அந்நியபாஷை குழப்பமும், தெளிவும்

இப்போது இரண்டாம் பகுதிக்கு வருகிறோம். அந்நியபாஷை வரத்தின் நோக்கம், அது ஒரு அடையாளமாக கொடுக்கப்பட்டது. இது இந்த ஆராய்ச்சியின் மிக முக்கியமான பகுதி. இந்த வரம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதில் தெளிவு பெற்றுவிட்டால்,  இந்த வரத்தைப் பொறுத்தவரையில், ஆதித்திருச்சபையில் என்ன நடந்தது என்பதையும், வரலாற்றில் என்ன நடந்தது என்பதையும், இன்று திருச்சபையில் என்ன நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்பதையும் எளிதில் அறிந்துக்கொள்ளலாம். அது வேதாகமத்தில் நோக்கத்துடன் பொருந்துகிறதா, இல்லையா என்பதை தீர்மானித்து விடலாம். அதைத்தொடர்ந்து, இன்றைய திருச்சபைகளில் செயல்படுத்தப்படும் இந்த வரமானது உண்மையா? பொய்யா? என்பதையும் தீர்மானித்து விடலாம். வேதாகமத்தில் அதன் நோக்கம் என்ன என்பதை பார்ப்பதற்கு முன்பதாக, பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் அதைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பதை நாம் சிந்தித்துவிட்டு முன்செல்லலாம் என்று நினைக்கிறேன்.

பெந்தேகோஸ்தே போதனையாளர்களின் விளக்கம்

பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் அந்நியபாஷையின் பிரதான நோக்கமாக குறிப்பிடுவது என்னவென்றால், அது ஒரு விசுவாசிக்கும், தேவனுக்கும் இடையில் பேசப்படும் ரகசியமாக பேசப்படும் தனிப்பட்ட மொழி என்று சொல்லுகிறார்கள். திருச்சபையில் பேசுவதைவிட தனி ஜெபத்தில் அவர்கள் தேவனோடு அந்நியபாஷையில் பேசி, ஆவியில் நிறைய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். சற்று முன்னர்தான் இந்த பரவச உளறல் பாஷையானது புறஜாதியாரின் வழக்கம் என்றும் வேதாகமத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் பார்த்தோம். மேலும், முதல் 19 வசனங்களில், அப்போஸ்தலனாகிய பவுல், அந்நியபாஷையை தேவனுக்கும் தனக்கும் இடையில் ரகசியப் பாஷையாக பயன்படுத்துவது தவறு என்பதை சுட்டிக் காட்டியதையும் நாம் பார்த்தோம். ஆகவே, அந்நியபாஷையை தனி ஜெபத்தில் பயன்படுத்த வேண்டும் என்று பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் சொல்வது, ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

இன்னும் சிலர் சொல்லும் பொழுது, அந்நியபாஷையானது தேவனை துதிப்பதற்கான மொழி என்று சொல்லுகிறார்கள். இது ஒரு புதிய விடுதலையுடன், உன்னதமாக தேவனை துதிப்பதற்கான வழி என்று சொல்கிறார்கள். அவர்களிடம் நான் பின்வரும் கேள்வியை கேட்க விரும்புகிறேன்: துதிப்பதற்கான மிகச் சிறந்த இடம், துதிப்பதற்கான மிகச் சிறந்த நேரம், உன்னதமான துதி எடுக்கப்படும் இடம் பரலோகம் ஆகும்.  அப்படியானால், ஏன் 1கொரி 13:8, “அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோகும்”, என்று சொல்லுகிறது? அந்நியபாஷையானது தேவனை துதிப்பதற்கான உன்னதமான வழி என்றால், தேவனை துதித்தல் என்பது பரலோகத்தின் மிக முக்கியமான அம்சமாய் இருக்கையில், அது ஏன் ஓய்ந்துபோக வேண்டும்? ஆகவே வசனத்தின் அடிப்படையில் பார்க்கும்பொழுது பரவச உளறல் அந்நியபாஷையானது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கானது என்றோ அல்லது தேவனுடனான ரகசிய பாஷை என்றோ ஏற்றுக்கொள்ள முடியாது.

இரண்டாவதாக, வேறு சிலர் பரிந்துரைக்கும் காரணம் என்னவென்றால், இது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அல்ல, நற்செய்தி அறிவிப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதாவது, புதிய ஏற்பாட்டில் அந்நியபாஷை என்பது ஒருவர் தான் முன் அறிந்திராத மொழியில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக கொடுக்கப்பட்ட வரம் என்று சொல்கிறார்கள். இது ஒரு சிறந்த யோசனையாக படுகிறது, மிஷனரி பணித்தளத்தில் எங்கோ ஓரிடத்தில் தேவன் ஒருவருக்கு இந்த வரத்தை கொடுத்து, தான் அறியாத பாஷை பேசும் மக்களிடம் நற்செய்தியை பிரசங்கிக்க ஆவியானவர் உதவி செய்திருக்கலாம்; நான் அதை நிச்சயமாக மறுக்கவில்லை. ஆனாலும் இதற்காகத் தான் இந்த வரம் கொடுக்கப்பட்டது என்று நாம் உறுதிபட கூற முடியாது. ஏனென்றால், புதிய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் அப்படி ஒரு சம்பவத்தை நாம் காணவில்லை.

