அந்நியபாஷை குழப்பம்

எனக்கு கடிதம் எழுதிய மற்ற இரண்டு நபர்களின் கடிதங்களுக்கு பதில் எழுத போகிறேன்.
1. Dr. T.S. Rajasekar, SABC ( Bible College) Lacturer, Bangalore.
2. Bro. R. Stanly, (BYM.) Vellore. இவர் BYM ஸ்தாபகரும் மிஷனரி ஸ்தாபனத்தின் நல்ல வேதாகம ஆசிரிய பாண்டித்துவமும் பெற்றவர் ஆவார்.

1. Dr. T.S. Rajasekar, SABC Lacturer, Bangalore.

இவரின் வேதாகம கல்லூரிபடிப்பின்அறிவு, அந்நிய பாஷை உபதேசத்தில் வேதவசன அடிப்படைக்கொண்டதல்ல. இவர் ஒரு வேதாகம கல்லூரி ஆசிரியராக இருந்தும் அடிப்படை வேத படிப்பறிவு இல்லாதவர்போல் தெருவுக்கு நான்கு சில்லறை பெந்தேகோஸ்தே சபைகளின் வேதாகம படிப்பு இல்லாத பாஸ்டர்கள் பேசுவது போல இவரும் தான் எழுதிய கடித்ததில் கட்டுரையை எழுத ஆரம்பித்த விதமே அப்படி அவரைப்பற்றியும், வேதாகம படிப்பை பற்றியும் சந்தேகம் கொள்ளத்தோன்றியது மிகவும் துக்கமான ஒன்றாகும். இவர் தன் கடிதத்தில் ஆரம்பத்திலேயே இப்படி எழுதுகிறார்.

பரிசுத்த ஆவியின் நிறைவு இரண்டாம் ஆசீர்வாதம் அல்ல. அப். 2:38, 39ன்படி தேவனிடம் திரும்பும் ஒவ்வொருவருக்கும் உரிய வாக்குத்தத்தம் ஆகும். இதை பெற பரிசுத்த ஆவியினால் பாவ உணர்வுபெற்ற ஒவ்வொருவரும் தங்கள் பாவ வாழ்வை வெறுத்து, தேவனிடம் மனம் திருப்பி இயேசு தங்கள் பாவத்திற்கு மரித்ததை விசுவாசித்து, அறிக்கையிட்டு, வேத வசனத்தின்படி தண்ணீரில் திருமுழுக்கு பெற்று, பின் தேவனிடம் பரிசுத்த ஆவியை கேட்டும்போது தேவன் இயேசுவின் மூலம் ஆவியின் அச்சாரத்தை நமக்கு தந்து நம்மை தம் பிள்ளைகளாகவும் சுதந்திரவாளிகளாகவும் ஆக்குகிறார். வெறுமனே பாவத்திற்காக வருந்துவதோ இயேசுவை இரட்சகர் என்று சொல்வதோ மாத்திரம் மறுபடியும்பிறந்தது ஆகாது! அது குறை பிரசவம் ஆகும். மேலே நீங்கள் வாசித்தபடி இவர் தன் கடிதத்தை தொடங்குகிறார். பரிசுத்த ஆவியானவரை நாம் தான் கேட்கவேண்டும் அப்போதுதான் இயேசுவின் மூலம் அது கிடைக்கும் என்கிறார். இதற்கு இவர் வேத வசனம் எதையும் மேற்கோள்காட்டவில்லை. மேலும் இவர் அந்நிய பாஷை அடையாளம் என்பது சிலர் கூறுவதைப்போல் வேதத்தில் வெறும்மூன்று இடத்தில்தானே சொல்லப்படுகிறது. மற்ற இடங்களில் சொல்லப்படவில்லையே!அதனால் அந்நிய பாஷையை நாம் ஏற்க முடியாது என்று மற்றவர்கள் கூறுவது சரியல்ல என்கிறார். எருசலேம், சிசேரியா, எபேசு அகிய இடங்களில் வெவ்வேறு இனத்தவருக்கு ஒரே மாதிரியான அனுபவம் நேரிட்டதை வேதம் தெளிவாக குறிப்பிடுவதே இந்த அந்நிய பாஷை அனைவருக்கும் உரியது என்பதை காட்டுகிறது என்று எழுதுகிறார்.

டாக்டர் புஷ்பராஜ் பதில்

கட்டுரையை எழுதிய பெங்களுர் கல்லூரி ஆசிரியர்அவர்கள் மேலே குறிப்பிட்ட அனுபவங்களின் பின்னணியையோ சூழ்நிலையையோ, அவைகளில் கர்த்தரின் நோக்கங்களையோ இவர் படிக்கவில்லை, அல்லது இவைகளை ஆராய விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் 3 இடங்களில் அந்நிய பாஷை பேசப்பட்ட அனுபவம் எல்லாருக்கும் உரியது என்கிறார். இது மிக மிக தவறான கருத்து ஆகும்.

இவர் குறிப்பிடும் மூன்று இடங்களின் காணப்பட்ட அனுபவத்தில் சிலர் தீர்க்கதரிசனம் சொன்னார்கள், சிலர் தேவனை புகழ்ந்தார்கள், வெவ்வேறு பாஷைகளை பேசினார்கள் என்று எழுதியிருக்கிறது. ஆனால் சகோ ராஜசேகர் கூறுகிறார் தேவனுடைய உற்சாகமான ஆவி, இரட்சிப்பின் சந்தோஷம் நம்மை நிரப்பும்போது நம் உதடுகள் தானே திறக்கப்பட்டு அவருடைய புகழை இரகசியத்தை, செய்தியை நாம் அந்நிய பாஷை வழியாக நாம் பேசுகிறோம் என்றார். மேலும் பரிசுத்தாவியானவரால் நிரப்பப்படும் ஒவ்வொருவரும் அந்நிய பாஷை பேச வேண்டும் என்று கட்டளையிடுவதுபோல இவர் எழுதியிருக்கிறார். அதோடு யாராவது ஒருவர் அந்நியபாஷை பேசுபவர்களைப் பார்த்து நீங்கள் பேசும் பாஷைக்கு அர்த்தம் என்ன? அதை அறிவுபூர்வமாக விளக்கு என்று கேட்பது, குணமாக்கும் வரம் பெற்ற ஒருவரை பார்த்து நீங்கள் ஜெபித்து சுகமாக்கிய இந்த வியாதியின் கிருமிகளை எப்படி அகற்றினாய்? நீ எப்படி அவருக்கு சுகம் கொடுத்தாய்? அதை விஞ்ஞான பூர்வமாக நிரூபி என்று கேட்பதற்கு ஒப்பாகும் என்கிறார். இவர் எழுதுவது எத்தனை அர்த்தமற்ற பதிலாகும். வேத வசனமே அறியாதவர்களிடம் பேசுவதுபோலவும் இருக்கிறது அல்லவா!

ஆகவே இவர் அனுபவத்தின் அடிப்படையில் அந்நியபாஷை பேசுகிறவர்களை பார்த்து எப்படி இந்த பாஷைகளை பேசினாய் என்பதை நிரூபி என்று அவர்களிடம் கேள்வி கேட்கக்கூடாது என்கிறார்! அவர்களால் விளக்கமும் கொடுக்கமுடியாது என்கிறார். 1 கொரி. 14:1ல் ஆவியினாலே இரகசியங்களை தேவனிடத்தில் பேசுகிறவன் தனக்கு பக்தி விருத்தி உண்டாக பேசுகிறான் என்பது வேதம் கூறும் தகுதி. இதில் இரகசியத்தை ஏன் தேவனிடம் பேச வேண்டும் ? என்றோ தனக்கு புரியாததை பேசுவதில் எப்படி பக்தி விருத்தி உண்டாகும் என்பதை வேதம் அறிவுபூர்வமாக விளக்காததால் நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் சரியானது என்று வேதாகம கல்லூரி ஆசிரியர் திரு.ராஜசேகர் அவர்கள் அர்த்தமில்லாமல் எழுதியுள்ளார். இது சிறு பிள்ளைகளின் பதில்போல் இருக்கிறது.

