பிற பாடல்கள்
பாடல்: கிங்ஸ்லி அருணோதயக்குமார்

பாடல் பிறந்த கதை

பல்லவி
அந்த அற்புதம் நடந்த கதை
மிக ஆச்சரியம் ஆச்சரியமே!
அற்புதங்களில் எல்லாம் சிறந்த
ஆச்சரிய அற்புதமே!
 
சரணங்கள்
1. நடத்தியவர் தேவன் ;
நடந்ததென் உள்ளத்திலே ;
நம்பவும் முடியவில்லை ;
அனுபவம் புதுமையதால்.
                - அந்த அற்புதம்
 
2. தெய்வீக அன்பிது ;
பேரின்பம் தந்தது ;
விவரிக்க முடியாத
விளைவுகளைச் செய்தது.
                - அந்த அற்புதம்
 
3. கிறிஸ்துவின் ஆளுகை
கிருபையினால் வந்தது ;
கிரியை வழி பெற்றிட
மலிவுப் பொருள் அல்லவே.
                - அந்த அற்புதம்
 
4. சிந்தை தனில் தூய்மை ,
செயலாற்ற இலட்சியம் ,
சின்னவன் எந்தனுக்கும்
சிலுவையினால் வந்தது.
                - அந்த அற்புதம்

மெஞ்ஞானபுரத்தைச் சோந்த திரு. D.M. தங்க ராஜும், சாயர்புரத்தைச் சேர்ந்த எமிலி அம்மையாரும் திருமணத்தில் இணைந்து நடத்திய இல்லற வாழ்வின் மூன்றாவது தேவ ஈவாக, இப்பாடலாசிரியர், சகோதரர் டேவிட் கிங்ஸ்லி அருணோதயக்குமார் 25.07.1951 அன்று குன்னூரில் பிறந்தார்.  சாயர்புரம் போப் கல்லூரியில் தனது பொருளாதாரப் பட்டப் படிப்பை முடித்தார்.

தனது சிறு வயது துவங்கி, இயேசுவையே, தன் வாழ்வின் நம்பிக்கையின் நங்கூரமாகக் கொண்ட கிங்ஸ்லி, 1972- ம் ஆண்டு, தனது 21-வது வயதில், நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் முழுநேரப் பணியாளராக இணைந்தார்.  கடந்த 27 ஆண்டுகளாக, அவ்வியக்கத்தின் முக்கிய இளைய தலைமுறைத் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.  FMPB செய்தி-தொடர்புத் துறை நிர்வாகச் செயலாளராகவும், அறைகூவல் மற்றும் ஃபிரண்ட்ஸ் ஃபோகஸ் என்ற தமிழ்/ஆங்கில மாத இதழ்களுக்கு நிர்வாக ஆசிரியராகவும் பொறுப்பேற்று, சிறப்புடன் பணியாற்றிவரும் இவ்வெழுத்தாளரின் பேனாவின் மூலம், இப்பாடலை அவர் எப்படி இயற்றினார் என்று பார்ப்போமா?

''நூறு ஆண்டுகளில் பலர் செய்யக்கூடாததை பத்து ஆண்டுகளுக்குள் செய்துமுடித்துவிட்டு, தனது பணிக்காலம் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் முடிந்தது என்ற முடிவுடன் பிரியாவிடைபெற்றுச் சென்றவர் சகோ. எமில் ஜெபசிங்.  இயக்கத்தோடுள்ள உறவை அவ்விதம் அவர் விலக்கிக்கொண்ட போது பெருந்தன்மையோடு எவரையும் தன்னோடு இழுத்தும் செல்லாதவர். அந்த பத்து ஆண்டுகளில் அவரது பேனாமுனையில் பிறந்த எழுத்துக்கள், பாடல்கள், சத்தான வரிகளாய், சத்திய ஆவியானவரின் அனல் தெரிக்கும் வசனங்கள் தீர்க்கதரிசன மொழியாய் வெளிவந்தது. இந்நிலையில், அவரது விலகல் இயக்கத்தில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியதில் வியப்பொன்றுமில்லை என்றாலும், ''மனிதர்கள் வந்து போவார்கள்; தேவ அரசின் கட்டுமானப்பணியோ ஒருநாளும் ஸ்தம்பிப்பதில்லை,'' என்ற பீட்டர் மார்ஷல் என்பவரின் கூற்று பொய்யானதில்லையே.