நீங்கள் சொல்லலாம், அப் 2-ஆம் அதிகாரத்தில் அவர்கள் எல்லாம் அந்நியபாஷையில் பேசியபோது, அங்கிருந்தவர்கள் தங்கள் சொந்த மொழியில் பேச கேட்டார்களே என்று. ஆம், அவர்கள் எல்லாம் என்ன பேச கேட்டார்கள்? என்பதை கவனியுங்கள்: “தேவனுடைய மகத்துவங்களை” பேச கேட்டார்கள். யூத சமயத்தில் இருந்து வரும் அந்த எளிய சொற்றொடரானது, “பழைய ஏற்பாட்டில் நடந்த வரலாற்று பூர்வ தேவனுடைய உன்னதமான செயல்பாடுகளை பேசுவதை குறிக்கிறது” - ஏன்?  - யூத மக்கள் கூட்டத்தின் கவனத்தை ஈர்த்து, பிறகு பேதுரு எழுந்து நின்று அவர்களின் சொந்த யூத மொழியில் நற்செய்தியை பிரசங்கித்தார். இங்கும் அந்நியபாஷையானது நற்செய்தியை பிரசங்கிக்க பயன்படுத்தப்படவில்லை; மாறாக, யூத மக்களின் கவனத்தை ஈர்த்து கூட்டத்தை சேர்க்க பயன்படுத்தப்பட்டது. பெந்தேகோஸ்தே போதனையாளர்களில், பலர் பலவிதமான விளக்கங்களை அளிக்கிறார்கள்; சிலர், இது தேவனுடனான ரகசிய பாஷை என்றும், சிலர், இது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுகிறது என்றும், சிலர், இது நற்செய்தி அறிவிக்க பயன்படுகிறது என்றும், சிலர், இது தேவனைத் துதிக்க பயன்படுகிறது என்றும் சொல்கிறார்கள். ஆனாலும், இவர்களின் எந்த ஒரு விளக்கமும் வேதாகம நோக்கங்களுடன் பொருந்தவில்லை.

மூன்றாவதாக, பரிசுத்த அந்நியபாஷையானது பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்திற்கான அடையாளம் என்று வாதிடப்படுகிறது. அதை ஏற்றுக் கொண்டால் அதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. 1கொரி 12:13ல், “எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு” என்று வாசிக்கிறோம். எத்தனை பேர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்? “எல்லோரும்”. இப்போது 12:30ஐ கவனியுங்கள், “எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா?” பதில், ‘இல்லை’ என்பதே. இப்போது கவனியுங்கள், ‘எல்லோரும் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஆனால் எல்லோரும் அந்நியபாஷை பேசுகிறது இல்லை’. இந்த இரண்டையும் உங்களால் ஒன்று சேர்க்க முடியாது.

மேலும், அப் 2:38ல், பேதுரு தன்னுடைய பிரசங்கத்தில் சொன்னார், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்”. அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் மனந்திரும்பினார்கள்; அவர்களில் எத்தனை பேர் அந்நியபாஷை பேசினார்கள் என்று தெரியுமா? வேதம் அதை சொல்லவில்லை. அப் 4:31ல், “அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு”, - இங்கே எல்லோரும் அந்நியபாஷையில் பேசினார்களா? இல்லை – அவர்கள் “தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்”. அப்போஸ்தலர் 2 மற்றும் 4-ஆம் அதிகாரங்களில் அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள், ஆனால், 4-ஆம் அதிகாரத்தில் அவர்கள் யாரும் அந்நியபாஷையில் பேசவில்லை. ஆகவே பொருந்தாத இந்த இரண்டு இடங்களையும் நீங்கள் ஒப்பிடவே முடியாது.

அப்படியானால், இது பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்திற்கு அடையாளம் அல்ல என்றால், நற்செய்தி அறிவிப்பதற்கும் அல்ல என்றால், என்னுடைய சுய பக்தி விருத்திக்கும் பயன்படவில்லை என்றால், இது தேவனுடனான தனிப்பட்ட பாஷையும் அல்ல என்றால், அந்நியபாஷை கொடுக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன? அதைத்தான் நாம் இப்பொழுது சிந்திக்கப் போகிறோம்.

சிறுபிள்ளைத் தனமாகிய பரவச உளறல் பாஷை

இருபதாம் வசனத்தை கவனியுங்கள்: “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள் (கிரேக்க வார்த்தை: சிறு பிள்ளைகள், 5-10 வயது)” – அல்லது, உண்மையில், உங்கள் சிறுபிள்ளை தனத்தை நிறுத்துங்கள் – “துர்க்குணத்திலே குழந்தைகளாயும் (கிரேக்க வார்த்தை: குழந்தைகள், ஒரு வயதுக்கும் குறைவு)” துர்க்குணம் என்பதற்கு ‘kakia’ என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது - அது பொதுவாக ‘தீமை’ என்பதை குறிக்கும். “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்”.