ஒரு வேதாகம கல்லூரி ஆசிரியருக்கு ஒரு வேத வசனத்தை விளக்கி கூற முடியவில்லை என்றால் கல்லூரியில் மற்ற விஷயங்களை மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பார்? யாராவது புரியாத அந்நியபாஷை பேசினால் அதை குறித்து கேள்வி கேட்க கூடாது என்கிறார். புரியாத பாஷை பேசினலும் அதன் மூலம் பக்தி விருத்தி உண்டாகும் என்கிறார். இது எவ்வளவு முட்டாள்தனமான பதிலாக இருக்கிறது! பக்தி விருத்தி வேத வசனத்தினால் மட்டுமே உண்டாகும் என்பது கிறிஸ்தவ வேத வசனத்தின் ஆரம்ப பாடம் ஆகும். இந்த அடிப்படையே இவர்களுக்கு தெரியவில்லை. இவர்கள்பேசும் அந்நிய பாஷையைப்பற்றி இவர்களுக்கே ஒன்றும் விளங்காமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள் என்பது இவர் கடிதம மூலம் உறுதியாகிறது. இதன்மூலம் இவர்களைப்பற்றியும் இவர்கள் ஆராதிக்கிற பெந்தேகோஸ்தே சபை மக்களின் ஆவிக்குறிய வளர்ச்சியைப் பற்றியும் சந்தேகம் வருகிறதே! அவிசுவாசிகளின் சபை என்று இவர்கள் குறிப்பிடுகிற சபைகளைவிட இவர்கள் சபை மிக மோசமான நிலையில் காணப்படுகிறது என்பது மிக தெளிவு.

2. Bro. R. Stanly, (BYM.) Vellore.

BLESSING YOUTH MISSION
(A RegisteredReligious and Charatable Society)
P.O. Bag No. 609, 42943, 42828 Telegram : Blessing R. STANLY
Founder and General Secretary
February 1997.

அன்புள்ள சகோதரனுக்கு,
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். 1997 பிப்ரவரி 17ம் தேதி நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. ஒரு வாரத்திற்கு முன்தான் நீங்கள் எழுதிய கட்டுரை முழுவதும் வாசிக்க நேர்ந்தது. ஆனால் வெளியே ஆங்காங்கு ஜாமக்காரனில் உங்கள் எழுத்தால் ஏற்பட்ட சலசலப்புகள் என் காதிற் கேட்டன. 1963ம் வருடம் முதல் இன்று வரை எனது சுய பத்தி விருத்திக்காக இக்கிருபா வரத்தை பயன்படுத்தி வருகிறேன். இதில் எவ்வித மாற்றமுமில்லை. பெந்தேகோஸ்தே அல்லாத வட்டாரங்களில் அந்நிய பாஷையைக்குறித்து வெளிவந்துள்ள பல புத்தகங்களையும் நான் இவ்வனுபவத்தைபெற்ற ஆண்டுமுதல் ஆங்காங்கே வாசித்தும் வந்திருக்கிறேன். இரு திறத்தாரின் வியாக்கியானங்களிலும் சரியானவைகளும் உண்டு. பிழையானவைகளும் உண்டு என்பது எனது கருத்தாகும். வரங்களைப்பற்றிய வியாக்கியானம் எழுதப்பட்ட அத்தியாயங்களின் முடிவில் அப்போஸ்தலன் பவுல் நமது அறிவு குறை உள்ளது என்று உண்மையாய் எழுதிய வார்ததை களுக்கு இந்நிலை நிரூபணமாகும்.
உங்கள் சகோதரன். R. ஸ்டான்லி

குறிப்பு: சகோ சு.ஸ்டான்லி (BYM Vellore) அவர்கள் இப்போது BYM மிஷனரி ஸ்தாபனத்திலிருந்து ஓய்வுபெற்று. இப்போது வேதாகமம் படிப்பித்து கொடுத்தல் என்ற அருமையான ஊழியத்தை செய்துக்கொண்டிருக்கிறார்.

இவ்வருட ஆரம்ப மாதங்களில் டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய நான் இக்கட்டுரையை ஜாமக்காரனில் நான் எழுதி குறிப்பிட்டதுபோல அந்நிய பாஷை விஷயமாக நானே நேரில் சென்று சந்தித்த பெந்தேகோஸ்தே சபை ஊழியர்கள் பாஸ்டர்களில் சகோ. ஸ்டான்லி அவர்கள் நல்ல விசுவாசியும், பிரபல பிரசங்கியாரும் ஆகும். பெந்தேகோஸ்தே சபைகளில் உள்ள வேத பண்டிதர்களில் இவரும் ஒருவர். இருதய ஆப்பரேசன்முடித்து ஓய்வு பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும் நான் இவர் வீடு தேடி சென்றபோது எனக்கு மரியாதை கொடுத்து அந்நிய பாஷைகளைக்குறித்து சுமார் 1மணி நேரத்துக்குமேல் நாங்கள் இருவரும் பகிர்ந்துக் கொண்டோம். அதன்பின் அந்நியபாஷைப்பற்றி நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க கடிதம்மூலம் தன் விளக்கத்தை ஜாமக்காரன் வாசகர்களுக்காக எழுதியுள்ளார். இக்கட்டுரையை எழுதிய சகோ.ஸ்டான்லி அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். சகோ ஸ்டான்லி எழுதிய கட்டுரையிலிருந்து குறிப்பிட்ட பிரச்சனைக்குரிய விஷயங்களைமட்டும் நான் தெரிந்தெடுத்து அவைகளுக்கு என் விமர்சனங்களையும் என் விளக்கத்தையும் எழுத விரும்புகிறேன். அந்நிய பாஷை அவசியம் தானா? என்ற தலைப்பில்தான் சகோதரன் தான்எழுதிய கட்டுரையை பதிவுசெய்கிறார்.

சகோ ஸ்டான்லி அவர்கள் இக்கட்டுரையை ஆரம்பிக்கும்போது முதலில் குறிப்பிட்ட வசனம் (அப். 2:7, 8-12) இதோ பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?அப்படியிருக்க நம்மில் அவரவருடைய சொந்த பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி இதென்னமாய் முடியுமோ ? இப்படி இந்த வசனத்தை ஆரம்ப வசனமாக குறிப்பிட்டு இதை விவரிக்கும்போது வேத வசனத்தில் இல்லாத பெந்தேகோஸ்தே சபையினருக்கே உரிய உபதேச பழக்கத்தை குறிப்பிடுகிறார். 120 சீடர்களும் கிறிஸ்துவின் கட்டளைக்கிணங்கி துதியோடும், விண்ணப்பத்தோடும் காத்திருந்ததால் அவர்கள்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்குவதுபோல தன் கட்டுரையில் சித்தரிக்கிறார்.

அப் 2ல் எந்த வசனத்திலும் துதியோடும் விண்ணப்பத்தோடும் சீஷர்கள் காத்திருந்ததாக எழுதப்படவேயில்லை! இது கைதட்டி துதித்தால் பரிசுத்தாவி இறங்கும் என்ற தவறான எதிர்ப்பார்பில் சபையில் உள்ள விசுவாசிகள் தங்கள் கைகள் நோக கைதட்டி பரிசுத்தாவியை பெற கடும் முயற்சி செய்கிறார்களே! அப்படி எல்லாரும் செய்யும்படி வாசிக்கிவர்களை தூண்டுவது போல் இவர் எழுத்து இருக்கிறது.

