தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்

வேதவாக்கியங்களும் அன்பும்

 

முந்தைய அதிகாரங்களில் நம்முடைய வேதவாசிப்பும் வேதஆராய்சியும் உண்மையாகவே நம்முடைய ஆத்துமாவிற்கு ஆசீர்வாதமாக இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிசெய்துக்கொள்ள சில வழிகளைப் பார்த்தோம். பலர் இந்த விஷயத்தில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், சத்தியத்தின் மேலுள்ள ஆவிக்குறிய அன்பைப்பற்றிய (2தெச 2:10) அறிவைப் பெற்றுக்கொள்ள உள்ள ஆர்வமும், அதைப்பற்றி அறிந்துகொள்வதுமே கிருபையில் வளருதல் என்று தவறாகப் புரிந்துகொள்ளுகிறார்கள். நாம் வேதவாக்கியங்களைப் படிக்கத் துவங்கும்பொழுது நம் முன் என்ன நோக்கத்தை வைத்திருக்கிறோமென்பது மிகவும் முக்கியமானது. அதில் உள்ளவைகளைத் தெரிந்துக்கொள்ளவும் அதின் விவரங்களை நன்றாக அறிந்துகொள்வது மட்டுமே நோக்கமென்றால், நம்முடைய ஆத்தும தோட்டம் ஒன்றும் விளைவியாமல் இருப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன; ஆனால் அதனால் கடிந்துகொள்ளப்பட்டு, வார்த்தையினால் சீர்திருத்தப்பட்டு, பரிசுத்தஆவியினால் ஆராயப்பட்டு, அதனுடைய பரிசுத்தத்திற்கு தேவையானவைகளால் இருதயம் மாற்றப்பட வேண்டுமெஎன்ற ஜெபத்துடன் கூடிய ஆசை இருக்குமென்றால், நாம் தெய்வீக ஆசீர்வாதத்தை எதிர்ப்பார்க்கலாம்.

நம்முடைய தனிப்பட்ட தேவபக்தியில் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க தேவையான முக்கியமான காரியங்களை பிரிதெடுக்க முந்தைய அதிகாரங்களில் பெருமுயற்சி செய்தோம். இதை எழுதியவரும், வாசிப்பவரும் உண்மையாகத் தங்களை அளந்துபார்க்கும்படி பலவகையான அளவுகோள்கள் கொடுக்கப்பட்டன. பின்வரும் கேள்விகளையும் நாம் கடந்து வந்தோம். நான் பாவத்தின் மேல் அதிகமான வெறுப்படைந்து, நடைமுறையில் அதன் வல்லமையிலிருந்தும் அழுக்கிலிருந்தும் விடுபடுகிறேனா? நான் தேவனுடனும் அவருடைய கிறிஸ்துவுடனும் ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்கிறேனா? என்னுடைய ஜெபவாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்கிறதா? என்னுடைய நற்செயல்கள் அதிகமாக பெருகியிருக்கிறதா? என்னுடைய கீழ்ப்படிதல் முழுமையானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கிறதா? என்னுடைய உணர்வுகளிலும் வழிகளிலும் இந்த உலகத்திலிருந்து அதிகமாக பிரிக்கப்பட்டிருக்கிறேனா? தேவனுடைய வாக்குத்தத்தங்களை சரியாகவும் ஆதாயம் தரும் விதத்திலேயும் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு, அவரில் நான் மகிழ்ந்து, அவருடைய மகிழ்ச்சி என் பெலனாயிருக்கிறதா? நான் உண்மையாகவே இவைகள் (ஓரளவாவது) என் அனுபவம் என்று சொல்ல முடியவில்லையென்றால், என்னுடைய வேதவாசிப்பு எவ்வித்திலும் எனக்கு ஆதாயம் தரவில்லை என்று பெரிதாக வருந்த வேண்டும்.

கிறிஸ்தவ அன்பைப்பற்றி தியானிப்பதற்கு முன்பாக முந்தைய அதிகாரங்கள் முற்றுபெற வேண்டுமென்பது ஏற்புடையதாக இல்லை. இந்த ஆவிக்குறிய நற்பண்பு (அன்பு) எந்த அளவிற்கு வளர்க்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகிறதோ அல்லது வளர்க்கப்படாமல் ஒழுங்குபடுத்தப்படாமல் இருக்கிறதோ அந்த அளவிற்கு தேவனுடைய வார்த்தையின் மீதான என்னுடைய கவனம் பகுத்தறியப்படும்படி எனக்கு ஆவிக்குறிய உதவியளிக்கிறது. அன்பைக்குறித்து எந்த அளவிற்கு அவர்கள் செயல்பட வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்காமல், எவரும் வேத வசனத்தை கவனத்துடன் வாசித்திருக்க முடியாது, ஆகவே இது நம் ஒவ்வொருவரையும் நம்முடைய அன்பு உண்மையாகவே ஆவிக்குறிய ஒன்று தானா என்பதையும், அது ஆரோக்கியமான நிலையில் இருக்கிறதா, சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதையும் ஜெபத்துடனும் கவனத்துடனும் உறுதிபடுத்திக்கொள்ள கண்டிப்பாகக் கேட்டுக்கொள்கிறது.

பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய பரந்து விரிந்த கிறிஸ்தவ அன்பு என்ற தலைப்பை ஒரு அதிகாரம் என்ற சுற்றளவுக்குள் புரிந்துகொள்வது கடினமான ஒன்று. தேவனுடனும் அவருடைய கிறிஸ்துவுடனும் நம்முடைய அன்பை செயல்படுத்துவதிலிருந்து சிந்திக்க ஆரம்பித்து நாம் இந்த அதிகாரத்தைத் தொடங்குவதே முறையாக இருக்கும், ஆனால் இதைக்குறித்து முந்தைய அதிகாரங்களில் நாம் சற்று பார்த்திருக்கிறோம் ஆகவே இப்போதைக்கு நாம் அதை விட்டுவிடுவோம். நம்முடைய குடும்பத்தில் அங்கமாயிருக்கிற நம்முடைய சக மனிதர்களுக்கு நாம் காண்பிக்க வேண்டிய இயற்கையான அன்பைக்குறித்தும் நாம் அதிகம் பேசமுடியும், ஆனால் இப்பொழுது நம் மனதின் முன்னால் இருப்பதுடன் ஒப்பிட்டால் அதைப்பற்றி எழுத மிகக்குறைந்த தேவையே உண்டு. நம்முடைய கவனத்தை நம்முடைய சகோதரன், அதாவது கிறிஸ்தவ சகோதரன் மீதான ஆவிக்குறிய அன்பைப்பற்றிய எல்லைக்குள் மாத்திரம் வைக்கும்படி நாங்கள் முன்மொழிகிறோம்.

1. கிறிஸ்தவ அன்பின் மாபெரும் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்ளும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

1கொரிந்தியர் 13ம் அதிகாரத்தைப்போன்று வேறு எங்கும் இது அதிக வலுவுடன் எடுத்துரைக்கப்படவில்லை. அங்கே பரிசுத்த ஆவியானவர் நம்மிடத்தில் சொல்கிறார், தன்னைக் கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொள்பவன் தெய்வீகக் காரியங்களைக்குறித்து சரளமாகவும் சொல்திறமையுடனும் பேசினாலும், அன்பில்லாவிட்டால், அவன் வெண்கலத்தைப்போல இருக்கிறான், அடிக்கும்பொழுது அது ஓசையெழுப்பினாலும் அதற்கு உயிரில்லை. அவன் தீர்க்கதரிசஞ்சொல்லி சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், அற்புதங்கள் செய்யத்தக்க விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அவனில் அன்பில்லாவிட்டால், அவன் ஆவிக்குறியவகையில் எந்த பிரயோஜனமுமற்றவன். உலகப்பிரகாரமாக தனக்குள்ள யாவற்றையும் ஏழைகளை போஷிக்க இரக்கமுடன் கொடுத்தாலும், தன்னுடைய உடலை இரத்தசாட்சியாக மரிக்கக் கொடுத்தாலும், அவனில் அன்பில்லாவிட்டால், இதனால் அவனுக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை. எத்தனை அதிகமான மதிப்பு அன்பின் மீது வைக்கப்பட்டிருக்கிறது, அதை நான் பெற்றிருக்கிறேன் என்பதை உறுதிசெய்துக்கொள்வதும் எத்தனை முக்கியமான ஒன்று!

நம்முடைய கர்த்தர் சொன்னார், ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்’ (யோவா 13:35). கிறிஸ்தவ சீஷத்துவத்துக்கு இதைக் கிறிஸ்து அடையாள அட்டையாக கூறியிருப்பதால் மீண்டும் அன்பைக்குறித்த அதிமுக்கியத்துவத்தை நாம் பார்க்கிறோம். நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் உண்மைத்தன்மைக்கு இது மிக முக்கியமான சோதனை: கிறிஸ்தவ சகோதரர்களில் நாம் அன்பு கூறாமல் நாம் அவரில் அன்புகூற முடியாது, ஏனென்றால் அவர்களும் ‘ஜீவனுள்ளோருடைய கட்டிலே’ (1சாமு 25:29) கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர் மீட்டுக்கொண்டவர்கள் மீது அன்பு செலுத்துவதென்பது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலேயே செலுத்தும் ஆவிக்குறிய மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அன்பின் உறுதியான அடையாளமாகும். பரிசுத்த ஆவியானவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்பை ஏற்படுத்தியிருக்குமிடத்தில், அவர் அந்த சுபாவத்தை வெளியே எடுத்து வருகிறார், பரிசுத்தர்களின் இருதயத்திலும், வாழ்க்கையிலும், நடத்தையிலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நற்பண்புகளை ஏற்படுத்துகிறார், அவைகளில் ஒன்று கிறிஸ்துவுடையவர்களிலும், கிறிஸ்துவுக்காக வாழ்பவர்களிலும் அன்பு செலுத்துவதாகும்.

