கேள்வி : 1 தேவன் திரித்துவராக இருக்கிறார் என்றால் என்ன?
பதில்: தேவன் ஒருவரே என்று வேதம் மிகத் தெளிவாக சொல்லுகிறது. அந்த ஒரே தேவனின் பூரண தேவத்துவ நாமங்களையும், குணங்களையும், செய்கைகளையும் பிதா, குமரன், பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று வெவ்வேறானவர்களை குறிக்கிறது. தேவன் ஒருவரே என்ற சத்தியத்தை சமரசம் செய்யாமல் இந்த மூவரின் பூரண தேவத்துவத்தை ஏற்றுக்கொள்வதே திரித்துவ கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.
தேவன் ஒருவரே! இந்த ஒரு தேவன் மூன்று நபர்களில் இருக்கிறார். மூன்று தனித்தனி தேவன்கள் ஒரு நபர் என்பதல்ல; மூன்று தனித்தனி நபர்கள் ஒரு தேவன், தேவனை மூன்று பகுதிகளாகப் பிரித்தால், மூன்றில் ஒவ்வொரு நபரும் ஒரு பகுதி என்றும், அந்த மூவரையும் இணைந்தால், பூரண தேவன் என்று அர்த்தமல்ல. பிதா பூரண தேவன், குமாரன் பூரண தேவன், பரிசுத்த ஆவியானவரும் பூரண தேவன் ஆனாலும், இவர்கள் மூன்று தேவன்கள் அல்ல, ஒரே தேவன்.
எனவே, பிதாவே குமரன் என்றும், குமரனே பரிசுத்த ஆவியானவர் என்றும் பழைய ஏற்பாட்டு காலத்தில் பிதாவாகவும், புதிய ஏற்பாட்டு காலத்தில் குமாரனாகவும், தற்போதைய காலத்தில் பரிசுத்த ஆவியானவராகவும், இப்படி வெவ்வேறு காலத்தில் ஒரே நபராக இருக்கிறார் என்று பலர் தவறாக எண்ணிக்கொள்கிறார்கள். இந்த தவறான எண்ணத்திற்கு இடமில்லை. பிதா குமாரன் அல்ல, குமாரன் பரிசுத்த ஆவியானவர் அல்ல, பரிசுத்த ஆவியானவர் பிதா அல்லது குமாரன் அல்ல. பிதா பிதாவாகவும், குமாரன் குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியானவராகவும் இருக்கிறார்கள்.
அதாலால் தான் இந்த மூவரும் ஒரே நபர் என்று சொல்வதும், மூன்று தேவன்கள் என்று சொல்வதும், தேவனில் மூன்று பகுதிகள் என்று சொல்வதும், தேவன் வகிக்கும் மூன்று வெவ்வேறு பாத்திரங்கள் என்று சொல்வதும் அவைகள் திரித்துவக் கோட்பாட்டு என்ற சத்திய உபதேசம் அல்ல. தேவன் ஒருவரே; அந்த ஒரு தேவன் மூன்று நபர்களில் இருக்கிறார். இதுவே திரித்துவ கோட்பாடு.
2) கேள்வி: "திரித்துவம்" என்ற வார்த்தைபரிசுத்த வேதாகமத்தில் இல்லாத போது அது எப்படி வேதத்தின் உபதேசமாக இருக்கும்?
பதில்: வேதத்தில் உள்ள உபதேசங்களை நம்முடைய சொந்த வார்த்தைகளில் விளக்குவதில் தவறில்லை. இவை ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு திருச்சபைகளில் நடக்கிறது. வேத வசனப்பகுதிகளை நியமிப்பதன் மூலமும், திருச்சபைக்கு பிரசங்கிப்பவர்களை ஏற்படுத்தி வேத சத்தியங்களை போதிப்பதற்கான அதிகாரத்தை தேவனே கொடுத்தார். பிரசிங்கப்பவரின் சில சொந்த வார்த்தைகளைக் கொண்ட பிரசங்கம் தவறல்ல. ஏனென்றால் அவைகளின் மூலம் தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களை அறிவிக்கபடுகிறது.
மேலும், "திரித்துவம்" என்ற வார்த்தையின் மூலமாக ஒரு சத்தியத்தை திறம்பட வெளிப்படுத்துவதினால் பிரச்சனை என்ன? அவ்வாறு சொல்லப்படுபவையின் கருத்து வேத வசனத்தில் உள்ளதா? இல்லையா? என்பதைச் சரிபார்க்க வேண்டும், அப்படி செய்யாமல் அந்த வார்த்தை வேதத்தில் இல்லாததால், அது வேதத்தின் அடிப்படையில் தவறு. என்ற விமர்சனங்களைச் செய்பவர்களின் அறியாமையை காட்டுக்கிறது.
3) கேள்வி: இந்த திரித்துவக் கோட்பாட்டை குறித்த விவாதம் நமக்கு ஏன்?
பதில்: தேவன் தன்னைப் பற்றி சொல்லிக்கொண்ட அறிமுகம் வேதத்தில் உள்ளது. "என்னைத் தவிர வேறு தேவன் உனக்கு இல்லை " என்று நமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைக்கு அர்த்தத்தை தருவது தேவன் தன்னைப் பற்றிய சொன்ன விளக்கம் தான். தேவன் பற்றிய நமது விளக்கங்கள் அவருடைய சுய தோற்றத்திலிருந்து வேறுபட்டால், நாம் ஆராதிப்பது வேதம் வெளிப்படுத்தும் தேவனை அல்ல. நம்முடைய சுய கற்பனையில் நாம் உருவாக்கொண்ட தேவனை ஆராதிக்கும் ஆபாத்திற்கு வழிவகுக்கிறது. தேவன் திரித்துவர் என்று வேதம் வெளிப்படுத்துகிறது.