பொதுவாக எல்லா பெந்தேகோஸ்தே சபைகளிலும் எரிகோ மதிலை ஏழுமுறை சுற்றிவந்து உரத்த சத்தமாய் துதித்ததினால்தான் எரிகோ மதில் இடிந்து விழுந்தது என்று தவறாக உபதேசிப்பதை கேட்டிருக்கிறேன். பெந்தேகோஸ்தேகாரர்கள் வசனத்தை எப்படி அவர்களுக்கு சாதகமாக திரித்து கூறுகிறார்கள என்பதை கவனிக்கவும். வேதம்கூறுகிறது, எரிகோ மதிலைசுற்றி வந்தபின் மக்கள் ஆர்ப்பரித்தார்கள் என்றுதான் எழுதியுள்ளது. ஆனால் இவர்கள் எல்லோரும் துதித்தார்கள் என்று சொந்த வியாக்கியானம் இதற்கு கொடுக்கிறார்கள். இதே போலத்தான் சகோ.ஸ்டான்லி அவர்களும் மேல்அறையில் துதியோடும் விண்ணப்பத்தோடும் காத்திருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். இவர் இந்த இரண்டு வார்த்தைகளையும் இங்கு உபதேசிப்பதின் உள்நோக்கம் விளங்குகிறதல்லவா?

அடுத்தது சகோ.ஸ்டான்லி கூற நினைப்பது பெந்தேகோஸ்தே நாளில் மேல் வீட்டில் இரண்டு பெரிய அடையாளம் காணப்பட்டது. 1) முழக்க சத்தம். 2) அக்கினிமய நாவுகள் இவைகளை காட்டிலும் வெளியில் இருந்தவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது என்னவென்றால் சீஷர்கள் பேசின பற்பல பாஷை வரமே (அப். 2:1-12) என்று எழுதியுள்ளார். இதன்மூலம் அந்நிய பாஷை உபதேசத்துக்கு முக்கியத்தவம் கொடுக்க முயலுகிறார். ஒருவரோடு பழகுவதற்கு பேச்சு முக்கியமானதுபோல உறவாடலுக்கு - உரையாடல் அதாவது பாஷை உறுதுணை என்று கூறி முடிக்கிறார். மேலும் சகோதரர் கூறுவதாவது ஆவிமண்டலத்த்pல் தேவனோடு உரையாடுவதற்க்காய் அவர் தந்துள்ளதுதான் பாஷை வரம் அதற்காக தேவனை துதிப்போம் என்கிறார். சகோ. சு. ஸ்டான்லி அவர்கள் மேலே கூறிய அத்தனை விவரங்களும் தவறானவையாகும்.

சகோ. ஸ்டான்லி அவர்கள் எழுதியதுபோல பாஷை, வரம் ஆவிமண்டலத்தில் தேவனோடு பேசுவதற்கு தரப்பட்டதல்ல. பாஷை- வரம் என்பது வேதபுத்தகம் எழுதப்படாத காலத்திற்குமுன் ஆரம்பிக்கப்பட்ட ஆதி திருச்சபைக்காக கொடுக்கப்பட்டதுதான் பாஷை வரம் ஆகும். எல்லாரும் அந்நிய பாஷையில் பேசுவதற்கு கொடுக்கப்பட்டதல்ல. 1 கொரி 12ம் அதிகாரம் முழுவதும் சபையைப் பற்றியும் சபைக்குள்ளே உள்ள ஊழியங்களைக் (1 கொரி 12:28) பற்றியும் சபைக்குள் நிகழ்த்தப்படும் வரங்களைப்பற்றியும் (1 கொரி.12:4-13) பவுல் மிகத் தெளிவாகக் கூறுகிறார்.

ஆவி உலகத்தில் பிசாசின் ஆவிகளோடு பேசுகிறவர்கள் உண்டு. கோயமுத்தூர், ஈரோடு, சென்னை. திருச்சூர் (கேரளா) இங்கெல்லாம் ஆவிகளோடு பேசும் கிறிஸ்தவர்கள் உண்டு. அவர்கள் பிசாசுடன் பேசும்முன் ஓம் ரீம் உம் என்றெல்லாம் உளறிவிட்டு அதன் பிறகு ஆவி உலகத்துக்குள் பிரவேசித்து பிசாசின் ஆவிகளுடன் பேசுகிறார்கள்.

நம் பெந்தேகோஸ்தே சபை நண்பர்களும், சகோ.சு. ஸ்டான்லி கூறுவதுபோல் ஆவி உலகத்தோடு பேசுகிறவர்கள் போல்தான் இவர்களும் ஜெபத்தில் அந்நிய பாஷை பேசுவதும் காணப்படுகிறது. ஷங்கரபலா-ஷக்கரபலா-க்கக்கா-த்தத்தா-த்தத்தத் இப்படிப்பட்ட சத்தங்கள் ஊ என்ற கூவல்கள்கூட ஆராதனையில் கேட்கப்படுகிறது. இதுவா தேவனிடம் ஆவி உலகத்தில் பேசப்படுவது? அந்நிய பாஷையை நான் நக்கல், கிண்டல் செய்வதாக நீங்கள் நினைத்தால் அதில் எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. உலகமே சிரிக்கிற மாதிரிதான் இருக்கிறது. இச்சபையினரின் அந்நிய பாஷை. குறிப்பாக நீங்கள்பெற்ற பிள்ளைகளே நீங்கள்; பேசும் அந்நிய பாஷையை குறித்தும் பாஸ்டர் பேசும் அந்நிய பாஷையைக் குறித்தும் நையாண்டி (மிமிக்கிரி) செய்து காட்டி சிரித்ததை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நான் பல வீடுகளில் இதை கண்டிருக்கிறேன். பல பெந்தேகோஸ்தே சபைகளில் சிறு பிள்ளைகள் மட்டுமல்ல, சபை ஆராதனையில் அமர்ந்திருக்கும் வாலிபர்கள் அந்நிய பாஷையில் பாஸ்டர் பேசும்போது அதை நையாண்டி செய்தததை வீடியோவிலும் நான் கண்டிருக்கிறேன்.

ஆக பாஷைவரம் என்பது சகோ.ஸ்டான்லி கூறுவதைப்போல ஆவிமண்டலத்தில் தேவனோடு பேச அல்ல என்பதை அறியவேண்டும். இதுவரை வேத புத்தகத்தில் பாஷைவரம் மூலம் யாரும் தேவனோடு பேசியதில்லை. ஆனால் வேதத்தில் எழுதப்பட்ட பாஷைவரம் அன்றைய சபைக்காக வரமாக கொடுக்கப்பட்டதாகும். 1 கொ. 14:1,2 என்ற இந்த வசனத்தை சுட்டிக்காட்டி பாஷைமூலம் தான் தேவனோட பேசினார்கள் என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தை காட்டுவார்கள். ஏற்கனவே நான் எழுதியபடி பெந்;தேகோஸ்தே சபையினர் யாவரும் இந்த ஒரு வசனத்தை பிடித்துக்கொண்டு விளையாடுகிறார்கள். இதற்கான விளக்கத்தை என் கட்டுரையின்; முடிவுரையில் கண்டிப்பாக விளக்குவேன்.

