தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்

வேதவாக்கியங்களும் உலகமும்

 

புதிய ஏற்பாட்டில் உள்ள கிறிஸ்தவனுக்கு இந்த ‘உலகத்தைக்’ குறித்தும், அதைக் குறித்த அவனது மனப்போக்கைக்குறித்தும் மிகக்குறைவாக எழுதப்படவில்லை. அதன் உண்மையான தன்மை வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கிறது, மேலும் விசுவாசி அதற்கெதிராக முறையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறான். தேவனின் பரிசுத்தமான வார்த்தையானது பரலோகத்திலிருந்து வரும் வெளிச்சமாகவும், ‘இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிறதாகவும்’ (2பேது 1:19) இருக்கிறது. அதன் தெய்வீக ஒளிக்கதிர்கள் காரியங்களை அதன் உண்மையான நிறத்தில் வெளிப்படுத்துகிறது, காரியங்கள் தவறான அலங்கரிப்புகளாலும், கவர்ச்சியாலும் மறைக்கப்பட்டிருப்பதை அந்த ஒளிக்கதிர்கள் அதனுள் ஊடுருவி வெளிப்படுத்துகிறது. அதிகமான பிரயாசமும், பணமும் செலவழிக்கப்பட்டு, கண்மூடித்தனமான ஏமாற்றுகளினால் வெகுவாக உயர்த்தப்பட்டு மெச்சிக்கொள்ளப்படும் இந்த உலகமானது ‘தேவனுக்குப் பகை’ என்றே அறிவிக்கப்பட்டிருக்கிறது; ஆகவே அவருடைய பிள்ளைகள் அதனுடன் ‘ஒத்துப்போகவோ’ அல்லது தங்கள் ஆசையை அதன் மீது வைக்கவோ அனுமதிக்கப்படுகிறதில்லை.

இந்த பகுதியானது நாம் இனி பார்க்க இருக்கும் பகுதிகளைவிட எந்த வகையிலும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததல்ல, மேலும் இதை உண்மையாக வாசிப்பவர் தன்னை ஆராய்ந்து பார்க்க தேவனின் கிருபையையும் நாடுவார். தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு போதித்திருக்கிற போதனை இப்படியாகச் சொல்கிறது, ‘நீங்கள் வளரும்படி, புதிதாய்ப்பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய கலங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்’ (1பேது 2:3), மேலும் இதுதான் தன்னுடைய உண்மையான நிலையா என்பதைக் கண்டுபிடிக்கும்படி அவனை உண்மையாகவும், சிரத்தையுடனும் பரிசோதித்துப் பார்க்கும்படியும் அறிவுறுத்துகிறது. வேதத்தைப்பற்றிய வெறும் அறிவுடன் நாம் திருப்தியடைந்துவிடாமலிருக்க, நம்முடைய நடைமுறையான வளர்ச்சியைக்குறித்தும், கிறிஸ்துவின் சாயலுடன் ஒத்திருப்பதைக்குறித்தும் நாம் அதிக கவனமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். நம்மைப் பரிச்சித்துப்பார்க்கக்கூடிய ஒரு காரியம் என்னவென்றால், என்னுடைய வேதவாசிப்பும், ஆராய்ச்சியும் என்னை உலகப்பிரகாரமானத்தன்மையிலிருந்து குறைத்திருக்கிறதா? என்பதே.

1. இந்த உலகத்தின் உண்மையான தன்மையை பிரிதறியும்விதமாக நம்முடைய கண்கள் திறக்கப்பட்டால், நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

ஒரு கவிஞன் இப்படியாக எழுதினான், ‘கடவுள் பரலோகத்திலிருக்கிறார் - உலகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது’. ஒருவகையிலே இது ஆசீர்வதிக்கப்பட்ட உண்மை, ‘உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறபடியால்’ (1யோவா 5:19) மற்றொருவகையில் இது மிகவும் தவறு. ஆனால் நம்முடைய இருதயமானது இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்திலே பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்படுவதாலேயே, மனிதர்களிடையே மிகுந்த மதிப்பைப்பெற்றிருப்பது, ‘தேவனுக்கு முன்பாக அருவருபாயிருக்கிறது’ (லூக் 15:16). ‘உலகமானது’ மிகப்பெரும் ஏமாற்றுப்பேர்விழி, வெறுமையான குமிழி, மிகவும் கேடான ஒன்று, ஒரு நாள் சுட்டெரிக்கப்படப்போகிறது என்பதை ஒரு ஆத்துமா கண்டுக்கொள்ளும்பொழுது அது மிகவும் நன்றிக்கடன் படுகிறது.

