ஆசிரியர்: பி. ஷ்ரவன்குமார்.
மொழியாக்கம்: ஜோசப் கோவிந்த்.
தேவன் நம்பிக்கைக்கு உரியவர் என்றும், அவருடைய உண்மைத்தன்மையை தம்முடைய மக்களுக்கு காண்பிக்கிறார், என்றும் வேதம் தெளிவாக போதிக்கிறது. இந்த கட்டுரையில் குறிப்பிட்ட நம்பகமானவர் அல்லது உண்மையுள்ளவர் என்ற தலைப்பைப் பற்றி முழுமையாக நாம் அறிந்து கொள்வோம். தேவன் நம்பதகுந்தவர் என்பதை, அவரிடத்தில் விசுவாசமாய் இருப்பவர்களுக்கு அவர் செய்வது என்ன என்பதை வேத வசனங்களின் அடிப்படையில் பார்ப்போம்.
1. தேவன் நம்பகமானவர்.
நம்பிக்கை அல்லது விசுவாசம் என்பது ஒரு நபரின் நிலையைக் அறிவிக்கிறது. உண்மைத்தன்மை என்பது தேவனின் பண்புகளில் ஒன்றாகும். தேவனின் உண்மைத்தன்மை என்பது அவரைச் சூழ்ந்திருகிறது. என்பதை சங்கீத புத்தகத்தில் நாம் காண்கிறோம்.
“சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.” சங்கீதம் 89:8
“நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.” ஏசாயா 11:5
தேவன் சிறிது காலம் உண்மைத்துவத்தோடு இருந்து பின்னர் மாறுபவர் அல்ல. அவர் எப்போதும் உண்மையுள்ளவர்.
“கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்;” சங்கீதம் 119:89,90
தேவனின் உண்மைத்துவம் தலைமுறை தலைமுறையாக இருக்கிறது. அது சிறிதுக்காலம் இருந்து மறைந்து போவது அல்ல. தேவன் எப்போதும் மாறாதவர், மாற்றம் இல்லாதவர் என்பதால், அவருடைய உண்மைதுவம் என்றென்றும் நிலைத்திருக்கும். அது மாத்திரமல்ல, தேவனுடைய உண்மைத்துவம் என்பது பரிசுத்தமானது.
“அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.” உபாகமம் 32:4
2. தேவன் தன்னுடைய உண்மைத்தன்மையை யாருக்குக் காண்பிக்கிறார்?
தேவன் தம்முடைய உண்மைத்தன்மையை அனைவருக்கும் காண்பிக்கிறார், அவை எவ்விதமாக என்பதை வேதவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. “தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.” மீகா 7:20
தேவன் தாம் நேசிப்பவர்களுக்கும், மற்றும் அவரை நேசிப்பவர்களுக்கும், தனது உண்மைத்துவத்தை அன்புடனும், கிருபையுடனும், ஆசீர்வாதத்துடனும் காட்டுகிறார். அவ்வாறே தேவன் தன்னை வெறுப்பவர்களை நியாயந்தீர்ப்பதன் மூலம் தனது உண்மைத்தன்மையைக் காட்டுகிறார்.
“அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.” சங்கீதம் 96:13
3. தேவன் எதன் மூலம் தம்முடைய உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறார்?
தேவன் தம்முடைய வார்த்தையினாலும், தாம் கொடுத்த வாக்குறுதிகளினாலும் அவருடைய உண்மைத்தன்மையைக் காண்பிக்கிறார்.
“உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.” சங்கீதம் 138:2
தேவனுடைய உண்மைதுவத்தைக் குறித்து வேதத்திலிருந்து பல உதாரணங்களை நாம் கூறலாம். தேவன் ஆபிரகாமை ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார், அவர் சொல்லியபடியே அந்த வார்த்தையை நிறைவேற்றினார். பார்வோனை அழிப்பேன் என்று மோசேயிடம் சொன்னார், அந்தப்படியே அவர் செய்தார். இதிலிருந்து, தேவன் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவர் என்பதும், அவருடைய வாக்குறுதியை தவறாமல் நிறைவேற்றுவதினாலும், அவருடைய உண்மைத்துவத்தை நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது.
