அந்நியபாஷை குழப்பம்

AOG சபை முன்னாள் பிஷப் அவர்களின் கடிதம்:

Assemblies of God (AOG) சபையின் முன்னாள் பிஷப் அவர்களும், AOG சபையின் சிறந்த கன்வென்ஷன் பேச்சாளரும், என் நண்பருமான, மதுரை பாஸ்டர்.P.S.ராஜமணி அவர்கள் எனக்கு எழுதிய கடிதம். பாஸ்டர்.P.S.ராஜமணி அவர்கள் எழுதின கடிதத்தில் உள்ள முக்கிய சந்தேகங்களுக்கு பதிலை தனியாக எழுதாமல் கேள்வி-பதில் பகுதியைப்போல அவர் கருத்துக்கு என் சரியான பதிலை அப்படியே உடனுக்குடன் எழுதுகிறன். அப்போதுதான் வாசிக்கிற வர்களுக்கு குழப்பம் இல்லாமல் விளங்கும். அவரின் கடிதம் அடுத்த பக்கத்தில் காணலாம்.

'குழப்பம் அந்நியபாஷையில் இல்லை'

சகோதரர் புஷ்பராஜ் அவர்களுக்கு,

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். நீங்கள் ஜாமக்காரனில் எழுதியிருந்த அந்நிய பாஷை குழுப்பம் என்ற செய்தியை வாசித்தேன். உங்கள் கருத்தை எழுத உங்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே அதற்கு பதில் எழுத முயற்சிக்கவில்லை. பின்பு நீங்கள் தனிப்பட்ட முறையில் அந்நியபாஷையைப்பற்றி எனக்கு எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். உங்கள் விருப்பப்படி இதை எழுதுகிறேன். அந்நிய பாஷை குழப்பம் என்று நீங்கள் எழுதியிருந்ததை பலமுறை வாசித்தேன். அதன்பின்தான் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அந்நிய பாஷை ஆகியவற்றைக் குறித்து ஒரு சிறு புத்தகம் எழுத ஆரம்பித்துவிட்டேன். அதில் இது சம்பந்தமாக எழுப்பப்படும் பல கேள்விகளுக்கும் பதில் எழுதுவேன்.

பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நம்புகிறீர்கள். அந்நிய பாஷையில் உங்களுக்கும் அநேகருக்கும் சந்தேகங்கள் பல இருக்கின்றன. பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெற்று அந்நிய பாஷை பேசும் பலரிடமுள்ள போலியான அனுபவங்கள் எனக்கும் தெரியாததல்ல . நீங்கள் எழுதியுள்ளவைகளில் பெரும்பான்மை யானவை நடைமுறைப்பிரச்சனைகளைப் பற்றியது. அநேக காரியங்களை வசன ஆதாரமற்ற முறையில் கற்பனையில் எழுதியுள்ளீர்கள். நீங்கள் வாசித்த பல புத்தகங்களை நானும் வாசித்துள்ளேன். இன்னும் பல புத்தகங்களையும் வாசித்துள்ளேன். பல நூற்றாண்டுகளாகவே அந்நிய பாஷையைக் குறித்த தர்க்கங்கள் சபையில் இருந்து வருகின்றன.

ஜாமக்காரன்: பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் தன் கடிதத்தின் தலைப்பிலேயே குழப்பம் அந்நியபாஷையில் இல்லை என்று ஆரம்பிக்கிறார். அதே சமயம் பெந்தேகோஸ்தே சபைகளில் அந்நியபாஷை பேசும் பலரிடம் உள்ள போலியான அனுபவங்கள் எனக்கும் தெரியாததல்ல என்று அவரே ஒத்துக்கொள்கிறார். அதனால்தான் குழப்பம் இவர்கள் உளரும் அந்நியபாஷை என்ற பெயரில் உள்ளது என்கிறேன். பெந்தேகோஸ்தே சபையினர் போலியாக உளருவதைக்குறித்தும் பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் பேசுவதையும் உளரல் என்கிறேன். அப்படியிருக்க குழப்பம் இவர்கள் அந்நியபாஷை என்ற பெயரில் பேசும் உளரலிருந்து ஆரம்பிக்கிறது என்று நான் குறிப்பிடுவது சரிதானே .

