அந்நியபாஷை குழப்பமும், தெளிவும்

கொரிந்தியர் நிருபத்தில் அந்நியபாஷை

1கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தை இப்போது தியானிக்கலாம். இதை மூன்று பகுதிகளாகப் பிரிக்க விரும்புகிறேன்.

  1. அந்நியபாஷைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் (முதல் 19 வசனங்கள்).
  2. அந்நியபாஷையின் நோக்கம் (20-25 வசனங்கள்).
  3. திருச்சபையில் அதை நடைமுறைப்படுத்தும் விதம் (26-40 வசனங்கள்).
அந்நியபாஷையின் முக்கியத்துவம்: இரண்டாம் பட்சம்,
நோக்கம்: அது ஒரு அடையாளம்
நடைமுறைப்படுத்தல்: ஒழுங்குடன் கிரமமாக செய்யப்பட வேண்டும்.

அந்நியபாஷையின் முக்கியத்துவம்

மற்ற வரங்களுடன் ஒப்பிடுகையில் அந்நியபாஷையின் இடம் இரண்டாம் பட்சமே என்பதை பவுல் தெளிவுபடுத்துகிறார். இதற்கு மூன்று காரணங்களை அவர் குறிப்பிடுகிறார்.

முதலாவது காரணம்: ஏன் அந்நியபாஷை இரண்டாம் பட்சம்? ஏன் தீர்க்கதரிசன வரம் அந்நியபாஷையை விட மேலானது? பவுலினுடைய ஒப்பிடுதலின் படி தீர்க்கதரிசனம் சபையின் பக்திவிருத்திக்கு உதவி செய்கிறது. ஆனால் அந்நியபாஷை சபையின் பக்தி விருத்திக்கு பயனற்றது. இது முதலாம் காரணம். ஒன்று முதல் ஐந்து வசனங்களில் இதை வாசிக்கிறோம். (‘பக்திவிருத்தி’ என்ற பழைய தமிழ் வார்த்தைக்கு இணையான சொல்லாக்கம் ‘ஆவிக்குரிய வளர்ச்சி’ என்பதாகும். ஆகவே இனிவரும் பகுதிகளில் ‘ஆவிக்குரிய வளர்ச்சி’ என்ற பதத்தையே பயன்படுத்துவேன்.)

இப்போது ஒரு மிக முக்கியமான அடி குறிப்பை குறிப்பிட விரும்புகிறேன்: சபை கூடி வருவதற்கான மிக முக்கியமான நோக்கம் என்ன? பதில் மிக எளிமையானது, விசுவாசிகளின் ‘ஆவிக்குரிய வளர்ச்சி’. இருபத்தி ஆறாம் வசனத்தின் இறுதி இதை தெளிவுபட சொல்கிறது: “சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் (ஆவிக்குரிய வளர்ச்சிக்கேதுவாக) செய்யப்படக்கடவது”. பனிரெண்டாம் வசனத்தின் பின் பகுதி, “சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்”, மீண்டும் ஆவிக்குரிய வளர்ச்சியே இங்கு முக்கியத்துவ படுத்தப்படுகிறது. மேலும், நான்கு மற்றும் ஐந்தாம் வசனங்களிலும் முறையே, “தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்” மற்றும் “சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால்” என்றெல்லாம் சபையின் ஆவிக்குரிய வளர்ச்சி, மீண்டும் மீண்டும் முக்கியத்துவப்படுத்தப் படுவதால் சபை கூடிவருதலின் முக்கிய நோக்கம், விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சி என்பது மிகவும் தெளிவாகிறது.

மேலும், முழு அதிகாரத்திலும் விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சி மீண்டும் மீண்டும் மையப்படுத்தப் படுகிறது. 31-ம் வசனத்தில், “எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்”. அதாவது, எல்லோரும் ஆவிக்குரிய வளர்ச்சி பெற வேண்டும், எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும், எல்லோரும் கட்டப்பட வேண்டும். திருச்சபை கூடிவருதலின் முக்கிய நோக்கம் ஆவிக்குரிய வளர்ச்சி அல்லது கட்டப்படுதல். அந்நியபாஷையானது, அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு புரியாததால் அது சபையை ஆவிக்குரிய வளர்ச்சிக்கு நேராக நடத்த பயனற்றது, குறிப்பாக, கொரிந்து திருச்சபையினரின் பாஷை, அந்நியபாஷையே அல்ல, என்று பவுல் சொல்லுகிறார்! முதல் ஐந்து வசனங்களின் அடிப்படை செய்தி இதுதான்.