இப்போது சகோ. ஸ்டான்லி அவர்களுக்கும் வாசிக்கிற உங்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் கர்த்தர் சபை மக்களோடு பேசுவதற்கு பாஷை வரத்தைப் பயன்படுத்தினார் அதுவும் வேத புத்தகம் எழுதபடாத காலத்தில் பாஷை வரத்தை கர்த்தர் பயன்படுத்தினார். மேலறையில் சீஷர்கள் மூலமாக பேசப்பட்ட பற்பல பாஷைகள் அர்த்தம் கொண்டதாக இருந்தது என்றும் அந்தந்த பாஷைக்குறியவர்கள் அங்கிருந்தார்கள் என்பதையும் சகோ. ஸ்டான்லி சரியாக கூறியிருக்கிறார். அனால் அதற்கு அடுத்ததாக எழுதிய வார்த்தையிலே அவருக்கு தெளிவில்லை. மற்றவர்களையும் குழப்பிவிட்டார். அதாவது எல்லா பாஷைகளுக்கும் அர்த்தம் விளங்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்று எழுதியுள்ளார். அதாவது அந்நிய பாஷைக்கு அர்த்தம் வேண்டாம் என்பது சகோ. ஸ்டான்லியின் முடிவு. 1 கொரி. 14:8-10) இந்த வசனத்தை வாசித்து முடிவெடுங்கள்.

சகோ. ஸ்டான்லி பெந்தேகோஸ்தே நாள் அன்று பாஷைகள்தான் மக்களை கவர்ந்தன அவ்வளவுதான் என்கிறார். இவர் கூறுவது மிகவும் தவறு, பாஷைகள் எதற்கு மக்களை கவரவேண்டும். ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல அவர்கள் பேசிய பாஷைகள் மக்களை கவர அல்ல. மக்களை உறுதிபடுத்தப்படுவதற்காக பேசப்பட்டது. அதில் தேவனின் மகத்துவங்களை கூற கேட்கிறோமே! என்றார்களே! அதை ஸ்டான்லி அவர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டார். சரித்திரத்தை பின் நோக்கி பார்த்தால் அந்த மகத்துவம் என்ன என்பதை பழைய ஏற்பாட்டு சம்பவத்தையும் சங்கீதத்தில் கைதிகளை பாட சொன்னதையும் குறித்து ஏற்கனவே எழுதியிருந்தேன். அதை கேட்டு இந்த சீஷர்கள் யாவரும் நம் தேவனை ஆராதிப்பவர்கள் என்பதையும் இவர்கள் கூறுவது நாம் வழக்கமாக கூறும் தேவ மகத்துவம் ஆகும் என்று உணர்ந்தனர். நம்மூதாதையர் தேவனின் மகத்துவத்தை பாடலாய் பாடி, ஒவ்வொரு தலைமுறை மக்களுக்கும் சொல்லி கொடுத்து ஆகும். இப்போது இந்த சீஷர்கள் அந்த மகத்துவத்தை கூற கேட்கிறோமே! என்று அந்த சம்பவங்களை ஞாபகப்படுத்தி, இவர்களும் நம் இனத்தை சேர்ந்தவர்கள்தான் என்றும் இவர்களும் நாம் ஆராதிக்கும் யாவேயைத்தான் ஆராதிக்கிறார்கள் என்பதையும் அந்த மக்கள் உறுதிப்படுத்திக்கொள்ள தேவன் செய்த மகத்தான ஏற்பாடு ஆகும். அதன்பிறகுதான் பேதுரு செய்த பிரசங்கத்தை அந்த மக்கள் கவனித்து இயேசுதான்-மேசியா என்று அவரை கர்த்தராக என்று ஏற்றுக்கொண்டார்கள்.

அடுத்து சகோ.ஸ்டான்லி ஆரம்பத்தில் வேத வசனத்தை திரித்து மாற்றிகூறியதைபோல பவுல் கூறி பாஷை விஷயத்துக்கும் வேறு விளக்கம் கூறுகிறார். பவுல் கொரிந்தியருக்கு நிரூபம் எழுதும்போது தான் பாஷை பேசும் வரத்தைப்பெற்றுக்கொண்டதாக வசனத்தை மாற்றி தவறாக குறிப்பிடுகிறார் 1கொரி 14:18. பாஷை பேசும் வரத்தை பெற்றுக்கொண்டதாக வேதத்தில் நிருபங்களில் எங்கும் பவுல் கூறியதில்லை. வசனத்தை வாசகர்களாகிய நீங்களே எடுத்து வாசியுங்கள். உங்கள் எல்லாரிலும் நான் அதிகமாய் பாஷைகளை பேசுகிறேன் என்றுதான் எழுதியிருக்கிறார். பாஷை வரத்தை பெற்றிருக்கிறேன் என்றா அங்கு எழுதியிருக்கிறது? இல்லையே? பாஸ்டர் ராஜாமணி தன் வாதத்துக்கு தன் கருத்தை திணிக்க வசனத்தை அப்படியே மாற்றி எழுதிய மாதிரி, ஸ்டான்லியும் எழுதுகிறார்.

நான் முன்னர் கூறியபடி பவுல் மட்டுமே புற ஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்க பல நாடுகளுக்கு சென்று பல பாஷைகாரர்களிடம் பேசி சுவிசேஷம் அறிவித்திருக்கிறார். ஆகவே பவுல் மட்டுமே பேதுருவைவிட, யோவானை விட கொரிந்து சபையில் உள்ள 14 பாஷைகார்களை விட மிக அதிகமான பாஷைகளை கற்றவர் ஆகிறார். ஆகவேதான் தான் கொரிந்துசபை மக்களைவிட அதிக பாஷைகளை நான் பேசுகிறேன் என்று தைரியமாக கூறுகிறார். ஸ்டான்லி அவர்கள் தன் உபதேசத்துக்கு வசதியாக பவுல் கூறி வார்த்தையை திரித்து உங்களைவிட நான் அதிக பாஷைகளை என்ற வார்த்தையுடன் வரங்கள் என்ற வார்த்தையை இவராக சேர்த்து சபையில் பேசும் அந்நிய பாஷை சரிதான் என்பதை உருதிபடுத்த முயலுகிறார்.

சகோ. ஸ்டான்லியின் அடுத்த தவறான கருத்து என்னவென்றால் சகோ. ஸ்டான்லி எழுதும்போது பரிசுத்தாவியின் அருள் வரத்தை நீங்கள் எல்லாரும் கர்த்தரிடம் கேட்கும்படி ஊக்குவிக்கிறேன் என்கிறார். அதாவது வரத்தை கர்த்தரிடம் கேட்க சொல்லுகிறார். நான் முன்பே சொன்னபடி வரம் கொடுக்கப்படவேண்டியது! அது கேட்கப்பட வேண்டியதல்ல.

அடுத்து 9 வரங்களில் பாஷை வரம் மட்டுமே தேவனை நோக்கி செயல்படுவதாகும் என்கிறார். இது நூற்றுக்கு நூறு தவறு. அந்நிய பாஷை வரம் சபை மக்களோடு கர்த்தர் பேச பயன்படுவதாகும். மனுஷன் தேவனோடு அந்நிய பாஷையில் பேச வேண்டிய அவசியம் இல்லை. தேவனுக்கு நம் எல்லாருடைய பாஷையும் தெரியும் பின் எதற்கு நம்மை வேற்று மொழியில் அவர் பேச வைக்கவேண்டும். நம் தெய்வம் அத்தனை முட்டாள் அல்லவே. பவுல் கூறுவது ஸ்டான்லி கூறுவதற்கு எதிர்மாறாக இருப்பதை கவனியுங்கள் 9 வரங்களில் தீர்க்கதரிசன வரத்தை நாடுங்கள் என்றுதான் பவுல் கூறினார். அந்நிய பாஷையை நாடுங்கள் என்று கூறவில்லை. வசனத்தை மறுபடியும் வாசித்து பாருங்கள். அதுவும் தீர்க்கதரிசன வரத்தை கேளுங்கள் என்று கூறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. நாடுங்கள், வாஞ்சியுங்கள் என்கிறார். கேளுங்கள் என்பதற்கும் நாடுங்கள் அல்லது வாஞ்சியுங்கள் என்பதற்கும் உள்ள வித்தியாசம் விளங்குகிறதா! தீர்க்கதரிசனம் என்றால் கர்த்தருடைய வார்த்தை என்று அர்த்தம். தீர்க்கதரிசி என்றால் கர்தருடைய வார்தையை உறைப்பவன் என்று அர்த்தம்.