இங்கே அவர்களை மிகவும் கடிந்து கொள்கிறார், அதற்கு முன்னர், அவர்களை சற்று சாந்தப்படுத்தும் விதமாக, “சகோதரரே” என்று அழைக்கிறார். அவருடைய இந்த எச்சரிப்பு கொரிந்தியர்கள் உண்மையில் அந்நியபாஷையை தவறாக தீமைக்கென்று பயன்படுத்தியதை சுட்டிக்காட்டுகிறது. அதாவது, அவர்கள் புத்தியிலே குழந்தைகளை போன்று (புத்தியில்லமல்) நடந்து கொண்டார்கள். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், சிறப்பாக சத்தியத்தை அறிந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் இன்னும் வளரவில்லை. அவர்கள் எபேசியர்களைப் (4:14) போல, “தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிருந்தார்கள்”.

அவர்கள் தங்கள் அறிவை பயன்படுத்தவில்லை. 1கொரி 14:14 சொல்கிறபடி அவர்களது கருத்து பயனற்றதாகவே இருந்தது. அவர்கள் சரியானதை சிந்திக்கவில்லை, வேதத்துக்கு அடுத்தவைகளை சிந்திக்கவில்லை, தேவனிடத்திலிருந்து பெற்ற வெளிப்பாடுகளை குறித்துக் கூட அவர்கள் சிந்திக்கவில்லை. ஆகவே புத்தியில் தேறினவர்களைப்போல இருப்பதற்கு பதிலாக குழந்தைகளைப் போல் இருந்தார்கள்; அவர்கள் வளர்ந்தவர்களாக தேவனுடைய சத்தியத்தை தங்கள் மனதில் வைத்தவர்களாக இருந்திருக்க வேண்டும். தீமையிலும் துர்குணத்திலும் குழந்தைகளாயிராமல் தேறினவர்களாய் இருந்தார்கள்.

இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்று நீங்கள் கேட்கலாம். பிறந்த குழந்தையானது யாருக்கும் எதிராக எந்த துர்குணத்தையும், தீமையையும் கொண்டிருக்கவில்லை. பிறந்த குழந்தையானது, அன்பானது, அழகானது, மிருதுவானது, மென்மையானது. நீங்களும் ஏன் ஒருவரை ஒருவர் அப்படி நடத்தக்கூடாது? நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படும்போது ஏன் குழந்தைகளைப் போலவும், புத்தியிலோ குழந்தைகளை போல் இல்லாமல் தேரினவர்களை போலவும் செயல்பட கூடாது? என்று கேட்கிறார்.

ஏசாயாவின் எச்சரிப்பு

அவர்களின் கவனத்தை ஈர்த்த பிறகு, அந்நியபாஷையின் நோக்கத்தை குறிப்பிடுகிறார். வசனம் 21, 22: “மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது”.

அன்பானவர்களே, இதுவரை நாம் பார்த்த எதையுமே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், இந்த ஒரு காரியத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்நியபாஷை யாருக்கு அடையாளமாய் இருக்கவில்லை? 'விசுவாசிகளுக்கு’. அந்நியபாஷையானது விசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கவில்லை என்பதை வேத வசனத்தில் இருந்து தெளிவாக உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்தே 14ஆம் அதிகாரத்தின் மையக்கருத்து என்று கூட சொல்லலாம். இந்த ஒரு கருத்து மட்டுமே இன்று பரவச உளறல் அந்நியபாஷை பேசும் எந்த ஒரு விசுவாசியையும் தான் பேசும் அந்நியபாஷையையும் அதன் உண்மைத் தன்மையையும் கேள்வி கேட்க வைக்க வேண்டும். ‘அந்நியப் பாஷையானது அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கிறது’ என்பதையும் உறுதியாக உங்கள் உள்ளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

அந்நியபாஷை எதற்கு அடையாளமாக இருக்கிறது என்பதற்கு மூன்று காரியங்களை குறித்துக்கொள்ளுங்கள்: 1. அது சாபத்தின் அடையாளம், 2. அது ஆசீர்வாதத்தின் அடையாளம், 3. அது அதிகாரத்தின் அடையாளம். இவைகள்தான் உண்மையான அந்நியபாஷை வரத்தின் முக்கிய நோக்கங்கள். முதலில் அது ஏன் சாபத்தின் அடையாளம் என்று பார்ப்போம். நான் இப்படி சொல்வது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம், ஆனால் அப்படித்தான் அது இங்கு எழுதப்பட்டுள்ளது.

வசனம் 21-ஐக் கவனியுங்கள். இது ஏசாயா 28: 11, 12-ஆம் வசனங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. “பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்” - இந்த வேத பகுதியில் ‘ஜனத்தார்’ என்பது இஸ்ரவேல் ஜனத்தை குறிக்கிறது – “இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்”. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏசாயா சொன்ன வார்த்தைகளை சுட்டிக்காட்டி விட்டு அவர் சொல்லுகிறார், (வச 22) “அப்படியிருக்க”, - ஏசாயாவின் வார்த்தைகள் உண்மையெனில், ஏசாயாவின் நாட்களில் அந்நியபாஷை அதற்கு பயன்படுத்தப்பட்டது எனில், அந்நியபாஷையானது” - அப்போது மட்டுமல்ல, இப்போதும் – “விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது” என்று பழைய ஏற்பாட்டின் வார்த்தைகளில் இருந்து தனது முடிவை தெரிவிக்கிறார்.