வசனம் 1: “அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்”. ‘அன்பை நாடுங்கள்’ என்பது 13-ஆம் அதிகாரத்தின் தொடர்ச்சியாகும். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், நீங்கள் நாடி தேட வேண்டிய உன்னதமான ‘அன்பை’ பற்றி இப்பொழுது தான் உங்களிடம் சொல்லி இருக்கிறேன்.

1கொரிந்தியர் 12-ஆம் அதிகாரம் எப்படி நிறைவுற்றது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? 12:31ல் பவுல் என்ன சொல்லுகிறார் என்றால், நீங்கள் உங்களையே உயர்த்திக் காட்டும் வரங்களை நாடுகிறீர்கள்; ஆனால் அதைவிட மேலான ஒன்றை நான் உங்களுக்கு காட்டுகிறேன். நீங்கள் உங்களையே முன்னிலைப்படுத்தும் வரங்களை, உங்கள் மதிப்பை கூட்டும் வரங்களை, மற்றவர்கள் வெளிப்படையாக பார்க்கக்கூடிய வரங்களை நாடுகிறீர்கள். நான் உங்களுக்கு சிறந்த ஒன்றை காட்ட விரும்புகிறேன்; அன்பை நாடுங்கள். அதனால்தான் 13-ஆம் அதிகாரத்தில் அன்பின் சிறப்பினைப் பற்றி கூறிய பிறகு, 14-ஆம் அதிகாரத்தின் துவக்கத்திலும் அதே குறிப்பிற்கு மீண்டும் வருகிறார்.

அன்பை குறித்த 13-ஆம் அதிகாரத்தை மறைத்துவிட்டு இப்போது 12-ஆம் அதிகாரத்தின் இறுதியை 14-ஆம் அதிகாரத்தின் தொடக்கத்துடன் இணைத்து பாருங்கள். 14:1-ல் பவுல் சொல்கிறார், இப்போது நீங்கள் உண்மையாகவே ஒன்றை தேட விரும்பினால், அன்பை நாடுங்கள். இதற்கு ‘diōkō’  என்ற கிரேக்க வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார், அதன் அர்த்தம், துரத்து அல்லது பின்தொடர் அல்லது நாடுதல் என்பதாகும்; உண்மையில் நான் அதை அடைந்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன், உற்சாகத்துடன், உறுதியுடன் அதை பின் தொடர்வதாகும். நீங்கள் ஒன்றை துரத்த விரும்புவீர்கள் என்றால், அல்லது ஒன்றை பின்தொடர விரும்புவீர்கள் என்றால், அல்லது ஒன்றை ஓடிப் பிடிக்க விரும்புவீர்கள் என்றால், அது ‘அன்பாக’ இருக்கட்டும். ஆனால் ஆவிக்குரிய  வரங்களையும் நாடுங்கள் என்று சொல்லுகிறார்.

ஆவிக்குரிய வரங்களின் மூலமாக திருச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளும் முக்கியம் என்பதால், ஆவிக்குரிய வரங்களை தேட வேண்டாம் என்று பவுல் சொல்லவில்லை, மாறாக முதலாவது அன்பை நாடுங்கள் என்று சொல்கிறார். 14:1-ன் இறுதி பகுதியைக் கவனியுங்கள், “விசேஷமாக தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்”. இதன் அர்த்தம், அந்நியபாஷையின் முக்கியத்துவம் இரண்டாம் பட்சம் என்பதே! நீங்கள் சபையாக கூடி வரும்போது, கூச்சல் குழப்பமான அந்நியபாஷை என்னும் உளறலுக்கு பதிலாக தீர்க்கதரிசனத்தை நாடுங்கள்.

 தீர்க்கதரிசனம் என்பதன் விளக்கம்

இப்போது உங்களுக்கு தீர்க்கதரிசனம் என்றால் என்ன? என்று ஒரு கேள்வி எழலாம். தீர்க்கதரிசனத்திற்கு ஆங்கிலத்தில் ‘prophecy’ என்று பெயர். ‘prophecy’ என்ற வார்த்தை ‘prophēteuō’ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வருகிறது. இதை இரண்டாக பிரித்தால்: pro என்றால் ‘முன்னால்’ என்று பொருள்; phēteuō என்றால் ‘பேசுதல்’ என்று பொருள். அதன் அர்த்தம் ‘முன்னால் நின்று பேசுதல்’. உதாரணமாக, ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மக்கள் கூட்டத்தின் முன்னால் நின்று பேசுவதை குறிக்க ‘prophecy’ (தீர்க்கதரிசனம்) என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். மேலும், ஒரு திருச்சபையின் போதகர் சபை விசுவாசிகளின் முன்னால் நின்று பேசுவதை குறிக்கவும் ‘தீர்க்கதரிசனம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உங்கள் சபை போதகர் உங்களுக்கு முன்னால் நின்று பேசுகிறாரே அதையும் ‘தீர்க்கதரிசனம்’ என்று சொல்லலாம்.