ஆனால் மற்ற ஏகத்துவக் கோட்பாடுகளைப் போல தேவன் ஒருவர் என்று நம்புவதும் அல்லது தேவன் ஒன்றுக்கு மேற்பட்ட தேவன்கள் என்று நம்புவதும், மேலும் பலதெய்வ வழிபாட்டாளர்களைப் போல, தேவன் பலர் என்று நம்புவதும் மற்றும், வேறு ஏதேனும் கோட்பாட்டை தேவனுக்கு கொடுக்க முயன்றால், அவை "உனக்கு வேறு தேவன் இருக்கக்கூடாது" என்ற கட்டளையை மீறுவதாகும். எனவேதான், வேதம் தேவனை எவ்விதமாக வெளிப்படுத்துகிறதோ அவைகளை ஆராய்ந்து, "திரித்துவம்" என்ற வார்த்தையின் விளக்கம் சரியா? தவறா? என்று தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் கண்டிப்பாக ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கு உள்ளது.
4) கேள்வி: திரித்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாது என்று எல்லா திரித்துவவாதிகளும் சொல்கிறார்கள் அல்லவா; புரிந்துக்கொள்ள முடியாத ஒன்றுக்கு ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
பதில்: எந்த ஒரு மனிதனும் தேவனை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் தேவன் எல்லையற்றவர் என்பது அவரது மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும். எல்லையற்றவர் என்றால் அவர் நம்முடைய கற்பனைக்கும், உணர்வுகளுக்கும், மற்றும் புரிந்து கொள்ளுதலுக்கும் அப்பாற்பட்ட எல்லையற்றவர். இருப்பினும், நாம் தேவனை எந்த அளவுக்கு அறிந்துக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தேவன் தன்னை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
தேவனை குறித்து முழுமையாகப் புரிந்துகொண்டோம் என்று சொல்பவர்கள் அறியாமையில் உள்ளார்கள், தேவன் தன்னை பற்றிய அறிமுகத்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் நாம் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு நாம் நம்மை தாழ்த்துவது நம்முடைய பொறுப்பு. "திரித்துவம்" என்ற இந்த கோட்பாட்டின் ஆய்வில் நாம் செய்வது தேவனின் முழு இரகசியத்தை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சி அல்ல, தேவனைப் பற்றிய நமது புரிதல் அவருடைய வசனத்தின் அடிப்படையில் சரிபார்த்து, அதையே பின்பற்றுவதற்கான முயற்சி மட்டுமே. வேறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், இது திரித்துவத்தின் இரகசியத்தை முழுமையாக புரிந்துகொள்வதற்கான ஒரு பயிற்சி அல்ல, திரித்துவத்தின் கோட்பாடு வேதத்தின் படி சரயா? தவறா? என்பதை தீர்மானிக்கும் முயற்சியாகும்.
5. கேள்வி: திரித்துவத்தை விசுவாசிக்கவில்லை என்றால் நாம் பரலோகத்திற்கு செல்ல முடியாதா?
பதில்: இது புண்ணியங்களை செய்தால் பரலோகத்திற்கு செல்ல முடியுமா? என்ற கேள்வியை போன்றது. இரட்சிப்பு என்பது புண்ணியங்களை செய்வதின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது, என்பது எப்படியோ! அதுப்போல சரியான கோட்பாட்டை விசுவாசிப்பதின் மூலம் கூட இரட்சிப்பு இல்லை. ஏனெனில் இரட்சிப்பு என்பது தேவனின் இலவசமான கிருபையால் மட்டுமே என்று வேதம் நமக்கு கற்பிக்கிறது. (எபேசியர் 2:8-9) ஆனால் அந்த இலவசமான கிருபை என்னுள் இரட்சிப்பின் பணியைச் செய்துள்ளது. என்பதற்கு என்ன ஆதாரம்? நிச்சயமாக இதற்கு சான்றாக இரண்டு ஆதாரம் கூறலாம்.
முதலாவது, தேவன் முன்னதாக ஏற்படுத்திய நற்கிரியைகளின் மீது பிரியமாயிருந்து அவைகளில் நாம் நடப்பது. (எபேசியர் 2:10), தீத்து 2:14), இரண்டாவது, தேவன் வெளிப்படுத்திய பூரண சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அந்த சத்திய உபதேசத்தை பின்பற்றுவதாகும். (யோவான் 8:47, 10:26-27) மற்றும் (1 யோவான் 4:6) புண்ணியங்களை செய்வதினால் இரட்சிப்பு இல்லை, அவை செய்யாதவர்களுக்கும் இரட்சிப்பு இல்லை, மேலும் திரித்துவக் கோட்பாட்டையோ அல்லது வேறு எந்த சத்தியத்தையோ விசுவாசிபதின் மூலம் இரட்சிப்பு கிடைப்பதில்லை என்றாலும், அவைகளை நிராகரிப்பவர்களும் இரட்சிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது.
II. தேவன் திரித்துவராக இருக்கிறார் என்பதற்கு ஆதாரம்.
தேவனைப் பற்றி வேதம் போதிக்கும் மூன்று அடிப்படை சத்தியங்களை ஒரே வார்த்தையில் சுருக்கி அவர் "திரித்துவர் " என்று சொல்கிறோம். எனவே தேவன் திரித்துவர் என்பதை நிரூபிக்க, அந்த மூன்று அடிப்படையான சத்தியங்கள் வேதத்தில் உள்ளது என்பதை நிரூபித்தாலே போதும்.
அவையாவன:
1) தேவன் ஒருவரே!
2) தேவனில் பன்முகத்துவம் உள்ளது.
3) தேவனில் உள்ள பன்முகத்துவம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று நபர்கள் மட்டுமே!
