும் அணுகுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கற்றுக் கொள்ளக் வேண்டுமென்றால் கணவனிடமே கற்க வேண்டும், இல்லையேல் கற்பதை நிறுத்த விட வேண்டும் என்று அப். பவுல் தடை விதிக்கவில்லை. முழு சபையும் தேவனை ஆராதிக்க கூடும் போது, ​​பெண் பிரசங்கிக்காமல், அதிகாரத்துடன் கூடிய ஊழியங்களில் பங்கேற்காமல், திருச்சபையில் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அதே விஷயத்தைப் பற்றி இன்னும் பேசும்போது வசனம் 36 - ல் “தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? என்று கேட்கிறார். இல்லை, சுவிசேஷத்தின் பிரசங்கம் முதலில் யூதேயாவில் தொடங்கியது. அப்போஸ்தலர்கள் முதலில் யூதர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தனர், முதலில் தங்கள் சொந்த நாட்டில் தான் திருச்சபைகளை நிறுவினர். அதன் பிறகுதான் அவர்கள் புறஜாதியாருக்கு சுவிசேஷத்தை எடுத்துச் சென்றனர். எனவே முதலில் நிறுவப்பட்ட சபைகள் எந்த விதாமாக இயங்குகிறதோ? அந்த விதாமாகவே பின்பற்றுமாறு கொரிந்து சபைக்கு அப். பவுல் கூறுகிறார். முதலில் ஸ்தாபிக்கப்பட்ட சபைகள் பெண்களை பிரசங்கிக்க அனுமதிக்காத போது நீங்கள் ஏன் பெண்களை பிரசங்கிக்க அனுமதிக்கிறீர்கள் என்று கேட்கிறார். "உங்களிடம் மட்டுமே வந்ததா?" உங்களில் ஒருவருக்கு மட்டும் சுவிசேஷம் வந்திருக்கிறதா? கண்டிப்பாக இல்லை.

மேலும் பல நாடுகளுக்கும், நகரங்களுக்கும், சபைகளுக்கும் சுவிசேஷம் பரவியது. பின்பு ஏன் யாரும், எந்த சபையிலும், அனுமதிக்காத நடைமுறைகளையும் ஏன் அனுமதிக்கிறீர்கள்? மற்றவற்றை விட வித்தியாசமாக ஏன் செய்ய விரும்புகிறீர்கள்? மற்ற சபைகளில் உள்ளவர்களுக்கும் வரங்கள் இருந்தாலும், அவர்கள் விசுவாச துரோகிகளாக இருந்து, இதுபோன்ற புதிய நடைமுறைகளை சபையில் புகுத்தத் துணியாமல் இருக்கும் போது நீங்கள் ஏன் அப்போஸ்தல போதனைக்கு எதிராகச் செல்கிறீர்கள்? என்று அப். பவுல் கேள்வி கேட்கிறார்.

(1 கொரிந்தியர் 11:5) –ம் வசனத்தில் “ஜெபம்பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்.” என்று கூறுகிறது. ஆனால் 11 - ம் அதிகாரம் முழுவதும், சபையாக ஒன்று கூடும் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகளை அப். பவுல் குறிப்பிடுகிறார், என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒருவேளை பொது இடங்களில் ஜெபம் செய்வதையும் தீர்க்கதரிசனம் சொல்வதையும் பற்றி பேசியிருக்காலாம்.

அதேப்போல (அப்போஸ்தலர் 2:17) – ம் வசனத்தை மேற்க்கோள் சுட்டிக்காட்டும் சிலர், இந்த வசனம் குமாரத்திகள் கூட தீர்க்கதரிசனம் கூறுவதாக சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள். “கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.” உண்மைதான், குமாரத்திகள் அல்லது பெண்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். பெண்கள் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை என்று சொல்ல முடியாது. சில பெண்களுக்கு பிலிப்பு என்பவனின் குமாரத்திகளைப் போல தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் இருந்திருக்கலாம். (அப்போஸ்தலர் 21:9), ஆனால், சபையாக கூடும்போது அவர்கள் ஆண்கள் முன்னிலையில், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது போல் அவர்கள் சபையில் தீர்க்கதரிசனம் சொல்லக்கூடாது என்று அப். பவுல் கூறுகிறார்.

இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடாமல் இந்தக் கட்டுரையை முடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆண்களோ பெண்களோ என்ன தீர்க்கதரிசனம் சொன்னார்கள்? அந்நியபாஷைகளின் வரமும், தீர்க்கதரிசன வரமும் (புதிய வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் அர்த்தத்தில்) அப்போஸ்தலர்களின் காலத்துடன் நின்றுவிட்டன, எனவே அந்தக் காலகட்டத்தில் தீர்க்கதரிசனம் மற்றும் அந்நியபாஷைகளில் பேசிய எவரும் அப்போஸ்தலர்களின் போதனையின் எல்லைக்குள் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், திருச்சபைக்கு தேவை என்று தேவன் நினைக்கும் எந்த சத்தியத்தையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெறவில்லை என்று சொல்லமுடியாது. நமக்கு அருளப்பட்ட 66 புத்தகளான வேதம் தேவனின் முழுமையான வெளிப்பாடாகும். இது நமக்கு போதுமானது, நிறைவானது, முழுமையானது. தேவனின் வெளிப்பாடு முழுமையானது, மேலும் அந்த முழுமையான வெளிப்பாடான வேதம் அப்போஸ்தல காலத்திலே நமக்குக் கொடுக்கப்பட்டதால், இன்றும் தேவன் புதிய வெளிப்பாடுகளை வழங்க வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் அந்த ஆசீர்வாதங்கள் இன்று திருச்சபையில் யாருக்கும் வழங்கப்படுவதில்லை, நின்றுவிட்டது. அதுமட்டுமல்லாமல், தீர்க்கதரிசனம் சொல்வது என்பது ஏற்கனவே கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டை அறிவிப்பது அல்லது கற்பிப்பது மற்றும் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் 'தீர்க்கதரிசிகள்' மற்றும் 'தீர்க்கதரிசனம்' என்று கூறப்படுகிறது. எந்த அர்த்தத்திலும் எடுத்துக்கொண்டாலும் திருச்சபையில் பெண்கள் தீர்க்கதரிசனம் சொல்லவோ அல்லது போதிக்கவோ வேத வசனம் அனுமதிப்பதில்லை.

(1 தீமோத்தேயு 2:11-12) “ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாய் இருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.”

சபையாக கூடும் போது போதிக்கும் பணியை யார் செய்ய வேண்டும் என்பது பற்றி அப். பவுல் இந்த வசனத்தில் தெளிவாக கூறுகிறார். சபையில் உள்ள ஆண்களுக்கு பெண்கள் போதிக்ககூடாது. அவள் அமைதியாக இருந்து ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்டு கற்றுக்கொள்ள வேண்டும். திருச்சபை எல்லா கூடுகை முழுவதும் பேசக்கூடாது என்று பொருளில்லை, பெண்கள் கூடுகையில் ஜெபம் செய்யலாம், பாடல்களைப் பாடலாம் மற்றும் சாட்சிகளை பகிர்ந்துக்கொள்ளலாம். பெண்கள் எப்போதுமே போதிக்க கூடாது என்றும் அர்த்தமில்லை.

பெண்கள் சக பெண்களுக்கு அல்லது இளம் பெண்களுக்கு போதிக்கலாம். (தீத்து 2:3-4); “முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும்,” தனிப்பட்ட ஊழியத்தின் ஒரு பகுதியாக, ஆக்கில்லா, பிரிஸ்கில்லா அப்பொல்லோவுக்குக் கற்றுக் கொடுத்தது போல் போதிக்கலாம். (அப்போஸ்தலர் 18:26); “அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.” குழந்தைகளுக்கு தேவனுடைய வார்த்தையை கற்பிக்கலாம், பெண்கள் கூடுகையிலும் போதிக்கலாம்.