தீர்க்கதரிசனம் என்றால் ‘எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தல்’ என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். இந்த அர்த்தத்தில் வேத புத்தகத்தில் தீர்க்கதரிசனம் என்ற வார்த்தை எங்குமே பயன்படுத்தப்படவில்லை! ஒருவேளை ஆங்கில வார்த்தையான ‘prophecy’-க்கு, ‘predict the future’ என்றுதானே பொருள் என்று நீங்கள் கேட்கலாம். prophecy என்ற ஆங்கில வார்த்தை ‘predict the future’ என்ற பொருளை மத்திய காலகட்டத்தில் (கி.பி 500 – கி.பி 1500) தான் எடுத்துக் கொண்டது. வேதப்புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் அப்படியொரு அர்த்தம் அந்த வார்த்தைக்கு இருந்ததில்லை! ஆகவே வேதப்புத்தகத்தில் தீர்க்கதரிசனம் என்பது ஒரு நாளும் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தலைக் குறிக்கவில்லை, மாறாக, தேவனுடைய வார்த்தையை ஒரு கூட்ட மக்களுக்கு முன்னால் நின்று பேசுவதை அது குறிக்கிறது! மிக முக்கியமாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நம்மூர் கள்ள தீர்க்கதரிசிகள் புத்தாண்டு பிறந்தால், ஆண்டுக்கு ஒன்றாக, மாதத்துக் ஒன்றாக தீர்கதரிசனம் என்ற பெயரில் கட்டுக்கதைகளையும், பொய்களையும் சொல்லுகிறார்களே அதற்கும் 1கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் என்கிற வார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

சரி, இந்த பின்னணியத்துடன் மீண்டும் முதல் வசனத்தை கவனியுங்கள். அந்நியபாஷை என்ற பெயரில் யாருக்கும் புரியாத ‘லபா லபா ஷங்கர பலா’ என்று கத்தி கூச்சல் குழப்பத்தை உண்டாக்குவதற்கு பதிலாக, ஆவிக்குரிய வளர்ச்சிக்கு  பிரயோஜனமுள்ள ஆண்டவருடைய வார்த்தையை நீங்கள் பேசுங்கள் என்பதாகும். மற்றுமொரு குறிப்பை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதித்திருச்சபையில் தீர்க்கதரிசனம் என்ற வார்த்தை சில சமயங்களில் ‘புதிய வெளிப்பாடுகளையும்’ குறிக்கும். இந்த வேதப்பகுதியில் தீர்க்கதரிசனம் என்ற வார்த்தை பொதுவாக ‘தேவனுடைய வார்த்தையை குறிக்கிறது’ அது ‘புதிய வெளிப்பாடாகவும்’ இருக்கலாம் அல்லது ‘ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாகவும்’ (பழைய ஏற்பாடு) இருக்கலாம்.

இப்போது பவுல் சொல்கிறார், “விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்”.  இந்த வசனத்தில் ‘விசேஷமாய்’ என்ற தமிழ் வார்த்தைக்கு இணையாக, ஆங்கிலத்தில் ‘Rather’, ‘most of all’ என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் அர்த்தம் அந்நியபாஷையைவிட, யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய, எல்லோருக்கும் பிரயோஜனம் தரக்கூடிய ஒன்றை (தீர்க்கதரிசனத்தை) விரும்புங்கள் என்பதாகும்.  அந்நியபாஷை வரம் தீக்கதரிசனத்தைவிட தாழ்வாக குறிப்பிடுவதற்கு காரணம், ஒருவரும் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதனாலாகும். அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, ஒரு குறிப்பிட்ட பாஷையை புரிந்து கொள்ளும் நபர் இருந்தால் மட்டுமே அந்நியபாஷை வரம் பயன்படுத்தப்பட்டது, அல்லது அப்போஸ்தலரின் மற்ற இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போல பெந்தேகோஸ்தே நிகழ்வுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தவே பயன்படுத்தப்பட்டது. அது ஒரு அடையாளமான வரம், ஆவிக்குரிய வளர்ச்சிக்கென்று அது ஏற்படுத்தப்படவில்லை, மேலும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயனற்றது.

ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் அது எப்படி ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவி செய்யும்? ஒருவேளை யாராவது புரிந்து கொண்டால் அல்லது யாராவது வியாக்கியானம் செய்தால் அது பிரயோஜனப்படும். ஆனால் அந்நியபாஷையின் நோக்கம் ஆவிக்குரிய வளர்ச்சிக்காணதல்ல. மாறாக, அது தேவன் பேசுகிறார் என்பதை அதை கேட்கிற மக்களுக்கு உறுதிப்படுத்தவும், புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் உண்மையாகவே தேவனுடைய வார்த்தையை பேசுகிறார்கள் என்பதை காட்டவும் ஒரு அடையாளமாக ஏற்படுத்தப்பட்டது.

தேவனிடத்தில் இரகசியம் பேசுதல்

இரண்டாவது காரணம்: இப்போது 2-ஆம் வசனத்திற்கு நாம் வருகிறோம்: அந்நியபாஷை ஏன் இரண்டாம்பட்சம் என்பதற்கு இங்கு மற்றுமொரு காரணம் நமக்கு கொடுக்கப்படுகிறது. “அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்”. இங்கே மொழியாக்கத்தில் ஒரு சிறிய பிழை இருக்கிறது, ‘தேவனிடத்தில் பேசுகிறான்’ என்பதில், ‘ஒரு தேவனிடத்தில் பேசுகிறான்’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கிரேக்கத்தில் ‘but to a God’ என்றே இருக்கிறது.

இங்கே பவுல் என்ன சொல்லுகிறார் என்றால், “மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவி செய்யவே தேவன் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்கு கொடுத்தார், ஆனால் நீங்களோ அதை செய்யாமல் உங்கள் புறஜாதி மத வழக்கப்படி உங்கள் தேவனிடத்தில் முட்டால்தனமான உளறல்கள் மூலம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பேசுவதை ஒருவரும் புரிந்துக்கொள்கிறது இல்லை, மாய சமயங்களின் இரகசியங்களை நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்”. இங்கே பவுல் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்கிறீர்களா? இங்கே யாரும் தேவனிடத்தில் ரகசியம் பேசவில்லை, மாறாக புறஜாதியினரின் வழக்கப்படி தங்கள் தேவனிடத்தில் அவர்கள் ரகசியம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரியமானவர்களே, இந்த இடத்தில் நீங்கள் இன்னும் ஒரு முக்கியமான குறிப்பை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எல்லா ஆவிக்குரிய வரங்களும் மற்றவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அல்லது மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்காக கொடுக்கப்பட்டது. நீங்கள் எந்த ஒரு ஆவிக்குரிய வரத்தை வேண்டுமானாலும் எடுத்து சிந்தித்துப் பாருங்கள். அது தேவனுக்கல்ல, மனிதனுக்கு ஊழியம் செய்யும்படிக்கே கொடுக்கப்பட்டிருக்கும். 1கொரி 12:7ல், “ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” என்று வாசிக்கிறோம். தமிழ் வேத புத்தகத்தில் மிகத் தவறாக தமிழாக்கம் செய்யப்பட்ட வசனங்களில் இதுவும் ஒன்று. இது “ஆவியினுடைய அநுக்கிரகம் மற்றவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” என்றே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில், “But the manifestation of the Spirit is given to each one for the profit of all”(NKJV) என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வரங்களெல்லாம் கிறிஸ்துவின் சரீரத்தை கட்டுவதற்காக கொடுக்கப்பட்டதாகும். அவைகளெல்லாம் மற்றவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கென்று கொடுக்கப்பட்டதாகும். தேவன் தனக்கு உதவி செய்யும்படிக்கு எந்த ஒரு வரத்தையும் மனிதனுக்கு கொடுக்கவில்லை, ஏனென்றால் அவர் பரிபூரணமானவர், மனிதனுடைய எந்த ஒரு உதவியும் அவருக்குத் தேவையில்லை. இங்கே பவுல் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், நீங்கள் எல்லாரும் வரங்களை பயன்படுத்துவதில் ஒரு முக்கியமான இடத்தில் தவறு செய்கிறீர்கள். வரங்களெல்லாம் மனிதருக்கு ஊழியம் செய்வதற்காக கொடுக்கப்பட்டிருக்க, நீங்களோ அதை செய்யாமல், அந்நியபாஷை என்ற பெயரில் ஒரு தேவனுக்கு ஊழியம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். வேறொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு வெளியே சென்று, ஆவியில் ஏதோ ஒரு தேவனுடன் கலந்து, புறஜாதியாரின் மாய சமயத்தின் ரகசியங்களை பேசிக் கொண்டிருக்கிறீர்கள், இது வரங்கள் கொடுக்கப்பட்டதற்கான முக்கியமான நோக்கத்தையே கேள்விக்குறியாகிறது! தேவன் உங்கள் உளறல்கள் மூலமாக தன்னிடத்தில் பேசுவதை விரும்புகிறது இல்லை.