இந்த மூன்று கோட்பாடுகளும் வேத வசனங்கள் போதிக்கும் சத்தியம் என்றால், தேவன் மூன்று நபர்களில் இருக்கும் ஒரே தேவன் என்பதை நிரூபிக்கிறது. அதுவே திரித்துவக் கோட்பாட்டின் சாராம்சம். இப்போது இந்த மூன்று கோட்பாடுகளும் வாக்கியத்தில் உள்ளதா? இல்லையா? என்று பார்ப்போம்.
1) தேவன் ஒருவரே
"யெகோவாவாகியநானே தேவன் என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்". (யாத்திராகமம் 20:3) என்ற முதல் கட்டளையே தேவன் ஒருவரே, அந்த இடத்தையும் கனத்தையும் வேறு எவருக்கும் கொடுக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த சத்தியத்தையே வேதத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
"எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை" (ஏசாயா 43:10).
"நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லை" (ஏசாயா 44:6).
"என்னைத் தவிர வேறொரு தேவன் உண்டோ? என்னைத் தவிர வேறு புகலிடம் இல்லை. இருப்பதை நான் அறியேன் " (ஏசாயா 44:8).
"நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை." (ஏசாயா 46:9).
"நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ?"(மல்கியா 2:10).
இது பழைய ஏற்பாட்டில் மட்டும் நமக்கு கானப்படும் கோட்பாடு அல்ல. புதிய ஏற்பாட்டிலும் அதே சத்தியம் மிக தெளிவுடன் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது:
"இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் ( மாற்கு12:29).
"ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிப்பதே நித்திய ஜீவன் " (யோவான் 17:3).
"தேவன் ஒருவரே"(ரோமர் 3:30).
"தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. அவரே கிறிஸ்து இயேசு " (1 தீமோத்தேயு 2:5).
"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லது"(யாக்கோபு 2:19).
எனவே தேவன் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒருவரே என்ற சத்தியத்திற்கு வேதம் உறுதி கூறுகிறது. இந்த சத்தியத்தை மறுக்கும் எந்தவொரு உபதேசமும் வேத வசனத்தின் படியானது அல்ல என்று தெளிவாகிறது.
2) தேவன் ஒருவரே என்று வேதம் உறுதியாகக் கூறுவது போல், தேவனில் பன்முகத்துவம் இருப்பதாகவும் அதே வேதம் தெளிவாக சொல்லுகிறது. ஒரு நபர் ஒரே நபராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை தேவனுக்கு பொருந்தாது. தேவனுடைய இருப்பை இந்த படைப்பில் உள்ள எதனுடனும் ஒப்பிட முடியாது. அவர் ஒருவரே ஆனால் மூன்று நபர்களில் இருக்கிறார் என்பதை வேதம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது. தேவனில் பன்முகத்துவம் உள்ளது என்பதை நிரூபிக்கும் நான்கு சான்றுகளை நாம் கருத்தில் கொள்வோம்:
A) தேவனை குறித்து பயன்படுத்திய பல வேத வசனங்களில் அவர் பன்முகத்துவ தன்மையோடு இருப்பதை நிரூபிக்கிறது:
"இஸ்ரவேலே, கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்" (உபாகமம் 6:4).
இங்கு "ஒருவரே" என்ற சொல் "எகாத்" என்ற எபிரேய வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . "எகாத்"என்ற வார்த்தை பன்மையில் ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படும் சொல். உதாரணமாக, திருமணத்தில் இணைந்த ஒரு ஆணும் பெண்ணும் "ஒரே உடல்" அதாவது இருவரும் ஒருவர் என்ற கருத்தை "எகாத் " என்ற வார்த்தை சரியாக விளக்குகிறது. "நாம் அனைவரும் இந்தியர்கள், எனவே நாம் அனைவரும் ஒன்று. இங்கே "ஒன்று" என்ற கருத்தை சரியாக வெளிப்படுத்த கூடிய எபிரேய வார்த்தை "எகாத்" ஆகும்.
அப்படி இல்லாமல் ஒரே ஒரு நபர் அல்லது ஒரு பொருள் இருப்பதைக் குறிப்பிட "யாகித்" என்ற எபிரேய வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே" என தனித்துவம் வாய்ந்தவர் என்று அழைக்க முடிந்தாலும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்று பொருள்படும் "எகாத்"என்ற வார்த்தையை பயன்பாடுத்தியதால், தேவன் தனது ஐக்கியத்தை பன்முகத்தன்மையில் வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது. இதுவே தேவனில் பன்முகத்துவம் உள்ளது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.
B) தேவன் தனக்குச் சமமானவர்களுடன் தொடர்பு கொள்ளளும் போது அவர் பன்மையோடு உள்ளர் என்பதை நிரூபிக்கிறது.
தேவன் தனக்கு சமமானவர்களுடன் தொடர்பு கொண்டாரா? முதலாவது "தேவனுக்கு சமம்" என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தலாமா? "தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாவில்லை" என கர்த்தரைக் குறித்து பிலிப்பியர் 2:6 -ல் எழுதப்பட்டுள்ளது, எனவே நான் அந்த வார்த்தையை குறிப்பிடவில்லை. தேவனுக்கு இணையானவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் யாராக இருக்க முடியும். அவர்களும் தேவனாக தான் இருக்க வேண்டும்! தேவன் தனக்குச் சமமானவர்களிடம் பேசிய சில சந்தர்ப்பங்களை கவனியுங்கள்:
"நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" (ஆதியாகமம் 1:26) "என் சாயலாகவும் என் ரூபத்தின்படி" அல்ல, நமது சாயல் நமது ரூபம் என்கிறார். ஒரு சிலர் இங்கே "நமது " என்ற வார்த்தை பிரயோகம் பன்மை அல்ல, அது மரியாதைக்குரிய வார்த்தை அரசர்கள் தங்களை தாங்களே மரியாதையுடன் அழைப்பதுப் போல "நாங்கள்" மற்றும் " எங்களைப்போன்ற" என மரியாதைக்குரிய பன்மைமுக தன்மையோடு பயன்படுத்து போல தேவனும் பயன்படுத்துகிறார். என்பது அவர்களின் கருத்து.
