கட்டுரைகள்

 

 ஒரு காலத்தில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய போது, அனேகர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். காரணம், இனி நாம் தேவனுடைய வார்த்தைகளை நம் வீட்டிலேயும் கேட்க போகிறோம் என்று! ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்க வில்லை! ஏனென்றால், இன்றைக்கு பல கிறிஸ்தவ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கள்ள தீர்க்க தரிசிகளின் புகழிடமாகவும், வேத வசனத்திற்கு சற்றும் ஒத்து போகாத போதனைகளின் பிறப்பிடமாகவும் மாறியிருக்கின்றன! தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவிட்டாலே அது முற்றிலும் உண்மை என்று நம்பும் மக்கள் கூட்டம் இருப்பதால், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்பவர்களுக்கு, பார்வையாளர்களுக்கு பஞ்சமில்லை!

சில மாதங்களுக்கு முன்னர், ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் செய்தி கொடுத்தவர் சொன்னார், இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும், ஒரு தேவ தூதன் ஒரு தங்க சுருளை வைத்துக் கொண்டு வந்து நிற்பதை நான் காண்கிறேன் என்றார். அந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் வீட்டிற்கு மட்டும் தேவதூதன் வருவதற்கு அந்த நிகழ்ச்சி என்ன பரலோகத்தில் இருந்தா ஒளிபரப்பாகிறது? ஆனால் நாம் எச்சரிக்கையாக இருக்கும் படி, இப்படி பட்ட கள்ள தீர்க்க தரிசனங்களை பற்றி மத்தேயு 24:11ல் அனேகங் கள்ள தீர்க்கத்தரிசிகளும் எழும்பி அனேகரை வஞ்சிப்பார்கள் என்று, இயேசு கிறிஸ்து முன்னறிவித்திருக்கிறார். மேலும், தேவன் எங்களுக்கு பரலோக தரிசனம் கொடுத்திருக்கிறார், பரலோகத்தில் ஒரு கமிட்டி இருக்கிறது, அந்த கமிட்டியில் நாங்களும் உறுப்பினர்கள் போன்ற இயேசு கிறிஸ்துவே முன்னறிவிக்காத பல காரியங்களை இவர்கள் சொல்லுவதைக் கேட்கும் போது, மத்தேயு 20ம் அதிகாரத்தில், செபதெயுவின் குமாரரின் தாய் இயேசுவிடம் வந்து, உமது ராஜ்ஜியத்தில், என் இரண்டு குமாரரில் ஒருவன் உமது வலது பக்கத்திலும், ஒருவன் உமது இடது பக்கத்திலும் உட்கார அருள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதையும், அதற்கு இயேசு, நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னதென்று உங்களுக்குத் தெரியவில்லை என்று அவளுடைய அறியாமையை சுட்டிக்காட்டுகிறார். இவர்களும் தங்களின் அறியாமையினாலோ அல்லது பொய் தீர்க்க தரிசனமாகவோ இவைகளை சொல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழகத்தில் சமீபத்தில் சில முன்னனி தொலைக்காட்சி செய்தியாளர்கள் சேர்ந்து, கர்த்தர் எங்களைப் புதிதாக ஒரு ஆலயம் கட்ட சொன்னார். அதற்கான மாதிரிகளை தேவனே எங்களுக்கு பரலோகத்தில் இருந்து காண்பித்தார். அதை மாதிரியாக வைத்து இந்த ஆலயத்தைக் கட்டியிருக்கிறோம். இந்த ஆலய பிரதிஷ்டையில் கலந்து கொள்ள (ஏதோ சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் நிர்ணயிப்பது போல) குறைந்த பட்ச கட்டணம் 1000 ரூபாய் என நிர்ணயித்து, கிறிஸ்தவ உலகில் முன் ஒரு போதும் கண்டிராத அளவு நல்ல கலெக்ஷன் பார்த்தார்கள். மேலும் பல புதிய புதிய பெயர்களில், பண வசூல் செய்யும் திட்டங்களை அறிமுகப்படுத்தி, தனியார் பைனான்ஸ் நிறுவங்களை போல, இந்த திட்டத்தில் பணம்போடுபவர்களை தேவன் நூறத்தனையாக ஆசீர்வதிப்பேன் என்று சொல்கிறார் என்று மக்களை வஞ்சிக்கும் திட்டங்களுக்கும் பஞ்சமில்லை. கெட்ட சிந்தையுள்ளவர்களும், சத்திய மில்லாதவர்களும், தேவ பக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற, மனுஷர்களால் மாறுபாடான தர்கங்களும் பிறக்கும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் இளம் வாலிபனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதின 2ம் நிருபம் 6ம் அதிகாரம் 5ம் வசனத்தில் வாசிக்கிறோம்.