இயேசுவின் ஜெபம்

இன்றைய பெந்தேகோஸ்தே திருச்சபைகள் இந்த விஷயத்தில் மிக மோசமாக விழுந்து போயிருக்கிறார்கள். அந்நியபாஷை என்ற உளறலை தேவனுடன் நெருங்கி ஜெபிக்க அது ஒரு தனிப்பட்ட ரகசிய மொழி என்று உற்சாகப்படுத்துகிறார்கள், கொரிந்து திருச்சபை செய்த அதே தவறை இவர்களும் செய்கிறார்கள். இப்படி தன்னுடைய பிள்ளைகள் தன்னிடம் பேச ஒருகாலும் தேவன் விரும்புகிறதில்லை. ஜெபத்தின் மூலம் தன்னிடத்தில் பேசும் ஒரு மனிதன் தான் புரிந்து கொள்ளாத வார்த்தைகள் மூலம் தன்னிடம் பேச வேண்டும் என்று தேவன் விரும்புகிறது இல்லை. புதிய ஏற்பாட்டில் எல்லா நிரூபங்களிலும் ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களை கவனித்து பாருங்கள். பிறகு முழு வேதாகமத்திலுமுள்ள ஒவ்வொரு ஜெபத்தையும் கவனித்து பாருங்கள். அதன்பின் இயேசு ஜெபித்த ஒவ்வொரு ஜெபத்தையும் கவனியுங்கள். பிறகு ஜெபத்தை குறித்து இயேசு சொன்ன ஒவ்வொரு குறிப்பையும் கவனித்து பாருங்கள். ஏதேனும் ஒரு இடத்திலாவது தனக்குப் புரியாத மொழியில் ஜெபித்த யாரையாவது நீங்கள் காண்கிறீர்களா? வேதத்தில் எங்கும் அப்படி காண முடியாது!

அதுமட்டுமல்ல, அதற்கு நேர் எதிரானதையே இயேசுகிறிஸ்துவும் சொன்னார். மத்தேயு 6:7ல், “அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்”, கவனியுங்கள் ‘அஞ்ஞானிகளைப்போல (=புறஜாதிகளைப்போல)’ என்று இயேசு சொன்னார். இங்கே வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கு இணையாக “use not meaningless repetitions” என்ற ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரேக்கத்தில் ‘battalogeō’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘Logeō’  என்றால் ‘பேசுதல்’ என்று பொருள், இதிலிருந்துதான் ‘வார்த்தை’ என்ற சொல் வருகிறது. இதற்கு முன்னர் உள்ள என்ற ‘batta’ வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை, அது ஒரு வார்த்தையும் அல்ல. உதாரணமாக, வானத்தில் விமானம் செல்லும் பொழுது அது ‘உஷ்’ என்று செல்கிறது என்று சொல்லுகிறோம் அல்லவா? அல்லது ஒரு வாகனம் செல்லும் போது அது ‘சர்’ என்று சென்றது என்று சொல்கிறோம் அல்லவா? இங்கே ‘உஷ்’ மற்றும் ‘சர்’ என்பவைகள் வார்த்தைகள் அல்ல, அந்த குறிப்பிட்ட செயலை அதே ஒலியின் மூலம் சொல்லிக்காட்ட பயன்படும் வார்த்தைகளாகும். ‘batta’ என்ற சொல்லும் இதே போன்ற அர்த்தத்தை உடையது தான்.

நீங்கள் ஜெபம்பண்ணும்போது ‘Battah, battah, battah,’ என்றோ அல்லது ‘உஷ்’ ‘சர்’, ‘ஸ்ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்’ அல்லது ‘பலா, பலா, பலா…’ என்றெல்லாம் அர்த்தமற்ற வீண் வார்த்தைகளை சொல்லாதீர்கள் என்று மத்தேயு 6:7ல் இயேசு சொல்கிறார். புற மதத்தினர் செய்யும் இப்படிப்பட்ட ஜெபத்தை தேவன் விரும்புவதில்லை என்றும் அவர் சொல்கிறார். இயேசுவும் தான் வாழ்ந்த காலத்தில் பிற மதத்தினர் (அஞ்ஞானிகள்) தங்கள் தேவர்களிடத்தில் இதுபோன்ற அர்த்தமற்ற உளறல்கள் மூலம் ஜெபிப்பதை அறிந்திருந்தார், அதனால் தான் தன்னை கேட்டுக்கொண்டிருந்த மக்களிடம் இதுபோன்ற ஜெபங்களை நீங்கள் செய்யாதீர்கள் என்று சொன்னார்.