ஆனால் சரியான கண்ணோட்டத்தில் அந்த பகுதியை வாசித்து பாருங்கள், என்னைப்போன்ற அல்ல "நமது சாயலாக" செய்வோம் என்கிறார். தேவன் தன்னையும் வேறொருவரை உள்ளடக்கியாதால் தான் அவ்விதம் பயன்படுத்தபடுகிறார். தேவன் இந்த சிருஷ்டியை உருவாக்குவதற்கு தன்னுடோ கூட வேறொருவரை அழைக்கிறார். அது படைப்பின் காரியங்கள் எனவே தேவனை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. அதேப்போல தேவனை தவிர வேறு ஒரு தேவனை வேதம் குறிப்பிடவில்லை. எனவே இது பன்முக தெய்வீக நபர்களுக்கு இடையிலான உரையாடல்,
தேவன் தேவ தூதர்களோடும், உண்டாக்கப்பட்ட படைப்புகளோடும், மனிதர்களோடும் அவருக்கு உரையாடல் இல்லை, சிருஷ்டிக் கர்த்தர் பிதா மட்டும் அல்ல, (எபேசியர் 3:9), இயேசு கிறிஸ்துவும் என்று (யோவான் 1:1-3), மேலும் இயேசு கிறிஸ்து மட்டுமல்ல பரிசுத்த ஆவியானவரும் (ஆதியாகமம் 1:2), (யோபு 33:4) என்று வேத வாக்கியங்கள் தெளிவுப்படுத்துகிறது. எனவே இங்கு சொல்லப்படுகிற நபர்களை புரிந்துக்கொள்வது கடினமல்ல.
டாக்டர். ஜான் கில் என்பவர் "திரித்துவக் கோட்பாட்டை" குறித்து எழுதிய தனது புத்தகத்தில், ஒரு முக்கியமான உண்மையை ஆதாரத்துடன் குறிப்பிடுகிறார். "நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும்" (ஆதியாகமம் 1:26) என்ற வசனத்திலிருந்து. தேவனில் பன்முகத்துவம் கொண்ட கிறிஸ்தவக் கொள்கை உறுதியாகிறது. என்பதை உணர்ந்த யூதர்கள், இந்த திரித்துவ கோட்பாட்டை எதிர்க்கும் படி இந்த வசன விளக்கத்தில் அவர்கள் ஒரு கதையைச் சேர்த்தனர்.
அந்த கதை என்னவென்றால் மோசே இந்த வசனத்தை எழுதுவதை நிறுத்திவிட்டு, சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே, இப்படி எழுதுவது சத்தியத்தை எதிர்ப்பவர்களுக்கு சாதகமாக அமையும் அல்லவா? என மோசே கேட்டாராம், அதற்கு தேவன் "நீ எழுது இடறுகிறவன் இடறுட்டும் என்று சொன்னாராம். இந்தக் கதையின் பலன் சிரிப்பு மட்டும் தான் இந்த வசனத்தில் பன்மைத்துவ உணர்வு எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதையும், கள்ள உபதேசத்தை போதிக்கிறவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இதை தவிர்க்க செய்யும் முயற்சிகளை இதுப்போன்றவைகள் காட்டுகிறது.
இவ்விதமாக தேவன் தனக்குச் சமமானவர்களுடன் உரையாடிய சில வேத வசனங்களை பார்ப்போம். ஆதாம் ஏதேன் தோட்டத்தில் நன்மை தீமை அறியத்தக்க பழத்தை புசித்த பிறகு தேவன் இவ்விதம் பேசுகிறார். "மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; (ஆதியாகமம் 3:22) என்னில் அல்லது என்னைப்போன்ற என சொல்லாமல் "நம்மில்" என்று பயன்படுதஅதிய வார்த்தையைக் கவனியுங்கள். பாபேல் கோபுரத்தில் பல மொழிகள் உருவாகும் சந்தர்ப்பத்தில் கூட,
"நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்."(ஆதியாகமம் 11:7) என்று தேவன் பேசுவதை பார்க்கிறோம். புதிய மொழிகளை உருவாக்கிய தேவன் தன்னோடு அந்த செயலைச் செய்யக்கூடியவர்களை "வாருங்கள்" என்று அழைத்ததை இந்த நிகழ்வு தெளிவுபடுத்துகிறது. எனவே தேவன் தன்னோடு இணைந்து படைக்கும் தன்மையுடைய மற்றவர்களிடம் பேசும் அல்லது உரையாடும் நிகழ்வுகள் அவர் பன்முகத்தன்மை கொண்டவர் என்பதை நிரூபிக்கிறது.
C) தேவ தூதர்கள் தோன்றிய சந்தர்ப்பங்களிலும் தேவனில் பன்முகத்தன்மை இருப்பதை நிரூபிக்கின்றன. பழைய ஏற்பாட்டில் ஒரு நபர் தோன்றுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். தேவனிடமிருந்து செய்திகளைக் கொண்டுவருபவராக அவர் "தேவ தூதனானவர்" என்று அழைக்கப்பட்டார், ஆனால் இந்த தூதரின் பெயர் காபீரியல், மிகாவேல் அல்ல. அவரை அனுப்பிய தேவனின் பெயர் அவருக்கு இருப்பதால், "யெகோவா" அல்லது "தேவன்" என்று அழைக்கப்படுவதை நாங்கள் கவனிக்கிறோம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை சிலவற்றை பார்ப்போம்.