அடுத்த வசனத்தில், பெண்கள் ஏன் சபையில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும் அப். பவுல் கூறுகிறார். என்னத்தினாலெனில், (1 திமோத்தேயு 2:13,14) “முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.” தேவன் முதலில் மனிதர்களைப் படைத்த வரிசையின் அடிப்படையில் பெண்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்ற நியமத்தை அப். பவுல் குறிப்பிடுகிறார். மற்றப்படி இந்த நியமத்தை எபேசிய நகரவாசிகளின் கலாச்சாரத்தை அடிப்படையாக இந்த காரியத்தை சொல்லவில்லை, அல்லது அவரே சுயமாக இந்த உபதேசத்தை உருவாக்கவில்லை. இந்த நியமம் படைப்பின் வரிசையிலே உள்ளது.

அதே சத்தியத்தை கொரிந்து சபைக்கும் அப். பவுல் கூறுகிறார். (1 கொரிந்தியர் 11:8-9). “புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.” இந்த நிகழ்வைப் பற்றி ஆதியாகமம் 3 - ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை என்பது மட்டுமல்ல், தேவன் நியமித்த ஆண் பெண் என்ற பேதத்தை அவர்கள் மீறினார்கள். எப்படியென்றால், ஏவாள் ஆதாமின் அதிகாரத்தை நிராகரித்து, சாத்தான் சொன்ன விசயத்தை ஆதாமின் பார்வைக்கு கொண்டுப்போகமால், அவளே அந்த பழத்தை தானே சாப்பிட முடிவு செய்கிறாள்.

மேலும், ஏவாள் பழத்தை உண்பதின் மூலம், ஆதாம் ஏவாளைப் பின்தொடர்ந்து, அவளுக்குக் கீழ்ப்படிந்ததினால் தனது தலைமைப் பொறுப்பை புறக்கணித்தான். அதனால்தான் தேவன் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; என்று அந்த காரனத்தினால் தான் சபித்தார். படைப்பின் வரிசையிலும், தேவனின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படியாமையிலும், தேவனின் சாபத்தின் பின்னணியிலும், இவை அனைத்திலும் தேவனால் நியமிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்களின் பாத்திரங்களை நாம் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம். ஆதியாகமத்தின் தொடக்கத்திலிருந்தே, தேவன் மனிதனுக்கு அதிகாரம் மற்றும் ஆளுகை நிறைந்த பொறுப்பான பாத்திரத்தை, கொடுத்தார் என்று வேதம் மிகத் தெளிவாகக் போதிக்கிறது. “பெண் அமைதியாக இருக்க வேண்டும், முழுமையான கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள வேண்டும். “அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.”

“ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்” அவள் மட்டுமல்ல, எல்லா மனிதகுலமும் அவள் மூலம் ஆத்மீக வீழ்ச்சியை அடைந்தார்கள். அதற்கு முதல் பெண்னான ஏவாளே காரணம். அந்த அவமானம், கலங்கம், இழிவு அவளுக்குப் பிறகு எல்லா பெண்களுக்கும் பொருந்தும். ஆனால் தீர்வு இல்லை. அந்த இழிவிலிருந்து பெண்கள் எவ்வாறு மீட்க்கபடுவது & இரட்சிக்கப்படுவது. எவ்வாறு என்று பவுல் கூறுகிறார். (1 தீமோத்தேயு 2:15) “அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.” இந்த வசனத்திள் இரட்சிப்பு என்பது குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலம் பெண்கள் தங்கள் பாவத்தின் தண்டனையிலிருந்து மீட்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெறுகிறார்கள் என்று அர்த்தமல்ல. ஏனென்றால் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான இரட்சிப்பைக் கொண்டுள்ளனர். இரட்சிப்பு என்பது விசுவாசத்தின் மூலம் கிருபையினால் மட்டுமே.