இயேசு கெத்செமெனேயில் தன்னுடைய பிதாவிடம் ஜெபித்த போது அவர்  பரலோக பாஷையில் ஜெபிக்க வில்லை. ஒரு தெய்வம் (இயேசு) இன்னொரு தெய்வத்துடன் (பிதா) பேசியபோது அது மற்றவர்களுக்கு புரிய கூடிய மொழியில் இருந்தது. நீங்கள் ஜெபிக்கும் போது மட்டும் அது ஏன் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் புரியாத அந்நியபாஷையில் இருக்க வேண்டும்? லாசருவின் கல்லறை அருகே நின்று அவனை உயிரோடு எழுப்ப இயேசு பிதாவினிடத்தில் ஜெபித்த போது, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது. அந்த ஜெபத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் யோவான் தன்னுடைய நற்செய்தி நூலில் 17-ம் அதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். இயேசு தன்னுடைய பிதாவிடம் செய்த தனிப்பட்ட ஜெபத்தின் ஒவ்வொரு வார்த்தையும் மிகத் தெளிவாக மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் இருந்தது, அந்த ஜெபம் உலகில் வேத புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எல்லா மொழிகளிலும் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது!

மாம்சீக கொரிந்தியர்கள், இன்றைய பெந்தேகோஸ்தே விசுவாசிகளை போல, வெளிப்புறமாக, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும், சொந்த மதிப்பை கூட்டும் உணர்வுப்பூர்வமான அந்நியபாஷை வரத்தை பயன்படுத்தி தங்கள் ஆவிக்குறிய வளர்ச்சியின் அடையாளமாக காட்ட விரும்பினார்கள். பாருங்கள், இப்பொழுது நான் ஆவியில் நிறைந்து இருக்கிறேன்! எனக்கும் தேவனுக்குமான தனிப்பட்ட மொழியில் இப்பொழுது தேவனுடன் பேசுகிறேன் என்று சொன்னார்கள்.

தீர்க்கதரிசனத்தின் விளைவு

பிரியமானவர்களே, இப்போது கொரிந்து திருச்சபையில் உள்ள எல்லோரும் அந்நியபாஷை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இப்பொழுது எல்லாரும் எல்லா மாய ரகசியங்களையும் அறிந்திருக்கிறார்கள், தனிப்பட்ட ரகசியம் என்று அங்கே ஒன்றும் இல்லை. ‘அதனால்’ நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள், நீங்கள் பேசும் அந்நியபாஷையை ஒருவரும் புரிந்து கொள்ள முடியாததால் நீங்கள் மனிதருக்கு ஊழியம் செய்யவில்லை. ஆனால் (வச 3), “தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ (தேவனுடைய வார்த்தையை பேசுகிறவனோ) மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்”.

நீங்கள் மனிதனிடத்தில் தேவனுடைய வார்த்தையை பேசும்போது மூன்று காரியங்கள் நடக்கும்: ஆவிக்குறிய வளர்ச்சி, போதிக்கப்படுதல் (புத்தி) மற்றும் ஆறுதல் அடைதல். இப்படி நீங்கள் பயனுள்ள தேவனுடைய வார்த்தையை பேசும்போது, முதலாவது அவர்களுடைய வாழ்க்கை கட்டப்படும், இரண்டாவதாக, புதியதொரு வாழ்க்கை வாழ உற்சாகப்படுத்தப் படுவார்கள், மூன்றாவதாக, தங்களுடைய காயங்கள் ஆற்றப்பட்டு தேற்றப்படுவார்கள். இதைத்தான் நீங்கள் சபையாக கூடி வரும்போது செய்ய வேண்டும். ‘பரா.. பரா.. பரா.. கரா.. கரா.. கரா… லபா… லபா… லபா…’ என்ற அர்த்தமற்ற வார்த்தைகள் அல்ல, தேவனுடைய வார்த்தையே அங்கு பிரதானமாக போதிக்கப்பட வேண்டும்!

அந்நியபாஷையும் ஆவிக்குறிய வளர்ச்சியும்

வசனம் 4: “அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்”. எது சிறந்தது? பவுல் இங்கே என்ன சொல்ல வருகிறார்? சபை கூடிவருதலின் நோக்கம் என்ன? “சபையின் ஆவிக்குரிய வளர்ச்சி”, மீண்டும் சொல்கிறேன், சபையின் ஆவிக்குரிய வளர்ச்சி.

