தற்போது அனைத்து கிறிஸ்தவ பள்ளிகளிலும், இதர கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிலும் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிற கிறிஸ்தவர்கள் என்றாலும், இல்லை அது பாவம் என்று சொல்லுகிற மற்ற கிறிஸ்தவர்களானாலும் தெளிவான வேதாகம உபதேசத்தை அறிந்திருக்கிறார்களா? என்பது சந்தேகமே? ஆகவே இதை குறித்து வேதம் போதிப்பது என்ன என்பதைநாம் அறிய வேண்டியது அவசியமாகிறது.
கிறிஸ்தவம் எந்த கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானது அல்ல. கிறிஸ்தவ கலாச்சாரம் என்ற ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் என்று எதுவும் இல்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இந்தியர்களுக்கு நற்செய்தி அறிவித்ததினால் அவர்களின் தாக்கம் இந்திய கிறிஸ்தவர்களிடம் இருக்கிறது. நம்மை பொறுத்தவரை இது தேவையில்லாத ஒன்றுதான். குறிப்பாக திருமணத்தில் கோர்ட் சூட் அணிவது, கவுன் அணிவது இது போன்ற சில காரியங்களை சொல்லலாம். சில தமிழ் நாட்டு கிறிஸ்தவ கோமாளிகள் இங்கிலாந்து அரச திருமணம் எப்படி இருக்குமோ அப்படியே தங்கள் திருமணத்திலும் ஒத்திகை செய்து பார்க்கிறார்கள். இந்த கோமாளிகளின் கூத்துகளினால்தான், கிறிஸ்தவம் இந்த கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானது போன்ற ஒரு தோற்றத்தை உண்டுபண்ணுகிறார்கள்.
நாம் தமிழர்களாகவே தமிழ் மொழி வழியாகவே ஆண்டவரை தொழுது கொள்ளும் போது, தமிழ் பண்பாட்டோடு ஆண்டவரை ஆராதிப்பது தவறல்ல. வேதம் நேரடியாக பாவம் என்று சொல்லுகிற ஒன்று கலாச்சாரமாக இருக்குமானால் அதை தவிர்க்க வேண்டும். வேத போதனைக்கு கீழ்படிய வேண்டும். பாவம் என்று சொல்லப்படுகிற கலாச்சாரத்தை தவிர்க்க வேண்டும்.
இங்கிலாந்திலிருந்து ஆப்பிரிக்க நாட்டுக்கு சென்ற ஒரு போதகருக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. முதல் நாள் கூட்டத்திற்கு பிறகு அந்த இங்கிலாந்து போதகர் இருந்த அறைக்கு ஆப்பிரிக்க ஊழியர் வந்து தன் மனைவி இன்று இரவு உங்களுக்கு விருந்தாக இருப்பாள் என்று சொன்னார். இதை கேட்ட இங்கிலாந்து ஊழியருக்கு தூக்கி வாரி போட்டது. ஏன் என்று கேட்டார், அதற்கு ஆப்பிரிக்க ஊழியர் நாங்கள் யாரை அதிகமாக கனப்படுத்த விரும்புகிறோமோ அவர்களுக்கு எங்கள் மனைவியை விருந்தாக கொடுப்பது எங்கள் பண்பாடு, கலாச்சாரம் என்று சொன்னார். அதன் பிறகு அந்த இங்கிலாந்து போதகர் இதை வேதம் விபச்சாரம் என்று சொல்லுகிறது, கிறிஸ்தவர்களாகிய நாம் இதைசெய்ய கூடாது என்று விளக்கம் அளித்தார்.
பாவம் என்பதை கலாச்சாரம் அல்லது பண்பாடு என்று சொன்னால் கிறிஸ்தவர்களாகிய நாம் அதை கடைபிடிக்க முடியாது. பொங்கல் பண்டிகையை பொறுத்து தமிழர்களாக நாம் அதை கடைபிடிப்பது தவறல்ல. ஆனால் அதிலிருக்கிற பெரிய ஆபத்து என்ன வென்றால் ஆரியர்களின் சூழ்ச்சியினால் இந்து மத நம்பிக்கை அதில் திணிக்கப்பட்டிருக்கிறது. திராவிடர்களின் அறுவடை பண்டியாகிய பொங்கல் பண்டிகையை ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தின் அடிமைத்தனத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு மூட நம்பிக்கைகள் திணிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சூரியனை, மழையை அல்லது பசுவை தெய்வங்களாக கருதி வணங்குவது.
விவசாயிகளோடு நாம் சேர்ந்து அறுவடைக்காக கடவுளுக்கு நன்றி சொல்வது தவறல்ல. ஆண்டவரை அறியாத மக்கள் இயற்கையை கடவுள் என்று நம்புகிறார்கள். நாம் சூரியனுக்கு அல்ல அதை படைத்தவருக்கு நன்றி சொல்ல வேண்டும். மழைக்கு அல்ல, அதை தருகிற சிருஷ்டிகராகிய கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.