முழு நேரக் கிறிஸ்தவப் பணிக்கு அழைப்பு கட்டாயம் தேவையா?
திட்டவட்டமாய் 'அழைக்கப்பட்டலொழிய' ஒருவரும் முழுநேரக் கிறிஸ்தவப் பணிக்குள் நுழையக்கூடாதென்பது பெருவாரியான கிறிஸ்தவர்களின் கருத்து. மற்றவர்களோ அது ஒவ்வொருவருடைய 'தெரிந்தெடுப்பை' பொறுத்தது எனக் கருதுகின்றனர். இதைக்குறித்த குழப்பமே அறுவடைப்பணியில் போதுமான ஊழியர் இறங்காததற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகும். இதைக்குறித்து திருமறை கூறுவதென்ன? தெளிவான அழைப்பை வலியுறுத்த அடிக்கடி பயன்படுத்தப்படும் திருவசனம் எபி 5:4' ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்திற்குத் தானாய் ஏற்படுகிறதில்லை' இங்கு இரு முக்கிய காரியங்களை நாம் கவனிக்கக் தவறக்கூடாது. முதலாவது இங்கு சொல்லப்படுவது பொதுவான ஆசாரியத்துவப் பணியைப் பற்றியல்ல,'பிரதான ஆசாரியனாய்'சிறப்பான பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதைக் குறிக்கிறது(வச 1), இரண்டாவது புதிய உடன்படிக்கையில் ஆசாரியத்துவம் மாற்றப்பட்டுவிட்டது. நமது அண்ணன் இயேசு ஆரோனின் வரிசையிலல்ல. மெல்கிசெதேக்கின் வரிசையில் வந்துள்ளார்(எபி 7:11-13). அவர் யூதா கோத்திரத்தில் தோன்றினார். அந்தக் கோத்திரத்தைக் குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை(வச 14). எனவே ஊழிய அழைப்புக்கான கேள்விக்கு பதிலளிக்க எபி 5:4ஐ மேற்கோள் காட்டுவது பொருத்தமல்ல.
மோசே அல்லது பவுலைப்போல விவரிக்கக்கூடிய வகையில் அழைக்கப்பட வேண்டுமென்று நீங்கள் காத்திருந்தால் ஏமார்ந்துபோவீர்கள். இவர்களைப் போன்றோர் யூதச் சமுதாயத்திற்கும் கிறிஸ்தவ சபைக்கும் அடித்தளமிடும் காலங்களில் முக்கிய பங்கு வகிக்க அழைக்கப்பட்டவர்கள். சபை சரித்திரத்தில் இன்றைய நாள் 'பதினோராம் மணி' வேளையாகும். ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்று சாக்குச் சொல்லி நிற்போரை பார்த்து நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன? என அறுப்பின் ஆண்டவர் கடிந்துகொள்வார்(மத் 20:1-7). அழைப்பு வருமென்று காத்துக்கொண்டு அவர்கள் கடைத்தெருவில் நின்றுக் கொண்டிருந்திருக்கக்கூடாது. மாறாக, அவர்கள் திராட்சத் தோட்டத்திற்குச் சென்று வேலைக்கு தாங்கள் தேவைப்படுகிறோமாவெனக் கேட்டிருக்கவேண்டும். உலக வேலைகளைத் தேடும்போது ஒருபடி தவறாது பல கம்பெனிகளில் ஏறியிறங்கி, எந்த கம்பெனி வாசல் திறக்கிறதோ அதைக் கர்த்தரின் சித்தமென எடுத்துக்கொள்ளுகிறோமல்லவா? அதே தத்துவத்தைக் கர்த்தரின் பணியில் இறங்கவும் பயன்படுத்தவேண்டும்.
கிறிஸ்தவர்களில் பலர் வேலையில்லாமல் அல்லது தங்கள் படிப்பிற்கும் பயிற்சிக்கும் தகுதியற்ற குறைந்த வேலையில் இருக்கிறார்கள். ஆனாலும் போதுமான வேலையாட்களில்லாத இறையரசுப் பணியைக்குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை(மத் 9:37). 'ஆண்டவரே, என்னை அழையும்' என்று ஜெபிக்காதீர்கள். 'என்னை அனுப்பும்' என்று ஜெபியுங்கள்(மத் 9:38). ஏசாயாவைப் பார்த்து ஆண்டவர் 'உன்னை நான் அனுப்பட்டுமா?நீ நமது காரியமாய் போவாயா? என்று கேட்கவில்லை. மாறாக அவர் 'யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாய் போவான்?என்றார் (ஏசா 6:8) பொதுவான அந்த அழைப்பிற்கு ஏசாயா தனிப்பட்ட பதில் கொடுத்து முன்வந்தான். 'இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்'. அதற்குப் பின்னர்தான் ஆண்டவர் அவனைப் பார்த்து 'நீ போ' என்றார்(வச 9) நாம் ஊழியத்திற்கு போக தன்னார்வமாய் முன்வரும்போதுதான் ஆண்டவர் நம்மை அனுப்புவார்.