2. கிறிஸ்தவ அன்பை வருத்தத்துக்குறியவகையில் தவறாக பயன்படுத்துவதை நாம் கண்டறியக் கற்றுக்கொள்ளும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

தண்ணீரானது தன்னுடைய மட்டத்திலிருந்து தானாக உயரே எழும்ப முடியாததுபோல, ஜென்மசுபாவமுள்ள மனுஷனும் ஆவிக்குறியவைகளை புரிந்துகொள்ளும் தன்மையற்றவனாக, ஏற்றுக்கொள்ள மனமற்றவனாக (1கொரி 2:14) உள்ளான். ஆகவே மறுபிறப்படையாத பேராசிரியர்கள் ஆவிக்குறிய அன்பை மனித மனோபாவத்துடனும் மாம்ச இன்பத்துடனும் சம்மந்தப்படுத்தி தவறாகக் குறிப்பிடும்பொழுது நாம் வியப்படையத் தேவையில்லை. ஆனால் தேவனுடைய சொந்த ஜனங்களில் சிலரும் மனித அன்பையும் சகோதரத்துவத்தையும் கிறிஸ்தவ நற்பண்புகளின் ராணியுடன் (அன்பு) சம்மந்தப்படுத்தி குழம்பிப்போய் தாழ்வானநிலையில் வாழ்வதைப் பார்ப்பது கவலையளிக்கிறது. ஆவிக்குறிய அன்பானது, தாழ்மையுடனும் நற்பண்புகளுடனும் சேர்த்து வகைப்படுத்தப்படுவது உண்மையாயினும், மாம்சரீதியான நன்றிக்கடன் மற்றும் தாழ்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அதைவிட மகா உன்னதமானது.

எத்தனை தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் மிகவும் அதிகமாக அன்புகூறுவதாக எண்ணி பிரம்பைக் கையாடாமல், பிள்ளைகளை உண்மையாக நேசித்தல் என்பதும் கடிந்துகொள்ளுதலும் ஒன்றுக்கொண்று முரணானது என்று தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்! எத்தனை மதியீன தாய்மார்கள் தேவையான எல்லா உடல்ரீதியான தண்டனைகளையும் கொடுக்காமல் ‘அன்பு’ அவர்கள் குடும்பத்தை ஆண்டுகொண்டிருப்பதாக மார்தட்டிக்கொள்கிறார்கள்! இதை எழுதியவரின் மிக மோசமான அனுபவங்களில் ஒன்று, அவருடைய பல நீண்ட பிரயாணங்களில், மிகவும் பாழாக்கப்பட்டிருந்த பிள்ளைகள் இருந்த வீட்டில் சில நாட்கள் தங்க நேர்ந்ததே. இது ‘அன்பு’ என்ற வார்த்தையை துன்மார்க்கமாகப் புரட்டி, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நன்னடத்தையைக்குறித்த விழிப்பில்லாமல், பொறுப்பற்று நடந்துகொள்வதாகும். ஆனால் இதே தீய எண்ணம் மற்ற தொடர்புகளிலும் உறவுகளிலும் பலருடைய சிந்தனைகளை ஆளுகை செய்கிறது. ஒரு தேவனுடைய ஊழியன் அவர்களுடைய மாம்சமான உலகப்பிரகாரமான வழிகளைக்குறித்து அவர்களைக் கடிந்துகொண்டால், இத்தகைய காரியங்களுடன் தேவன் தம்மை சமரசம் செய்துகொள்வதில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினால், அந்த ஊழியன் ‘அன்பற்றவன்’ என்று குற்றம் சாட்டப்படுகிறான். ஆ! எத்தனை அதிகமான மக்கள் இந்த முக்கியமான ஒன்றில் சாத்தானால் பயங்கரமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்!

3. கிறிஸ்தவ அன்பின் உண்மையானத் தன்மை நமக்கு போதிக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம்.

