பிற பாடல்கள்
பாடல் : N எமில் ஜெபசிங்

பாடல் பிறந்த கதை

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
 
1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ,
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்;
சிறிதானதோ, பெரிதானதோ,
பெற்ற பணி செய்து முடித்தோர்.
                          - அழகாய் நிற்கும்
 
2. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்;
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள்.
                         - அழகாய் நிற்கும்
 
3. ஒன்றே ஒன்று என் வாஞ்சையாம்;
அழகாய் நிற்போர் வரிசையில் நான்
ஓர் நாளிலே நின்றிடவும்
இயேசு தேவா அருள் புரியும்
                        - அழகாய் நிற்கும்

ஆண்டவரின் கட்டளைப்படி, அவரது நாமத்தின் வல்லமையைக் கொண்டு தங்கள் ஊழியத்தை நிறைவேற்றி வெற்றியுடன் திரும்பிய சீஷர்கள், தாங்கள் செய்த அற்புத ஊழியங்களை மகிழ்வுடன் உற்சாகமாய் விவரித்தனர். அமைதியாய்க் கேட்ட ஆண்டவர், அந்த அற்புதங்களைக் காட்டிலும் சிறந்த அற்புதமாக, அவர்கள் நித்திய ராஜ்ஜியத்தின் சுதந்தரவாளிகளானதைச் சுட்டிக்காட்டி, "உங்கள் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதே! அந்த மாபெரும் அற்புதத்தை எண்ணிச் சந்தோஷப்படுங்கள்" என்றார்.

ஆம், ஜீவ புத்தகத்தில் நம் பெயர் உண்டா? யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட விசேஷத்தில் எழுதியுள்ளபடி இந்த ஜீவ புத்தகம் திறக்கப்படும். அதில் இடம் பெற்ற பெயர்கள் வாசிக்கப்பட்டு, அப்பரிசுத்தவான்கள் பரலோகில் பிரவேசிக்கும் பாக்கியம் பெறுவார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உத்தமத்துடன் பின்பற்றி, உன்னதத்தின் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு உலகைக் கடந்த பரிசுத்தவான்கள், மேகம் போன்ற திரளான சாட்சிகளாக, இவ்வரிசையில் இடம் பெற்றுவிட்டார்கள்.

விஷ்வவாணியின் ஸ்தாபகரான சகோதரர் எமில் ஜெபசிங், இக்கருத்தைத் தன் மனதில் கொண்டு, இப்படிப்பட்ட பரிசுத்தவான்களைத் தன் நினைவில் நிரந்தரமாக வைத்திருப்பது வழக்கம். ஒரு குறிப்பிட்ட நாளிலே, இப்படிப்பட்ட நினைவுடன், தனக்கு அருமையான, சாத்தான் குளத்தைச் சேர்ந்த பரிசுத்தவான் திரு காபிரி ஸ்டீபனையும், தனது பெற்றோர் மறைத்திரு வ.இ. நவமணி ஐயரையும், கிரேஸ் அம்மையாரையும் எண்ணி, ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த உலகில் பயணம் தொடரும் தாஈம், தனக்கும் நேரம் வரும்பொழுது, அந்த அழகான வரிசையில், பரிசுத்தவான்களுடன் நிற்க வேண்டும் என ஜெபிக்கலானார். அவ்வாறு ஜெபித்த நிலையில், அவர் உள்ளத்தில் இப்பாடல் உருவானது.

ஆண்டவர் தரும் நிலையான சமாதானத்தை, மனஅமைதியின்றித் தவிக்கும் இவ்வுலக மக்களுக்கு நற்செய்தியாக எடுத்துச் செல்லும் ஊழியர்களின் பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாய் இருக்கின்றன என்ற ஏசாயா தீர்க்கத்தரிசியின் விமரிசனத்தை உள்ளத்தில் நிறுத்தி, இவ்வுலக வாழ்வில் ஆண்டவருக்காக, அவர் தந்த தாலந்துகளைக் கொண்டு ஊழியம் செய்தால், நித்திய வாழ்வில் பன்மடங்கு ஆசீர்வாதங்களை நாம் பெறுவது நிச்சயமென்ற கருத்தை இப்பாடலில் நாம் காணலாம்.

மூன்றே சரணங்களுடன் சகோதரன் இயற்றிய இப்பாடல் பிரபலமானது. எனவே, பின் நாட்களில்,

"காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்;
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள்."

போன்ற பல சரணங்களைப் பலர் இப்பாடலுடன் இணைத்துப் பாடுகின்றனர்.