நாம் மேலும் செல்லும்முன்னர், ஒரு கிறிஸ்தவன் நேசிக்க மறுக்க வேண்டிய ‘உலகத்தை’ வரையறை செய்வோம். பரிசுத்த எழுத்துக்களின் (வேதாகமத்தின்) பக்கங்களில் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகமான அர்த்தங்களில் சில வார்த்தைகள் காணப்படுகின்றன. ஆனாலும் அதன் பின்னனியத்தைக் கூர்ந்து கவனித்தால், அதன் நோக்கத்தை அறிந்துகொள்ளலாம். இந்த ‘உலகம்’ ஒரு அமைப்பு அல்லது பொருட்களின் ஒழுங்கமைப்பு, அது தன்னில் தானே முழுமையுள்ளதாயிருக்கிறது. எந்த ஒரு அன்னிய பொருளும் அதனுள் நுழைய முடியாது, அப்படியே நுழைந்தாலும் அதன் ஒரு அங்கமாக மாறிவிடுகிறது. உலகமானது வீழ்ந்துபோன மனிதத்தன்மையாகும், அதுவே மனிதக்குடும்பங்களிலும் செயல்படுகிறது, அதனுடைய பண்புகளுக்கேற்ற கட்டமைப்பையே நடைமுறை வழக்காக வெளிப்படுத்துகிறது. இது ஒரு ‘மாம்ச சிந்தையின்’ ராஜ்ஜியம், ‘அது தேவனுக்கு விரோதமான பகை, அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது’ (ரோம 8:7). எங்கெல்லாம் ‘மாம்ச சிந்தை’ இருக்கிறதோ, அங்கெல்லாம் ‘உலகம்’ இருக்கிறது; ஆகவே ‘உலகப்பிரகாரமானது’ என்பது தேவனில்லா உலகமாகும்.

2. உலகமானது எதிர்க்க வேண்டிய மற்றும் மேற்கொள்ள வேண்டிய சத்துரு என்பதை கற்றுக்கொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

‘விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட’ (2தீமோ 6:12) ஒரு கிறிஸ்தவன் அனுமதிக்கப்படுகிறான், அப்படியானால் சந்தித்து முற்றிலும் அழித்துப்போடவேண்டிய எதிரிகள் இருக்கிறார்களென்று பொருள். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்ற பரிசுத்த திரித்துவம் இருக்கிறதுபோல, மாமிசம், உலகம் மற்றும் பிசாசு என்ற தீய திரித்துவமும் இருக்கிறது. தேவனுடைய பிள்ளை அவைகளுடன் ஒரு முடிவுள்ள போர்புரிய அழைக்கப்படுகிறான்; ‘முடிவுள்ள’ என்று நாங்கள் சொல்கிறோம், ஏனெனில் ஒன்று அவன் அவைகளை வெற்றிகொள்வான் அல்லது அவைகள் அவன் மீது வெற்றி கொள்ளும். என் வாசகரே, ‘உலகமானது சாவுக்கேதுவான பகை’ என்பதை உங்கள் மனதில் முடிவு கட்டுங்கள், ‘தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்’ (1யோவா 5:4) என்று எழுதப்பட்டிருப்பதால் உங்கள் இருதயத்தில் முற்றிலும் அதை நீங்கள் அழித்துப்போடாவிட்டால், நீங்கள் தேவனுடைய பிள்ளையல்ல.