இப்போது மற்றுமொரு சுவாரசியமான ஒன்றை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். 22-ஆம் வசனத்தில் அந்நியபாஷை ‘அடையாளமாக’ (அடையாளம் + ஆக) இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கிரேக்கத்தில் ‘eis’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, அதற்கு ‘நோக்கம்’ என்று பொருள். ஆகவே, ‘அடையாளமாக’ என்பதை குறிக்கும் கிரேக்க வார்த்தையின் அர்த்தத்துடன் பொருத்திப் பார்க்கும்போது, இங்கே அந்த வார்த்தை தற்செயலாக பயன் படுத்தப்படவில்லை. மாறாக, அதன் ‘நோக்கமே அடையாளம்’ என்று பொருள்படும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைப் பயன்பாடு தற்செயலானதல்ல.

உண்மையில், ‘அடையாளமாக’ என்ற பதம் பத்து முறை கிரேக்க பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஒவ்வொரு முறையும் அதன் ‘நோக்கம்’ என்பதையே அர்த்தப்படுத்துகிறது, அதாவது அந்நியபாஷையின் நோக்கம், அது அவிசுவாசிகளுக்கு அடையாளமாக கொடுக்கப்பட்டது என்பதாகும். எந்த அவிசுவாசிகள்? 21-ஆம் வசனத்தில் ‘இந்த ஜனம்’ என்னும் பதம் ‘இஸ்ரவேல் ஜனங்களை’ மட்டுமே குறிக்கிறது. ஆகவே, இது இஸ்ரவேலிலுள்ள அவிசுவாசிகளுக்கு ஒரு அடையாளமாக கொடுக்கப்பட்டது. இதை அப்படியே கொரிந்து சபையிலுள்ள விசுவாசிகளுக்கு பவுல் பயன்படுத்துகிறார்.

சரி, இப்பொழுது ஏசாயாவில் என்ன அர்த்தத்தில் இந்த வசனம் சொல்லப் பட்டுள்ளது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏசாயா 28-ஆம் அதிகாரத்திற்கு நீங்கள் சென்றால், அங்கே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா தெற்கு ராஜ்யத்தை அரசாண்டு கொண்டிருக்கிறார். இது தோராயமாக கி.மு. 705. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் (கிமு 722-ல்) இஸ்ரவேலின் வடக்கு ராஜ்ஜியம், அவர்களின் அவிசுவாசம் மற்றும் விசுவாச துரோகத்தால், அசீரியர்களால் அழிக்கப்பட்டது; கிமு 722-ல், தேவன் மிகப் பயங்கரமான நியாயத்தீர்ப்பை வடக்கு ராஜ்ஜியத்திற்கு அனுப்பினார்.

இப்போது கிமு 705-ல், தெற்கு ராஜ்ஜியமும் மிகமோசமாக தேவனுக்கு கீழ்படியாமல் இருந்தது. அவிசுவாசம் மற்றும் விசுவாச துரோகத்தினால் வடக்கு ராஜ்யத்திற்கு என்ன நடந்ததோ, அதே கதிதான் உங்களுக்கும் என்று தெற்கு ராஜ்யத்தை தன்னுடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் தேவன் எச்சரிக்கிறார். ஏசாயா 28-ஆம் அதிகாரத்தின் முதல் 15 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள செய்தி இதுதான். வடக்கு ராஜ்யம் பெற்றுக்கொண்ட அதே தண்டனை உங்களுக்கும் வரும் என்று தெற்கு ராஜ்ஜியமாகிய யூதாவுக்கு தீர்க்கதரிசி மூலம் வந்த எச்சரிப்பு இது.

இப்போது ஏசாயா இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுகிறார் என்று பார்க்கலாம். அவர், இஸ்ரவேலின் தலைவர்களும், தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் குடியில் வெறித்திருக்கக் காண்கிறார். வசனம் 7ல்: “இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்”.

8-ஆம் வசனத்தில் காணப்படும் அருவருப்பை பாருங்கள்: “போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை”. உண்மையில், அவர் அவர்களை குடிவெறியில் மயங்கி வாந்தி எடுத்தவர்களாக காண்கிறார். அவர்கள் களியாட்டத்தில் இருக்கையில், அவர்களை மிகக் கடுமையாக கடிந்து கொண்டு, வரப்போகிற நியாயத் தீர்ப்பை குறித்து எச்சரிக்கை கொடுக்கிறார். அவர்கள் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அவர்களோ ஏசாயாவை பரியாசம் செய்து, திட்டி, வசைபாடி, கேவலப் படுத்தினார்கள்.

ஒன்பதாம் வசனத்தில் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கவனியுங்கள்: “அவர் (ஏசாயா) யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே” – ஏன்? அவர் எப்போதும் – “கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்”. அதாவது, அவர் சொன்னதையே மீண்டும் மீண்டும் பலமுறை நம்மிடம் சொல்கிறார்; ஒருவேளை அவர் நம்மை குழந்தைகள் என்று நினைத்திருக்க வேண்டும். அதனால் அவரைப் பரியாசம் செய்கிறார்கள். அவர்கள் எசாயாவின் மென்மையான மனப்போக்கை மதிக்காமல், அவரது போதனைகள் குழந்தைத்தனமானது என்று சொல்லி, அவரை ஏளனம் செய்தார்கள். ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் சொல்லும்படிக்கு, நாங்கள் என்ன குழந்தைகளா? என்று கேட்டார்கள்.