திருசபைக்கு மற்ற எல்லா வரங்களைவிட கர்த்தருடைய வார்த்தையில் சபையை நடத்தப்பட வேண்டியது மிக முக்கியம். அவசியமுமாகும். அதனால்தான் மற்ற எல்லா வரங்களையும் விட தீர்க்கதரிசன வரத்தை நாடுங்கள் (விரும்புங்கள்) என்று பவுல் கூறுகிறார். ஆனால் சகோ.ஸ்டான்லியும், பாஸ்டர்.ராஜாமணியும் அந்நிய பாஷை வரம்தான் மிக முக்கியம் என்று எழுதியுள்ளார்கள். இது முற்றிலும் தவறு.இதற்கு பிறகுகூட சகோ. ஸ்டான்லி அவர்கள் தன் கட்டுரையில் எழுதுவது எல்லாம் வசனத்தைவிட்டு விலகி, சொந்த அனுபவங்களையே உபதேசமாக்க முயலுகிறார். அந்நிய பாஷை துதிப்பதற்காக அருளப்பட்டது என்கிறார். இப்படி தான்சார்ந்த சபையின் அனுபவத்தை தன் கட்டுரையில் எழுதி முடிக்கிறார்.

மேலும் அவர் எழுதும்போது அந்நிய பாஷையில் எல்லாரும் ஒட்டுமொத்தமாக சப்தம் உயர்த்தி துதிப்பதை நம் வேதம் தடுக்கவில்லை என்கிறார் அந்நிய பாஷையில் பாடலாம், சப்தம் போடலாம் என்று எங்காவது வேதத்தில் எழுதியுள்ளதா? அப்படி வேத்தில் எங்காவது குறிப்பாக புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளதா? யாராவது சொல்ல முடியுமா?தமிழ்நாட்டில் ஆராதனையில் நடனம் அறிமுகப்படுத்தியவர் சகோ ஸ்டான்லி ஆகும். அந்நியபாஷை பேசி,பாடி, ஆராதனையில் நடனமாட தமிழ் நாட்டிலேயே முதல் முதல் கற்றுக்கொடுத்தது சகோ.சு.ஸ்டான்லி ஆகும். குபாதர்.பெர்க்மான்ஸ் அல்ல. குபாதர் பெர்க்மென்ஸ் எல்லாம் நடன ஊழியத்தில் ஸ்டான்லிக்கு பின் வந்தவர்களே.

சகோ. DGS. தினகரன் ஒருநாள் என்னிடம் கூறினார். சகோ. S. ஸ்டான்லி என்னிடம் வந்து தான் வாலிபர்களுக்காக விசேஷ ஊழியம் ஆரம்பித்திருக்கிறேன். உங்கள்கூட்டத்தில் இரட்சிக்கப்பட்ட வாலிபர்களை எங்களிடத்தில் அனுப்பினால் அவர்களை வாலிப வயதில் சரியாக வழிநடத்த உதவியாக இருக்கும் என்றார். நானும் சரி யோசிக்கிறேன் என்றுகூறி ஸ்டான்லியை அனுப்பிவிட்டேன் என்றார். மேலும் அவர் கூறும்போது சகோ.ஸ்டான்லி வாலிபர்களை தன் கூட்டத்தில் நடத்தும் விதம் குறித்து பலர் பலவிதமாக கூறுகிறார்கள் ஆகவே என் சார்பில் நீங்கள் அவர்கள் கூட்டத்தில் நேரில் சென்று பங்குகொண்டு உண்மை விவரம் என்னிடம் அறிவியுங்கள். அதன் பிறகு அவர் கூட்டங்களுக்கு வாலிபர்களை அனுப்பலாமா, வேண்டாமா என்று நாம் தீர்மானிக்கலாம் என்றார்.

அப்படி DGS அவர்கள் என்னிடம் கூறியதற்கு அடுத்த மாதமே தஞ்சாவூரில் Blessing வாலிப கூட்டம் நடந்தது. அன்றைய ஆரம்ப நாட்களில் Blessing கூட்டங்களில் வாலிப பெண்களும், வாலிப பையன்களும் இணைந்தே கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ எனக்கு ஞாபகம் இல்லை நான் தஞ்சாவூர் சென்று அவர்கள் கூட்டம் நடக்கும் இடத்தில் நான் உள்ளே நுழைந்து கடைசி நாற்காலியில் அமர்ந்தேன். நான் வந்ததை ஸ்டான்லி அவர்கள் கண்டுகொண்டார். உடனே என்னை மேடைக்கு அழைத்துவர ஆட்களை அனுப்பினார். உடனே நான் அவர்களிடம் கூட்டத்தில் கலந்துகொள்ள மட்டும் வந்தேன். தயவுசெய்து என்னை மேடைக்கு அழைக்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பினேன். சற்று நேரத்தில் சகோ.ஸ்டான்லியின் செய்தி முடிந்தது. உடனே பாடல் வேளை தொடங்கியது. அப்போது Great is the Lord என்ற ஆங்கில பாடலை பாடினார்கள். இருக்க இருக்க பாடலின் வேகம் கூடியது. உடனே சகோ ஸ்டான்லி Every body should come out from the chair என்றார். உடனே வாலிபர்கள் நாற்காலிகளை நகர்த்தி அவரவர்கள் மிகவும் சத்தமாக கைதட்டி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஆவியானவர் இறங்குகிறார் எல்லாரும் நடனமாடி தேவனை துதிப்போம் என்று சகோ.ஸ்டான்லி கூறினார். அவ்வளவுதான் வாலிபர்கள் எல்லாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அசுத்த ஆவியால் ஆட்கொண்டவர்கள் போல கைகளை தட்டியும்,தலையை ஆட்டியும் பேய் பிடித்தவர்களைப்போல துள்ளஆரம்பித்தார்கள்.

ஒரு வாலிபன் தன் முன்னே இருக்கும் பைபிளை எட்டி உதைக்க அது எங்கோ போய் விழுந்தது! என்ன அலங்கோலமான காட்சியாக அது இருந்தது தெரியுமா? அந்த சூழ்நிலையில் நான் வெளியே போகலாமா, சேரில் அமர்ந்து கொள்ளலாமா என்று தயங்கி கொண்டிருந்த வேளையில் திடீர் என்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. சில வாலிபர்கள் மேடையில் நின்று பாடிக்கொண்டிருந்த ஸ்டான்லியை நோக்கி ஓடினர். அவரை தொட ஆசைப்பட்டனர். ஒருவன் ஸ்டான்லியின் தோளைபிடிக்க முயன்றபோது அவன் கை சகோ. ஸ்டான்லியின் பாக்கொட்டை கிழித்தது ஒரு துண்டு துணி அவன்கையோடு வந்துவிட்டது. ஸ்டான்லி கிழிந்த சட்டையுடன் கந்தசாமி கோலத்தில் நிற்கிறார். அந்த துண்டு துணியை எடுத்தவன் அந்த கூட்டத்தில் துள்ளாமல் நிற்கும் வாலிபர்கள் மேல் அந்த துண்டு துணியை வைத்தான் அவ்வளவுதான் அந்த பையன் உடனே துள்ள தொடங்கிவிட்டான். பல வாலிபர்கள்மேல் அந்த துண்டு துணி வைக்க எல்லாரும் துள்ளி குதித்தார்கள். இது திட்டமிட்ட ஏற்பாடா? எனக்கு யூகிக்கமுடியவில்லை, கூட்டம் முடியுமுன்னே நான் பாதியிலேயே எழுந்து வெளியேறி வாகனத்தில் ஏறி, சேலம் வந்து சேர்ந்துவிட்டேன். மறுநாள் மேட்டூர் டேமில் SBI பேங்க் மேனேஜராக இருந்த சகோ. DGS தினகரிடம் நடந்தவற்றை அப்படியே கூறினேன். அப்போது DGS சொன்னதாவது, நல்ல வேளை 15 வாலிபர்களை அங்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தேன். இனி யாரையும் Blessing கூடடத்துக்கு போக நான் உற்சாகபடுத்தமாட்டேன் என்றார். ஸ்டான்லியின் இந்த உபதேசம் தவறானது என்றும் கூறிவிட்டார்.