சென்ற ஆண்டு தமிழகத்தில் உள்ள சில (கள்ள) தீர்க்கதரிசிகள் சேர்ந்து, ஜப்பானிலும், கொரியாவிலும் கடுமையான நில நடுக்கங்களை தேவன் கட்டளையிடப் போகிறார். அந்த நாட்டு மக்களின் கொடிய பாவங்களினால் தேவன் அவர்களை நியாயம் தீர்க்க போகிறேன் என்கிறார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். ஜப்பானையோ, கொரியாவையோ பற்றி தமிழகத்தில் தீர்க்கதரிசனம் உரைப்பதால் யாருக்கு என்ன லாபம்? சம்பந்தபட்ட இரு நாடுகளில் உள்ளவர்களுக்கும் இவர்கள் பேசிய மொழி புரியப் போவதில்லை. மேலும் இந்த இரு நாடுகளிலும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஏற்பட்ட நில நடுக்கம் குறைவு என்பது வேறு செய்தி! இவர்களைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது? 1 யோவான் 4:1ல், உலகத்தில் அனேக கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றி இருப்பதால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.

தேவனுடைய பிள்ளைகள் வேத வசனத்தை தெளிவாக படிக்கும் போது இப்படி பட்ட கள்ள உபதேசங்களை எளிதாக இனம் கண்டுகொள்ள முடியும். கிறிஸ்துவை முன்னிறுத்தாத எந்த ஒரு உபதேசமும், கள்ள உபதேசமே. கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிஷேசத்தை சொல்லாத எந்த ஒரு செய்தியும், வேத புத்தகம் சொல்லும் செய்தி அல்ல. தேவனை அறியாமல் அழிந்து கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவை கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷமேயல்லாமல், தீர்க்கதரிசனம் அல்ல! வேதபுத்தகம் முழுமையாக கொடுக்கப்பட்டிராத காலங்களில் தேவன் தரிசனங்கள் மூலமோ அல்லது தீர்க்கத்தரிசிகள் மூலமோ பேசினார். ஆனால் இன்றைக்கு தேவன் அப்படி பேச வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், மனிதனிடம் தேவன் எதை பேச வேண்டும் என்று நினைத்தாரோ அதை முழுவதுமாக வேதபுத்தகத்தின் மூலம் நமக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் இப்படி பட்ட கள்ள உபதேசங்களைப் பற்றி கேள்விபடும் போது, நான் சிறுவனாக இருந்த போது, ஞாயிறு பள்ளியில் பாடிய பாடல் என் நினைவுக்கு வருகிறது!

ஒட்டகச்சிவிங்கி ஒட்டகச்சிவிங்கி உயர்ந்திருப்பது எப்படி?
கர்த்தருக்கு பயந்தோரெல்லாம் உயர்ந்திருப்பார் அப்படி!
யானைக் குட்டி யானைக்குட்டி பானை வயிறு எதற்கு?
வசன பஞ்சம் வந்து விட்டால் என்ன செய்வேன் அதற்கு!

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.