அந்நியபாஷை குழப்பமும், தெளிவும்

கொரிந்து சபையில் ஞாயிறு ஆராதனை

26-ம் வசனத்தில் கொரிந்து திருச்சபையில் காணப்பட்ட கூச்சல் குழப்பத்தின் சுவாரசியமான காட்சியைக் காணலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை கொரிந்து சபையின் ஆராதனையில் கலந்து கொண்டால், பின்வரும் காட்சியை நீங்கள் காணலாம்: “நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது”. தமிழ் வேத புத்தகத்தில் ‘ஒருவன்’ என்று சொல்லப்படுகிற வார்த்தையானது ஆங்கில வேதப் புத்தகத்தில் ‘ஒவ்வொருவனும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் சபையின் கூச்சல் குழப்பத்தை அறிந்திருக்கிற நீங்கள், இவைகள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் செய்கிறீர்கள்; இது முட்டாள்தனமாக உங்களுக்கு தெரியவில்லையா?

இது அவர்களின் அந்நியபாஷை குழப்பத்தை சரி செய்வதற்காக விடுக்கும் அழைப்பு அல்ல, மாறாக அவர்கள் சபையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை பவுல் பட்டியலிடுகிறார். இத்தனை கூச்சல் குழப்பங்களா அங்கு நிலவியது என்பதை நம்ப முடியவில்லை. ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்த முயற்சி செய்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்கள் வரத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள், போலியான அந்நியபாஷை பேசியவர்களும் அங்கே கத்திக்கொண்டு இருந்தார்கள்; அங்கே யாரும் பக்திவிருத்தி அடைவதற்கு வழி இல்லாமல் இருந்தது. உண்மையில், அவிசுவாசிகள் அங்கே வரும்போது இவர்களுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது என்று முடிவே கட்டி விடுவார்கள்.

இந்த வசனத்தை (26) நாம் சற்று விவரமாக பார்க்கலாம்: “நீங்கள் கூடிவந்திருக்கிறபோது” - இது சபை கூடிவருதலைக் குறிக்கிறது - ஒவ்வொருவனும் ‘சங்கீதம்’ படுகிறான், நீங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீத புத்தகத்தை நினைக்கலாம், பரவாயில்லை. அது சரியாகவும் இருக்கலாம்; யாராவது ஒருவர் ஒரு சங்கீதத்தை வாசிக்க விரும்பி இருக்கலாம். ஆனால் அதைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, ஒரு ‘பாடல்’ என்பதையே குறிக்கிறது. அதாவது, இசைக்கருவிகளுடன் பாடப்படும் ஒரு பாடலை குறிக்கிறது. அங்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றால், ஒவ்வொருவரும் ஒரு தனிப் பாடலை, ஒரே நேரத்தில் பாடிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது அங்கே நிலவிய இரைச்சலை சற்று கற்பனை செய்து பாருங்கள். சிலர் அங்கே ஒரே நேரத்தில் வெவ்வேறு தனிப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள், அங்கே இசைக்கருவியை வைத்திருந்தவர்கள் யாராவது ஒருவருக்கு தனித்தனியாக வாசித்துக் கொண்டிருந்தார்கள், ஒருவர் ஒரு மூலையில் யாருக்காவது போதனை செய்து கொண்டிருப்பார். இதை எல்லாம் ஒழுங்குபடுத்த அங்கே யாரும் இருந்திருக்கவில்லை!

பாடல் பாடுதல் என்பது கிறிஸ்தவ ஆராதனையின் ஒரு அங்கமாக எப்பொழுதுமே இருந்திருக்கிறது. பிற்காலத்தில் அது திருச்சபையில் சேர்க்கப்பட்டதல்ல. ஆதி திருச்சபையின் நாட்களிலிருந்தே பாடல் பாடுவது வழக்கமான ஒன்றுதான், அது ஒரு சிறந்த அனுபவமும் கூட. ஆனால் கொரிந்து சபையில் அது ஒரு பெருமையின் காரணமாக மாறியது. ஒவ்வொருவரும் எழுந்து பாட்டு பாடி, தங்களைத் தாங்களே மேன்மையானவர்களாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள்.