சகோ. DGS தினகரன் அவர்கள் காருண்யா கல்லூரி கட்டுவதற்கு சில காலத்திற்கு முன் உண்மையான ஊழியத்தை செய்த காலத்தில் இந்த சம்பவம் நடந்தது. அதன்பின் சகோ.தினகரன் அவர்களும் வசனத்தைவிட்டு விலகி பிழையான உபதேசத்துக்குள் நுழைந்தார். ஆவியானவரும் அவரை விட்டு விலகிவிட்டார் என்பது துக்கமான விஷயமாகும்.

சகோ. ஸ்டான்லி அவர்கள் BYM மிஷனரி ஊழியத்தில் ஆழமாக ஈடுபட ஆரம்பித்தபின் ஆவியில் நடனமாடுவது இவர்கள் கூட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டதாக அறிந்தேன். இப்போது எப்படியோ? தெரியவில்லை. இதற்கெல்லாம் மூல காரணம் அந்நிய பாஷை என்ற பெயரில் ஏற்படும் உளரல் சபைகளுக்கு மிக அவசியம் என்ற இவரின் தவறான உபதேசமும் அபிப்பிராயமுமாகும். ஊழியத்தில் ஸ்டான்லி அவர்கள் ஓரளவு முதிர்ச்சி அடைந்த பிறகு சில ஆண்டுகள் கழித்துதான் அந்நிய பாஷைப்பற்றிய இந்த விளக்க கட்டுரை எழுதிய சூழ்நிலை உண்டானது.

இதில் மிக முக்கியமான ஒரு சம்பவம் என்னவென்றால் என் மகன் Dr. Sam, சகோ.ஸ்டான்லி அவர்கள் திருச்சியில் (Blessing) நடத்தின கூட்டத்தில்தான் மனம் திரும்புதலின் (இரட்சிப்பின்) அனுபவத்தை பெற்றார் என்பதை கர்த்தருக்கு மகிமையாக இதை அறிவிக்கிறேன். இந்த மிக முக்கிய சம்பவத்துக்காக சகோ. ஸ்டான்லிக்கு நன்றியையும் கூறிக்கொள்கிறேன்.

சகோ.ஸ்டேன்லி அவர்கள் தொடர்ந்து தான் பெற்ற அந்நிய பாஷை அனுபவத்தைப்பற்றிகூறும்போது 1963ம் வருடம் CSI ஆங்கிலிக்கன் சபையில் பிறந்து வளர்ந்தவன் நான் என்றும் ஆனால் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் பெந்தேகோஸ்தே அல்லாத மாணவர் கூடுகை ஒன்றில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று அன்றிலிருந்து நான் அந்நிய பாஷையில் பேசி வருகிறேன் என்று எழுதியுள்ளார். ஆனால் இவர் இந்த அனுபவத்தை குறிப்பிடும்போது, இவரின் ஆரம்ப கால மாணவர் கூடுகையில் கலந்துகொண்டதை பெந்தேகோஸ்தே அல்லாத மாணவர் கூடுகை என்று குறிப்பிடுகிறார். அந்த சம்பவத்தை பற்றி அன்றைய அவர் நண்பர்களில் ஒருவர் என்னிடம் கூறும்போது அந்த மாணவர் கூடுகையில் பெந்தேகோஸ்தே சபை மாணவர்களும்; இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஜெபகூடுகையில் சிலர் அந்நிய பாஷையில் பேசி துதித்தால், அதை அருகிலிருந்து கேட்பவர்களுக்கு இதுதான் வல்லமையோ என தானும் அவர்களைபோல் அந்நிய பாஷையில் துதிக்க தானாகவே அந்த எண்ணம் வரும். எப்படியோ சகோ.ஸ்டான்லி அவர்கள் CSI சபையில் இருந்து வந்தவரானாலும், பெந்தேகோஸ்தே சபை விசுவாசிகளான மாணவர்களாலும் பெந்தேகோஸ்தே சபையை சார்ந்த அண்ணன்மார்களாலும் சகோ ஸ்டான்லி அவர்கள் வழிநடத்தப்பட்டார் என்பதை அவரிடமே கேட்டு அறிந்துகொள்ளலாம்.

அவர் எனக்கு எழுதிய கடித கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில் ஆவியினால் நிறைந்து நமது இருதயத்தில் கர்;த்தரை பாடி கீர்த்தனம் பண்ணுவது, மது போதையின் சிற்றின்பத்தையும் அந்நிய பாஷை அனுபவம் தோற்கடிக்கும் என்று எழுதியுள்ளார். அது முற்றிலும் உண்மை. அந்நிய பாஷை பேசியே பழக்கம் உள்ளவர்களை Extremist Spiritual Addict ஆனார்கள் என்பார்கள். இவர்கள் CSI, லூத்தரன், பிரதரன் சபைகளுக்குபோனால் அவர்களால் கொஞ்ச நேரம்கூட அந்த ஆராதனையில் பங்கெடுக்க முடியாது. அதற்குதான் மற்ற எல்லா சபைகளையும் செத்துபோன சபைகள் என்று இவர்கள் பெயர் வைத்துள்ளார்கள். மதுபானத்துக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுவிக்க நரம்பு வழியாக கொடுக்கும் மருந்து உண்டு. ஆனால் அந்நிய பாஷை என்று இவர்கள் கூறி ஆடி அமர்களப்படுத்தும் பிழையான ஆராதனை பழக்கத்திலிருந்து இவர்களை விடுவிக்க மருந்தே இல்லை. நாம் இவர்களுக்கு வசனத்தை காட்டி தெளிவாக விளங்க வைக்க முயன்றாலும் இவர்களுக்கு தாங்கள் பயின்ற தவறான அனுபவத்திலிருந்து இவர்கள் வெளியே வர கஷ்டப்படுகிறார்கள். ஆவியானவராக பார்த்து இவர்களை தான் எழுதிய வசனம் மூலம் தொட்டால்தான் சரியான உபதேசத்துக்கு திரும்பி வருவார்கள்.

சத்தம்போட்டு துதிப்பது

மேலும் சகோ.சு. ஸ்டான்லி கூறுகிறார். சபையில் விசுவாசிகள் அனைவரும் ஒரு மனமாய் விரும்பி அந்நிய பாஷையில் தங்கள் சப்தங்களை உயர்த்தி தேவனை துதிக்க வாஞ்சித்தால்? அதை வேதம் கண்டிக்கவில்லை என்று மறைமுகமாக அந்நியபாஷை பேச துண்டுகிறார். சகோ.ஸ்டான்லி அவர்கள் சத்தம்போட்டு துதிக்க சொல்லுகிறார், அதனால் தான்; இவர் ஆராதித்து வந்த சபையின் தாக்கம், இவர் ஊழியத்திலும், இவர் உபதேசத்திலும் காணப்படுகிறது. அதனால்தான் பெந்தேகோஸ்தே சபை ஆராதனை என்றாலே சத்தm அதுவும் பெருத்த சத்தம் கேட்கவேண்டும். நம் தேவன் செவிட்டு தெய்வம் என்பது இவர்களின் தவறான எண்ணம் ஆகும். புறமதத்தினரும் சத்தம்போட்டு விக்கிரகத்துக்கு முன் கத்துவதை, அலறுவதை காண்கிறோம். சில இடங்களில் வெடிவைத்து சப்தம் உண்டாக்கி வேண்டுதலை அறிவிக்கிறதையும் பார்க்கிறோம்.