'இனி கிதியோனியர் முகாம்களில் பாடல்கள் இல்லாமல் போகுமே', என்ற துக்கம் என் நெஞ்சை அடைத்தபோது , தமிழ் இலக்கியப் புலமையிலா எனக்கும் எழுதும் கிருபையை தேவன் அளித்தார். 'அந்த அற்புதம் நடந்த கதை' என்ற முதலடியோடு துவங்கும் இந்தப் பாடல், திருச்சியை நோக்கிப் பயணமான இரயில் பயணத்தில் எனக்குள் சுரந்த வரிகளாகும்.  என் மனதை கிறிஸ்து கொள்ளை கொண்டதை நினைத்துப் பார்த்த போது விளைந்த முத்துச் சரங்கள் இவை.

மயிர்க்கூச்சரிக்கும் சம்பவங்களால் அலங்கரித்து,  தங்கள் சாட்சியை பலர் கவர்ச்சிகரமாகச் சொல்லுவதைக் கேட்டிருப்பீர்கள். சில நேரங்கள் அவ்வித சாட்சிகள் பாவத்துக்கு நடத்தும் விளம்பர மேடையாகவும், 'நான் மனந்திரும்ப இப்போது அவசியமில்லை.  காரணம் அப்படி குலைநடுங்கும் பாவக் கொடுமைகள் நான் இன்னும் செய்யவில்லை,' என்று பலர் நினைக்கத்தூண்டும் ஏதுக்களாகவே அமைவதுண்டு.

இந்தப் பாடலில் எனக்குள் பிறந்த அந்த அற்புத மலர்ச்சி, நித்திய பேரின்பம், கிறிஸ்துவின் இராஜ பிரவேசத்தால் மட்டுமே வந்தது.  சின்னவன் எனக்கு தெய்வம் தந்த பரிசு. அந்த நிகழ்ச்சி இன்றும் நம்ப முடியாத ஒன்று. அதுவே எனக்குள் வாழும் வாழ்வுக்கான குறிக்கோளை வெளிப்படுத்தியது என்று தேவனை மையப்படுத்தி, மகிமைப்படுத்தி, அருள் பிரசாதம் எழுத தேவன் துணைபுரிந்தார். இந்தப் பாடலைக் கேட்ட பேராசிரியர் கிறிஸ்துதாஸ் அவர்கள், இப்பாடலின் முதல்வரியைக்கொண்ட ஒரு புத்தகத்தை எழுதி, அந்த புத்தகத்தில் இப்பாடல் அவருக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை எழுதியிருந்தார்கள்.

இந்தப் பாடலுக்குப் பின் சுமார் 100 பாடல்கள் எழுதிவிட்டேன்.  தமிழ்த் திருச்சபைக்கு அறைகூவல் இதழ் வழியாக எழுதியும் 'செயல்வீரர் கீதங்கள்' ஒளிப்பேழை வழியாக பாடல்கள் இயற்றியும் சேவைபுரிய அருள்கூர்ந்த என் தேவனுக்கு ஸ்தோத்திரம்! '' - கிங்ஸ்லி அருணோதயக்குமார்.

தென்னிந்தியத் திருச்சபையின் அங்கத்தினரான கிங்ஸ்லி, 23.8.1978 அன்று, சகோதரி லில்லிபெட் அம்மையாரை மணம் புரிந்தார்.  இத்தம்பதியினருக்கு, ஆண்டவர் மூன்று பெண்மக்களை அளித்திருக்கிறார்.  இம் மூவரும் தங்கள் வாலிப நாட்களிலேயே ஆண்டவரை நேசித்து, அவரைத் துதித்து, ஒலி நாடாக்களில் பாடியுள்ளனர்.

இப்பாடல், 1977-ம் ஆண்டு, நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் திருநெல்வேலி மாவட்ட கிதியோனியர் முகாம் பண்டாரச் செட்டிவிளை - கிறிஸ்தியான் நகரத்தில் நடைபெற்றபோது, முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்டது.  பாடலின் கருத்தும், ராகமும் சிறப் பாக அமைந்திருந்ததால், கூட்டத்திற்கு வந்த அனைவரும் விரும்பிப் பாடினர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.