ஏசாயாவின் இந்த செய்தியை அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை. அதனால்தான் வசனம் 11-ல் அவர் தேவனுக்காக பேசுகிறார்: “பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்”.

இப்போது தேவன் சொல்கிறார்: ‘ஏசாயாவின், குழந்தையை போன்ற திரும்பத் திரும்ப செல்லப்பட்ட எளிமையான செய்தியை நீங்கள் இனி கேட்க மாட்டீர்கள், நீங்கள் இனி புரிந்துகொள்ளமுடியாத பாஷையில் உங்களுடன் பேச போகிறேன்’. தேவன் என்ன சொன்னார் என்றால், உளறும் பாபிலோனியர்கள் வந்து உங்கள் பட்டணத்தை சூழ்ந்து, உங்கள் தேசத்திலிருந்து உங்களை வெளியேற்றி, உங்களை பட்டயக்கருக்கினால் வெட்டி, அழித்து, தீக்கிரையாக்குவார்கள். அவர்களுக்கு தெரியாத, புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான பாபிலோனியர்களின் உளறல் பாஷையை அவர்கள் கேட்கும்பொழுது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மீது வந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர்களது அவிசுவாசத்தினாலும், விசுவாச துரோகத்தினாலும், தேவனுடைய இந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பு கிமு. 588ல் நிறைவேறியது.

இது தேவனிடத்திலிருந்து வந்த முதல் எச்சரிக்கை அல்ல. இதற்கு முன்னரே கிமு 15-ஆம் நூற்றாண்டில், உபாகமம் 28:50ல், “உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்”. இஸ்ரவேலர் தாங்கள் அறிந்திராத மொழியை கேட்கும்போது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறதை அறிந்துக்கொள்ளுங்கள் என்று கிமு 15-ஆம் நூற்றாண்டிலேயே தேவன் அவர்களை எச்சரித்திருந்தார்.

கிமு 8-ஆம் நூற்றாண்டிலும், நீங்கள் அறிந்திராத மொழியை கேட்கும்போது அது தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று ஏசாயாவின் மூலம் தேவன் எச்சரித்தார். எரேமியா தீர்க்கதரிசியின் மூலமும், “இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது” (எரே 5:15) என்று எச்சரித்திருந்தார். இஸ்ரவேலர் நியாயம் தீர்க்கப்படும்போது, அங்கே அவர்களுக்கு ஒரு அடையாளம் இருக்கும், அவர்கள் அறிந்திராத புரிந்துகொள்ளமுடியாத ஒரு மொழியை கேட்பார்கள் என்பதே அந்த அடையாளம் என்று அவர்களுக்கு தேவன் மிகத் தெளிவாகவே உணர்த்தி இருந்தார்.

அந்நியபாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளம்

இப்போது மீண்டும் 1கொரிந்தியர் நிருபத்திற்கு வருகிறோம். இங்கே பவுல் பழைய ஏற்பாட்டு வசனத்தை மேற்கோள் காட்டும்போது அவர் சொல்கிறார், ‘ஏசாயா சொன்னது போல, மோசே சொன்னது போல, எரேமியா சொன்னதுபோல, அந்நியபாஷையை நீங்கள் பேசக் கேட்கும்போது, அவிசுவாசிகள் மீது தேவன் நியாயத்தீர்ப்பை கொண்டு வரப்போவதற்கான அடையாளம்’ என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்.

‘பவுல் வாழ்ந்த காலத்தில் இந்த அடையாளம் எதை அர்த்தப்படுத்தியது?’ என்று நீங்கள் கேட்கலாம். கேளுங்கள், பெந்தெகோஸ்தே நாளில் அவர்கள் பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கியபோது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு சமீபித்திருக்கிறது என்பதை அங்கே கூடியிருந்த ஒவ்வொரு யூதரும் அறிந்திருப்பார்கள். உங்களுக்கு தெரியுமா? அதற்குப் பிறகு வெறும் 30 ஆண்டுகளுக்குள் ரோமப் பேரரசு உள்ளே வந்து எருசலேமை தரைமட்டமாக்கி, யூத சமயத்தையும் அழித்தது என்று. அன்று ஒழிந்த பலி செலுத்தும் சம்பிரதாயம், மீண்டும் தொடங்கப்படவே இல்லை. தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மீது வந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

