பிற பாடல்கள்
பாடல் : F.J. செல்லத்துரை

பாடல் பிறந்த கதை

 இயேசு அழைக்கிறார்! இயேசு அழைக்கிறார்!
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார்! இயேசு அழைக்கிறார்!
 
                சரணங்கள்
1. எத்துன்ப நேரத்திலும்
ஆறுதல் உனக்களிப்பார்;
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்.
                - இயேசு
 
2. கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிபோல் காப்பார்;
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே.
                - இயேசு
 
3. சோர்வடையும் நேரத்தில்
பெலன் உனக்களிப்பார்;
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய்.
                - இயேசு
 
4. சகல வியாதியையும்
குணமாக்க வல்லவராம்;
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே.
                - இயேசு

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இயேசுவின் அன்பையும், மனதுருக்கத்தையும் எளிய வார்த்தைகளுடன் அறிய  உதவும் இப்பாடலை எழுதியவர் சகோதரர் F.J செல்லத்துரை ஆவார்.  இவர் சைமன் -ஜோதி தம்பதியருக்கு 26.08.1936 அன்று அரக்கோணத்தில் பிறந்தார்.  தனது ஆரம்பக் கல்வியை அரக்கோணத்தில் முடித்து, பின்னர் சென்னையில் கல்லூரித் துவக்க வகுப்புவரை தொடர்ந்தார். சகோதரர் செல்லத்துரை 1972-ம் ஆண்டு ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார்.  திருச்சபை மறுமலர்ச்சிப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு,  பல திருச்சபைகளில் வேதபோதனை செய்தார்.  02.07.1973 அன்று திருமணமான இவருக்கு ஒரு ஆண்மகனும், இரு பெண்பிள்ளைகளும் உண்டு.  குடும்பமாக ஊழியத்தைத் தொடர்ந்த செல்லத்துரையை ஆவியானவர் பெலப்படுத்தி, பல பாடல்களுக்கான ராகங்களைத் தந்தார்.

மேனாட்டிசையில் அடிப்படைப் பயிற்சிபெற்ற சகோதரர் செல்லத்துரை ஒரு பாடகர் குழுவை அமைத்து, பல நற்செய்திக் கூட்டங்களில் பாடல் ஆராதனையை முன்னின்று நடத்தினார்.  அக்கார்டியன், மவுத் ஆர்கன், மேண்டலின், மற்றும் கீ போர்டு வாசிப்பதில் திறமை பெற்றவர்.  நற்செய்திக் கூட்டங்களில் பாடுவதற்கென தமிழிலும், தெலுங்கிலும் சேர்ந்து மொத்தம் 150 பாடல்களை இயற்றி, ராகம் அமைத்திருக்கிறார்.

சகோதரர் செல்லத்துரை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த செக்கந்திராபாத்தை மையமாகக் கொண்டு தனது ஊழியத்தைத் தொடர்ந்தார்.  1975-ம் ஆண்டு, ஒரு முறை அவர் உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் இப்பாடலின் ராகத்தைத் தந்தார்.  ராகத்திற்கேற்ற ஆறுதல் வார்த்தைகளுடன் இப்பாடலை இயற்றி, செக்கந்திரபாத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் முதன்முறையாகப் பாடினார்.  அப்போது கூட்டத்தில் அனைவரும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தனர். 

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.