இந்துமத பின்னணியிலிருந்து வந்;தவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியபின் இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்டார்களே தவிர, தாங்கள் வளர்ந்த இந்து மதத்தின் பின்னணியின் சடங்குகளை இவர்கள் மறக்கவில்லை. அதே சத்தம், அதே கைதட்டல், அதே அலறல், அதே நடுக்கம் ஆவியாய் இருக்கிற நம் தேவனை இப்படியா ஆராதிப்பது ? இதை சமாளிக்க சகோ. ஸ்டான்லி அவர்கள் மிகுந்த சத்தமிட்டு ஆராதிப்பதை வேதம் கண்டிக்கவில்லை என்கிறார்.

சில வாலிபர்கள் குதற்கமாக கேள்வி கேட்பார்கள். சிகரட், பீடி, சுருட்டு குடிக்காதோ என்று நம் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறதா? கூறுங்கள் என்பார்கள். சினிமா பார்க்காதே என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறதா? என்பார்கள். சில வாலிபப்பெண்கள் ஆபாசமான முறையில் லெக்கின்ஸ், இருக்கமான ஜீன்ஸ் பேன்ட் அணியக்கூடாது என்று வேதத்தில் எழுதியிருக்கிறதா? என்று கேட்பார்கள். சகோ ஸ்டான்லி இதற்கு என்ன பதில் கொடுப்பார்? இந்த வாலிப பிள்ளைகள் கேட்பதுபோல் மேலே சகோ ஸ்டான்லி சப்தங்களை உயர்த்தி தேவனை துதிப்பதை கண்டித்தோ அல்லது அது தவறு என்று குறிப்பிட்டோ வேதத்தில் எதுவும் எழுதப்படவில்லை என்றுதானே பதில் கூறுவார். வேதத்தில் எழுதப்படாததால் புகை பிடிக்கலாமா? இதற்கு ஸ்டான்லி பதில் கூறுவாரா? ஆனால் நான் பதில் கூறுவேன்.

வேதம் கூறுகிறது, தீமையாய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகு என்று வேதத்தில் எழுதியிருக்கிறது. நவீன காலத்தில் காணப்படும் புதிய புதிய பாவங்கள் நிறைய உண்டு. செல்லிடபேசி டேபிலட், கட்செவி அஞ்சல், முகனூல் இவைகள் மூலம் நிறைய பாவங்கள் உண்டே! இவை எதுவும் வேத புஸ்தகத்தில் எழுதப்படவில்லை. கிறிஸ்தவர்கள் இதை அனுமதிக்கலாமா? வேதம் இதை அனுமதிக்கிறதா? என்று கேட்பது நியாயமாக இருக்குமா ? மிகுந்த சத்தமிட்டு துதிக்க கைகளை தட்டி ஆராதனையில் பாட இவர்கள் ஆதாரத்துக்கு பழைய ஏற்பாட்டை காண்பிப்பார்கள். இவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளாகத்தான் இருக்கிறார்கள் என்று உறுதியாகிறது.

ஆராதனையில் சத்தம் அதுவும் மிகுந்த சத்தம்போட்டு துதிக்கவேண்டாம். செவிட்டு தெய்வத்தை ஆராதிக்கும் கூட்டமா கிறிஸ்தவ கூட்டம். இன்று அல்லேலூயா சத்தம், ஆமென் சத்தம், Praise the Lord போன்ற போலி சத்தங்கள் CSI சபைகளிலும் பெருக ஆரம்பத்துவிட்டன. பெந்தேகோஸ்தே சபையினர் வல்லமை என்ற மாயத்தை காண்பிக்க ஆராதனையில் போடும் இவர்களின் இப்படிப்பட்ட சத்தத்தை பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கு இதுதான் அடையாளம் என்று அவர்கள்தான் சபை மக்களை ஏமாற்றுகிறார்கள்!அதை ஏன் இவர்களும் காப்பியடித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்? என்று தெரியவில்லை. வான்கோழி தோகையை விரித்து ஆடிய கதைதான் ஞாபத்தில் வருகிறது.

அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறியுங்கள் என்று வேதம் கூறுகிறது. சகோ. ஸ்டான்லி ஆராதனையில் சத்தமாக துதித்து ஆராதிக்ககூடாது என்று பைபிள் கூறுகிறதா என்று கேட்பதுபோல அந்நிய பாஷையில் தேவனை துதிப்பதை வேதம் கண்டனம் செய்கிறதா? என்றும் கேட்கிறார்.

இப்படிப்பட்ட தவறான உபதேசங்கள்; இவர்களுக்குள் இருப்பதால்தான் BYM வாலிபர்களின் கூடுகையில் வாலிபப் பிள்ளைகள், பிசாசு பிடித்தவர்கள் துள்ளுவது போல துள்ளி ஒருவர்மேல் ஒருவர் விழுவதும், ஆவியில் நிறைந்த வாலிபர்கள் என்றுகூறிக்கொள்பவர்கள் எட்டி உதைப்பது பைபிளா?, விளையாட்டில் உபயோகிக்கும் பந்தா என்று கூட இவர்கள் அறிய முடியாமல் நிதானம் இழந்து எல்லாவற்றையும் காலில் எட்டி உதைத்து பந்தாடுகிறார்கள். என்ன அலங்கோலம் இது? எத்தனை ஒழுங்கின்மை இது? இத்தனை ஆழமாக பிரசங்கிக்கிற இந்த அருமையான சகோரனுக்கும், இவர் ஸ்தாபனத்தை சேர்ந்த சகோ.லைனல் அவர்களுக்கும் இவைகள் யாவும் தவறான வழிநடத்தல் என்று தெரியாதோ என்று சில வாசகர்கள் எனக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அதையும் வாசித்து பாருங்கள்.

சகோ. ஸ்டான்லி அவர்கள் எழுதிய கடிதத்தில் மற்றுமொரு உண்மை செய்தியை அவர் அறியாமலே எழுதியிருக்கிறார். காலகாலமாய் நாம் பழகிவிட்ட பாரம்பரியத்தை திடீரென விட்டுடொழிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று எழுதியிருக்கிறார். இது உண்மைதான் ஜாமக்காரனை வாசித்து தெளிவுபெற்றபெந்தேகோஸ்தே சபை பாஸ்டர் ஒருவர் எழுதுகிறார்.

டாக்டர் நான் அந்நிய பாஷை விஷயத்தில் தெளிவுபெற்றுவிட்டேன். ஆனால் ஜெபிக்கும்போது அந்நிய பாஷை உளறல் என்னை அறியாமல் தானாக வந்துவிடுகிறது. அந்நிய பாஷையை பேசுவதை நிறுத்தவேண்டும் என்று நானும் என் மனைவியும் ஒன்றாகத்தான் தீர்மானம் எடுத்தோம். அதில் மனைவிக்கு வெற்றி கிடைத்துவிட்டது. அனால் எனக்கு முடியவில்லை. பல வருடங்கள் நாங்கள் பாஷையில் பேசி ஜெபிக்கும் முறை ஊறிப்போன பழக்கம் நிறுத்தமுடியவில்லை. இரண்டு நாள் உளறாமல் தெளிவான தமிழில் ஜெபித்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்நிய பாஷையில் கொஞ்ச நேரம் உளறினாலும் அதில் ஒரு சுகம் இருக்கிறது என்று எழுதியுள்ளார்.