இந்த உலகம் ஏன் ‘மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்பதற்கான பல காரணங்களில், பின்வரும் காரணங்களும் உள்ளன. முதலாவதாக, அதனுடைய எல்லா கவர்ந்திழுக்கும் பொருள்களும், ஒரு ஆத்துமாவின் தேவன்மீதானப் பற்றை சிதறப்பண்ணி, அவனை அதற்கு அந்நியனாக்கிவிடுகின்றன. காணப்படுகிறவைகள், இருதயத்தை காணப்படாதவைகளிலிருந்து திருப்பிவிடும் தன்மையுடையதாகையால் அப்படியிருக்கிறது. இரண்டாவதாக, இந்த உலகத்தின் ஆவியானது, கிறிஸ்துவின் ஆவிக்கு முழுமையாக எதிரிடையானது; ஆகவேதான், ‘நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்’ (1கொரி 2:8) என்று அப்போஸ்தலன் எழுதினான். மூன்றாவதாக, அதன் கவலைகளும், கரிசனைகளும் பக்திவிருத்திக்கும், பரலோக வாழ்க்கைக்கும் எதிரானவைகள். மற்ற மனிதர்களைப்போல, கிறிஸ்தவனும் ஒரு வாரத்தில் ஆறு நாளும் வேலைசெய்ய தேவனால் எதிர்பார்க்கப்படுகிறான்; ஆனாலும் அவன் வேலை செய்யும்பொழுது, தன்னுடைய வேலையை செய்வதைவிட, இச்சையான எதிலும் மனதை செலுத்தாதபடி தன்னைத் தொடர்ச்சியாகக் காத்துக்கொள்ள வேண்டும்.

‘நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்’ (1யோவா 5:4). தேவன் அருளிய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும். இப்பொழுது மறைந்திருந்தாலும், நிச்சயமான நித்தியத்தின் உண்மைகளினால் இருதயம் நிறைந்திருக்கும்பொழுது, கேடுவிளைவிக்கும் உலக பொருட்களின் தாக்கத்திலிருந்து அது விடுவிக்கப்படுகிறது. விசுவாசக் கண்கள் உலகப்பொருட்களின் உண்மை நிறத்தை அறிந்துகொண்டு, அவைகள் வெறுமையானவை, மாயையானவை மேலும் உன்னதமான நித்தியத்தின் மகிமையான காரியங்களுடன் அவைகள் ஒப்பிடத்தக்கவைகளல்ல என்பதை கண்டுக்கொள்கிறது. பரிபூரணத்தையும், தேவ பிரசன்னத்தையும் உணர்ந்துகொள்ளுதல் இந்த உலகத்தை வெறுமையைவிட கீழானதாக்கிவிடுகிறது. தெய்வீக மீட்பர் அவனுடைய பாவத்திற்காக மரித்து, அவனுடைய விடாமுயற்சிகாகவும், இறுதி இரட்சிப்பிற்காகவும் காரியங்களை அவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை ஒரு கிறிஸ்தவன் பார்க்கும்பொழுது, ‘உம்மைத் தவிர இந்த உலகத்தில் எனக்கு வேறு எந்த விருப்பமும் இல்லை’ என்று அவன் வியக்கிறான்!

இந்த வரிகளை வாசிக்கும்பொழுது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? கடந்த பத்தியிலே சொல்லப்பட்டவைகளை நீங்கள் உண்மையாக ஒத்துக்கொள்ளலாம், உங்களுடைய வாழ்க்கை உண்மையில் எப்படி இருக்கிறது? மறுபடியும் பிறவாதவர்கள் மிகவும் மதிப்புமிக்கதாக எண்ணும் காரியங்கள் உங்களை கவர்ந்திழுத்து அடிமையாக்குகிறதா? அவன் மகிழ்ந்திருக்கும் உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்து விலகிவிடு, அவன் துன்மார்க்கன்: உங்களுடைய நிலையும் இதுதானா? அல்லது உங்களுடைய தற்பொழுதைய மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்பட முடியாத பொருட்களின் மீது இருக்கிறதா? இந்தக் கேள்விகளை இலகுவாக எடுத்துக்கொள்ளாதீர்கள், தேவனுடைய பிரசன்னதிலே அவைகளை உண்மையாய் எண்ணிப்பார்க்க உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவைகளுக்கு நீங்கள் அளிக்கும் உண்மையான பதில் உங்கள் ஆத்துமாவின் உண்மை நிலைக்கு முகப்பாக அமையும், மேலும் ‘நான் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டி’ என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்களா என்பதையும் அது காட்டிவிடும்.