பாஸ்டர்.ராஜமணி: 1. பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்கு அந்நிய பாஷை அடையாளமல்ல என்று டாக்டர்.புஷ்பராஜாகிய நீங்கள் வன்மையாய் கண்டித்து எழுதியுள்ளீர்கள். நீங்கள் கூறும் கருத்திற்கு வசன ஆதாரமில்லை. எனவே இது உங்கள் கருத்தாய் இருக்கலாம். ஆனால் அது வசன ஆதாரமற்ற கருத்து.

ஜாமக்காரன்: பரிசுத்தாவியானவரின் நிறைவுக்கு அந்நியபாஷை அடையாளம் அல்ல என்று நான் எழுதிய கருத்துக்கு வேத வசன ஆதாரம் இல்லை என்கிறார் பாஸ்டர்.ராஜமணி அவர்கள். அது என் சொந்த கருத்து என்றும் எழுதியுள்ளார். அந்நியபாஷை ஆவியானவருக்கு அடையாளம் என்று வேதத்தின் எந்த புத்தகத்திலாவது எழுதப்பட்டுள்ளதா? என்று ஆதாரத்துடன் கேட்கிறேன். பாஸ்டர்.ராஜமணி மட்டுமல்ல, வேறு எந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டராக இருந்தாலும் அந்நியபாஷை பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கு அடையாளம் என்று எழுதப்பட்ட ஒரு வசனத்தை இவர்களால் வேதத்தில் காட்டமுடியுமா?

முழு வேதத்திலும் அந்நியபாஷை பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் வரம் (gift) (பரிசு)என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அதாவது அந்நியபாஷை புதிய ஏற்பாட்டு சபைக்கு வேத புத்தகம் எழுதப்படாத காலத்தில் இருந்த சபைக்கு வரமாக அருளப்பட்டது. அடையாளமாக அருளப்படவில்லை. அதனால்தான் ஆவியானவரை வாரும்என்றோ அந்நியபாஷைவேண்டும் என்றோ கூப்பிடக்கூடாது , கேட்கவும் கூடாது . Gift-பரிசு கொடுக்கப்பட வேண்டியது அது கேட்கப்படக்கூடாது.

இன்றைய எல்லா பெந்தேகோஸ்தே சபைகளிலும் ஆவியானவரே இப்ப வாரும், இறங்கி வாரும் என்று அழைத்து கதறுகதறு என்று கதறி, சத்தம்போட்டு, கூச்சலிட்டு கைகளை வேகமாக தட்டி, உடல்களை குலுக்கி இந்துக்களின் மாரியம்மன் பண்டிகையில் உடல்களை துடிக்க விடுவதைபோல சபை விசுவாசிகள் அத்தனை கஷ்டப்படுகிறார்கள். பாஸ்டர்மார் ஆவியானவர் வேண்டும் என்பதற்காக தாங்களும் கதறி சபை மக்களையும் கதற விடுகிறார்கள். அவைகளை நேரில் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆவியானவரை பெற்றுக்கொள்ள இவர்கள் படும் அவதி அவர்கள் முகங்களை சுழிப்பதை அந்த சமயத்தில் பார்த்தால் ஏதோ வயிற்று வலியால் தாங்கமுடியாமல் முகம் சுளிப்பதைப்போல் மிக பரிதாபமாக இருக்கிறது.

மேலும் அனைத்து பெந்தேகோஸ்தே பாஸ்டர்களையும், பாஸ்டர்.ராஜாமணி அவர்களையும் கேட்கிறேன். யார் ஆவியானவரை வாரும், இறங்கும் என்றுகூப்பிடுவார்கள்? யாருக்கு ஆவியானவர் இல்லையோ? அவர்கள் தானே ஆவியானவரே வாரும் என்று கூப்பிடவேண்டும். அப்படியானால் ஆராதனை நடத்தும் பாஸ்டருக்கு அதுவரை ஆவியானவர் அனுபவம் இல்லையா? அல்லது அந்த அத்தனை சபை மக்களுக்கும் அதுவரை ஆவியானவரின் அனுபவம் இல்லை என்றுதானே அர்த்தம். ஆவியானவரே இறங்கும் இறங்கும் ஆவியானவரே நிரப்பும் நிரப்பும் அக்கினி அக்கினி என்று சத்தம்போட்டு எத்தனையாய் பாடுபடுகிறார்கள். இப்படி உறக்க, சத்தம் போட்டால்தான் ஆவியானவர் இறங்கி நடந்துவருவாரா? ஆவியானவரின் நிறைவுக்கு இவர்கள் படும்பாடு மிகப்பரிதாபம். பிரசவ ஸ்தீரி படும்பாடுகளைபோல் பரிதாபமாக இருக்கிறது. புறஜாதி மக்கள் இவர்கள் கஷ்டப்படுவதைப்பார்த்து பைத்தியக்காரர்கள் என்று அழைப்பார்கள் என்று பவுல் தெளிவாக எச்சரிக்கிறார். என்ன ஒரு ஒழுங்கீனம் இது? இதுவா ஆவியானவரின் ஆராதனை?.