கிறிஸ்தவ அன்பு என்பது விசுவாசம் நம்பிக்கை (1கொரி 13:13) ஆகியவைகளுடன் சேர்ந்து பரிசுத்தர்களின் ஆத்துமாவில் தங்கியிருக்கும் ஒரு நற்பண்பாகும். இது அவர்கள் மறுபடியும் பிறந்தபொழுது அவர்களில் ஏற்படுத்தப்பட்ட பரிசுத்த குணாதிசயமாகும் (1யோவா 5:1). இது பரிசுத்த ஆவியானவரால் அவர்கள் இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கும் தேவனுடைய அன்பிற்கு சற்றும் குறைந்ததல்ல (ரோம 5:5). மற்றவர்களுடைய உயர்ந்த நலனை நாடும் இது ஒரு நீதியின் கோட்பாடாகும். இது இயற்கையாக நம்மில் காணப்படும் சுயஅன்பு, சுயத்தை திருப்திப்படுத்துதல் போன்றவற்றிற்கு நேர் எதிரானதாகும். இது கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் பாசம் கலந்த மரியாதைமட்டுமல்ல, அவர்களுடைய நலனை மேம்படுத்தவேண்டுமென்ற தளராத விருப்பமுமாகும். இது ஒரு சுலபமாக புண்படுத்தக்கூடிய நிலையற்ற மனோபாவமல்ல, குளிர்ந்துபோன அலட்சியம் என்ற ‘திரளான தண்ணீர்களோ’ அல்லது மறுப்பு தெரிவித்தல் என்ற ‘வெள்ளங்களோ’ அதை அவிக்கவோ தணிக்கவோ முடியாத (உன் 8:7) ‘தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தம் அவர்களிடத்தில் அன்புவைத்தவரின்’ (யோவா 13:1) அன்புடன் ஒப்பிடுகையில், அவர்மீதான நம்முடைய அன்பு அளவில் வேறுபடுமென்றாலும் அதன் சாரம்சம் (Essence) ஒன்றே.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் அவருடைய பரிபூரண முன்மாதிரியையும் முழுமையாக ஆராய்வதைத்தவிர, கிறிஸ்தவ அன்பின் தன்மைகளை சரியாகப் புரிந்துகொள்ள பாதுகாப்பான, உறுதியான வழிமுறைகள் வேறுஎதுவும் இல்லை. ‘முழுமையாக ஆராய்தல்’ என்று நாங்கள் சொல்லும்பொழுது, நமக்குப் பிரியமான சில பகுதிகள் மற்றும் நிகழ்வுகள் மட்டுமல்ல, நான்கு நற்செய்திகளிலும் அவரைப்பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் முழுமையாகக் கணக்கெடுத்தலை அர்த்தப்படுத்துகிறோம். இது செய்யப்பட்டவுடன், அவருடைய அன்பு இரக்கமுள்ளது, தயாள குணமுள்ளது, நம்மீது கவனமுள்ளது, மென்மையானது, சுயநலமற்றது, சுயத்தை தியாகம் செய்வது, பொறுமையானது, மாறாதது என்பவைகளை மட்டுமல்ல, அதனுடன் இன்னும் பல காரியங்கள் சேர்ந்துள்ளது என்பதையும் நாம் கண்டுகொள்வோம். அவசர கோரிக்கையையும் நிராகரிக்கும் அன்பு (யோவா 11:6), தன்னுடைய தாயாரை கடிந்துகொண்டது (யோவா 2:4), சாட்டையை உபயோகப்படுத்தியது (யோவா 2:15), தன்னுடைய சந்தேகிக்கும் சீஷர்களைக் கடுமையாகக் கடிந்துகொண்டது (லூக் 24:25) மற்றும் மாய்மாலக்காரர்களைக் கண்டித்தது (மத் 23:13-33). அன்பு கண்டிக்கலாம் (மத் 16:23), ஆம், கோபப்படலாம் (மாற் 3:5). ஆவிக்குறிய அன்பு பரிசுத்தமானது: இது தேவனுக்கு உண்மையுள்ளது; தீமையாய்த் தோன்றுகிற எவைகளோடும் சமாதானம் செய்துகொள்ளாது.

4. கிறிஸ்தவ அன்பு என்பது தெய்வீகத் தொடர்புகொள்ளுதல் என்பதை நாம் கண்டுகொள்ளும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

‘நாம் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்’ (1யோவா 3:14). ‘சகோதரனிடத்தில் அன்புக்கூறுதல் என்பது ஒரு கனி, மேலும் பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய ஆத்துமாவில் ஏற்படுத்தப்பட்டு, இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்தில் புதிதாகப் பிறந்திருப்பதன் விளைவு, உலகத்தோற்றத்துக்கு முன் தெய்வீகப் பிதாவினால் நாம் கிறிஸ்துவால் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆதாரம். கிறிஸ்துவிலும், அவருடையவைகளிலும், அவரில் நம்முடைய சகோதரர்களிலும் அன்புக்கூறுவதென்பது, அவருடைய பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்மில் அவர் நம்மைப் பங்குபெற செய்துள்ள தெய்வீகத் தன்மையின் பிறப்போடு இணைந்தது. சகோதரர்களின் இந்த அன்பு விந்தையான அன்பாயிருக்க வேண்டும், அதாவது மறுபிறப்படைந்தவர்கள் அதன் பொருளாயிருப்பதுபோல, அதில் மட்டுமே அவர்கள் செயல்பட வெண்டும், இல்லாவிட்டால் அப்போஸ்தலர்கள் அதைத் தனிப்பட்டவிதத்தில் குறிப்பிட்டிருக்கமாட்டார்கள்; அதாவது இதைக் கொண்டிருக்காதவர்கள் மறுபடியும் பிறக்காத நிலையில் இருப்பதைப் போன்றது; ஆகவே பின்வருவது உண்மை, “தன் சகோதரனில் அன்புக் கூறாதவன் மரணத்தில் நிலைத்திருக்கிறான்”’ (எஸ். ஈ. பியர்ஸ்).