3. நம்மை இப்பொழுதிருக்கிற ‘பொல்லாத பிரபஞ்சத்தினின்று’ விடுவிக்கும்படி கிறிஸ்து மரித்தார் (கலா 1:4) என்பதைக் கற்றுக்கொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

தேவக்குமாரன் நியாயப்பிரமாணத்தை ‘நிறைவேற்ற’ மட்டுமல்ல (மத் 5:17), ‘பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கும்’ (1யோவா 3:8), ‘இனி வரும் கோபாக்கினைக்கு நம்மை நீங்களாக்கி இரட்சிக்கவும்’ (1தெச 1:10), பாவத்திலிருந்து மீட்கவும் (மத் 1:21) மேலும் இந்த உலகத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலையாக்கவும், அதனுடைய கவர்ந்திழுக்கும் தாக்கத்திலிருந்து ஆத்துமாவை விடுவிக்கவுமே இவ்வுலகிற்கு வந்தார். பழங்காலத்தில் தேவன் இஸ்ரவேலிடம் செயல்பட்டவிதத்திலிருந்து இது நிழலோட்டமாய் அமைகிறது. அவர்கள் எகிப்திலே அடிமைகளாயிருந்தார்கள், ‘எகிப்து’ இந்த உலகத்திற்கான ஒரு அடையாளம். பார்வோனுக்கு செங்கற்களை செய்வதில் தங்கள் நேரத்தை செலவிட்டு, அவர்கள் கொத்தடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் யெகோவா, தன்னுடைய வல்லமையினால், அவர்களை ஏகாதிபத்தியத்திலிருந்து விடுவித்து, ‘இரும்பு உலையிலிருந்து’ வெளியே கொண்டுவந்தார். கிறிஸ்துவும் அதையேதான் செய்தார். அவர்கள் இருதயங்களிலுள்ள உலகத்தின் அதிகாரத்தை அவர் உடைக்கிறார். உலகத்தின் விருப்பங்களின் மீதான நாட்டத்திற்கும் மேலும் உலகம் அவர்களை ஒதுக்கித்தள்ளிவிடுமோ என்ற பயத்திலிருந்தும் அவர்களை விடுவிக்கிறார்.

கிறிஸ்துவானவர் தன்னுடைய பிள்ளைகளின் பாவங்களைப் போக்கத் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார், அதன் விளைவாக, இவ்வுலகத்தின் தீய சக்தியிலிருந்தும் அதன் ஆளுகையிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட முடியும்: அதன் பிரபுவாகிய சாத்தானிடமிருந்து; அதனுள் ஏராளமாய் மண்டிக்கிடக்கும் இச்சைகளிலிருந்து; அதற்கு சொந்தமான மனிதனின் வீண்பேச்சுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட முடியும். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட செயலை செய்ய பரிசுத்தர்களுக்குள் வாசம்செய்யும் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவுடன் இணைந்து செயல்படுகிறார். அவர் அவர்களுடைய நினைவுகளையும் உணர்வுகளையும் இவ்வுலக காரியங்களிலிருந்து பரலோகத்தை நோக்கித் திருப்புகிறார். தன்னுடைய வல்லமையை செயல்படுத்தி, அவர் அவர்களை சூழ்ந்துள்ள நன்னெறிகெட்டு நடக்கச்செய்யும் தாக்கங்களிலிருந்து அவர்களை விடுவித்து, பரலோகத்தின் தரத்திற்கு அவர்களை மாற்றுகிறார். ஒரு கிறிஸ்தவன் கிருபையிலே வளரும்பொழுது, இதை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்கிறான். தற்பொழுதைய ‘தீய உலகிலிருந்து’ தன்னை முழுமையாக விடுவிக்க விரும்புகிறான், ஆகவே தன்னை முற்றிலுமாக விடுவிக்கும்படி அவன் தேவனைக் கெஞ்சுகிறான். அவனைக் கவர்ந்திழுத்த ஒன்று இப்பொழுது அவனுக்கு துக்கத்தைத் தருகிறது. அவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட தேவனை மோசமாக துக்கப்படுத்தும் அந்த இடத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்திற்காக அவன் ஏங்குகிறான்.