ஆகார் தன் எஜமானியிடமிருந்து தப்பியபோது "கர்த்தருடைய தூதனானவர்" ஆகாருக்கு தரிசனமனார். (ஆதியாகமம் 16:7) இவ்விதமாய் தரிசனமான சந்தர்ப்பத்தை மோசே எழுதுகையில் தேவனை "கர்த்தர் என்று சொல்லி ஆகார் "என்னை கான்கிற தேவன்" என்று அழைத்தாள். ( ஆதியாகமம் 16:13). வேறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், இங்கு தோன்றிய கர்த்தரின் தூதர் "கர்த்தர்" என்றும் கான்கிற தேவன்" என்று குறிப்பிடப்படுகிறார் . இந்த விளக்கத்தை உறுதிப்படுத்தும் இன்னும் சிலவற்றை கவனிப்போம்.
யாக்கோபின் "பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டுகற தேவனும், நான் பிறந்த நாள் முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும், எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர்"(ஆதியாகமம் 48:15-16) என்று யாக்கோபு அழைப்பதை நாம் பார்க்கிறோம்.
"கர்த்தருடைய தூதனானவர்" ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று மோசேயிடம் பேசினார். (யாத்திராகமம் 3:2), ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும் மற்றும் யாக்கோபின் தேவனும் என்று தன்னை தான் அறிமுகப்படுத்திக் கொண்டார். (யாத்திராகமம் 3:6) "அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன்" என்று மோசேயுடனே சொன்னார் "( யாத்திராகமம் 3:14).
கர்த்தர் என்று பெயர் கொண்ட இந்த தேவ தூதனானவர் யார்? வனந்திர பயணத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். என் நாமம் அவர் உள்ளத்தில் உள்ளது. என்று தேவன் சொன்னார், ( யாத்திராகமம் 23:20, 21 ). இந்த வசனத்தில் தேவன் இஸ்ரவேலர்களை எச்சரித்து, அந்த தூதருக்குக் கீழ்ப்படியவும், அவருடைய கோபத்தைத் தூண்ட வேண்டாம் என்றும், அவ்வாறு செய்தால், உங்களுடைய மீறுதல்களை மன்னிக்க மாட்டார் என்று தேவன் சொன்னார். ஆனாலும், அவர்கள் அவருடைய பொறுமையை சோதித்து, அவருடைய கோபத்திற்கு ஆளானார்கள் என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய நிருபங்கள் நமக்கு நினைவூட்டுகிறார்,
"அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. (1 கொரிந்தியர் 10:9) வசனத்தில் எச்சரித்தார். ஆகவே, கர்த்தரின் தூதராகவும், தேவனின் பெயரை உடையவராகவும் தொடக்கத்திலிருந்து தோன்றிய இந்த தூதனானவர் கர்த்தராகிய "இயேசு கிறிஸ்து" என் வேத வசனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. என்றும் தீர்க்கதரிசனம் சாட்சியமளிக்கிறது (மீகா 5:2).
தேவனுக் மட்டுமே உரித்தான "இருக்கிறவர்" என்ற அடைமொழி தேவனுக்கும் அவரால் அனுப்பப்பட்ட தூதருக்குக் கூட, அவருடைய பன்முகத்தன்மையை தெளிவாக உறுதிப்படுகிறது.
D) ஒரே சந்தர்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் "கர்த்தர்"என்றும் தேவன் என்றும் அழைக்கப்பட்ட சந்தர்பங்கள் தேவனில் பன்முகத்துவம் உள்ளது என்பதை நிரூபிக்கிறது.
"அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி"(ஆதியாகமம் 19:24).
இங்கு கர்த்தர் கர்த்தராலே கந்தகத்தையும் அக்கினியையும் ஊற்றினார் என வாசிக்கிறோம். அக்கினி கந்தகத்தை ஊற்றியது யார்? கர்த்தர் ஊற்றினார். யாரால் ஊற்றப்படுகிறது? கர்த்தரலே ஊற்றப்பட்டது. அக்கினி கந்தகத்தை ஊற்றிய கர்த்தர், ஒருவர் என்றால், கர்த்தரால் ஊற்றப்பட்டது மற்றொருவர் இங்கே இரண்டு நபர்கள் கர்த்தர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
சிலர் இதை எதிர்க்கிறார்கள், ஒரே நபரை ஒரு பெயர்ச்சொல்லைப் பயன்படுத்தாமல் இரண்டு முறை ஒரே பெயரை குறிப்பிடுகிறதே தவிர, இரண்டு தனித்தனி நபர்கள் இருப்பதாகக் இது குறிக்கவில்லை. ஆனால் இங்கே இருவரும் தனித்தனி நபர்கள் என்பதை மற்றொரு வசன பகுதி உறுதிப்படுத்துகிறது. "சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்". (ஆமோஸ் 4:11). இங்கே கர்த்தர் பேசுகையில் சோதோமிற்கும் கொமோராவிற்கும் தேவன் செய்தது போல நானும் செய்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இங்கே பேசும் கர்த்தர் ஒருவரே என்பதும், சோதோம் கொமோரா கவிழ்த்ததை பற்றி பேசும் தேவன் மற்றொரு கர்த்தர் என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
"தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்". (சங்கீதம் 45:6-7). இங்கே "தேவனே" என்று தேவனை சொல்லி உன்னை தேவன் அபிஷேகம் செய்தார், என எழுதப்பட்டதை நினைவில் கொள்க. "அபிஷேகம் செய்தவரும் தேவனே என்றால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், தேவன் எனவே இங்கு இரண்டு தனித்தனி நபர்கள் தேவன் என்று அழைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதில் கடினமில்லை.
"அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன். யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்." (ஓசியா 1:6) இங்கே நான் யூதர்களை இரட்சிப்பேன் என்று சொன்ன கர்த்தர் ஒருவரென்றால் நான் அவர்களைக் காப்பாற்றுவேன் என்று இன்னொரு கர்த்தரும் சொல்வதை இங்கு நாம் தெளிவாகக் காணலாம்.
"இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய் ". (சகரியா 2:9-11) நான் வந்து உங்கள் நடுவில் குடியிருப்பேன் என்று தேவன் சொல்லி அந்நாட்களில் அநேகர் என்னைத் தொட்டு, தேவனுடைய மக்கள் எனப்படுவார்கள் என்றும் கர்த்தர் கூறுகிறார். மிகத் தெளிவாக இங்கே இரண்டு தனித்தனி நபர்கள் கர்த்தர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
"கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்". (சங்கீதம் 110:1). கர்த்தர் என் ஆண்டவரோடு பேசினார் என்று கூறும் சங்கீதக்காரன், தனக்கு கர்த்தர் ஒருவரே கர்த்தர் என்று மிகத் தெளிவாக அறிவித்தார். "நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர்". (சங்கீதம் 16:2), இங்கே அவர் கர்த்தர் என்று குறிப்பிடும் இரண்டு தனித்தனி நபர்களும் கர்த்தரே என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இதில் கர்த்தராகிய ஒருவர் மேசியா என்பதை தேவனே தெளிவுபடுத்தியுள்ளார் (மாற்கு 12:37).
யோவான் 1:1:"ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது தேவனோடு இருந்த வார்த்தையும் தேவனாக இருக்கும்போது இரண்டு தனித்தனி நபர்கள் தேவனாக அடையாளம் காணப்படுவதை இருவரும் தனித்தனிஎன்று தவிர வேறு எப்படி புரிந்து கொள்ள முடியும்? இதுபோன்ற பல வேத வசனங்கள் இருந்தாலும், ஒரே சந்தர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட "தேவன் "அல்லது "கர்த்தர் " என குறிப்பிடப்பட்டுள்ள சத்தியத்தை நிரூபிக்க இந்த சான்றுகள் போதுமானவை என்று நான் நினைக்கிறேன்.
தேவன் பன்மையில் குறிப்பிடப்படுகிறார், தேவன் அவருக்கு இணையானவர்களுடன் தொடர்பு கொள்வதும், "கர்த்தருடைய தூதனானவர்" "கர்த்தர்" என்ற பெயருடே தோன்றுவதும். மேலும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் "தேவன்" என்றும் அல்லது "கர்த்தர்" என்றும் அழைக்கப்படுவதை, தேவனில் பன்முகத்துவம் உள்ளது என்ற உன்மையை தெளிவாக நிரூபிக்கிறது.
3. தேவனில் உள்ள பன்முகத்துவம் என்பது பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று நபர்களுக்கு மட்டுமே! தேவன் ஒருவரே என்பதையும், இந்த ஒரே தேவனில் பன்முகத்துவம் உள்ளது என வேதத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தியுள்ளோம், ஆனால் இந்த பன்முகத்துவத்தில் எத்தனை பேர் உள்ளனர். என ஆராய்யும் போது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று நபர்களுக்கு மட்டுமே இந்த சமமான தேவத்துவ பெயர்களும், குணங்களும், செய்கைகளும் பொருந்துகிறது என்று வேத வாக்கியங்கள் தெளிகவாக சொல்லுகிறது.
தேவத்துவ நாமங்கள் இந்த மூன்று நபர்களுக்கு சமமாக பொருந்தும் போது பிதா என்ற நாமம் குமாரனுக்கும், குமாரன் என்ற நாமம் பரிசுத்த ஆவியானவருக்கும், பரிசுத்த ஆவியானவரின் நாமம் பிதாவுக்கு அல்லது குமாரனுக்கு பொருந்தும் என்ற அல்ல. இந்த மூவரையும் வெவ்வெறாக காண்பிக்கவே வேத வசனங்கள் இந்த பெயர்களினால் பயன்படுத்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல் மீதமுள்ள அனைத்து தேவ நாமங்கள் மூவருக்கும் சமமாக பொருந்தக்கூடியது. எனவே பிதாவை குமரன் என்று சொல்லக்கூடாது, குமாரனை பரிசுத்த ஆவியானவர் என்று சொல்லக்கூடாது, பரிசுத்த ஆவியானவரை பிதா அல்லது குமாரன் என்று சொல்லக்கூடாது. அவரவர்களை அவரவர்களின் பெயரோடு அழைக்க வேண்டும்.
A) "தேவன்" என்று பிதாவை மட்டும் அல்ல ( யோவான் 17:3), குமாரனையும் (யோவான் 1:1-14) மற்றும் பரிசுத்த ஆவியானவரையும் ( அப்போஸ்தலர் 5:3-4), இந்த மூவரையும் வேதம் தேவன் என்று அழைக்கிறது. மேலும் வேதத்தில் "தேவன்" என்று அழைக்கப்பட்டவர்கள் பலர் இருந்தாலும், இந்த மூவருக்கும் இருக்கிற விதமான தெய்வீக பண்புகள் அவர்களுக்கு இல்லை. தேவனின் பிரதிநிதிகளாக அவர்கள் செயல்பட்டதால் சிலருக்கு மட்டும் அவ்விதமாக அழைக்கப்பட்டதே தவிர, பிதா, குமரான், பரிசுத்த ஆவியானவர் ஆகிய இவர்களுக்கு இருக்கிற தெய்வீக பண்புகள் அவர்களுக்கு இல்லை.