சகோதரர்களுடனான நம்முடைய அன்பானது, என்னுடைய பார்வையுடன் ஒத்திருக்கிற மனோப்பாங்கு கொண்டிருக்கும் சமுதாயத்துடன் ஒத்துப்போவதைவிட பன்மடங்கு மேலானது. இது வெறும் இயற்கையை சார்ந்ததல்ல, ஆனால் ஆவிக்குறிய இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று. இது நான் கிறிஸ்துவைப்பற்றி ஏதோ ஒன்றை ஒருவரிடம் அறிந்துகொள்ளும்பொழுது அவரை நோக்கி இருதயம் இழுக்கப்படுவதைப் போன்றது. ஆகவே இது, அவர் என்னுடைய தரப்பை (party) சேர்ந்தவர் என்ற ஆவியை விட மேலானது. தேவனுடைய குமாரனின் சாயலை நான் எவரிலெல்லாம் பார்க்கிறேனோ அவரையெல்லாம் இது சென்று தழுவுகிறது. ஆகவே, இது, கிறிஸ்துவினால் அவர்களில் நான் எதைப் பார்க்கிறேனோ, அதற்காக, கிறிஸ்துவுக்காக அவர்களை நேசிப்பதாகும். கிறிஸ்து வாசம் செய்யும் என்னுடைய சகோதர சகோதரிகளுடனான கவர்ச்சியையும் ஈர்ப்பையும் என்னில் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரே ஏற்படுத்துகிறார். ஆகவே உண்மையான கிறிஸ்தவ அன்பு என்பது ஒரு தெய்வீக ஈவு என்பது மட்டுமல்ல, அதன் வல்லமைக்கும் அதை செயல்படுத்துவதற்கும் முழுமையாக தேவனை சார்ந்துகொள்ளுவதாகும். அவர் நம்முடைய இருதயங்களில் ஊற்றியிருக்கிற அன்பை, தேவனிடமும் அவருடைய ஜனங்களிடமும், செயல்படுத்தவும் வெளிப்படுத்தவும் பரிசுத்த ஆவியானவர் நம்மை உந்த வேண்டுமென்று நாம் தினமும் ஜெபிக்க வேண்டும்.

5. நாம் சரியாகக் கிறிஸ்தவ அன்பை செயல்படுத்தக் கற்றுக்கொள்ளும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

என்னுடைய சகோதரனுடைய எண்ணத்தில் என்னுடைய மதிப்பை உயர்த்திக்கொள்ளுவதற்காக அவரை சந்தோஷப்படுத்துவதின் மூலம் இது செய்யப்படுவதல்ல, மாறாக, உண்மையாகவே அவர்களுடைய நல்வாழ்வை நான் விரும்புவதன் மூலம் செய்யப்படுவது. ‘நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்பொழுது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூறுகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்’ (1யோவா 5:2). தேவனில் நான் தனிப்பட்டவிதத்தில் அன்புக்கூறுகிறேன் என்பதற்கு எது உண்மையான சோதனை? நான் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே (யோவா 14:15, 21, 24; 15:10, 14). தேவனுடனான என்னுடைய அன்பின் உண்மைத்தன்மையும் வலிமையும் என்னுடைய வார்த்தைகளைவைத்து அளவிடப்படுபவைகளல்ல அல்லது பெருமகிழ்ச்சியுடன் நான் அவருடைய துதிகளைப் பாடுவதைவைத்தும் அல்ல, மாறாக அவருடைய வார்த்தைக்கு நான் கீழ்ப்படிவதைப் பொறுத்தது. இதே கோட்பாடு என்னுடைய சகோதரனுடனான என்னுடைய உறவுக்கும் பொருந்தும்.