4. உலகத்திலிருந்து நம்முடைய இருதயங்கள் மறக்கடிக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

‘உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்’ (1யோவா 2:15). ஒரு பிரயாணிக்கு அவனது வழியிலுள்ள தடைக்கல் எது? ஓடுபவனுக்கு அவன்மீதுள்ள ஒரு பாரமான பொருள், பறக்கும் பறவைக்கு அதை கவர்ந்து இழுத்து பிறகு அதன் கால்களை இறுகப் பிடித்துக்கொள்ளும் பசை – அப்படியே ஓட்டத்தைத் தொடருகிற ஒரு கிறிஸ்தவனுக்கு இவ்வுலக பற்று – ஒன்று தேவனுடைய வழிகளிலிருந்து அவனை முழுவதுமாக திருப்பிவிடும் அல்லது அவனை உலகத்திற்குள்ளாக மயக்கி இழுத்துவிடும் அல்லது அவனை வலுக்கட்டாயமாக தேவனைவிட்டு வெளியே தள்ளிவிடும். உண்மை என்னவென்றால் இருதயத்திலிருந்து அந்த தீய சிந்தைகள் அகற்றபடும்வரை தெய்வீக வழி நடத்துதல்களுக்கு நம்முடைய காதுகள் செவிடாகிவிடும். இந்த முடிவுள்ள காலம் மற்றும் உணர்வுகளிலிருந்து நாம் மேலெழும்பாதவரை, தேவனுக்குக் கீழ்ப்படிதலை நாம் கட்டுக்குள் கொண்டுவர இயலாது. ஒரு உருண்டையின் மீது தண்ணீர் தங்காமல் வழுக்கி வழிந்துவிடுகிறதுபோல, மாம்ச சிந்தையிலிருந்து பரலோக சத்தியமும் வழிந்துவிடுகிறது.

உலகம் கிறிஸ்துவைவிட்டு பின்னிட்டுத் திரும்பியிருக்கிறது, அவருடைய நாமம் பல இடங்களிலே அறிவிக்கப்பட்டாலும், அது அவருடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்தாது. உலகத்தின் எல்லா விருப்பங்களும் வடிவமைப்புகளும் சுயத்தை பிரியப்படுத்துபவையே. அவர்களுடைய நோக்கமும் நடக்கையும் வேறுவகையிலேயே இருக்கட்டும், சுயம் பிரதானமானதாகவும், சுயத்தை பிரியப்படுத்த அவர்கள் எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தட்டும். இப்பொழுது கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள், அவர்கள் இந்த உலகத்தைவிட்டு வெளியே செல்ல முடியாது; அவர்களுடைய தேவன் குறித்திருக்கிற காலம் மட்டும் அவர்கள் இந்த உலகத்திலே வாழ வேண்டும். அவர்கள் இங்கே இருக்கும்போது அவர்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தை தாங்க வேண்டும், உலகப்பிரகாரமான வேலையையும் கவனிக்க வேண்டும். ஆனால், உலகம் அவர்களை மகிழ்விக்குமென்றாலும், அதிலே அன்புகூற அவர்களுக்கு அனுமதியில்லை. அவர்களுடைய ‘பொக்கிஷமும்’ ‘பங்கும்’ வேறு ஒரு இடத்திலே கண்டுகொள்ளக்கூடியதாயிருக்கிறது.

