பாமாலைகள்
(Amazing grace)
பாடல்: ஜான் நியூட்டன்

பாடல் பிறந்த கதை

1. வியத்தகு கிருபையே
நீசனை மீட்டதே;
தொலைந்த நான் மீட்கப்பட்டேன்;
மீண்டும் பார்வை பெற்றேன்.
 
2. பாவ பயம் தந்த கிருபை
கலக்கம் நீக்கிற்றே;
விசுவாசித்த நாள் முதல்
பெற்றேன் நல் கிருபை.
 
3. கஷ்டம், கண்ணி, அபாயங்கள்
கடந்தேன் அனைத்தும்;
இதுவரை காத்த கிருபை
இன்னும் வழி காட்டும்.
 
4. கர்த்தர் நன்மை வாக்களித்தார்;
வார்த்தை என் நம்பிக்கை;
என் கேடகம் பங்குமவர்
வாழ்வு முழுவதும்.

''நான் நினைவு இழந்தவனாகிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், இரண்டு காரியங்களை மட்டும் ஒருபோதும் மறவேன். ஒன்று, நான் மகாப் பாவி; மற்றொன்று, கிறிஸ்து மாபெரும் ரட்சகர்.''

இது, 18-ம் நூற்றாண்டின் சிறந்த நற்செய்திப் போதகர், தான் சாகுமுன் கொடுத்த செய்தியாகும்!

ஆம், ''கேவலமான அடிமைத் தொழிலில் ஈடுபட்டு, பின்னர் மனம் மாறிய, அடிமைக் கப்பல் மாலுமிகளின் தலைவன்'' என்று போகுமிடமெல்லாம் தன் அனுபவ சாட்சியைப் பகிரங்கமாக அறிவித்த நியூட்டன், தனித்தன்மை வாய்ந்தவர். எனவே, தன் மரணத்திற்கு முன்பே, தன் கல்லறை வாசகத்தை இவ்வாறு எழுதி வைத்தார்:

''ஒரு காலத்தில் கேவலமான உதவாக்கரை; ஆப்பிரிக்க அடிமை வியாபாரிகளின் கைக்கூலி; பின்னர், கர்த்தரும் ரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பட்ட இரக்கத்தால் காக்கப்பட்டு, மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டு, தான் முன்னர் ஊக்கமாய் அழிக்க முயற்சித்த, அதே சத்தியத்தைப் போதிக்க நியமனம் பெற்றவன்''

இவ்வாசகத்தை, இன்றும் இங்கிலாந்திலுள்ள ஓல்னியின் ஆலய வளாகத்தில் உள்ள, ஜான் நியூட்டனின் சிறு கல்லறையில் காணலாம்.

நியூட்டன் 1725-ல் பிறந்தார். அவரது தாய் ஒரு பக்தி நிறைந்த பெண். நியூட்டன் 7 வயதாயிருக்கும்போதே மரித்துப் போனாள். தந்தை மீண்டும் திருமணம் செய்தபோது, நியூட்டன் பள்ளியில் தங்கிப் படிக்குமாறு அனுப்பப்பட்டான். ஆனால், அதில் நாட்டமில்லாததால், 11 வயதிலேயே, தன் தகப்பனின் கப்பலில் வேலை செய்யத் துவங்கினான். தன் வாலிப வயதிலே, மனம்போல, துன்மார்க்கமாய் வாழ்ந்தான். பெரியவனானபோது, அடிமைகளைக் கடத்திச் செல்லும் தீய தொழிலில் ஈடுபட்டு, ஒரு அடிமைக் கப்பலின் தலைவனானான்.

10.3.1748 அன்று, ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்து திரும்பும்போது, புயல் உருவாகி, பயணம் அபாயகரமாக மாறியது. நம்பிக்கையிழந்த நிலையில், தாமஸ் A கெம்பிஸ் எழுதிய, ''கிறிஸ்துவையே பிரதிபலிப்பது'' என்ற புத்தகத்தை, நியூட்டன் வாசிக்க ஆரம்பித்தார். ஆவியானவர் அந்த பயங்கர சூழ்நிலையைக் கொண்டும், அப்புத்தகத்தைக் கொண்டும், நியூட்டனின் உள்ளத்தில் கிரியை செய்தார். நியூட்டன் இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதற்குப் பின்னும், தன் அடிமைத் தொழிலைத் தொடர்ந்த நியூட்டன், தன் கப்பலில் மாலுமிகளுக்கு ஆராதனை நடத்தி, தன் உள்ளத்தை சமாதானப்படுத்த முயன்றார்.