கிமு 722-ல்,  வடக்கு ராஜ்ஜியத்தின் அவிசுவாசத்தினாலும்,  விசுவாச துரோகத்தினாலும், தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள்மீது வந்தது உண்மையானால், கிமு 588-ல்  தெற்கு ராஜ்ஜியத்தின் அவிசுவாசத்தினாலும், விசுவாச துரோகத்தினாலும், தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள்மீது வந்தது உண்மையானால், நம்புங்கள், தேவனுக்கு முதுகை காட்டி தங்கள் மேசியாவை சிலுவையில் அறைந்த தேசத்தின் மீதும், முதல் நூற்றாண்டில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும்; அப்படியே வந்தது. கிபி 70-ல் எருசலேம் அழிக்கப்பட்ட போது, அந்நியபாஷை கொடுக்கப்பட்டதன் ஒட்டுமொத்த நோக்கமும் நிறைவேறி, அது திருச்சபையின் பயன்பாட்டில் இருந்து மறைந்து போனது. விசுவாசிக்கும் கிறிஸ்தவனுக்காக அந்நியபாஷையை தேவன் ஒருநாளும் கொடுத்ததில்லை. யாருக்கு கொடுக்கப்பட்டது? ‘யூதனுக்கு’, தேவனுடைய நியாயத்தீர்ப்பை நம்பாத, ‘அவிசுவாசிகளுக்கு’, தேவன் பேசுகிறார் என்பதன் அடையாளமாகக் கொடுக்கப்பட்டது.

லூக்கா 13:35ல் இயேசு சொன்னார்: “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்”. இன்னும் ஒரு படி மேலாக, லூக்கா 21:20ல், “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்”. வச 24: “பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்”.

நியாயத்தீர்ப்பு வருகிறது என்பதை இயேசு மீண்டும் மீண்டும் தன்னுடைய போதனைகளில் சொன்னார். அப்போஸ்தலர்களின் ஊழியத்தின் போது நியாயத்தீர்ப்பு எருசலேமின் மேல் வந்து கொண்டிருந்தது. இயேசு நியாயத்தீர்ப்பை பிரசங்கித்தார், அப். 2-ஆம் அதிகாரத்தில் அது அடையாளமாக காட்டப்பட்டது; அதனால்தான் பவுல் ஏசாயா 28-ஆம் அதிகாரத்தை மேற்கோள்காட்டி, ‘நீங்கள் செவிகொடுக்க மாட்டீர்கள்’ என்று சொல்லுகிறார்.

அந்நியபாஷையின் இந்த நோக்கமானது அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதும் செயல்படுவதை நாம் பார்க்கலாம். அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் அவிசுவாசியான யூதர்கள் பலர் அங்கே இருந்தார்கள். பின்னர், அந்நியபாஷை பேசப்பட்ட மற்ற தருணங்களில், அதிகாரங்கள் 8, 10, 19-ல், அவிசுவாசிகளான யூதர்கள், விசுவாசிகளாக மாறினாலும், மீண்டும் மீண்டும் இதே நிகழ்வு நடைபெறுவதை பார்த்த யூதர்கள், அவர்கள் பார்த்ததையும், என்ன நடந்தது என்பதையும் தங்கள் சக யூதர்களிடம் நிச்சயம் சொல்லியிருப்பார்கள். அப்போஸ்தலர் 8, 10, 19 அதிகாரங்களில், எங்கெல்லாம் அந்நியபாஷை பேசப்பட்டதோ, அங்கெல்லாம் விசுவாசிக்கும் யூதர்களும் இருந்தார்கள், அவர்கள் திரும்பிச் சென்று அவர்கள் பார்த்ததை நிச்சயமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். ஆகவே இது சபையின் இந்த புதிய அனுபவங்களை பெந்தகோஸ்தே நிகழ்வு மற்றும் யூதர்களுடன் சம்பந்தப்படுத்துவது மட்டுமல்ல, தேவன் உண்மையாகவே நியாயந்தீர்க்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்தவும் இது நடைபெற்றது.

ஆகவே, முதலாவதாக இது சாபத்தின் அடையாளம்; அதே நேரத்தில், இது ஒரு ஆசீர்வாதத்தின் அடையாளமும் கூட. பெந்தேகோஸ்தே நாளில் காணப்பட்ட அந்நியபாஷை சொல்வது இதுதான்: தேவன் இனி ஒரே ஒரு தேசத்தின் மூலமாக மட்டும் செயல்பட போவது இல்லை. தேவன் இனி ஒரே ஒரு மொழி மூலமாக மட்டும் பேசப் போவது இல்லை. தேவனுடைய நாமம் உலகமெங்கும் செல்லப் போகிறது, அதன் மூலமாக உலகெங்கிலும் தன்னுடைய சபையை ஏற்படுத்தப் போகிறார்.

அந்நியபாஷை - சாபத்தின் அடையாளம்

அவர்கள் அன்று பற்பல பாஷைகளில் பேசியது, இஸ்ரவேலின் தனித்துவம் முடிந்துவிட்டது என்றும், உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நான் பேசப் போகிறேன் என்பதையும், பழைய ஏற்பாட்டில் மறைந்துள்ள திருச்சபையை இப்போது ஏற்படுத்தப் போகிறேன் என்பதையும் சொல்லவே தேவன் அதை ஏற்படுத்தினார். அந்நியபாஷையானது பிரதானமாக இஸ்ரவேலின் மீதான தேவனுடைய சாபத்தின் அடையாளமாகும்.