இந்த உலகமானது விழுந்துபோன மனிதனின் ஒவ்வொரு உள்ளுணர்வையும் கவர்ந்தழைக்கிறது. இது அவனை மயக்க ஆயிரக்கணக்கான பொருட்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது: அவை அவனது கவனத்தைக் கவருகிறது, அந்த கவனம் அதைக்குறித்த ஆசையையும் விருப்பத்தையும் அவனில் தோற்றுவிக்கிறது, உணர்வற்றவிதமாக அவைகள் அவனுடைய இருதயத்தில் மிகவும் ஆழமான பதிவுகளை ஏற்படுத்திவிடுகிறது. எல்லா வகைகளிலேயும் அவைகள் மிகவும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. உலகத்தின் கவர்ச்சியும், கவர்ந்திழுக்கும் தன்மையும் பல்வேறுபட்ட வகைகளிலிருப்பினும், அதனுடைய நோக்கமும் இன்பமும் இவ்வுலகத்தின் மகிழ்ச்சியை மட்டுமே ஊக்குவிக்கத்தக்கவகையில் வடிவமைக்கப்பட்டதாகும் – ஆகையால், ‘மனிதன் இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன?’ ஒரு கிறிஸ்தவன் ஆவியினால் நடத்தப்படுவதால், ஆத்துமாவிற்கு அவர் கிறிஸ்துவை காண்பிப்பதின்மூலமாக அவனுடைய நினைவுகள் இந்த உலகத்திலிருந்து திசை திருப்பப்படுகின்றன. ஒரு சிறு குழந்தை அதற்கு மிகவும் பிரியமான ஒன்றை பெற்றுக்கொள்ள தன்னிடமுள்ள அசுத்தமான ஒன்றை உடனடியாக விட்டுவிட எப்படி ஆயத்தமாயிருக்குமோ அதைப்போல, தேவனுடன் ஐக்கியம் கொண்டிருக்கும் ஒரு இருதயம் சொல்லும், ‘என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும்.... எல்லாவற்றையும் குப்பையுமாக எண்ணுகிறேன்’ (பிலி 3:8-10).

5. உலகத்தைவிட்டு பிரிந்து வாழும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

‘உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்கு பகைஞனாயிருக்கிறான்’ (யாக் 4:4). இப்படிபட்ட வசனம் நம் ஒவ்வொருவரையும் முற்றுமுழுவதுமாக ஆராய்ந்து நம்மை நடுங்கச்செய்ய வேண்டும். தேவகுமாரனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கக் காரணமான இந்த உலகத்தில் எப்படி நான் அதன் இன்பங்களை விரும்பி அதனுடன் ஒத்துப்போக முடியும்? அப்படிச்செய்தால் அது அவருடைய எதிராளிகளுடன் என்னை அடையாளப்படுத்திவிடும். ஓ! என்னுடைய வாசகரே, இதிலே எந்த தவறும் செய்துவிடாதீர்கள். இப்படியாக எழுதப்பட்டிருக்கிறது, ‘ஒருவன் உலகத்தில் அன்புக்கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை’ (1யோவா 2:15). பழைய ஏற்பாட்டில் தேவனுடைய பிள்ளைகளைக்குறித்து, ‘அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்’ (எண் 23:9) என்று சொல்லப்பட்டிருக்கிறது. உறுதியாக அவனது குணத்திலும் நடத்தையிலும், விருப்பங்களிலும் நாட்டங்களிலும் காணப்படும் அந்த வித்தியாசம், மறுபிறப்படைந்தவனையும் மறுபிறப்படையாதவனையும் வேறுபடுத்தும் அந்த வித்தியாசம், அவனை நிச்சயமாக உலகத்திலிருந்து பிரித்தெடுக்கும். வேறொரு உலகத்தில் குடியுரிமை இருப்பதாகவும், வேறொரு ஆவியினால் நடத்தப்படுவதாகவும், வேறொரு சட்டத்தினால் ஆளப்படுவதாகவும் சொல்லிக்கொள்ளும் நாம், இந்த எல்லாவற்றையும் அவமதிப்பவர்களோடு கையோடு கைகோர்த்து செல்ல முடியாது! நம்மில் மற்றும் நம்மைச்சுற்றியுள்ள அனைத்தும் நம்முடைய கிறிஸ்தவ பிரயாணத்தை வெளிப்படுத்தட்டும். ‘இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமலிருப்பதினால்’ (ரோம 12:2), நாம் உண்மையில் ‘அடையாளப்புருஷராய்’ (சக 3:8) இருக்கக்கடவோம்.