சகோதரர் எமில் ஜெபசிங், நாம் இவ்வுலகில் ஆண்டவரைத் துதித்துப் போற்ற வேண்டும், அவருக்காக நற்சாட்சியுடன் வாழ வேண்டும், அவரது ஊழியத்தில் உற்சாகமாக ஈடுபட வேண்டுமென, நம்மை ஊக்குவிக்கும் பல பாடல்களை எழுதியிருக்கிறார். அத்துடன் நித்திய பரம ராஜ்ஜியத்தைப் பற்றிய இப்படிப்பட்ட பல பாடல்களையும் இயற்றியிருக்கிறார்.

நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் ஆரம்ப நாட்களில், ஒருமுறை திருச்சி BHEL ஊரகத்தில் நடைபெற்ற கிதியோனியர் முகாமில் அவர் கலந்து கொண்டார். இந்த அரசு நிறுவனத்தின் ஊரக வீடுகள் அழகாக, ஒரே சீருடன் ஒழுங்காக அமைக்கப்பட்டிருந்தது அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இத் தொழிலகத்தின் அழகிய சூழ்நிலைக் காட்சிகள், பரலோகின் நித்திய வாசஸ்தலத்தை அவரது நினைவில் கொண்டுவந்தன. எனவே, பரலோகத்தை அழகாகச் சித்தரிக்கும்,

"அதிசயமான ஒளிமய நாடாம்,
(என்) நேசரின் நாடாம்!
நான் வாஞ்சிக்கும் நாடாம்!"

என்ற அருமையான பாடலை, இனிய ராகத்துடன் இயற்றினார். மற்றொரு சமயம், ஆண்டவரின் மகிமை நிறைந்த இரண்டாம் வருகையின் நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டும்,

" தேவ சேனை வானமீது கோடி கோடியாகத் தோன்றும்...
..... அல்லேலூயா !"

என்ற பாடலை அச்சிறப்புப் பவனிக்கே உரித்தான ஆரவாரத் தாளத்துடன் அமைத்தார்.

நற்செய்திப் பணியைத் தடைசெய்யும் நோக்குடன், மதமாற்றத் தடைச் சட்ட மசோதாவை, கிறிஸ்தவத்திற்கு எதிரான இயக்கங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது, வைராக்கியத்துடன்,

"நெஞ்சம் அஞ்ச வேண்டாம்;
செய்தி எடுத்துரைப்பீர்;
உங்களைத் தொடுகிறவன் என்றன்
கண்களைத் தொடுகிறவன்."

என்று வேத வாக்கின்படி, ஊழியர்களை தைரியப்படுத்தி, உற்சாகமூட்டினார்.

இப்படிப் பலவித சூழ்நிலைகளையும் பார்த்து, அவற்றின் மையத்தில் ஆண்டவரின் பிரசன்னத்தையும், வழிநடத்துதலையும் உணர்ந்த எமில், அவை தனக்குக் கற்றுத் தந்த கிறிஸ்தவத் தத்துவங்களையும், நல் நம்பிக்கையையும் பல பாடல்களாக எழுதினார். இப்படி அவர் எழுதிய பாடல்கள் நூற்றுக்கும் அதிகமாகும். இப்பாடல்கள் தொகுக்கப்பட்டு , " சிலுவை வீரர் கீதங்கள்"  என்ற பாடல் புத்தகமாக வெளியிடப்படுள்ளது. சகோதரி ஆனந்தியைத் திருமணம் செய்த எமிலுக்கு, டென்னிசா கேரலின், ஷாலினி, ஆன்ட்ரு என்ற மூன்று பிள்ளைகள் உண்டு. கடந்த 20 ஆண்டுகளாக, விஷ்வவாணியின் அகில இந்திய ஊழியங்களைத் துரிதமாக நடத்திவரும் இச்சகோதரர்,

"இந்த உலகத்தில் நாம் எத்தனை ஓட்டங்கள் ஓடினாலும், சாதனைகள் புரிந்தாலும், கண்மூடும் வேளையில், அழகாய் நிற்கும் பரிசுத்தரின் வரிசையில் நமக்கும் ஒரு இடம் உண்டு என்ற நிச்சயமே பெரியது." என்று கூறுகிறார். எனவே, நித்திய வாழ்வின் நிச்சயத்துடன், நமது இவ்வுலக வாழ்வின் ஓட்டத்தை ஆண்டவரின் துணையுடன், அவரை நோக்கியே பொறுமையோடு ஓடுவோமா?

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.