சுய ஆவிக்குரிய வளர்ச்சி இங்கே நோக்கமல்ல. உங்கள் சுய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு என்று எந்த ஒரு வரமும் கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பயன்பட வேண்டிய ஆவிக்குரிய வரத்தை தன்னுடைய  சுயத்திற்கென்று என்று ஒரு விசுவாசி பயன்படுத்துவான் என்றால் அவன் அந்த வரத்தை வைத்து விபச்சாரம் செய்கிறான் என்பதே பொருள், ஏனென்றால் வரங்கள் மற்றவர்களுக்கு சொந்தமானது, சபையை கட்டுவதற்காக கொடுக்கப்பட்டது.

“அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்” என்று பவுல் சொல்லியிருக்கிறாரே அதன் காரணம் என்ன என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். அதைத்தான் நான் இங்கே விளக்க முயற்சி செய்கிறேன், சபைக் கூடிவருதலின் நோக்கமாகிய ‘மற்றவர்களுடைய’ ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இந்த அந்நியபாஷை பயனற்றது என்பதை சுட்டிக்காட்ட பவுல் இதைக் குறிப்பிடுகிறார்.

நீங்கள் சொல்லலாம், ‘அது வியாக்கியானம் (மொழியாக்கம்) செய்யப்பட்டால் திருச்சபையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவி செய்யுமே’ என்று. அப்படியானால், வியாக்கியானம் செய்யும் வரம் தான் நேரடியாக திருச்சபையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவி செய்கிறதே அல்லாமல் அந்நியபாஷையின் வரம் அல்ல. அந்நியபாஷை வரம் திருச்சபையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயனற்றது என்பதை அழுத்தமாக கொரிந்தியருக்கு பவுல் சொல்கிறார். கொரிந்து சபையில் உள்ள இந்த சூழ்நிலையில் ஒருவன் உண்மையாகவே தேவன் கொடுத்த அந்நியபாஷையை பேசினாலும் ‘அதன் அர்த்தத்தை அவன் சொல்லாவிட்டால்’ அது பயனற்றது என்பதைத்தான் ஐந்தாம் வசனத்தில் பவுல் குறிப்பிடுகிறார்.

ஒரு உன்னதமான உண்மை உங்களுக்கு தெரியுமா? உண்மையான அந்நியபாஷை வரம் சபையில் பயன்படுத்தப்பட்டபோது, அந்த பாஷையை புரிந்து கொள்ளும் யாராவது ஒருவர் (அல்லது சிலர்) அந்த சபையில் இருப்பார், தேவன் பேசுகிறார் என்பதன் அடையாளமாக அது பயன்படுத்தப்பட்டது. மேலும், அதை வியாக்கியானம் (மொழியாக்கம்) செய்யும் வரத்தையும் சபையிலுள்ள யாராவது ஒருவருக்கு தேவன் கொடுத்திருப்பார். அவர் அந்த அந்நியபாஷையில் பேசப்பட்ட தேவனுடைய வார்த்தையை சபையிலுள்ள மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் மொழியாக்கம் செய்வார். அதாவது, மற்றவர்களுக்கு பயன்தராத அந்நியபாஷை வரம் திருச்சபையில் பயன்படுத்தப்பட்டபொழுது கூட, அது அனைவருக்கும் பயன்படும் விதமாக அதை வியாக்கியானம் செய்யும் வரத்தையும் தேவன் திருச்சபையில் உள்ள விசுவாசிகளுக்கு கொடுத்திருந்தார். ஏனென்றால், மற்றவர்களுக்கு பயன்தராத, கட்டியெழுப்பாத எந்த ஒரு செயலும் திருச்சபையில் நடைபெற தேவன் விரும்பவில்லை. கொரிந்தியர்கள் அந்நியபாஷை என்ற பெயரில் கூச்சல் குழப்பத்தை சபையில் ஏற்படுத்தி இருந்தார்கள், அது சபையை பக்தி விருத்தியடையச் செய்யும் என்று நம்பினார்கள்.

எல்லோரும் அந்நியபாஷை பேச வேண்டுமா?