‘நாம் தேவனில் அன்புகூர்ந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்பொழுது, அதினாலே நாம் தேவனுடைய பிள்ளைகளில் அன்பு கூறுகிறோமென்பதை அறிந்திருக்கிறோம்’. என்னுடைய சகோதர சகோதரிகளின் தவறுகளை நான் பெரிதுபடுத்திக் கொண்டிருப்பேனென்றால், நான் அவர்களுடன் என்னுடைய சுயசித்தத்தின்படி சுயத்தை பிரியப்படுத்தி நடந்துகொண்டிருப்பேனென்றால், நான் அவர்களில் அன்புகூறவில்லை. ‘உன் சகோதரனை உள்ளத்தில் பகையாயாக; பிறன் மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்துகொள்ள வேண்டும்’ (லேவி 19:17). அன்பு தெய்வீக வழியில் செயல்படுத்தப்பட வேண்டியதாயிருக்கிறது, அது நான் முதலில் தேவனில் அன்புகூற வேண்டிய விலையில் அல்ல; உண்மையில், என்னுடைய இருதயத்தில் தேவன் சரியான இடத்தில் இருக்கும்பொழுதுதான் என்னுடைய சகோதரனிடன் நான் ஆவிக்குறிய அன்பை சரியாக செயல்படுத்த முடியும். அவர்களை திருப்திபடுத்துவதில் உண்மையான ஆவிக்குறிய அன்பு இல்லை, ஆனால் தேவனைப் பிரியப்படுத்த அவர்களுக்கு உதவுவதில் இருக்கிறது; மேலும் நான் தேவனுடைய கற்பனைகளின் வழிகளில் மாத்திரமே அவர்களுக்கு உதவி செய்ய முடியும்.

ஒருவருக்கொருவர் கொஞ்சி விளையாடிக்கொள்வது சகோதர அன்பல்ல; நமக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் ஓட்டத்தை தொடர்ந்து ஓடும்படியாக ஒருவரையொருவர் வற்புறுத்துவதும், ‘கிறிஸ்துவை ஏறிட்டுப்பார்க்கும்படி’ அவர்களை உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவதும் (நம்முடைய அனுதின வாழ்க்கையின் நடக்கையின் மூலம்) அதிக உபயோகமானதாக இருக்கும். சகோதர அன்பென்பது பரிசுத்தமான ஒன்று, அது மாம்ச உணர்ச்சியோ அல்லது நாம் நடந்து கொண்டிருக்கும் பாதையின் அலட்சியப்போக்கோ அல்ல. தேவனுடைய ‘கற்பனைகளெல்லாம்’ அவருடைய அன்பின் மற்றும் அதிகாரத்தின் வெளிப்பாடுகள், ஒருவருக்கொருவர் தாழ்மையாக அன்புகூற நாடும்பொழுது கூட அவைகளை (கற்பனைகளை) மறந்தால், அது ‘அன்பல்ல’. அன்பினை செயல்படுத்துதல் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்துடன் நிச்சயமாக ஒத்திசைந்து செல்ல வேண்டும். நாம் ‘சத்தியத்தில்’ (3யோவா 1) அன்புகூற வேண்டியவர்களாயிருக்கிறோம்.

6. கிறிஸ்தவ அன்பை பலவகைகளில் வெளிப்படுத்துவதைக்குறித்து நாம் கற்பிக்கப்படும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

நம்முடைய சகோதரனை நேசிப்பதும், அன்பை எல்லா வழிகளிலேயும் வெளிப்படுத்துவதும் நம்மேல் விழுந்த கடமை. ஆனால் கிருபையின் ஆசனத்தில் நான் அவர்களுடன் ஐக்கியம் கொள்ளாவிட்டால் இதை உண்மையாகவும், சிறப்பாகவும், எந்த செயற்கையான தோற்றமும் இல்லாமல் செய்ய முடியாது. இந்த பூமியின் நான்கு மூலைகளிலும் கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள், அவர்களுடைய பாடுகள், சோதனைகள், பிரச்சனைகள் மற்றும் கவலைகளின் விவரங்கள் ஒன்றையும் நான் அறியேன்; ஆனாலும் என்னுடைய சிரத்தையுள்ள வேண்டுதலினாலும், விண்ணப்பங்களினாலும், என்னுடைய அன்பை நான் அவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், அவர்களின் சார்பாக என்னுடைய இருதயத்தை நான் தேவனுக்கு முன்பாக ஊற்ற முடியும். தன்னுடைய சக பரலோக பிரயாணியின் சார்பாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் தன்னுடைய விருப்பங்களை உபயோகப்படுத்துவதின் மூலமும், அவருடைய இரக்கங்களையும், கிருபைகளையும் அவர்களுக்கு சாதகமான திருப்புவதின் மூலமேயல்லாமல், வேறுஎந்த வகையிலும் ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய அன்புகலந்த மதிப்பை சக கிறிஸ்தவனிடம் வெளிப்படுத்த முடியாது.