அந்நியபாஷை - ஆசீர்வாதத்தின் அடையாளம்

அந்நியபாஷை மூலமாக அகில உலகத்துக்கும் வரும் ஆசீர்வாதத்தையும் நான் சொல்லியாக வேண்டும். முரட்டாட்டமான மக்கள் கூட்டத்தினரால் கிறிஸ்து நிராகரிக்கப்பட்டதால், கிறிஸ்து தன்னுடைய திறந்த கரங்களை முழு உலகத்திற்கும் நீட்டினார். இஸ்ரவேல் மக்கள் மீதான சாபத்தின் மிச்சம் மீதியாக, உலக மக்களுக்கான ஆசீர்வாதத்தின் அடையாளமாகவும் இது மாறியது. ரோமர் 11-ல் சொல்லப்பட்டுள்ளதைப் போல, ‘இஸ்ரவேல் மக்களின் தள்ளிவிடப்படுதல், உலகத்தின் ஐஸ்வரியமாக மாறியது’. எருசலேம் அழிக்கப்பட்டது, இஸ்ரவேல் தள்ளிவிடப்பட்டது, தேவன் நம்மை தெரிந்து கொண்டதால், நாம் அதன் பயனாளிகளாக மாறினோம்.

அந்நியபாஷ - அதிகாரத்தின் அடையாளம்

மூன்றாவதாக, அதனுடன் பின்னிப்பிணைந்து இருக்கிறபடி, இது தேவன் கொடுத்த ஒரு அதிகாரம். வரலாற்றில் இந்த மாற்றத்தை பிரசங்கித்த தூதுவர்கள் யார்? சாபத்தையும், ஆசீர்வாதத்தையும் பிரசங்கித்த தேவனுடைய மனிதர்கள் யார்? இந்த ஆசீர்வாதம் உலகம் அனைத்திற்கும் வந்ததை அறிவித்தவர்கள் யார்? அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளைத் தவிர வேறு யாரும் அல்ல. அவர்கள் தேவனுடைய சத்தியத்தை தான் பேசுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும், அங்கீகரிக்கும் விதமாக இந்த பாஷைகளையெல்லாம் பேசும் வரத்தை தேவன் அவர்களுக்கு கொடுத்தார்; தேவன் கொண்டு வந்த இந்த மாற்றங்களை பார்த்த யூதர்களுக்கு, இது பேரதிர்ச்சியாகவும், பெரிய இடியாகவும், புரிந்துக்கொள்ள முடியாததாகவும், அதே நேரத்தில் ஆச்சரியமளிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும்; அதனால் தேவனே இதை செய்தார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் அடையாளம் தேவைப்பட்டது. அதனால் இப்படி பாஷைகளில் பேசும் வரத்தை தேவன் அவர்களுக்கு கொடுத்தார்.

1கொரி 14:18ல் பவுல் சொல்லுகிறார், “உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன்”. பவுலுக்கு இருந்த மற்ற வரங்களைப் போல இதுவும் அவர் ஒரு அப்போஸ்தலர் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருந்தது. மேலும் அவர், 2கொரி 12:12ல் “அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே” என்றும் சொல்கிறார். அந்த குறிப்பிட்ட காலத்தில் தேவன் கொண்டுவந்த மாற்றத்தை பிரசங்கித்தவர்களுக்கு தேவன் கொடுத்த அதிகாரத்திற்கு அடையாளமாகவும் அது விளங்கியது.

இப்போது அந்நியபாஷையின் நோக்கம், ‘சாபம், ஆசீர்வாதம், அதிகாரம்’ அவ்வளவுதான். இங்கே நீங்கள் தனிப்பட்ட ஜெப மொழியாகவோ, நற்செய்தி அறிவிக்கும் வழியாகவோ இதைப் பார்க்கிறதில்லை. ஒரு நாள் வந்தது, எருசலேம் அழிக்கப்பட்டது, ஒரு நாள் வந்தது, புதுயுகத்துக்கான மாற்றம் வந்தது, திருச்சபை பிறந்தது, அதன்பிறகு இந்த வரம் தேவைப்படவில்லை.

உதாரணமாக, நான் சாலையில் திருச்சிக்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு இடத்தில் திருச்சி 300 கி.மீ என்ற அறிவிப்பை (அடையாளத்தை) காண்கிறேன். பிறகு 200 கி.மீ என்கிற அறிவிப்பை காண்கிறேன். பிறகு 100 கி.மீ என்ற அறிவிப்பை காண்கிறேன். திருச்சிக்கு வந்த பிறகு நான் எந்த ஒரு அறிவிப்பையும் (அடையாளத்தையும்) காணவில்லை, ஏனென்றால் நான் திருச்சிக்கு வந்து விட்டேன், இனி அந்த அடையாளம் தேவையில்லை.

தீர்க்கதரிசனம் விசுவாசிகளுக்கு அடையாளம்

வசனம் 22ல், “தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார். தீர்க்கதரிசனமானது, திருச்சபை யுகத்தில் விசுவாசிக்கிறவர்களுடைய ஆவிக்குறிய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியது.

“தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ” 3-ஆம் வசனத்தில், “மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்”. “தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்” (வச 4). “விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்” (வச 1). இதன் அர்த்தம் என்ன? தேவனுடைய வார்த்தையை மட்டும் பிரசங்கியுங்கள். நீங்கள் கொரிந்து சபைக்கு சென்றிருப்பீர்கள் என்றால், நாம் முன்னரே பார்த்தபடி, அங்கே எல்லா வகையான சுயநலமான, சுய மதிப்பை கூட்டும் மாயலோக பாஷைகளை கேட்டிருப்பீர்கள். அதற்கு தான் பவுல் சொல்கிறார், அவை எல்லாவற்றையும் நிறுத்துங்கள். அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்பட்டது. நீங்கள் கூடி வரும்போது தேவனுடைய சத்தியத்தை பிரசங்கிக்கும் தீர்க்கதரிசனத்தை நாடுங்கள். முக்கியமாக, தேவனுடைய வார்த்தையை பிரசங்கியுங்கள் என்று பவுல் சொல்லுகிறார்.

அந்நியபாஷையின் இன்றைய நிலை

சரி, இன்று அந்நியபாஷையின் வரத்தால் எந்த பயனும் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா? அந்நியபாஷை வரம் இன்று நமக்கு தேவையில்லை. ஒருவேளை இந்த வரம் இன்று நம்முடைய திருச்சபைகளில் காணப்படும் என்றால், அது அன்று கொண்டிருந்த அதே நோக்கத்தையே இன்றும் கொண்டிருக்க வேண்டும். அதாவது தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கு மாத்திரமல்ல, உலகம் அனைத்திற்கும் நற்செய்தியை அனுப்பி, எந்த பேதமும் இன்றி இரட்ச்சிக்கிறார் என்ற செய்தியை சொல்ல வேண்டும். இந்த செய்தியை தேவன் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி முடித்துவிட்டார். அதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இதைத்தவிர, நமக்கு வேறு எந்த விளக்கமும்/தகவலும் நமக்கு தேவையில்லை, அது முடிந்து விட்டது.

சபையில் அந்நியபாஷையின் நோக்கம்

இப்போது சபையாக கூடி வரும்போது அதன் நோக்கம் என்ன என்பதை விளக்குகிறார். வசனம் 23: “ஆகையால்” – கவனியுங்கள், அந்நியபாஷையின் நோக்கம் இப்படி இருக்க – “சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது” (இங்கே உண்மையான அந்நியபாஷையின் வரத்தை குறிக்கிறது) - என்ன நடக்கும் என்று தெரியுமா? -  “கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?”

ஏன்? இரண்டு காரணங்கள்: முதலாவது காரணம், அவன் ஒரு புறஜாதியான், நாம் மேலே குறிப்பிட்டபடி, இது ஒரு அடையாளம் என்பதை அவன் அறியான். இரண்டாவது காரணம்: அந்த விசுவாசி ஒரு யூதனாக இருந்தால், கொரிந்து சபையில் எல்லோரும் அந்நியபாஷை பேசி கூச்சலும் குழப்பமும் நிலவுவதால், அது எந்த அர்த்தத்தையும் அவனுக்கும் கொடுக்காது.

ஆகவே, ஒரு அவிசுவாசியான புறஜாதியான் கொரிந்து சபைக்குள் நுழைந்தபோது, இந்த மக்களுக்கு பைத்தியம் பிடித்து இருக்க வேண்டும் என்று அவன் சொல்லுவான். இதற்கு ‘mainomai’ என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் ‘வெறி கொண்டவன்’ என்பதாகும். பிளாட்டோ சொல்கையில், இது புறஜாதியார் தங்கள் தேவர்களுடன் ஐக்கியம் கொண்டு பரவச உளறல் பேச்சை பேசுவதைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தை என்கிறார். இப்போது, அவிசுவாசியான புறஜாதியானோ அல்லது யூதனோ உங்கள் சபைக்குள் நுழையும்போது, இதற்கும் தியானாளின் கோயிலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்வார்கள்.

இது அவர்களுக்கு ஒரு அடையாளமாக செயல்பட வேண்டுமே? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக, ஆனால், உண்மையான அந்நியபாஷை வரம் கூட தவறாக பயன்படுத்தப்படும் போது, அது எந்த அர்த்தத்தையும் கொடுக்கிறதில்லை. கவனித்தீர்களா? இந்த குறிப்பிட்ட வாரமானது ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட முறையில், சம்பந்தப்பட்ட நபர் அருகில் இருக்கும்போது, அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

வசனம் 24, 25ல், “எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்”.  

இங்கே உள்ள வரிசையை கவனியுங்கள்: முதலில் அவன் பாவி என்று ‘உணர்ந்து விக்கப்பட்டு’ தான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்வான்; அதன்பிறகு, அவன் ‘நிதானிக்கப்படுவான்’; அதாவது, அவன் இருதயத்தில் அவரன் குற்றவாளி என்று தீர்க்கப்படுவான்; அதன்பிறகு, உடனடியாக அவனது இருதயத்தின் ரகசியங்கள் வெளிப்படும்; தன்னுடைய உண்மையான நிலைமையை அறிந்து கொண்ட அவன், தன்னுடைய சுயத்தை வெறுத்து, முகங்குப்புற விழுந்து, உங்கள் மத்தியில் உள்ள உண்மையான தேவனை நான் கண்டு கொண்டேன் என்று அறிக்கையிடுவான். வேறொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்தால் அதன் விளைவாகிய மனந்திரும்புதலை நீங்கள் காண்பீர்கள் என்று பவுல் சொல்லுகிறார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.