இது போதாக்குறைக்கு இப்போது, “ஓவ்வொருவனும் போதகம் பண்ணுகிறான்”. இது ஏதோ ஒன்றை பிரசங்கிப்பதைக் குறிக்கிறது. போதிக்கும் வரத்தை பயன்படுத்த விரும்பியவர்களும், தான் அடுத்த போதகராக வேண்டும் என்று நினைப்பவர்களும் எழுந்துநின்று தங்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கு போதிக்க ஆரம்பித்தார்கள். அங்கே ஒரு 150 பேர் ஆளுக்கு ஆள் ஒரு தனி பாடலை பாடிக் கொண்டிருக்கிறார்கள், வேறொரு 150 பேர் அங்கே போதகம் பண்ணிக்கொண்டிருந்தார்கள், அதாவது, அவர்களால் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருந்தார்கள்.

கிரேக்க வேதாகமத்தில் அடுத்தது, “ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பாடல் மற்றும் தனிப்பிரசங்கம் ஆகிய கூச்சல்களுக்கிடையில் இப்போது ஒரு கூட்டம் எழுந்து நின்று ‘கர்த்தர் சொல்லுகிறார்’ என்று தேவன் தங்களுக்கு கொடுத்ததாக நினைத்த வெளிப்பாட்டை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இவை எல்லாவற்றுடனும், அங்கே ஒரு சிலர் அந்நியபாஷையில் பேசிக் கொண்டிருந்தார்கள். இவைகளையெல்லாம் ஒரே சமயத்தில் அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள்; சிலர் அங்கே வியாக்கியானம் செய்து கொண்டிருந்தார்கள், யார் செய்த வியாக்கியானம் சரி என்பதில் சண்டைகளும் நடந்திருக்கும். கொரிந்து திருச்சபையில் இருந்த ஆராதனை முறைமை இதுதான்.

இருபத்தி ஆறாம் வசனத்திற்கு ஒரு அடி குறிப்பை சேர்க்க விரும்புகிறேன். “ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான்”. எங்கெல்லாம் ‘ஒருமையில்’ அந்நியபாஷை என்ற வார்த்தையை காண்கிறோமோ, அது பொய்யான அந்நியபாஷையின் வரத்தைக் குறிக்கிறது என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். ஆனால் இந்த வசனத்தில் அது பொய்யான அந்நியபாஷையின் வரத்தையும் குறிக்கலாம் அல்லது உண்மையான அந்நியபாஷையின் வரத்தையும் குறிக்கலாம். ஏனென்றால் இங்கே உங்களில் ஒருவன் என்று ‘ஒரு நபர்’ பேசும் அந்நியபாஷை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நபர், உண்மையான அந்நியபாஷையின் வரத்தை பயன்படுத்தினாலும், ஒரே நேரத்தில் பல அந்நியபாஷைகளை பேச முடியாது. அதாவது, இதை இப்படியாக மொழியாக்கம் செய்யலாம் ‘உங்களில் ஒருவன் போலியான பரவச பாஷை பேசிக்கொண்டிருக்கிறான், மற்றொருவன் மற்றொருவன் உண்மையான அந்நியபாஷையை பேசிக்கொண்டிருக்கிறான்’. இங்கே பெயர்ச்சொல் ஒருமையில் இருப்பதால், அதற்குப் பின்வரும் வார்த்தையும் ஒருமையில் இருக்கிறது. இதே விதிமுறை 27-ஆம் வசனத்திற்கும் பொருந்தும். இது எந்த வகையிலும் நாம் இந்த வேத பகுதியை விளக்குவதற்கு எடுத்துக்கொண்ட ‘ஒருமை, பன்மை’ விதிமுறையை மீறுவதாக இல்லை.

இப்போது இந்த கூச்சல் குழப்பத்தை தடுத்து நிறுத்தும் படியாக 26-ஆம் வசனத்தில், பவுல், “சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது” என்று சொல்லுகிறார். இந்த முழு பிரச்சினைக்கும் தீர்வுகாண, ஒரு திருச்சபையாக நீங்கள் மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயனுள்ளதை செய்யுங்கள் என்று சொல்லுகிறார்.

கொரிந்து சபையின் ஆராதனையை ஒழுங்கு படுத்துதல்

கொரிந்து திருச்சபையின் ஆராதனையை ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவர, பரிசுத்த ஆவியானவர் நான்கு முக்கிய காரியங்களை பவுல் மூலமாக சொல்லுகிறார். அந்நியபாஷை மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயன்பட வேண்டுமானால், அதன் நடைமுறை விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

வசனம் 27: “யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால்”, இங்கே ‘யாராவது’ என்ற பதம் ஒரு நபரை குறிப்பதால், அதை தொடர்ந்து வரும் அந்நியபாஷை என்ற வார்த்தையும் ஒருமையில் வருகிறது. மேலும், அடிக்குறிப்பையும் நான் இங்கே சேர்க்க விரும்புகிறேன், KJV மொழிபெயர்ப்பில் இந்த வசனத்தில் ‘Unknown’ என்ற வார்த்தையையும் சேர்த்துள்ளனர். ஆனால் இங்கே அவர்கள் இந்த வார்த்தையை சேர்த்து இருக்கக் கூடாது என்பது என் கருத்து. ஏனென்றால் இங்கே பவுல் உண்மையான அந்நியபாஷையைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இங்கே ஒரு குறிப்பிட்ட நபர், ஒரு குறிப்பிட்ட பாஷையில் பேசுவதை குறிக்கிறது.