‘ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்கு குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அடைத்துக்கொண்டால் அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும், உண்மையினாலும் அன்புகூறக்கடவோம்’ (1யோவா 3:17,18). தேவனுடைய ஜனங்களில் பலர் இந்த உலகத்தின் பொருள்களிலே ஏழைகளாயிருக்கிறார்கள். சில நேரங்களில் இது ஏன் இப்படி இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை; இது அவர்களுக்கு பெரிய சோதனையாகவும் இருக்கிறது. தேவன் இதை அனுமதிப்பதற்கான ஒரு காரணம், அவருடைய மற்ற பரிசுத்தர்கள் இரக்கம்கொண்டு தேவன் அவர்களுக்குக் கொடுத்திருக்கிற ஐஸ்வரியத்திலிருந்து எடுத்து மற்றவர்களுடைய உலகப்பிரகாரமான தேவைகளை சந்திக்கவேண்டுமென்பதற்காகவே. உண்மையான அன்பு ஆழ்ந்த நடைமுறையானது: என்னுடைய சகோதரரின் பாடுகள் நீங்கும்பட்சத்தில், அதற்காக எந்தத் தாழ்மையான வேலையையும், தாழ்வான இடத்தையும் எடுத்துக்கொள்ளத் தயங்காது. அன்பின் கர்த்தர் இங்கே இந்த உலகத்தில் இருந்தபொழுது, திரளான ஜனங்களின் சரீரப் பசியைப்போக்கவும், தன்னுடைய சீஷர்களின் கால்களைக் கழுவவும் எண்ணங்கொண்டார். ஆனால் இன்னும் சில தேவனுடைய ஜனங்கள் இருக்கிறார்கள், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவதற்கென்று அவர்களிடம் ஒன்றும் இல்லை. அவர்கள் என்ன செய்ய முடியும்? ஏன், அவர்கள் தங்களுக்கு சொந்தமான பரிசுத்தர்களின் ஆவிக்குறிய கரிசனைகளில் பங்குபெறக்கூடாது; கிருபையின் ஆசனத்தண்டையில் அவர்கள் சார்பாக இவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாமே! நம்முடைய அனுபவங்கள் மற்றும் சூழ்நிலைகள் மூலம், நம்மைப்போன்ற மற்ற பரிசுத்தவான்களின் உணர்ச்சிகள், கவலைகள் மற்றும் குறைவுகளை நாம் அறிந்திருக்கிறோம். நம்முடைய அனுபவத்திலிருந்து நமக்குத் தெரியும் சோகமான நேரத்தில் அதிருப்தி மற்றும் முறுமுறுப்பின் ஆவிக்கு எவ்வளவு எளிதாக நாம் வழிவிட்டுவிடுகிறோம் என்று. அதேநேரத்தில், எப்படி நாம் கர்த்தருடைய அமைதிப்படுத்தும் கரம் நம்மேல் வைக்கப்பட வேண்டுமென்று நாம் அவரிடத்தில் கதறினோம், எப்படி அவர் சில விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களை நமக்கு நினைவூட்டினார், எப்படி ஒரு அமைதியும் ஆறுதலும் நம்முடைய இருதயத்திற்கு வந்ததென்பதும் நமக்குத் தெரியும். அப்படியானால் நெருக்கத்திலிருக்கும் அவருடைய எல்லா பரிசுத்தர்களுக்கும் தேவன் அப்படியே இரங்க வேண்டுமென்று நாம் விண்ணப்பம்பண்ணலாம். அவர்களுடைய பாரத்தை நாம் நம்முடையதாக்கிகொள்ள நாடுவோம், அழுகிறவர்களுடன் அழுவோம், மகிழ்ச்சியாயிருப்பவர்களுடன் மகிழ்ச்சியாயிருப்போம். இப்படியாக, கிறிஸ்துவுக்குள்ளாக இருப்பவர்களுக்காக நித்திய இரக்கத்தினாலே அவர்களை நினைவுகூறும்படி அவர்கள் தேவனையும் நம்முடைய தேவனையும் வேண்டுவதன் மூலம் நாம் நம்முடைய உண்மையான அன்பை வெளிப்படுத்தலாம்.

