பாமாலைகள்
 
(While shepherds watched their flocks)
பாடல்: நாகூம் டேட்

பாடல் பிறந்த கதை

1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க,
விண்ஜோதி கண்டனர்.
 
2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண்தூதன்: ''திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.''
 
3. ''தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய்க் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.''
 
4. ''இதுங்கள் அடையாளமாம்,
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்.''
 
5. என்றுரைத்தான்; அஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.
 
6. "மா உன்னதத்தில் ஆண்டவா,
நீர் மேன்மை அடைவீர்;
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்.''

புரோடெஸ்டென்ட் கிறிஸ்தவ சபை உருவான 16-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டு வரை, திருச்சபையின் பாடல்கள் அனைத்தும் ''ஸ்டெர்ன்ஹோல்ட் ஹப்கின்ஸ் சால்ட்டர்'' என்ற சங்கீதங்களின் அமைப்பில் பாடப்பட்டன. இப்பாடல்கள் கரடுமுரடான அமைப்பாக இருந்ததால், அவற்றைப் பாடுவது கடினமாக இருந்தது. எனவே, சங்கீதங்களை நவீன முறையில் மாற்றியமைத்து, எளிதில் பாடும்படி அமைக்க, 1696-ம் ஆண்டு, இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர்களான நாகூம் டேட்டும், நிக்கோலஸ் பிராடியும் முயற்சி எடுத்தனர்.

கடும் எதிர்ப்புகள் மத்தியில், வில்லியம் அரசனின் ஆதரவுடன், இப்புதிய அமைப்பு சங்கீதங்கள் இங்கிலாந்து திருச்சபையில் உபயோகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, 1700-ம் ஆண்டு, சங்கீதங்களின் மற்றொரு துணைத் தொகுப்பையும் வெளியிட்டனர். இத்தொகுப்பில், சங்கீதங்களைத் தவிர, 16 பாடல்களையும் அறிமுகம் செய்தனர். இவற்றில் இப்பாடலும் ஒன்று.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வேத பகுதியில் வரும், ''தேவ தூதர்கள் மேய்ப்பர்களுக்கு இயேசு பிறந்த நற்செய்தியை அறிவிக்கும் சம்பவத்தை'', எளிய நடையில் கிறிஸ்மஸ் கீதமாக இப்பாடலில் எழுதினார்கள். மற்றப் பாடல்களனைத்தும் காலத்தினால் அழிக்கப்பட்டுப் போயினும், இந்த கிறிஸ்மஸ் பாடல், பல நூற்றாண்டுகளாக, கிறிஸ்மஸ் தரும் உண்மையான மகிழ்ச்சியைச் சுட்டிக் காட்டும் பாடலாக விளங்குகிறது.

நாகூம் டேட் 1652-ம் ஆண்டு, அயர்லாந்தைச் சேர்ந்த டப்ளினில் வாழ்ந்த போதகரின் மகனாகப் பிறந்தார். லண்டனின் திருத்துவ இசைக் கல்லூரியில் படித்துத் தேறினார். 1690-ம் ஆண்டு, ''இங்கிலாந்து தேசப் புலவர்'', என்ற சிறப்புப் பட்டமும் பெற்றார். ஆனால், அவரது குடிப்பழக்கமும், ஊதாரித்தனமான செயல்களும் அவரது வாழ்வைக் கெடுத்தன. இறுதியில், 1715-ம் ஆண்டு லண்டனில், ஒரு கடன்பட்டோரின் அகதி இல்லத்தில், பரிதாபமாக மரித்தார். அவருடைய உற்ற நண்பரான பிராடியோ, தன் வாழ்நாள் முழுவதும், போதகராக, ஆண்டவருக்குச் சேவை செய்தார். இப்பாடலுக்கு, புகழ்பெற்ற ஜார்ஜ் F. ஹேன்டல் அமைத்த ராகத்தை, ''கிறிஸ்மஸ்'' என்ற தலைப்பில் இணைத்தனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.