B) "கர்த்தர்"என்ற பெயர் தேவனுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பெயர். "இருக்கிறவர்" என்று பொருளுடைய இந்த பெயர் அவருடைய நித்திய இருப்பைக் குறிக்கிறது. பிதாவுக்கும் (யாத்திராகமம் 23:20), குமாரனுக்கும் (ஏசாயா 48:12-16) மற்றும் பரிசுத்த ஆவியானவருக்கும் (2 சாமுவேல் 23:2-3, உபாகமம் 32:12 & ஏசாயா 63:14, சங்கீதம் 95:6-11) மற்றும் (எபிரெயர் 3:6-11 ) வேதம் "கர்த்தர்" என்று மூவரையும் அழைக்கிறது.
C) "சிருஷ்டி கர்த்தர் & படைப்பாளர் என்பது தேவனுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பெயர். சிருஷ்டி கர்த்தர் & படைப்பாளர் என்று பிதாவையும் (எபேசியர் 3:9, அப்போஸ்தலர் 4:24-25 ) குமாரனும் (யோவான் 1:2-3) மற்றும் பரிசுத்த ஆவியானவரையும் (யோபு 33:4, சங்கீதம் 33:6) மேற்கூறிய வேத வசனங்கள் மூவரையும் சிருஷ்டி கர்த்தர் & படைப்பாளர் என்று சாட்சியளிக்கிறது.
D) நித்திய இரட்சிப்பை அளிக்கும் ஒரே இரட்சகர் தேவன் மட்டுமே, என்று பிதாவானவரைம், (2தெசலோனிக்கேயர் 2:13), குமாரனைம் (தீத்து 2:13) மற்றும் பரிசுத்த ஆவியானவரைம் (தீத்து 3:5, யோவான் 3:6) மேற்குறிப்பிட்ட வேத வசனங்கள் நமக்கு நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் இரட்சகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
E) தேவன் மாம்சத்தில் வரவேண்டும் என்பது தேவனுடைய தீர்மானமே. இந்த மூவரின் ஈடுபாடு இதில் உள்ளது என தெளிவாகத் தெரிகிறது. ( ஏசாயா 48:12-16), (லூக்கா 1:35).
F) எல்லா நீதியையும் நிறைவேற்றிய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) தேவனின் செயல் (மத்தேயு 3:13-17). இந்த மூவரின் ஈடுபாடு இதில் தெளிவாகத் தெரிகிறது. (மாற்கு 1:10-11).
G) பரிசுத்த ஆவியானவர் இந்த பூமிக்கு அனுப்பப்படும் தெய்வீக காரியத்தில் இந்த மூவரின் பங்கை கர்த்தராகிய தேவனே விளக்கியுள்ளார். (யோவான் 14:16-17).
H) இயேசு கிறிஸ்துவின் மரணம் நித்திய நீதியைப் பெற்று தருகின்ற பலியாகும். இந்த தெய்வீக செய்கையில் மூவரும் ஈடுபட்டுள்ளனர். (சகரியா 13:7, யோவான் 10:17, எபிரேயர் 9:14).
I) இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவ நம்பிக்கை உண்மை என்பதற்கு சான்றாகும். இதிலும் இந்த மூவரின் மாபெரும் வேலைப்பாடு உள்ளது. (ரோமர் 6:4, யோவான் 2:19, ரோமர் 8:11-13).
J) இந்த மூவரின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க தேவனே கட்டளையிட்டார். (மத்தேயு 28:20) ஆதி அப்போஸ்தலர்களின் ஊழியங்களில், தேவன் கூறியதைப் போல் இல்லாமல், சீஷர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. ( அப்போஸ்தலர் 2:38, 8:16, 10:48, 19:5), (மத்தேயு 28:20) மேற்கூறிய வசனத்தில் சொல்லப்பட்டதிற்கு மாறாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்காமல் இயேசுவின் நாமத்தில் மட்டும் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று சிலர் கேள்வி எழுப்புவது வேடிக்கையானது. இயேசு கிறிஸ்துவுடன் தொடர்புடையது என்ற கருத்தை சொல்லுவதற்கே வேதத்தில் அடிக்கடி இயேசுவின் நாமத்தில், இயேசுவின் நாமத்தினால் என்று பயன்படுத்தப்படுவதை அவர்கள் கவனிக்கவில்லை, ( லூக்கா 24:44), (அப்போஸ்தலர் 15:26, 26:9), (ரோமர் 15:20). இந்த வேத வசனங்கள் தெளிவுப்படுத்துகிறது.
K) இந்த மூவரின் நாமத்தில் அப்போஸ்தலர்கள் ஆசீர்வாதங்களைச் சொன்னதாக வாசிக்கிறோம். (2 கொரிந்தியர் 13:14), (வெளிப்படுத்துதல் 1:4-8). குமாரனிடமிருந்து கிருபையையும், பிதாவிடமிருந்து அன்பையும், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து சமாதனத்தை கேட்பது என்றால் இந்த மூவரிடமும் ஜெபிப்பதாகும். தேவனிடம் மட்டுமே ஜெபம் செய்ய வேண்டும். அவர் ஒருவர் மட்டுமே ஜெபத்தைக் கேட்க தகுதி உள்ளவர். தேவன் மட்டுமே செய்யக்கூடிய பணியை இந்த மூவருக்கும் அப்போஸ்தலர்கள் சமமாகச் சொன்னார்கள். மேற்கூறிய செயல்களில் இருந்து இந்த மூவரில் ஒருவரை சேர்க்க முடியாது, மேலும் இந்த மூவரிலிருந்து யாரையும் விலக்க முடியாது. எனவே ஒரே தேவனில் உள்ள பன்மைத்துவம் என்பது மூன்று நபர்களுக்கு மட்டுமே உரியது. மூன்றிற்கு மேல் ஒருவரும் இல்லை, மூன்றிற்கு குறைவாக ஒருவரும் இல்லை.