இப்படிதான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவருடைய பரிசுத்தர்களின் மீது தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகிறார்: ‘தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்’ (எபி 7:25). அவர் தன்னுடையவர்களைக் கவனித்து அவர்களுடைய தேவைகளுக்காக செயல்படுகிறார். அவர்கள் சார்பாக பிதாவினிடத்தில் அவர் வேண்டுதல் செய்கிறார். ஒருவரும் அவரால் மறக்கப்படுவதில்லை: ஒவ்வொரு தனி ஆடும் நல்ல மேய்ப்பரின் இருதயத்தால் தாங்கப்படுகிறது. ஆகவே, நம்முடைய அன்பை வெளிப்படுத்தும்விதமாக அனுதின ஜெபத்தில் நம்முடைய சகோதரர்களின் பலதரப்பட்ட தேவைகள் சந்திக்கப்படும்படியாக ஜெபிக்கும்பொழுது, நம்முடைய உன்னதமான பிரதான ஆசாரியரிடம் ஐக்கியம்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். அதுமட்டுமல்ல, பரிசுத்தர்களும் அதன்மூலம் நம்முடன் நெருக்கமாவார்கள்: கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களாக அவர்களுக்காக நாம் செய்யும் ஜெபமே அவர்களுக்கான நம்முடைய அன்பையும் மதிப்பையும் உயர்த்தும். அவர்களுக்காக உண்மையான பாசத்துடன் நம்முடைய இருதயத்தில் மதிக்காவிட்டால், அவர்களை நம்முடைய இருதயத்தின் மீது ஏந்தி கிருபையின் ஆசனத்திற்கு கொண்டுசெல்ல முடியாது. நமக்கு எதிராக குற்றம்செய்த ஒரு சகோதரன் மீதான கசப்புணர்வை வெற்றிக்கொள்ள சிறந்த வழி அவர்களுக்காக அதிகம் ஜெபிப்பதே.

7. கிறிஸ்தவ அன்பை சரியாக வளர்க்க கற்றுக்கொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

இதற்காக இரண்டு அல்லது மூன்று விதிகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். முதலாவதாக, நம்முடைய சகோதரர்கள் நம்மீது வைத்திருக்கும் அன்பை சோதிக்கும்படி நம்மிடத்திலே அதிகக் குறைவுகள் உள்ளதுபோல, அவர்கள் மீதான நம்முடைய அன்பை சோதித்துப்பார்க்கும்படி அவர்களிடத்திலும் அதிகமான குறைவுகளுண்டு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ‘அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி’ (எபே 4:2) என்பது நாம் இருவரும் நம்முடைய இருதயங்களில் வைத்திருக்கவேண்டிய உன்னதமான அறிவுரை. 1கொரிந்தியர் 13 ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவிக்குறிய அன்பின் குணாதிசயங்களில், ‘நீடிய சாந்தமுள்ளது’ (வசனம் 4) என்பது முதலாவதாக வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, எந்த நற்குணத்தையும் அல்லது நற்பண்பையும் வளக்க சிறந்த வழி அதை செயல்படுத்துவதாகும். அதை நடைமுறைபடுத்தாமல், அதைப்பற்றி பேசுவதும் கொள்கைகளைக் கொண்டிருப்பதும் எந்த வகையிலும் பிரயோஜனப்படாது. இன்றைய நாட்களில் அன்பு சிறிதளவும் வெளிப்படுத்தப்படுவதில்லையென்ற குறை பல இடங்களிலும் கேட்கப்படுகிறதுண்டு: நான் ஏன் அன்பில் சிறந்த முன்மாதிரியாகத் திகழ வேண்டுமென்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம். மற்றவர்களுடைய குளிர்ந்த தன்மையினாலும், நன்றியற்றதன்மையினாலும் உன்னுடைய அன்பை நீ தணித்துவிடாதே, ‘தீமையை நன்மையினாலே வெல்லு’ (ரோம 12:21). 1கொரிந்தியர் 13ம் அதிகாரத்தை வாரத்தில் ஒருமுறையாவது ஜெபத்துடன் சிந்தித்துப்பார்

மூன்றாவதாக, எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னுடைய சொந்த இருதயம் ஒளியில் திளைத்து, தேவனுடைய அன்பில் வெதுவெதுப்பாயிருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள். விருப்பம் அதேபோன்ற மற்றொரு விருப்பத்தை பெற்றெடுக்கிறது. எந்த அளவிற்கு அதிகமாய் களைப்பற்ற, புரிந்துகொள்ள முடியாத, உங்களில் செயல்படும் கிறிஸ்துவின் அன்பில் நீங்கள் நிறைந்திருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அவருக்கு சொந்தமானவர்கள் மீது உங்கள் இருதயம் அன்பை வெளிப்படுத்தும். இதைக்குறித்த ஒரு அழகான எடுத்துக்காட்டு பின்வருகிறது, தன்னுடைய எஜமானின் மார்பில் சாய்ந்திருந்த அந்த அப்போஸ்தலனே சகோதர அன்பைப்பற்றி மிகஅதிகமாக எழுதியவன். அவருடைய கிருபையின் மகிமையான துதிக்கும், அவருக்குப் பிரியமானவர்களின் நன்மைக்காகவும், இதைப் படிப்பவருக்கும் எழுதியவருக்கும் (மற்றவர்களைவிட எனக்கு), இந்த எல்லா விதிகளையும் கடைப்பிடிக்கத் தேவையான கிருபையை தேவன் தந்தருளுவாராக.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.