கட்டுரைகள்

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் என்று சங்கீதம் 127:3ல் வாசிக்கிறோம். கர்த்தர் கொடுத்திருக்கிற பிள்ளைகளை கர்த்தருக்குப் பிரியமாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. முதலாவது, கர்த்தருடைய வசனத்தை பிள்ளைகளுக்கு கருத்தாய் போதிக்க வேண்டும். உபாகமம் 6:7ல் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர்களிடத்தில், நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கும் போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்கிறபோதும், எழுந்திருக்கும்போதும், அவைகளைக்குறித்துப் பேச வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எனது திருச்சபையின் ஞாயிறு பள்ளியில் 200க்கும் அதிகமான பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் இன்று அதில் நான்கில் ஒரு பங்கு பிள்ளைகள் கூட ஞாயிறு பள்ளிக்கு ஒழுங்காக வருகிறதில்லை. இது எனது திருச்சபையின் ஞாயிறு பள்ளியில் மட்டுமல்ல, பெரும்பாலான ஞாயிறு பள்ளிகளில் நிலமை இதுதான். இன்றைக்கு நாட்டில் சிறு பிள்ளைகளின் எண்ணிக்கை திடீரென்று குறைந்து விட்டதா? இல்லவே இல்லை. பெற்றோர்கள், பிள்ளைகள் ஒழுங்காக ஞாயிறு பள்ளிக்கு செல்வதைக்குறித்து அக்கரை காட்டுகிறதில்லை. ஞாயிற்று கிழமைகளிலேயும் அவர்கள் தொலைக்காட்சி அல்லது கணிணி முன்னால் அமர்ந்து பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஞாயிறு பள்ளி மாணவனாக இருந்தபோது, மனன வசனம் ஒப்புவித்தலில் கடுமையான போட்டிகள் இருந்தது. சிலர் 3000க்கும் அதிகமான வசனங்களை ஒப்பித்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு ஞாயிறு பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையும், அதில் வசனம் படிப்பவர்களின் எண்ணிக்கையும், படிக்கும் வசனங்களின் எண்ணிக்கையும், நாள்பட்ட கண்ணாடி போல மங்கியிருக்கிறது.

நியாதிபதிகளின் புத்தகத்தின் தொடக்கத்தில், அதாவது 2ம் அதிகாரம் 10ம் வசனத்தில், கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காக செய்த சகல கிரியைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று என்று வாசிக்கிறோம். இஸ்ரவேலில் இப்படியொரு சந்ததி வந்ததற்கான காரணம், அவர்களுடைய பெற்றோர், தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டிருந்த படி, தங்கள் பிள்ளைகளுக்கு வசனத்தை போதிக்காமல் விட்டு விட்டார்கள். அதன் விளைவு என்ன? அதே நியாதிபதிகள் புத்தகம் இறுதி அதிகாரம், இறுதி வசனம் இப்படிப்பட்ட பரிதாபமான நிலையில் முடிவடைகிறது. அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிபோன படி செய்து வந்தான்.

இன்றைக்கும் அனேக கிறிஸ்தவ பிள்ளைகள் கூட சரியான குணநலன்கள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம், வேத வசனங்களை படிக்க வேண்டிய நேரத்தை தொலைக்காட்சியும், கணிணியும், பள்ளிகளின் சிறப்பு பயிற்சி வகுப்புகளும் பிடித்துக் கொண்டிருக்கின்றன. வேத வாசிப்பும் ஜெப ஐக்கியமும் குறைந்திருக்கின்றன. விளைவு, சிறு பிள்ளைகள் கூட மிக அதிகமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளவதை நாம் செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு துணிகிறார்கள், கொலை மிரட்டல் விடுகிறார்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுகிறார்கள், சக மாணவர்களை கடத்தி கடத்தல் நாடகமாடுகிறார்கள். அவரவர் தன் தன் பார்வைக்கு சரிபோன படி செய்து வருகிறார்கள்.

இன்றைக்கு சிலர் தங்கள் பிள்ளைகளை, நாங்கள் அடிப்பதே இல்லை, அவன் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவோம், மிகவும் செல்லமாக வளர்க்கிறோம் என்று மற்றவர்களிடத்தில் பெருமையாக சொல்லக் கேட்டிருகிறேன். ஆனால் வேதம் என்ன சொல்கிறது? நீதிமொழிகள் 29:15ல் பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்துக்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான். என்று நாம் வாசிக்கிறோம். மேலும், பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்றும் நீதிமொழிகள் 22:6ல் வாசிக்கிறோம். உங்கள் பிள்ளைகள் இதில் எங்கே இருக்கிறார்கள்?

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.