இந்த கடிதம் எழுதிய பாஸ்டர் அந்நிய பாஷையில் ஒரு சுகம் இருக்கிறது என்று குறிப்பிட்டதைத்தான் சகோ. ஸ்டான்லி அந்நிய பாஷை மது போதையின் சிற்றின்பத்தை தோற்கடிக்கும் என்று எழுதியுள்ளார். நான் முன்பு குறிப்பிட்டதுபோல் மது பானபழக்கத்தை நிறுத்த வைத்தியம் உண்டு. ஆனால் அந்நிய பாஷை பேசி பழகிவிட்டால் அதிலிருந்து விடுதலை பெறுவது கடினம்.

மற்றொரு வித்தியாசமான அனுபவத்தை சகோ. ஸ்டான்லி எழுதுகிறார். என் மாணவ பருவத்திலே சில பரிட்சைகளில் ஒரு சில கேள்விகளுக்கு பதில் எழுதும்போது விடை அறியாமல் ஒரே குழப்பமாய் இருந்தால் கொஞ்ச நேரம் அமைதியாக அந்நிய பாஷையில் பேசிவிட்டு பின்னர் எழுத தொடங்குவேன். அதன்பின் நல்ல தெளிவுடன் பதில் எழுத முடியும் என்கிறார். இது தமாஷாக இல்லை ! வயிற்றுவலி என்றால் வயிறு வலிக்கிறது என்று கூறினால்தான் அதற்கு பரிகாரம் செய்ய முடியும். அதை விட்டுவிட்டு அந்நிய பாஷையில் பேசினால் கர்த்தர் அதை கேட்டு வயிற்றுவலியை சுகமாக்கிவிடுவாரா? என்ன பிதற்றல் இது? இந்த ஜெபத்துக்கு கர்த்தர் என்ன பதில் சொல்லுவார் தெரியுமா?

முதலில் அந்நிய பாஷையில் உளறுவதை நிறுத்தி உன் பிரச்சனை என்ன ? அதை தெளிவாக சொல் என்று தானே கேட்பார். அதுபோல பரிட்சையில் எந்த கேள்விக்கு பதில் தெரியவில்லையோ, அதைஞாபகத்தில் கொண்டுவர கர்த்தரின் உதவியை கேட்பதில் தவறில்லை, கர்த்தாவே எனக்கு ஞாபக சக்தியை தாரும் என்றால் ஞாபக சக்தியை கொடுத்து, அந்த கேள்விக்கு பதில்எழுத உதவி செய்வாரே! யாக். 1:5 ஞானத்தை கேட்டால் ஞானத்தை தருவேன் என்று வசனத்தில் உறுதியளித்திருக்கும்போது பரிட்சை எழுதும் இடத்தில் அந்நிய பாஷை பேசினால் ஞாபக சக்தியை எப்படி கொடுப்பார்? இப்படி பாஸ்டர் ராஜாமணி. ஆர். ஸ்டான்லி ஆகிய இவர்களெல்லாம் தங்கள் சொந்த அனுபவங்களைத்தான் உபதேசங்களாக்க முயல்கிறார்கள் என்பது மிக நன்றாக தெரிகிறதல்லவா?

வரங்கள்

9 வரங்களை பற்றி கூறும்போது இவர்கள் இரண்டு பேரும் ஒன்றுபோல் கணக்கை தலைகீழாக திருப்புகிறார்கள் ஒன்பது வரங்களில் ஒன்று, இரண்டு, மூன்று இப்படிதானே பொதுவாக நாம் வரிசைபடுத்துவோம். முதல் வரம் எது? கடைசி வரம் எது? என்று வரிசைப்படுத்துவதுதான் ஒழுங்கு. ஆனால் இவர்கள் இரண்டு பேரும் எங்கிருந்தோ ஒரு ஏணியை வாங்கிவந்து முதல் வரிசையை மாற்றி கூற ஏணியை தலைகீழாக பிடித்து ஒன்பதாவது வரத்தை முதல் படி என்று மாற்றி, முதல்படியில் கால்வைத்தால்தான் நாம் மேல்படிக்கு போக முடியும் என்று கூறி கடைசி வரமாகிய அந்நிய பாஷையை முதல் ஏணி படி என்று இவர்கள் வர்ணித்து எத்தனை ஞானமாய் ஏணிபடியில் அந்நிய பாஷை என்ற முதல்படியை தாண்டினால்தான் மற்ற 8 வரங்களும் செயல்படும் என்று அர்த்தம்கொள்ளும் வகையில் எழுதி மக்களை எப்படி திசைதிருப்புகிறார்கள் பார்த்தீர்களா? ஜாக்கிறதையாக இருப்போம். இவர்கள் அந்நிய பாஷையை மக்களிடம் நுழைக்க படாதபாடுபடுகிறார்கள். நானோ வசனத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயல்கிறேன். பாஸ்டர் ராஜாமணி அவர்கள் துணிகரமாக கூறுவது போல கிரேக்க நாட்டிலிருந்த சபைகளில் ஒன்றுதான் கொரிந்து சபை. இங்கே பல மொழி பேசின விசுவாசிகள் இருந்தார்கள் என்று கூறுவது வசன ஆதாரமற்றது என்று எழுதியிருப்பதும் அப். 2ல் சீஷர்கள் பற்பல பாஷைகள் பேசினபோது அங்கே இந்த பாஷைகளை புரிந்துகொண்ட எவருமே இல்லை என்று பொய் செய்தி கூறியிருப்பதும் மனதிற்கு இவர்களைப்பற்றிய நல்ல மதிப்பில் ஒரு கறைபட்டதுபோல் இருக்கிறது. எதற்காக இப்படி துணிகரமாக பொய் பேச வேண்டும் என்பது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. சகோ ஸ்டான்லி, பாஸ்டர் ராஜாமணி. பாஸ்டர் ராஜன் இவர்கள் யாவருக்கும் ஒரு பயம் உண்டாகிவிட்டது. மக்களுக்கு அந்நிய பாஷையில் இப்போது விழிப்புணர்வு உண்டாகிவிட்டது. அந்நிய பாஷையை பேசுபவர்களின் வாழ்க்கையை பார்கிறார்கள். பாஸ்டர்மார் பொய்யான பாஷை என்ற பெயரில் அவர்களின் உளரல்களை பார்கிறார்கள். ஆகவே முழு பெந்தேகோஸ்தே சபையில் உள்ள பாஸ்டர்களின் மனைவிமார் முதலில் சந்தோஷப்பட ஆரம்பித்துவிட்டனர், இப்போது சபையில் உள்ள பெரும்பான்மையோர் ஆராதனையில் பேசப்படும் அந்நிய பாஷை உளரல்களை சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர்.

செத்த சபை என்று இவர்கள் குறிப்பிடும் சபைகளைவிட அந்நிய பாஷை பேசும் சபைகளின் செயல்பாடுகளில் பரிசுத்தம் இல்லை. மாயமாலம் மிகுதியாக உள்ளதையும் பண விஷயத்தில் உள்ள ஏமாற்று இவைகளை கண்ட பெந்தேகோஸ்தே சபைகளிலுள்ளவர்கள் ஏராளமானவர்கள் சபையைவிட்டு விலகி செத்த சபை என்று இவர்கள் வர்ணிக்கும் மற்ற சபைகளுக்கு திரும்புகிறதை கண்கூடாக காண்கிறார்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.