என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் பெந்தேகோஸ்தே ஊழியர்கள் நண்பர்கள், உறவினர்கள் உண்டு, ஆகவே கவனத்துடனே இதை எழுதுகிறேன்.
பாரம்பரிய சபைகளில் அல்லேலூயா என்ற வார்த்தையை பிரசங்கத்திலோ, ஆராதனைகளிலோ, பயன்படுத்துவதில்லை, நான் தென்னிந்திய திருச்சபை குடும்பத்தில் பிறந்து, பாப்திஸ்து திருச்சபையில் வளர்ந்தவன், ஆகவே அல்லேலூயா சொல்லி பழக்கமில்லாதவன்.
ஆரம்பத்தில் பெந்தேகோஸ்தே சபைகளுக்கு பிரசங்கம் செய்ய போகும்போது, சபையாரை உற்சாகப்படுத்த அல்லேலூயா சொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டே போவேன், வியாக்கியான பிரசங்கம் (expository preaching) செய்யும் பழக்கம் இருப்பதால் கவனம் வசனத்தின் மீதே இருப்பதினால், அல்லேலூயா என்று சொல்ல வேண்டும் என்பது ஞாபகத்திலே வருவதே இல்லை, பிரசங்கம் முடிந்த பிறகுதான் ஞாபகம் வரும், நான் அல்லேலூயா செல்லாத காரணத்தால் எந்த சபையும் என்னை வர வேண்டாம் என்று சொன்னதில்லை, வழமையாக பிரங்கிக்க செல்லும் சபைகளும் உண்டு.
ஆனால் அல்லேலூயா சொல்லாதவர்கள் எல்லாம் கிறிஸ்தவ விரோதி என்று சொல்லுகிற சில அரைவேக்காடுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
1. அல்லேலூயா என்று பரலோகத்தில் தூதர்கள் தேவனை துதித்ததாக வெளிப்படுத்தின விஷேசத்தில் வாசித்தாலும், அது பரலோக பாஷை இல்லை, அது சாதாரண எபிரேய பாஷை, யாவே கடவுளுக்கு துதி என்பதுதான் அதன் அர்த்தம், தமிழில் கர்த்தருக்கு துதி என்று சொல்லலாம், ஆங்கிலத்தில் PRAISE THE LORD என்பதும் அதே அர்த்தம் தான், கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்பதும் அதைத்தான் குறிக்கும்.
2. பழைய ஏற்பாட்டில் சொன்னதாலேயே நாம் சொல்ல வேண்டும் என்ற வாதம் சரியில்லை, பழைய ஏற்பாட்டின் எல்லா விஷயங்களையும் புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் வியாக்கியானம் செய்யப்பட வேண்டும், பழைய ஏற்பாட்டிலிருந்து நேரடியாக பொருள் கொள்ளக்கூடாது, புதிய ஏற்பாட்டின் எல்லா விஷயங்களையும் இயேசுவின் போதனைகள் வழியே பொருள் கொள்ள வேண்டும்.
அல்லேலூயா சொல்லக்கூடாது என்று சொல்ல அது கெட்ட வார்த்தை அல்ல, ஆனால் கருத்தோடு சொல்லுங்கள் என்று சொல்லுகிறோம்.
1. தூங்குகிறவர்கள் ஒரு அல்லேலூயா சொல்லுங்கள்.
2. ஒரு ஐந்து அல்லேலூயா சொல்லுங்கள்.
4. சத்தமாக அல்லேலூயா சொல்லுங்கள்.
3. சாட்சி சொல்லும்போது:
நான் இரட்சிக்கபடுவதற்கு முன்பு பல பெண்களுடன் தொடர்பு வச்சிருந்தேன், அல்லேலூயா!
நான் ஒருத்தனை குத்திட்டு ஜெயிலுக்கு போனேன் அல்லேலூயா
நான் கள்ள சாரயம் காய்ச்சிட்டு இருந்தேன், அல்லேலூயா!
இப்படியெல்லாம் நான் பெந்தேகோஸ்தே சபைகளில் சொல்ல, நான் கேட்டிருக்கிறேன்.
இதற்கெல்லாமா அல்லேலூயாவை பயன்படுத்துவது?
பொதுவாக பெந்தேகோஸ்தே சபைகளில் போதகர்கள் அல்லேலூயா சொல்லுவதற்கு காரணங்ககள்:
- பிரசங்கம் செய்யும்பொழுது அடுத்து என்ன சொல்ல வேண்டும் என்பதை யோசிக்க, அல்லேலூயா சொல்லி நேரத்தைக் கடத்துவது. ஒழுங்காக பிரசங்கத்திற்கு ஆயத்தப்பட்டு வந்திருந்தால், இதற்கு தேவை இருக்காது!
- அடிக்கடி அல்லேலூயா சொல்லி தன்னை ஒரு வல்லமையான பிரசங்கியார் என்று காட்டிக்கொள்ள.
- பொதுவாக (சில விதிவிலக்குகளைத் தவிர) அடிக்கடி அல்லேலூயா சொல்லும் பிரசங்கியார்களின் பிரசங்கங்கள் பொதுவாக ஆவிக்குரிய சத்தியம் இல்லாமல், உப்பு சப்பில்லாமல் தான் இருக்கும்.
- மிகச்சிறப்பாக கருத்துடன் சிறந்த ஆவிக்குறிய பிரசங்கியார்களைக் கேட்டிருக்கிறேன். அவர்களின் கவனமெல்லாம் வசனத்தை சரியாக போதிப்பதில் இருப்பதால், பிரசங்கம் செய்யும்பொழுது அல்லேலூயா அவர்கள் வாயிலிருந்து வருவதில்லை!
இப்படி பலமுறை அல்லேலூயாவை தவறாகவே பயன்படுத்துகிறோம், இதுதான் கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவது. இயேசு தான் நம்முடைய மாதிரி
உண்மையாகவே தேவனுக்கு மகிமையை கொண்டு வரும் காரியங்களை சொல்லி கருத்துடன் அவருக்கு நன்றி மற்றும் துதி செலுத்தும் விதமாக தேவனுக்கு மகிமை அல்லது அல்லேலூயா என்று சொல்லுவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், அதை குறை சொல்லவில்லை.