6. உலகத்தின் மீதான வெறுப்பை செயல்படுத்தும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

உலகத்தின் தோற்றத்தையும் அதன் ஒழுங்கான தன்மையும் பாதுகாக்க எத்தனை கடின முயற்சிகள் எடுக்கப்படுகின்றன! தன்னுடைய மதிக்கத்தக்க பொதுவான நடைமுறை மற்றும் நாகரிகமான மொழிநடை, உபகாரங்கள் மற்றும் அற நிலையங்கள் போன்ற செயற்கையான காரியங்கள் மூலம் அதற்கு மரியாதை கொடுக்க முற்படுகிறது. அப்படியே அதன் திருச்சபைகளும் மற்றும் பேராலயங்களும், அதன் ஆயர்களும் மற்றும் பேராயர்களும் உட்புறத்திலே கொதித்துக்கொண்டிருக்கும் சீர்கேட்டை வெளிப்புறமான அலங்கரிப்புகளினாலே மூடி மறைக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். அதற்கு ஒரு நல்ல மதிப்புக்கொடுக்க அதனுடன் ‘கிறிஸ்தவம்’ சேர்க்கப்படுகிறது, கிறிஸ்துவின் ‘நுகத்தை’ தங்கள் மேல் சுமந்துகொள்ளாத ஆயிரக்கணக்கானவர்கள், பரிசுத்த கிறிஸ்துவின் நாமத்தை மட்டும் தங்கள் உதடுகளில் சொல்கிறார்கள். அவர்களைக் குறித்து தேவன் சொல்கிறார், ‘இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது’ (மத் 15:8).

அப்படிப்பட்டவைகளைக்குறித்து ஒரு உண்மையான கிறிஸ்தவனின் மனப்போக்கு எப்படியாக இருக்க வேண்டும்? வேதத்தின் பதில் தெளிவானது, ‘இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு’ (2தீமோ 3:5). ‘நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ (2கொரி 6:17). இந்த தெய்வீக கட்டளைக்குக் கீழ்ப்படியும்பொழுது அவர்களை என்ன தொடரும்? நாம் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நிரூபணம் செய்வோம்: ‘நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதை சிநேகிக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது’ (யோவா 15: 19). குறிப்பாக எந்த ‘உலகம்’ இங்கே காட்டப்படுகிறது? இதற்கு முந்தைய வசனம் இக்கேள்விக்குப் பதில் தரட்டும்: ‘உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்’. எந்த ‘உலகம்’ கிறிஸ்துவைப் பகைத்து அவரை மரணத்திற்கு நேராகத் துன்பப்படுத்தியது? சமய உலகம், தேவனுடைய மகிமைக்கு தங்களை வைராக்கியம் உள்ளவர்களைப்போல காட்டிக்கொண்டவர்களே. இப்பொழுதும் இப்படியே இருக்கிறது. ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவை அவமதிக்கும் கிறிஸ்தவ உலகத்தைவிட்டு பின்னிட்டுத் திரும்பட்டும், அவனது மிகவும் கொடூரமான, ஆழமான மற்றும் நன்னெறியற்ற எதிராளிகள் யாரெனில் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களே! ‘என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூறுங்கள்’ (மத் 5:11:12). ஆ! என் சகோதரரே, இது ஒரு ஆரோக்கியமான் அடையாளம், சமய உலகம் உங்களை வெறுக்கும்பொழுது நீங்கள் உண்மையாகவே வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறீர்கள் என்பதற்கு அது ஒரு உறுதியான அடையாளம். ஆனால் மற்றொருவகையில், உங்களுக்கு ‘திருச்சபைகளிலோ’ அல்லது ‘கூடுகைகளிலோ’ ஒரு ‘நற்பெயர்’ இருக்குமென்றால் தேவனால் வரும் மகிமையைவிட மனுஷரால் வரும் மகிமையை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று பயப்படுவதற்கு அதிக காரணங்கள் உண்டு!