இன்னும் ஒரு கூத்து நடப்பதை கவனியுங்கள். சபை ஆராதனை தொடங்கி இப்படி மக்களை சத்தம்போட வைத்துவிட்டு பாஸ்டராகிய தானும் வேண்டிய அளவு கதறிவிட்டு பிறகு பாஸ்டர் கூறுகிறார். இப்போது சபை மக்கள் எல்லாரும் ஆவியானவரை வரவேற்கும் விதத்தில் கைகளை பலமாக தட்டி வரவேற்போம் என்கிறார். யாரோ மந்திரியோ, அதிகாரியோ உள்ளே நுழைந்ததுபோல் படபடபடவென்று கரஒலி சத்தம் காது பிளக்கும் சபை மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் குதித்து கைகளை உயர்த்தி அமர்களப்படுத்தி விடுகிறார்கள். இது ஏமாற்று ஆராதனையாக யாருக்கும் தோன்றவில்லையா?ஆராதனைக்கு முன்புவரை ஆவியானவர் எங்கே போயிருந்தார்? படித்தவர்களும் இந்த பொய்யான ஆராதனைக்கு அடிமையாகி கிடக்கிறார்களே என்பது எத்தனை அவமானம். ஜாக்கிறதை! தேவன் தம்மை பரியாசம் பண்ண ஒட்டார். கலா 6:7.

பாஸ்டர்.ராஜமணி: 2. பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்கு உடனடி அடையாளம் அந்நிய பாஷைகள்தான் என்று நம்புகிறவர்கள் கூறும் ஆதாரமென்ன?

ஜாமக்காரன்: பரிசுத்தாவியானவரின் அபிஷேகத்துக்கு அடையாளம் அந்நியபாஷைதான் என்று நம்புகிறவர்கள் கூறும் ஆதாரமென்ன? என்று இவர் எழுதியதில் அந்நியபாஷைதான் அடையாளம் என்று நம்புகிறவர்கள் என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து பரிசுத்த ஆவியானவர் நிறைவுக்கு அந்நியபாஷை அடையாளம் என்பதை பாஸ்டர்.ராஜமணி அவர்கள்கூட நம்பவில்லை என்று விளங்குகிறது. நான் நேரில் மதுரைக்கு பாஸ்டர்.ராஜமணி அவர்கள் வீட்டிற்கு சென்று சுமார் முக்கால் மணி நேரம் பேசினேன். மேலும் இவர் பேசின இரண்டு பொது கூட்டங்களிலும், சபையின் காலை ஆராதனையிலும் வெவ்வேறு ஊர்களில் கலந்துக்கொண்டேன். அதே சமயம் மேடையில் உள்ள பாஸ்டர்கள், சபை மக்கள் யாவரும் அந்நியபாஷை என்ற பெயரில் உளறினார்கள். ஆனால் இவரோ பாஷை ஏதும் பேசவில்லை.

அந்த குறிப்பிட்ட நேரம் ஜெபம் என்பதை நான் நம்பாதபடியால் நான் கண்களை திறந்து பார்த்தப்படி இருந்தேன். அதனால்தான் அவர் உளரவில்லை என்பதை தெளிவாக அறிந்தேன். மேலும் பாஸ்டர்.ராஜமணி அவர்கள் வசனத்தில் தெளிவுள்ளவர். அவருக்கே தெரியும் சபையில் பேசுபவர்களின் உளரல், பாஷை அல்ல என்பது. என்றாலும் தான் சார்ந்த AOG சபையின் அடிப்படை உபதேசம் என்னவென்றால் அந்நியபாஷை பேசினால்தான் பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கு அடையாளம் என்பதாகும். ஆகவே தான்சார்ந்த சபை உபதேசத்தின் வழியில் அவர் போய் கொண்டிருக்கிறார்.

பாஸ்டர்.ராஜமணி: எருசசேலம். அப் 2:4. பெந்தேகோஸ்தே என்னும் நாளில் அப்போஸ்தலரும் இயேசுவின் தாயாகிய மரியாளும் மற்றும் சீடர்களும் பரிசுத்த ஆவியை பெற்றபோது ஆவியானவர் அவர்களுக்கு கொடுத்த வரத்தின்படியே வெவேவேறு பாஷைகளில் பேசினார்கள்.