பெண் என்பவள் மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கு காரணமானாள், அந்த வீழ்ச்சியிலிருந்து பெண்கள் இரட்சிக்க படுவதென்பது குழந்தை பெற்றெடுப்பதன் மூலம் நிகழ்கிறது என்று அப். பவுல் கூறுகிறார். இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்? பெண்கள் தங்கள் குழந்தைகளை தேவ பக்தியில் வளர்ப்பதால், அவர்கள் மனிதர்களை பாவத்திலிருந்து காப்பாற்றுபவர்களாக ஆகிறார்கள். எனவே, அவர்களின் மீது இருக்கும் களங்கத்திலிருந்து காப்பாற்ற படுகிறார்கள். குழந்தைகள் தாயின் வயிற்றில் உருவானது முதல், பிறந்தது முதல் குழந்தைப் பருவம் வரை, தாயுடன் ஒரு சிறப்புப் பிணைப்பைக் கொண்டுள்ளனர். அத்தகைய பற்று தந்தையிடம் இல்லை. குழந்தைகளை தேவபக்தியில் வளர்க்கும் பொறுப்பு முதன்மையாக தாயிடம் உள்ளது.

தாயினுடைய வளர்ப்பு குழந்தையின் உணர்ச்சி நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே அப். பவுல் சொல்வது என்னவென்றால், ஒரு பெண் மனித குலத்தை பாவத்திற்குள் வழி நடத்தினாள், ஆனால் மனிதர்களை பாவத்திலிருந்து தேவனிடதிற்கு வழிநடத்தும் பாக்கியம் பெண்களுக்கு கிடைத்தது. இதன் பொருள் குழந்தைகளின் இரட்சிப்பு முழுக்க தாயின் வளர்ப்பிலே உள்ளது என்பதல்ல, குழந்தைகளின் மீது தாய்க்கு எந்தவித செல்வாக்கும் இல்லை என்றும், அவர்கள் இரட்சிக்கபடுவதை உறுதிப்படுத்துவதற்கு அவள் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்றும், அதற்காக அவளுடைய பங்கு இல்லை என்றும் அர்த்தமல்ல. மேலும், குழந்தை பெற்றெடுக்கும் நிலையில் இல்லாத (ஆரோக்கியமாக) பெண்களும் குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற நியமத்தை அப். பவுல் பரிந்துரைக்கவில்லை.

பொதுவாக பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழிவை நீக்கும் பொருட்டு, தெய்வீகக் குழந்தைகளை அவர்களின் அழைப்புக்கு ஏற்றவாறு வளர்க்க வேண்டும் என்று அவர் பேசுகிறார். ஆனால் அந்த பணியை செய்வதற்கு, ‘முதலில் அவர்கள் நம்பிக்கை, அன்பு மற்றும் பரிசுத்தம் ஆகியவற்றில் உறுதியான மனதுடன் இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார். தேவ விசுவாசம் கொண்ட ஒரு பெண் இவற்றில் நிலையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவளால் தேவபக்தியில் அவளும் வளர்ந்து, தன் குழந்தைகளையும் தேவபக்தியில் வளர்க்க முடியும்.

தேவன் இந்த வேத வசனப் பகுதியில் ஆண் மற்றும் பெண் இருவரின் சிதைந்த பாத்திரங்களை சரிசெய்வதைக் காண்கிறோம். ஆண்கள் குடும்பத்தின் தலைவர்களாகவும், சபையின் தலைவர்களாகவும், போதிக்கிறவர்களாகவும் அதிகாரமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். பெண் சபையில் அமைதியாக இருக்க வேண்டும். போதிக்கக்கூடாது, புத்திமதி சொல்லக்கூடாது, ஆகையினாலே அவர்களை குறைவாக எண்ணக்கூடாது, ஏனென்றால் அவளுடைய தேவ பக்தியான வாழ்க்கையால் குழந்தைகளின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் தனித்துவமான பொறுப்பை அவள் பெற்றிருக்கிறாள். இந்த உத்தரவிலிருந்து திருச்சபை விலக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 இருப்பினும், பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும், ஆண்களுக்கு போதிக்கவும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்தவும் கூடாது என்ற அப். பவுலின் வார்த்தைகளின் அடிப்படையில் இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு இங்கு இடமில்லை என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம். மேலும், பின்வரும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரையில் அதைப் படிக்கலாம்.

வேதத்தின் தேவன் பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டுகிறாரா?

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.