அழைக்கப்பட்டோர் அநேகர். தெரிந்துக்கொள்ளப்பட்டோரோ சிலர். சுவிசேஷத்தில் இருமுறை இவ்வாசகத்தை இயேசு மொழிந்தார். ஒன்று திராட்சைத்தோட்ட உவமையில், அடுத்தது கல்யாண விருந்து உவமையில்(மத் 20:16,22:14). இவ்விரு உவமைகளும் தேவ அழைப்பிற்கு சரியாய் பதில் கொடுக்க வேண்டிய மனிதனின் பொறுப்பை வலியுறுத்துகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், 'அழைப்பிற்குக் கீழ்ப்படிவோரே தெரிந்துக் கொள்ளப்பட்ட வர்களாம்'. தங்கள் பிள்ளைகளை ஆண்டவரின் திருப்பணிக்கு அர்ப்பணிக்கும் பெற்றோரின் விருப்பங்களையும் அவர் கனம் பண்ணுகிறார். தனக்கொரு மகனைக் கர்த்தர் கொடுப்பாரானால் அவனை அவரது பணிக்கே கொடுத்து விடுவதாக அன்னாள் தானாகவே வாக்குக் கொடுத்தாள். அவளது இதய வாஞ்சையைக் கர்த்தர் அருளிச் செய்தார். அவள் தனது வாக்கைக் காப்பாற்றினாள். அதற்குப் பல ஆண்டுகள் கழித்துதான் கர்த்தர் நேரடியாய் சாமுவேலை அழைத்தார்(1 சாமு 1:11,27,28, 3:8,9) மிகச்சிறிய வயதிலிருந்தெ இந்நாட்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை டாக்டராக, எஞ்சினியராக வேண்டுமென்று ஊக்குவித்து அப்படியே ஆக்கிவிட தேவையான ஏற்பாடுகள் அத்தனையையும் செய்யும்போது அதே விதமாய்க் கர்த்தரின் பணிக்கும் பிள்ளைகளை ஆயத்தப்படுத்தாதது ஏனோ?
நான் முழுநேரப் பணிக்குள் இறங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தனது முதற்பேரான என்னை எனது அம்மா ஆண்டவரின் பணிக்கு ஒப்புக்கொடுத்து விட்டார்கள். நான் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிக்கொண்டிருந்தாலும் எனது தருணம், தாலந்து, தனம் அத்தனையையும் மிஷனரிப் பணியில் வார்த்துவிட வேண்டுமென்ற வாஞ்சை எனக்குள் வளர்ந்துக்கொண்டேயிருந்தது. இவ்வித 'விருப்பத்தை' எனக்குள் உண்டாக்கியவர் தேவனே என நான் புரிந்துக்கொண்டேன்(பிலி 2:13). நான் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை, தரிசனம் ஒன்றும் காணவில்லை. எனக்குக் கிடைத்தது எளிமையான வழிநடத்துதல் மட்டுமே, எனது தீர்மானத்தை என் மனைவியோடு பகிர்ந்துக்கொண்டபோது அவள் மனமகிழ்ந்தாள். என் அம்மா கண்ணீரோடு என்னை அணைத்துக்கொண்டார்கள். கர்த்தர் சித்தம் ஆகட்டும் என்றனர். எனது மாமனார், மாமியார், கணவன் முழுநேரப் பணிக்குள் காலெடுத்து வைக்கையில் மனைவியும் அவனோடு செல்வதே பொதுவான சூழலில் விரும்பத்தக்கது. ஆபிரகாமின் அழைப்பே சாராளுக்கும் போதும்(ஆதி 12:5). நான் அழைக்காதிருக்க நீ ஏன் வந்தாய்? என்று கடவுள் யாரையும் கேட்டதாய் நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. மாறாக, நான் அழைத்தபோது நீ ஏன் வரவில்லை? என்று ஆண்டவர் வினவக்கூடிய கிறிஸ்தவர்கள்தான் ஏராளம் . ஏராளம் . கீழ்ப்படியாதவரே கீழ்ப்படிகிறவர்களைவிட அதிகம். எல்லோரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பதுரும் நல்லதல்ல. சிலவேளைகளில் மூத்தவர்களும் தீர்க்கதரிசிகளுங்கூட உங்களை வழி பிசகக் செய்யமுடியும்.(1இராள 14:,கலா 1:16). என்னைத் தவறாய் புரிந்துக் கொள்ளவேண்டாம். தமது பிள்ளைகள் யாவரும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு முழுநேர ஊழியத்திற்கு வந்துவிட தேவன் எதிர்ப்பார்க்கிறாரென்று நான் சொல்லவில்லை. நான் சொல்வது என்னவென்றால், தேவை மிகுதி, காலம் கொஞ்சம், தெரிந்தெடுப்பு உங்களுடையது. முதல்அடி எடுத்து வையுங்கள். புறப்படுங்கள். நீங்கள் இடதுபுறம் அல்லது வலதுபுறம் சாய்ந்தால், கடவுள் பின்னலிருந்து சத்தம்கொடுத்து உங்களை நேர்வழியில் நடத்துவார்(ஏசா 30:21).