பவுல் இங்கே உண்மையான அந்நியபாஷையின் வரத்தைதான் தான் குறிப்பிடுகிறார் என்று நான் கூறுவதற்கு இரண்டாவது காரணம், பவுல் ஒருநாளும் பரவச உளறல் பாஷையை திருச்சபையில் ஒழுங்குபடுத்த மாட்டார். அவர் உண்மையான அந்நியபாஷை வரத்தை மட்டுமே ஒழுங்குபடுத்துவார். இப்போது, “யாராவது” - உண்மையான - “அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டு பேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்று பேர்மட்டில் அடங்க வேண்டும்”. முதல் விதி: இந்த வரம் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.

உண்மையான அந்நியபாஷையின் வரத்தை கொண்ட ஒரு விசுவாசி சபையில் இருக்கும்போது, அந்த சபையில் ஒரு குறிப்பிட்ட அந்நியபாஷையை (வெளிநாட்டு மொழி) பேசும் அவிசுவாசியான யூதன் அங்கே வந்திருக்கும்போது, அதை அறிந்த சபையில் உள்ள யாராவது ஒருவர், அதை உண்மையான அந்நியபாஷை வரம் கொண்ட விசுவாசிக்கு தெரியப்படுத்துவார். இப்போது அந்த நபர் சுற்றிப்பார்த்து ‘இங்கே அந்த பாஷையை வியாக்கியானம் செய்யும் நபரும் இருக்கிறார்’ என்று சொல்லுவார். இப்போது சரியான இடம், சரியான தருணத்தில், உண்மையான அந்நியபாஷை வரத்தை கொண்டிருந்த நபர், தான் அறியாத பாஷையை, ஆனால் அங்கு இருக்கும் யூத அவிசுவாசிக்கு புரியும் அந்த அந்நியபாஷையை பேசுவார். அதனால், தேவனுடைய செய்தி அந்த யூத விசுவாசிக்கு சென்றடையும்; மேலும், திருச்சபையும் பயன்பெறும் விதமாக அதை வியாக்கியானம் செய்யும் வரத்தை உடைய நபர், திருச்சபைக்கு அதை வியாக்கியானம் செய்வார், ஆகவே மொத்த திருச்சபையும் பயன்பெறும்; இப்படியாக இந்த வரம் ஒரு ஒழுங்குடன் பயன்படுத்தப்பட வேண்டும்.

பிரியமானவர்களே, இப்பொழுது பெந்தேகோஸ்தே சபைகளில் காணப்படும் அந்நியபாஷை குழப்பத்தை பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். அவர்களுக்கு இந்த ஒழுங்கு எதுவுமே தேவையில்லை. அங்கே அவிசுவாசியான யூதர் இருக்கிறாரா? இல்லையா? என்பதெல்லாம் கேள்வியே இல்லை; அது உண்மையான  அந்நியபாஷையா? இல்லையா? என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை; அங்கே இரண்டு அல்லது மூன்று பேர்தான் பேசுகிறார்களா? என்பதையும் அவர்கள் சட்டை செய்வதே இல்லை. இப்போது பெந்தேகோஸ்தே சபைகளில் நாம் பார்க்கும் அந்நியபாஷை குழப்பம், அன்று கொரிந்து சபையில் காணப்பட்ட அதே கூச்சல் குழப்பத்திற்கு இழுத்துச் செல்லுகிறது.

இரண்டாவது விதி: “அது இரண்டு அல்லது மூன்று பேர் மட்டில் பேசப்பட வேண்டும்” கிரேக்கத்தில் ‘மட்டில்’ என்ற வார்த்தையானது, ‘முறை’, ‘ஒழுங்கு’ அல்லது ‘வரிசை’ என்ற பொருளில் வருகிறது. நாம் ஏற்கனவே பார்த்தபடி, கொரிந்தியர்கள் இந்த ஒழுங்கெல்லாம் இல்லாமல், எல்லோரும் ஒரே நேரத்தில் பேசினார்கள். இதற்கு அனுமதி இல்லை. மேலும் இதே போன்ற நிலையை தான் இன்றைய பெந்தேகோஸ்தே சபைகளிலும் காண்கிறோம்.