ஜாமக்காரன்: பரிசுத்தாவியானவரின் நிறைவுக்கு அந்நியபாஷை உடனடி அடையாளம் என்பதற்கு கீழே காணும் வசனங்களை பாஸ்டர்.ராஜமணி அவர்கள் குறிப்பிடுகிறார். அப் 2:4, அப் 10:45,அப் 19:1-6.

எருசலேம் அப் 2:4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள் என்றுதான் எழுதியிருக்கிறது. வரம் Gift என்று எழுதியிருப்பதை கவனிக்கவும். அடையாளம் என்று எழுதப்படவில்லை என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

முதலாவதாக அப் 2:4ல் எருசலேமில் நடந்த சம்பவத்தை கவனிப்போம்:

இப்போது வாசிக்கபோகும் என் பதில் மிகமிக முக்கியமானதாகும். பாஸ்டர்.ராஜமணி அவர்கள் அந்நியபாஷைதான் ஆவியானவர் நிறைவுக்கு உடனடி அடையாளம் என்பதற்கு ஏராளமான புத்தகங்களை தான் வாசித்ததாக கூறுகிறார். சிலர் சில வேத பண்டிதர்களின் வியாக்கியானங்களையும் (commentaries) மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்கள். அப்படி அவர்கள் அனுப்பிய புத்தகங்கள் ஒன்றையும் நான் வாசிக்கவில்லை. வாசிக்க எனக்கு நேரமும் இல்லை. வாசிக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. என்றாலும் ஒரு சில புத்தகங்களை மேற்போக்காக நானும் வாசித்திருக்கிறேன்.

வேத புத்தகத்தில் என்ன சந்தேகம் கண்டாலும் அதற்கான பதிலை வேதத்திலேயே தேடு என்று ஒரு உண்மை ஊழியன் எழுதியிருக்கிறார். ஆவியானவர் எழுதிய வேதத்தைக்குறித்த சந்தேகங்களுக்கான விளக்கம் அதை எழுத வைத்த ஆவியானவரேத்தான் அதை நமக்கு விளங்க வைக்கவேண்டும். அந்த அடிப்படையில் அந்நியபாஷையை அடையாளமாக கொடுக்காத எனக்குள் இருக்கும் ஆவியானவர் என்னை உணர்த்தியபடி இதற்கு பதில் எழுதுகிறேன்.

எருசலேம் (அப் 2:4ல்) உலகிலேயே பரிசுத்த ஆவியானவரின் முதல் இறக்கம் இங்குதான் நடந்தது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற ஆவியானவர் பலர் மேல் இறங்கி பிதாவின் சித்தத்தை நிறைவேற்றியப்பின் திரும்ப போய்விட்ட அனுபவத்தை தான் நாம் பழைய ஏற்பாட்டில் வாசித்திருக்கிறோம்.

ஆனால் ஆவியானவர் என்றன்றைக்கும் மனிதனுக்குள் நிரந்தரமாக தங்கி வழி நடத்தும் திட்டத்தோடு ஆவியானவர் எருசலேமில் மேல்வீட்டு அனுபவத்தின்மூலம் முதல் இறக்கத்தை அந்த இடத்தில் நிறைவேற்றியபோது இறங்கிய ஆவினாயவர் திரும்பபோகாமல் மனந்திரும்பி இரட்சிக்கப்படும் நபர்களுக்குள் பிரவேசித்து என்றென்றும் வழி நடத்தினார். யோ 14:16,எபே 1:13,யோ 14:23,24 வசனங்களில் வாசித்து அறியுங்கள்.

யோ 14:16 வசனம்மூலம் யோவேல் 2:28,29ல் எழுதப்பட்ட தீர்க்கதரிசன வசனத்தின்மூலம் கர்த்தர் பரிசுத்த ஆவியானவரைப்பற்றி தான்கூறியதை நிறைவேற்ற சித்தமுள்ளவரானார். இயேசுகிறிஸ்து உயிர்தெழுந்து பரமேறி சென்றபின் இயேசுகிறிஸ்து கட்டளையிட்டபடி பரிசுத்த ஆவியானவரின் வரவுக்காக எருசலேமில் ஒரு வீட்டில் இயேசுவின் சீடர்களுடன், அப்போஸ்தலர்களும் அமர்ந்திருந்தார்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.