கருத்து துணுக்குகள்

இன்றைய கானாவூர் கல்யாணம் (கற்பனை கதை)

சகோ. டேவிட் தன்ராஜ்

கற்சாடிகள்

மார்த்தாண்டத்தில் பரபரப்பு

நேற்றுக்காலை கண்ணியாக்குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள கானா ஊரில் தென்னிந்திய திருச்சபையில்  முருங்கவிளை ராஜனுக்கும், கீரிவிளை ஷோபனாவுக்கும் மறைமாவட்ட போதகர் பிரைட்டன் தலைமையில் திருமணம் நடைபெற்றது, திருமணம் முடிந்து பெண்வீட்டார் சார்பில் அதே வளாகத்திலுள்ள பாரிஷ் ஹாலில் விருந்து உபசரிப்பு நடைபெற்றது  இருவீட்டார் சார்பிலும் விருந்துகாரர்கள் இரண்டாயிரம் பேர் கூடியதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. 

கூட்டத்தில் பரபரப்பு

 முதல் பந்தி முடிந்ததுமே விருந்து கூட்டத்தில் ஒரே பரபரப்பு, விருந்தில் விளம்பின அடைபாயாசம், வெள்ளை பாயசம் என இரண்டு பாயாசமுமே மிக ருசியாக இருந்ததால் விருந்துகாரர்கள் திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிட்டதினால் பாயாசம் காலியாகிவிட்டது என்று செய்தி பரவியதால் சாப்பிட காத்திருந்த விருந்துகாரர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது, இளைஞர்கள் சிலர் ஊளையிட்டு கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. நாசரேத்திலிருந்து வந்த மரியாள் என்ற உறவக்கார பெண் நிலைமை விபரீதமாவதை கண்டு தன் மகன் போதகர் இயேசுவிடம் சொன்னார், 

வெறுந்தண்ணீர் பாயசமானது

போதகர் இயேசு விருந்து விளம்புகிற இடத்திற்கு வந்து பாயாசம் காலியான சருவத்தை பார்வையிட்டார், அங்கிருந்தவர்களை சருவங்களை கழுவி வரிசையாக வைக்க சொன்னார், ஒருசிலர் இவர் இப்போது பாத்திரத்தை வைத்து எப்போதும் பாயாசம் செய்வார் என்று கிண்டல் செய்ததாக தெரிகிறது, அங்கிருந்த பெரியவர்கள் அவர்களை அதட்டி அவர் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று கூறினார்கள், அப்படியே அங்கிருந்த காலி பாத்திங்களை கழுவி போதகர் இயேசுவின் முன் வைத்தார்கள், இயேசு அதில் தண்ணீர் ஊற்ற சொன்னார், ஏறக்குறைய 100 குடம் தண்ணீர் ஊற்றப்பட்டது, போதகர் இயேசு அந்த பாத்திரங்களுக்கு நேரே கைகளை நீட்டி கண்களை மூடி ஜெபித்தார்,  கண்களை திறந்த வினாடியில் என்ன ஆச்சரியம் அத்தனை பாத்திரங்களிலும் பாயாசம் கொதித்துக் கொண்டிருந்தது. போதகர் இயேசு அதை எடுத்து பரிமாற சொன்னார், பாயாசம் குடித்தவர்கள் முதல் பாயாசத்தை விட இந்த பாயாசம் அதிக ருசியாக இருக்கிறது என்றார்கள். 

இந்த விஷயம் காட்டுத்தீ போல எங்கும் பரவியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பாயாசத்தை ருசி பார்த்து வருவதாக தெரிகிறது, கடைசிவரை அந்த பாயாசம் சூடு குறையவில்லை, ருசியும் குறையவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். 

இதை குறித்து அந்த பகுதி பிஜேபி தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, இந்த கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்ய இப்படிபட்ட பரபரப்பு பொய் செய்தி வெளியிடுவதாகவும், கூட்டத்தில் அநேகர் மாஸ்க் அணியவில்லை என்றும், சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றும் இதை கன்னியாகுமரி பிஜேபி கண்டனம் செய்வதாகவும் கூறினார்.

ஆனால் திருமண விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் இந்த சம்பவங்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை தங்கள் கைபேசியில் வீடியோ எடுத்து YouTube மற்றும் சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள் அவை தற்போது வைரலாகிவருகிறது. 

நேற்றும் இன்றும் மட்டும் போதகர் இயேசு யார் என்பதை பல லட்சம் பேர் google-ல் தேடி இருக்கிறார்கள். 

செய்தியாளர் : டேவிட் தன்ராஜ், மார்த்தாண்டத்திலிருந்து

(கானாவூர் கல்யாணம் இக்காலத்தில் நடந்து இருந்தால் எப்படி என்ற சின்ன கற்பனை)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.