அந்நியபாஷையின் அர்த்தத்தையும் சொல்ல வேண்டும்

இருபத்தி ஏழாம் வசனத்தின் இறுதியில் மூன்றாம் விதி குறிப்பிடப்பட்டுள்ளது: “ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்”. ‘ஒருவன்’ என்பதைக் குறிக்க பயன்படும் கிரேக்க பதத்தில், இது ‘ஒரே ஒருவர் மட்டுமே’ அதை செய்யவேண்டும் எனும் அர்த்தத்தில் வந்துள்ளது. அதாவது, இரண்டுபேர் அல்ல, ஐந்துபேர் அல்ல, ஒரே ஒருவர் மட்டுமே. ஏனென்றால், கொரிந்து திருச்சபையில் காணப்பட்ட குழப்பத்தின் படி, அங்கே ஒவ்வொருவரும் வியாக்கியானம் செய்து, தங்களை ஏதோ ஒரு படி மேலானவர்கள் போல காட்டிக் கொள்ள விரும்பினார்கள். யாருடைய வியாக்கியானம் சரி என்பதில் அங்கே பெரிய சண்டையே நடந்தது. ஆகவே ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே வியாக்கியானம் செய்ய வேண்டும் என்று சொல்லி, அந்த பிரச்சனையை பவுல் முடித்து வைக்கிறார்.

இப்போது அங்கே வியாக்கியானம் செய்கிறவன் இல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வசனம் 28-ல் நான்காவது விதி கொடுக்கப்பட்டுள்ளது: “அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்”. இப்போது அந்நியபாஷை வரத்தை கொண்ட ஒருவர் சபையிலே இருக்கிறார், அவிசுவாசியான யூதரும் அங்கே இருக்கிறார்; ஆகவே அந்நியபாஷையில் பேச இது ஒரு சரியான இடம் மற்றும் நேரம்; ஆனால் அதை வியாக்கியானம் செய்ய அங்கே ஒருவரும் இல்லை; அந்த சூழ்நிலையில் அமர்ந்து, உனக்கும், தேவனுக்கும் மட்டும் தெரியும் வகையில் தியானம் (அல்லது ஜெபம்) செய்.

தமிழ் வேத புத்தகத்தில் “தனக்கும் தேவனுக்கும் தெரிய பேசக்கடவன்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது ஏதோ அந்நியபாஷையை தனக்கும், தேவனுக்கும் இடையில் பேச வேண்டும் என்கிற அர்த்தத்தில் வருவதுபோல் தெரிகிறது. ஆனால் KJV வேதாகமத்தில், ‘let him speak to himself, and to God’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் அர்த்தம், அமைதியாக தியானம் செய் என்பதாகும்.

ஏன்? அது இப்போது அவருக்கு நற்செய்தி அறிவிக்கும் கருவியாக பயன்படுமே, என்று நீங்கள் கேட்கலாம். ஆம், உண்மைதான். ஆனால் எல்லோரும் ஆவிக்குரிய வளர்ச்சி பெறும்படிக்கே திருச்சபை கூடி வருகிறது; அதனால் வியாக்கியானம் செய்பவர் இல்லாவிட்டால், அந்த நோக்கத்தை அது நிறைவேற்றாது. அதனால், சபையில் பேச வேண்டாம் என்று சொல்லுகிறார்.

முடிவுரை

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் இதுவரை பார்த்த விளக்கங்களின் அடிப்படையில் இன்று பெந்தேகோஸ்தே சபைகளில் பேசப்படும் அந்நியபாஷையை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியமில்லை, மேலோட்டமாக பார்த்தாலே போதும்; அதற்கும், வேத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்நியபாஷைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நீங்கள் எளிதில் கண்டு கொள்ளலாம். முழு வேதாகமத்தின் அடிப்படையிலும், கொரிந்து திருச்சபை மற்றும் கிரேக்க-ரோம கலாச்சார பின்னணியதிலும் வைத்து 1கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள அந்நியபாஷை வரத்தை குறித்து நாம் தியானித்திருக்கிறோம். இதன் மூலம் வேத புத்தகத்தில் உண்மையாகவே என்ன நோக்கத்தில் அந்நியபாஷை வரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்களும் புரிந்து கொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வாராக.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.