பிற பாடல்கள்
பாடல் : S ஸ்டீபன் தர்மராஜ்

பாடல் பிறந்த கதை

        பல்லவி
அனைத்தும் கிறிஸ்துவுக்கே
அர்ப்பணித்தேன் இன்றே,
தன்னையே தந்த
எந்தன் இயேசுவுக்கே.
 
        சரணங்கள்
1. என்னை வாட்டும் தனிமை
நான் திகைக்கும் தீமைகள்
உம்மை அண்டிடவே
தந்தேன் உம்மிடமே.  -அனைத்தும்
               
2. எந்தன் கல்வி ஞானம்
எந்தன் ஆஸ்தி மேன்மையும்
நீரல்லோ தந்தீர்!
தந்தேன் உம்மிடமே.  -அனைத்தும்
               
3. எந்தன் சுகம் ஜீவனும்
எந்தன் பெற்றோர் உற்றோரும்
உந்தன் அன்பின் ஈவே;
எந்தையே தந்தேன். - அனைத்தும்
               
4. எந்தன் இன்ப துன்பமும்
எந்தன் வெற்றி தோல்வியும்
தந்தேன் உம்மிடமே;
ஏற்றுக் கொள்வீர் நீரே. -அனைத்தும்
               
5. எந்தன் வாழ்வின் நம்பிக்கை
மோட்சானந்த பாக்யமும்,
நீரேயல்லோ தேவா!
காத்து நடத்துவீர். - அனைத்தும்
 

1978-79-ம் ஆண்டு. கல்லூரியில் போராட்டம் கரகோஷங்களுடன் சூடுபிடித்துக் கொண்டிருந்தது.  நவயுக சமத்துவ தத்துவத்தின் அடிப்படையில், மாணவர் கடைப்பிடித்த போராட்ட முறையைப் பின்பற்றிப் பேராசிரியர்கள் உரிமைக் குரலெழுப்பிப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்! கற்றுக் கொடுப்பவர் யார்/கற்றுக்கொள்பவர் யாரென்ற பாகுபாடின்றி நின்ற அம்மக்கள் கூட்டத்தில், மாணவர் சமுதாயம், பேராசிரியர்களின் போராட்டத்தை வெற்றியடையச் செய்யத் தோளோடு தோள் கொடுத்துத் தாங்கி நின்றது!

சம்பள விகிதம், மற்றும் வேலையில் நிரந்தரம், எனப் பேராசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை தான்!  எனவே, தனது முழு ஆதரவையும் வாக்களித்தார் பேராசிரியர் ஸ்டீபன் தர்மராஜ்.  ஆனால், அவற்றை எடுத்துக் கூற, பேராசிரியர் பேரவை மேற்கொண்ட வழிமுறையோ போராட்டம்! இவ்வணுகுமுறை பேராசிரியர்களுக்கு, அதுவும் தன்னைப் போன்ற கிறிஸ்தவப் பேராசிரியருக்கு ஒவ்வாததன்றோ! எனவே, தன் கிறிஸ்தவ சாட்சியை இழக்க விரும்பாத ஸ்டீபன், போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்!

சகப் பேராசிரியர் சமுதாயம் அவருக்குக் 'கருங்காலி' என்ற பட்டமளித்துக் கௌரவித்தது! ''ஸ்டீபன் சார்,'' என அதுவரை அன்புடன் அவரை சூழ்ந்து நின்ற மாணவமணிகளுக்கு, ஸ்டீபன் சாரின் 'வினோதப் போக்கு' புரியாத புதிராயிற்று!  தனது அன்புமிகு மாணவர்களாலும் உதறித்தள்ளப்பட்ட நிலையில், பார உள்ளத்துடன், சோர்ந்துபோய், கல்லூரியிலிருந்து வீடு திரும்பத் தன் சைக்கிளை எடுக்கச் சென்ற ஸ்டீபனுக்கு, இன்னும் அதிர்ச்சி காத்திருந்தது!  அவரது சைக்கிள் டயர் ட்யூப் நான்கு இடங்களில் ஓட்டை போடப்பட்டு, பஞ்சர் ஆகியிருந்தது!

சக ஆசிரியர்களாலும், பாசமிகு மாணவர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஸ்டீபனுக்குத் தன் வீட்டின் தனிமையான சூழ்நிலை, தான் கட்டிய உலகமே தன்னைச் சுற்றி இடிந்து விழுந்ததைப் போலக் காட்சியளித்தது.  'மாணவர்களின் அபிமானப் பேராசிரியர்' என்ற தற்பெருமையும், பெருமிதமும் நொறுக்கப்பட்டு, தனது உடைந்த உள்ளத்தின் வேதனைகளை ஆண்டவரின் பாதத்தில் கண்ணீருடன் சமர்ப்பித்தார்.  அந்நிலையில் அவர் உள்ளத்தில் இப்பாடல் உருவானது.  இந்நிகழ்ச்சிகளால் தனக்கு ஏற்பட்ட இழப்புகளையும் கூட, கிறிஸ்துவிடம் அர்ப்பணம் செய்த ஸ்டீபனின் உள்ளத்தை, இவ்வுலகில் எவரும் தரக்கூடாத, எவரும் எடுத்துக் கொள்ளக் கூடாத தேவ சமாதானம் நிரப்பியது.  வாழ்க்கைப் பிரச்சினையில், நம்பிக்கையின் நங்கூரமாக நின்று, தன்னைப் பெலப்படுத்திய ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்.

மிஷனரி இயக்கங்களுக்கும், மாணவர் சமுதாய ஊழியங்களுக்கும், CSI திருநெல்வேலித் திருமண்டல திருப்பணிகளுக்கும் என, திரு. ஸ்டீபன் தர்மராஜ் இதுவரை 40-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றி ராகமமைத்திருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட வேதவசன வெளிச்சத்தை மையமாகக் கொண்டு, தனது கிறிஸ்தவ வாழ்க்கையின் அனுபவத்தின் அடிப்படையில்,  அவர்  இப்பாடல்களை இயற்றியிருக்கிறார்.  இனிமையான இப்பாடல்களைத் தாலந்து படைத்த பல பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்.

இப்பாடல்களுக்கு, சகோதரர் ஸ்டீபனின் நண்பர் திரு. G. விக்டர் தங்கதுரை, பின்னிசை அமைத்து, தனது இன்னிசைக் குழுவைக் கொண்டு, பல நிகழ்ச்சிகளில் பாட வழி வகுத்தார்.  ஸ்டீபனைப் பாடல் இயற்றும் பணியில் மிகவும் உற்சாகமூட்டி வழிநடத்திய இந்நண்பர், ஸ்டீபன் சிறுவர் பணிக்கென இயற்றிய, ''புன்னகை செய்! இயேசு உன்னை நேசிக்கிறார்!'' என்ற பல்லவியை, ஆங்கிலத்தில், ஹாலந்து தேசத்திலும் பாடிப் பிரபல்யமாக்கினார்.

சகோதரி ஹெலன் சத்யா குழுவினரும் இப்பாடலைப் பல இன்னிசை நிகழ்ச்சிகளில் பாடி, மற்றும் ஒலிப்பதிவு செய்து, கிறிஸ்தவ சமுதாயமனைத்திற்கும் அறிமுகம் செய்தனர். 

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.