எனினும், மனிதாபிமானமற்ற இந்தத் தொழிலின் தன்மையை உணர்ந்த நியூட்டன், முற்றுமாக அதை விட்டுவிட்டு, அதற்கு எதிராகப் போராட ஆரம்பித்தார். இங்கிலாந்து திரும்பியவுடன், 12.2.1750 அன்று, மேரி கேட்லெட்டை திருமணம் செய்தார். அடுத்த 9 ஆண்டுகள், லிவர்பூல் துறைமுகத்தில், எழுத்தராகப் பணிபுரிந்தார். அந்நாட்களில் நற்செய்தியை அறிவிக்க, ஆண்டவர் விடுத்த அழைப்பை உணர்ந்து, ஊழியத்திற்குத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டார். நற்செய்திப் பிரசங்கியார்களான, ஜார்ஜ் வொயிட்பீல்டு, மற்றும் வெஸ்லிகளால் உற்சாகப்படுத்தப்பட்டார். ஆனால், இங்கிலாந்தின் திருச்சபையோடு சேர்ந்து ஊழியம் செய்யத் தீர்மானித்தார்.

தனது 39-வது வயதிலே, ஜான் நியூட்டன் கேம்பிரிட்ஜிக்கு அருகிலுள்ள ஓல்னியில் போதகராகப் பொறுப்பேற்றார். அடுத்த 15 ஆண்டுகள் வல்லமையாக ஊழியம் செய்தார். ஆலயத்தில் மட்டுமன்றி, வெளிக்கட்டிடங்களிலும், புதுமையாக ஆராதனைகளை நடத்த ஆரம்பித்தார். ''மனம் மாறிய கப்பல் மாலுமிகளின் தலைவனின்'' சாட்சியையும், நற்செய்தியையும் கேட்க, மக்கள் பெருங்கூட்டமாகக் கூடினார்கள். செய்தியோடு, அதற்கேற்ற பாடல்களையும், இக்கூட்டங்களில் பாடிய நியூட்டன், அதற்குத் தேவையான பாடல்களை, அருகிலிருந்த தன் நண்பரும், சிறந்த புலவருமான, வில்லியம் கவுப்பருடன் சேர்ந்து எழுதினார். 1779-ம் ஆண்டு, இப்பாடல்களின் தொகுப்பு, ''ஓல்னிப் பாடல்கள்'', என்ற தலைப்பில் வெளியானது. இப்பாடல் புத்தகத்தின் 349 பாடல்களில், கவுப்பர் எழுதிய 67 பாடல்களைத் தவிர, மீதி அனைத்தும் நியூட்டன் எழுதியவையே.

ஓல்னி ஊழியத்தை முடித்தபின், எஞ்சிய 28 ஆண்டுகள், நியூட்டன் லண்டனின் முக்கிய ஆலயமாகிய, தூய மரி உல்னாத் திருச்சபையின் போதகராகப் பணியாற்றினார். மிஷனரி கிளாடியஸ் புக்கனன், மற்றும் வேதாகம விளக்க உரைகள் எழுதிய தாமஸ் ஸ்காட் ஆகியோர், இந்த ஊழியத்தில் நியூட்டன் கண்ட கனிகளாவர்.

அந்நாட்களில், வில்லியம் வில்பர்போர்ஸ் போன்ற அரசியல் தலைவர்களுடன் நியூட்டன் தொடர்பு கொண்டு, அடிமைத் தொழிலை அறவே ஒழிக்கப் பாடுபட்டார். அதன் விளைவாக, அவர் மரித்த 1807-ம் ஆண்டு, அடிமைத் தொழிலை ஒழிக்கும் சட்டத்தை, இங்கிலாந்தின் பாராளுமன்றம் நிறைவேற்றியது.

தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய ஆண்டவரின் இரக்கத்தையும், கிருபையையும், தான் மரிக்கும் 82-வது வயதுவரை, ஜான் நியூட்டன் வியந்து கொண்டேயிருந்தார். அதுவே அவர் வாழ்வின் போதனையும், அவர் எழுதியவைகளின் மையக் கருத்துமாக விளங்கியது. வயதான நாட்களில், நினைவிழந்து, கண்பார்வை மங்கிய நிலையில், பெலன் குன்றிப் போயிருந்த நியூட்டனை, ஊழியத்திலிருந்து ஓய்வு பெறுமாறு, அவருடைய திருச்சபை நண்பர் ஒருவர் ஆலோசனை கூறினார். அதற்கு நியூட்டன், ''ஆப்பிரிக்கருக்கு அநீதி இழைத்த இந்த மனிதனின் பேச்சு நிற்கும்வரை, அது சாத்தியமில்லை'' என்று பதிலளித்தார்.

இப்பாடல் நியூட்டனின் வாழ்க்கையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஆறு சரணங்களுடன் எழுதப்பட்ட இப்பாடலுக்கு, நியூட்டன் அளித்த தலைப்பு, ''விசுவாசத்தின் கண்ணோட்டமும், எதிர் நோக்குதலும்''. இப்பாட்டுக்கு ''வெர்ஜீனியா ஹார்மனி'' என்ற இசைப் புத்தகத்திலிருந்த ராகம் இணைக்கப்பட்டது. எனவே, இப்பாடலின் ராகமும், "வியத்தகு கிருபை'' என்றே அழைக்கப்படுகிறது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.