7. நாம் இந்த உலகத்தைவிட்டு உயர்ந்த நிலையை அடையும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

முதலாவது, அதனுடைய வழக்குகளிலிருந்தும் நடைமுறைகளிலிருந்தும் உயர்த்தப்பட வேண்டும். இந்த உலகமானது அதன் நடைமுறை வழக்குக்கும், நாளின் பாணிக்கும் (Style of the day) அடிமைப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் தேவனுடன் நடக்கும் ஒருவன் அப்படியில்லை: அவனது பிரதானமான கரிசனையெல்லாம் ‘அவரது குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதே’. இரண்டாவதாக, அதனுடைய பாதுகாப்பிலிருந்தும், கவலையிலிருந்தும் உயர்த்தப்பட வேண்டும். பழைய பரிசுத்தவான்களைக்குறித்து இப்படியாகச் சொல்லப்பட்டிருக்கிறது, ‘பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்திரம் தங்களுக்கு உண்டென்று அறிந்து’ (எபி 10:34), தங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாக கொள்ளையிடக் கொடுத்தார்கள். மூன்றாவதாக, அதனுடைய சோதனைகளுக்கு மேலாக: ‘தேவனில் மகிழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு’ இந்த உலகத்தின் கண்ணை கூசும் மற்றும் மின்னும் பொருட்களில் என்ன கவர்ச்சி இருக்கிறது? அது எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு அது ஒன்றுமில்லை! நான்காவதாக, அதனுடைய கருத்துக்களுக்கும், ஏற்றுக்கொள்ளுதல்களுக்கும் மேலாக: உலகத்திலிருந்து சுதந்தரமாயிருக்கவும் அதை மீறி நடக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் முழு இருதயமும் தேவனைப் பிரியப்படுத்துவதில் வைக்கப்பட்டிருக்குமென்றால், தேவனற்றவர்கள் உங்களைப்பற்றி கூறும் குறைகளைப்பற்றி நீங்கள் முற்றிலும் கவலையற்றவர்களாயிருப்பீர்கள்.

இப்பொழுது, என் வாசகரே, இந்த அதிகாரத்தில் உள்ளவைகளைவைத்து உண்மையாகவே உங்களை அளந்துபார்க்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைக் கண்டுபிடியுங்கள். முதலாவதாக, உங்களுடைய ஓய்வு நேரங்களில் உங்கள் மனதின் முன்னால் நிற்கும் காரியங்கள் எவை? உங்கள் மனது எதைக்குறித்து ஓடிக்கொண்டிருக்கிறது? இரண்டாவதாக, உங்களுடைய தெரிந்தெடுப்புகள் எப்படிபட்டவைகளாயிருக்கிறது? ஒரு மாலை நேரத்தையோ அல்லது ஓய்வு நாளின் மதியவேளையையோ எப்படி செலவு செய்ய வேண்டுமென்று முடிவுசெய்யும்பொழுது, நீங்கள் எதைத் தெரிந்தெடுக்கிறீர்கள்? மூன்றாவதாக, எந்த தருணங்களில் நீங்கள் அதிகமாக வருந்துகிறீர்கள்? ஏதோ ஒரு உலகப் பொருளை இழந்தபொழுதா? அல்லது தேவனுடனான ஐக்கியத்தை இழந்தபொழுதா? எது உங்களை மிகவும் துக்கப்படுத்துகிறது? உங்களுடைய திட்டங்கள் தோல்வியை தழுவியபொழுதா? அல்லது கிறிஸ்துவுக்குள் உங்கள் இருதயம் குளிர்ந்தபொழுதா? நான்காவதாக, நீங்கள் கலந்துரையாட உங்களுக்கு மிகவும் பிடித்த தலைப்பு எது? அன்றைய நாளின் செய்தியை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்களா? அல்லது ‘முற்றிலும் அழகுள்ளவரைப்’ பற்றி பேசுபவர்களை சந்திப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுடைய ‘நல்ல எண்ணங்கள்’ நடைமுறைப்படுத்தப்படுகிறதா? அல்லது அவைகள் வெறுமையான கனவுகள்தானா? நீங்கள் முழங்காலில் செலவிடும் நேரம் முன்னைவிட அதிகரித்திருக்கிறதா? அல்லது குறைந்திருக்கிறதா? தேவனுடைய வார்த்தை உங்களுக்கு சுவைக்க இனிதாயிருக்கிறதா? அல்லது உங்கள் ஆத்துமா அதன் மீதுள்ள இனிய சுவையை இழந்துவிட்டதா?

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.