4. தேவன் நாம் உண்மைத்துவத்தொடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
தம்முடைய உண்மைத்துவத்தை காண்பிக்கும் தேவன் தம்மிடத்தில் உண்மையோடு இருக்கும்படி கட்டளையிடுகிறார்.
“இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.” உபாகமம் 28:1
“அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்." மத்தேயு 25:21
நாம் தேவனிடத்தில் உண்மையாக இருந்தால், தேவன் நமக்காக பலவற்றைச் செய்வதாக கூறுகிறார். நாம் உண்மையாக இருந்தால் தேவன் நமக்கு செய்வது என்னவென்று பார்ப்போம்...!
A. தேவனிடத்தில் உண்மையாக இருப்பவர்களை பரமாரித்து பாதுகாக்கிறார்.
முதலாவதாக, தம்மிடத்தில் உண்மையுள்ள ஜனங்களை "தடுமாற்றத்திலிருந்து" காக்கிறார். ஆனால் இந்த பாதுகாப்பை துன்மார்க்கருக்கு தேவன் வழங்குவதில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.
“அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.” 1 சாமுவேல் 2:9
“கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.” சங்கீதம் 31:23
தமிழ் வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கர்த்தருடைய பரிசுத்தவான்களே’ என்ற வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் " faithful," என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு தேவன் தனது பக்தர்களையோ, அல்லது சீஷர்களையோ உண்மையுள்ளவர்களாகக் கருதுகிறார் என்று அர்த்தம். அப்படி விசுவாசமாக இருப்பவர்கள் மட்டுமே அவருக்கு சொந்தமானவர்கள்.
அப். பவுல் எழுதிய தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தில், இன்னும் தெளிவாக சொல்லப்படுகிறது. தேவன் தமது மக்களை தீமையிலிருந்து காப்பாற்றுவதாக சொல்கிறது.
“கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.” 2 தெசலோனிக்கேயர் 3:3
தேவன் நமக்கு உடல் ரீதியான பரமரிப்போடு, தீமையிலிருந்து நம்மைப் பாதுகாப்பதினால் பரிசுத்தமாக இருக்க நமக்கு உதவுகிறார்.
“சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும் படி காக்கப்படுவதாக.” 2 தெசலோனிக்கேயர் 5:23
B. தேவனை விசுவாசிப்பவர்களுக்கு அவர் வெகுமதியை அளிக்கிறார்.
“கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.” "1 சாமுவேல் 26:23
“உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.” நீதிமொழிகள் 28:20
தேவனை நேசிப்பவர்களுக்கும், அவர் மீது நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கும் தேவன் வெகுமதியை அளிக்கிறார் என்பதை இந்த வசனங்கள் நமக்கு காட்டுகின்றன. உண்மைதுவத்தோடு தன்னுடைய வேலையை செய்பவர்களுக்கு தேவன் செழிப்பையும், வளத்தையும் தருகிறார். தம்முடைய வார்த்தைக்கு உண்மையாகக் கீழ்ப்படிகிறவர்களை உயர்த்துகிறார். அவர் நமக்கு ஒப்புக்கொடுத்த பொறுப்புகளில் நாம் உண்மையாக இருந்தால், அவர் இன்னும் அதிகமான பொறுப்புகளை ஒப்புக்கொடுப்பார். அதுமட்டுமல்ல, இப்படிப் பட்டவர்களுக்கு ஜீவ கிரீடத்தையும், பரலோகராஜ்யத்தில் பிரவேசத்தையும் தேவன் அருளுவார்.
“நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.” வெளிப்படுத்துதல் 2:10
C. விசுவாசிகளுக்கு தேவன் துன்பங்களை அனுமதிக்கிறார்.
கர்த்தர் தாம் நேசிக்கிறவர்களை பரிசுத்தப்படுத்துவதற்காக தம்முடைய மக்கள் அனைவரையும் சிட்சிக்கிறார், ஒழுங்குபடுத்துகிறார், திருத்துகிறார். தேவனை அறிகிற அறிவில் நாம் வளரும்படி அவர் நம்மை அனுமதிக்கிறார். அதனால் தான் தாவீது இவ்வாறு கூறுகிறார்.
“கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.” சங்கீதம் 119:75
“(தேவனோ) இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.” எபிரெயர் 12:10
5. தேவனின் உண்மைத்துவம் நம்முடைய உண்மைதுவத்தோடு சார்ந்தது அல்ல.
தேவனுடைய வார்த்தை தெளிவாக சொல்லுகிறது, தேவனின் உண்மைத்தன்மை என்பது மனிதனைச் சார்ந்தது அல்ல.
“சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?” ரோமர் 3:3
“நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.” 2 தீமோத்தேயு 2:13
மேற்வாசித்த வசனங்கள் நாம் தேவனுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று தெளிவாக சொல்கிறது, ஆனால் நாம் உண்மையுள்ளவர்களாக இருப்பதால் தான், தேவனும் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று நினைப்பது தவறு. தேவனுடைய இயல்பான குணமே உண்மையுள்ளவர் என்பதே. அவனுடைய இயல்பான குணத்திற்கு எதிராக அவர் எதையும் செய்யவதில்லை. சில சமயங்களில் நாம் தேவனுக்கு உண்மையற்றவர்களாக இருக்கிறோம். அதன் விளைவாக பல விதங்களில் துன்பப்படுகிறோம், ஆனால் தேவனோ பல சமயங்களில் நம்மோடு இருந்து அவருடைய உண்மைத்தன்மையின் படி நம்மை வழி நடத்துகிறார்.
உதாரணமாக, தாவீது பத்சேபாவுடன் செய்த பாவத்தின் காரணமாக, தேவன் தாவீதோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்றாமல் இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் தேவன் தாவீதுக்கு தம்முடைய உண்மைத்தன்மையைக் காண்பித்தார். அப்படியே நாமும் அதாவது (உண்மையாகவே இரட்சிக்கப்பட்டவர்கள்) பலமுறை தேவனுக்கு விரோதமாக இருந்தாலும், அவர் நீடிய பொறுமையின் மூலம் தேவன் தம்முடைய உண்மையை காண்பிக்கிறார்.
தேவன் எப்படியும் அவருடைய உண்மைத்தன்மையைக் காட்டுவதால், நான் பாவத்தில் வாழ்ந்தாலும், தேவனுக்கு எதிராக இருந்தாலும் பரவாயில்லை, என்று நாம் நினைக்கக்கூடாது. நம்முடைய பாவங்களுக்காக நாம் தேவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
தேவனுடைய இயல்பான குணத்தையும், இஸ்ரவேலர்களின் இயல்பான குணத்தையும் உணர்ந்த தானியேல் தேவனிடம் இவ்வாறு ஜெபித்தார்:
“ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.” தானியேல் 9:7
பிரியமான தேவனுடைய மக்களே, தேவனின் உண்மைத்தன்மையை நினைவில் வையுங்கள். ஏனெனில் நம்முடைய தேவன் தாம் கொடுத்த வாக்குத்தத்தங்களுக்கு எப்போதும் உண்மையுள்ளவர். ஆனால் நாமோ பல சமயங்களில் அவருக்கு உண்மையற்றவர்களாக இருந்து, அவருக்கு துரோகம் செய்தும், பாவம் செய்தும், கலகம் செய்தும், பரிசுத்த ஆவியை வருத்துகிறவர்களாக இருக்கிறோம். நம்மை பரிசுத்தமாக இருக்கும் படிக்கு அழைத்த தேவன், நம்மை உண்மையுள்ளவர்களாக இருக்கும்படி அழைக்கிறார். தற்போது உங்களுடைய நிலைமை எவ்விதமாக உள்ளது?