பரிசுத்த வேதாகமம் நமக்கு வெளிப்படுத்தும் தேவன் மூன்று நபர்களாக இருக்கும் ஒரே ஒரு தேவன். நம்முடை அறிவுக்கும், தத்துவ ஞானத்துக்கும், சிந்தனைக்கும், மற்றும் தர்க்கங்களுக்கும் எட்டாத தேவன் நம் கற்பனைகளிலிருந்து பிறக்கிறார். இந்த மூவொரு தேவனை நம் கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட வெளிப்பாட்டின் மூலம் மட்டுமே அறிய முடியும். அவர் மட்டும் வேத வசனத்தில் தன்னைப் பற்றிய இந்த அறிமுகத்தை கொடுக்காமல் இருந்திருந்தால், பல ஏகத்துவவாதிகள் நம்புவது போல் தேவன் ஒரு நபர் என்றோ, அல்லது சிலை வழிப்பாடு செய்கிறவர்கள் நம்புவது போல பல தேவர்கள் இருக்கிறார்கள் என்றோ, அல்லது தேவன் உலகத்திலிருந்து பிரிந்தவர் என்ற பல மூட நம்பிக்கையை நாமும் நம்பியிருப்போம்.
இது மனிதனுடைய சித்தனையில் தோன்றியது அல்ல. ஒரே தேவன் மூன்று நபர்களாக இருக்கிறார். என்றும் அந்த மூன்று நபர்கள் பூரண தேவத்துவ குணமுடையவர்கள் என்றும் அவர்கள் மூன்று தனி தேவர்கள் என்று வேதம் மிக தெளிவாக சொல்கிறது. ஒரே தேவன் என்று வேதம் சொல்லுகிற கோட்பாடு தர்க்கிப்பதற்கு ஏற்ப்புடையது அல்ல, எனவே நம்முடைய யோசனைகளுக்கும், கற்பனைக்கும், விவாதத்திற்கும் தேவன் எட்டாத எல்லையற்றவர். அவருக்கு சமமானது இந்த படைப்பில் ஒன்றுமில்லை, பின்னே நாம் அவரை யாருக்கு சமமாக்குவோம்.
என்வே தான் அவரை குறிப்பிடுவதற்கு இந்த படைப்பில் ஒன்றுமே இல்லை, எந்த ஒரு எடுத்துக்காட்டும் அவருக்கு பொருந்ததாது. திரித்துவ கோட்பாட்டை விளக்க எந்தவொரு உதாரணமும் வீணானது. ஒரு சிலர் முட்டை, தன்னீர், அக்கினி, சூரியன் இதுப்போன்ற பல உதாரணங்கள் பயன்படுத்துவார்கள். அவை மூன்று தன்மைகள், மூன்று குணங்கள், மூன்று வெளிப்பாட்டை உடையது. என்ற அவர்களின் நிலைப்பாடு, எடுத்துக்காட்டாக சூரியனை எடுத்துக்கொண்டால் வெயில், வெப்பம், வெளிச்சம் இவை சூரியனுக்குள் இருக்கிறது.
வெயில் மட்டும் சூரியன் அல்ல, வெப்பம் மட்டும் சூரியன் அல்ல, வெளிச்சம் மட்டும் சூரியன் அல்ல அதுப்போல பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற திரித்துவ கோட்பாட்டை விளக்குகிறார்கள். மேலும், தன்னீரை பனிக்கட்டியாகவும், திரவமாகவும், நீராவியாகவும் இருக்கலாம். என்கிறார்கள் இந்த உதாரணம் கூட திரித்துவத்தை விளக்க போதுமானது அல்ல, பிதா குமாரனாக மாறுவதில்லை, குமாரன் பரிசுத்த ஆவியானவராக மாறுவதில்லை என்று நாம் ஏற்கனவே கூறியுள்ளோம். எந்த உதாரணத்தை எடுத்துக் கொண்டாலும், பரிசுத்த திரித்துவத்தை விவரிக்க எதை எடுத்துக்கொண்டாலும், அவை தேவனின் திரித்துவத்துடன் ஒத்துப்போவதில்லை.
பரிசுத்த திரித்துவத்தை விளக்குவது மிகவும் கடினமானது. வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவன் திருத்துவர் என்பதை மட்டுமே உறுதிப்படுத்த முடியும். அது இந்த புத்தகத்தில் வேத வசனங்களின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது. மற்ற முயற்ச்சிகள் அனைத்தும் பயனற்றவை. தேவனுடைய வார்த்தை மட்டுமே சத்தியம். வேதத்தில் வெளிப்படுத்த பட்டது எனக்குப்புரிகிறதோ இல்லையோ, அவையெல்லாம் நம்பிக்கைக்கு உறியது. எனவே வேதம் தெரியப்படுத்தும் இந்த மூவொரு தேவனை நான் புரிந்து கொள்ளாவிட்டாலும், அவரே உண்மையான தேவன்.
வேதத்திற்கு விரோதமாக சொல்லப்பட்ட எந்த ஒவ்வொரு கருத்தும் பொய்யானது. பரிசுத்த வேதம் குறிப்பிடாத வேறு தேவனை உருவாக்குவதற்கு சமம். அத்தகைய ஒவ்வொரு எண்ணமும் தேவனின் பிள்ளைகளால் எதிர்க்கும், கண்டிக்கப்புக்கும் உள்ளக்க வேண்டும். சத்திய தேவனான பரிசுத்த திரித்துவத்தை ஒருவர் நம்பி முழுமனதுடன் ஆராதிக்கவேண்டும், அந்த சத்தியத்தை பிறருக்கு அறிவிக்க வேண்டும். அந்த திரியேக தேவனை தவிர வேற தேவன் இருக்க முடியாது. அல்லேலுயா! ஆமென்!