இறுதியாக இந்த பகுதியில், ஒருவேளை நீங்கள் பேசுகிற படி உண்மையான அந்நியபாஷையின் வரம் என்ற ஒன்று இருக்குமென்றால், அது திருச்சபையில் சரியாக பயன்படுத்தப்படும் என்றால், “நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்” (வச 5) என்று சொல்லி, மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அந்த வரத்தினால் பயனில்லை என்று குத்திக்காட்டி இந்த வரம் இரண்டாம்பட்சமே என்பதை பவுல் உறுதிபட எடுத்துரைக்கிறார். பல சிறந்த நற்செய்தியாளர்கள் கூட பவுல் இப்படி சொல்லி இருக்காவிட்டால் சிறப்பாக இருந்திருக்கும் என்றே கருதுகிறார்கள். ஏனென்றால், பவுல் ஏன் இதை சொன்னார் என்பதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், பாருங்கள், ‘நீங்கள் எல்லோரும் அந்நியபாஷை பேச வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என்று பவுலே சொல்லியிருக்கிறார் என்று பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் சொல்கிறார்கள்.

மேலும், நீங்கள் இந்த கூற்றை மற்ற வேத பகுதிகளின் வெளிச்சத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.  உதாரணமாக, 1கொரி 12:30: “எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா?” கிரேக்க மொழிநடையின்படி இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில், “இல்லை” என்பதாகும். மேலும் 12:11ல்: “இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்” என்று பவுல் சொல்கிறார். அப்படியானால், எல்லோரும் அந்நியபாஷைகளைப் பேச முடியாது என்பதை உறுதியாக அறிந்திருந்த பவுல், ஏன் ‘நீங்கள் எல்லோரும் அந்நியபாஷைகளை பேசும்படி விரும்புகிறேன்’ என்று சொல்லுகிறார்? பவுல் இங்கே உயர்வு நவிற்சி அணியை (மிகைப்படுத்தல்) பயன்படுத்துகிறார்.

உதாரணமாக 1கொரி 7:7க்கு செல்லுங்கள், ‘திருமண உறவு உன்னதமானது, அது நல்லது’ என்று சொல்லும் பவுல், “எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன்” அதாவது, நீங்கள் எல்லோரும் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என்றும் சொல்லுகிறார். மனிதர்கள் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தேவனுடைய திட்டமா? நிச்சயமாக இல்லை. அப்படியானால் பவுல் இங்கே என்ன சொல்லுகிறார்? ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்ட, முடியாத ஒன்றை செய்ய விரும்புவதுபோல் சொல்லிக் காட்டுவதாகும். அதைத்தான் 1கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தில் பவுல் செய்துகொண்டிருக்கிறார். அவர் சொல்கிறார், ‘நான் அதை குறைத்து மதிப்பிடவில்லை, என்னுடைய வழி என்று ஒன்று இருக்கும் என்றால், நீங்கள் எல்லோரும் உண்மையான அந்நியபாஷையின் வரத்தை உடையவளாக இருக்க வேண்டும்’ என்று நான் விரும்புகிறேன்.

ஆனால் அது சாத்தியமல்ல என்பதை பவுல் அறிந்திருந்தார். முதன்மையானது அந்நியபாஷை அல்ல, அதைவிட முக்கியமான வரம் ஒன்று இருக்கிறது என்பதை அழுத்தி சொல்ல பவுல் அங்கே உயர்வு நவிற்சி அணியை பயன்படுத்துகிறார். இதைவிட நீங்கள் தீர்க்கதரிசனம் சொன்னால் நலமாய் இருக்கும் என்று சொல்லுகிறார். ஏனென்றால், அந்நியபாஷை வியாக்கியானம் செய்யப்படாவிட்டால் திருச்சபைக்கு பயனற்றது. மேலும், 1கொரி 13:8ல் “அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோகும்” என்று நாம் பார்க்கிற படி, ஆதித் திருச்சபைக்கு அடையாளமாக கொடுக்கப்பட்ட அந்த வரம், அதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டு விட்டதால், இன்றைய திருச்சபைக்கு தேவையற்றது. ஒருவேளை மிகவும் அரிதாக சில இடங்களில் தேவன் இந்த வரத்தை இங்கொன்றும் அங்கொன்றுமாக பயன்படுத்தக்கூடும், ஆனால் திருச்சபையின் பொதுவான வழக்கத்திலிருந்து இந்த வரம் மறைந்துவிட்டது என்று சொல்லலாம்.

சுருக்கமாக, இரண்டு காரியங்கள்: ஒன்று, திருச்சபை கூடிவரும் போது அது தேவனுடைய வார்த்தையை கேட்டு ஆவிக்குறிய வளர்ச்சி அடைவதற்காக கூடிவருகிறது. இரண்டாவது, சாத்தான் தன்னுடைய தந்திரத்தின் மூலம் மாய சமயங்களின் பழக்கவழக்கங்களை திருச்சபைக்குள் நுழைக்காத வண்ணம் தேவனுடைய உண்மையை காத்துக் கொள்ளும்படி நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.