பாமாலைகள்
(Joy to the world)
பாடல்: ஐசக் வாட்ஸ்

பாடல் பிறந்த கதை

 1. மகிழ்ச்சியே! கர்த்தர் வந்தார்!
ராஜனை ஏற்போமே
உள்ளமெல்லாம் ஆயத்தமாய்
வானவர் பாடுவார்! மானிடர் பாடுவார்!
இணைந்தெல்லோரும் பாடுவார்!
 
2. மகிழ்ச்சியே! மீட்பர் ஆட்சி!
மானிடர் பாடவே
காடு மேடு மலை வெள்ளம்
எதிரொலிக்குமே! சந்தோஷமாகவே!
மகிழ்ந்து பாடிப் போற்றுமே.
 
3. வேதனை, பாவம் நீங்குமே
முட்கள் மறையுமே
ஆசீர்வாதம் பொழிவாரே
சாபங்கள் நீங்குமே (2)
சாபங்கள் எங்கும் நீங்குமே.
 
4. ஆள்கிறாரே நம் ஆண்டவர்
சத்யம், கிருபையால்
அவர் நீதி மகிமையாய்
எங்கும் விளங்குமே! அன்பின் மாட்சிமையே!
அவரின் அன்பின் மாட்சிமை.

ஞாயிறு காலை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாட்களின் வழக்கப்படி, சங்கீதங்களை, போதகர் முதலில் மெதுவாகப் பாட, சபையோர் அவற்றைக் கிளிப்பிள்ளைகள் போல, மீண்டும் பரிதாபமாகப் பாடினார்கள். ஆராதனையில் போதகரின் மகன் ஐசக் வாட்ஸ் பொறுமை இழந்து காணப்பட்டான். ஆராதனை முடிந்தவுடன், போதகரின் வீட்டில் சலசலப்பு!

"தேவனைத் துதித்துப் பாடுவது, பரலோகத்தின் பரவசத்தை நினைப்பூட்டும் முக்கிய ஆராதனைப் பகுதியாகும். ஆனால், பூமியில் நாம் அதைப் பாடும் முறையோ, சகிக்க முடியாத நிலையில் இருக்கிறது!" என வார்த்தைகளைக் கொட்டினான் வாட்ஸ். வெகுண்ட அவன் தந்தை, "வாலிபனே, உன்னால் முடிந்தால், இதைவிட மேலான பாடல்களை எழுதிக் கொடு." என்று சவால் விட்டார்.

இச்சவாலை ஏற்ற ஐசக் வாட்ஸ்,  அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, ஞாயிறுதோறும் ஒரு புதுப்பாடலை எழுதினார். அதைத் தொடர்ந்து, வேதாகமத்தின் அனைத்து சங்கீதங்களிலும், பன்னிரென்டைத் தவிர மற்றெல்லாவற்றையும், புத்தெழுச்சிப் பாடல்களாக எழுதினார்.

"புதிய ஏற்பாட்டுத் திருச்சபையின் அனுபவ நடையில், புதிய கருத்துச் செறிவுடன், சங்கீதங்களை, யூதருடைய எபிரெய பாணியிலிருந்து வேறுபடுத்தி, கிறிஸ்தவ முறையில் பாடவேண்டும்." என்பது வாட்ஸின் கருத்து. எனவே, இம்முறையில், முற்றும் புதிய கோணத்தில், சங்கீதங்களை உற்சாகத்துடன் பாடுவதற்கு, அவர் வழிவகுத்தார்.

தேவன், ராஜாதி ராஜனாக, நீதியோடும், நியாயத்தோடும் பூமியை அரசாளுவார், என்பதையும், அவர் தமது கிருபையையும்,  இரட்சிப்பையும் விளங்கச் செய்கிறார் என்பதையும் குறித்துப் பாடப்படும்  மகிழ்ச்சிக் கீதமாக, சங்கீதம் 98 விளங்குகிறது. ஐசக் வாட்ஸ் இப்பாடலின் மூலம், இச்சங்கீதத்திற்கு புதியதொரு விளக்கத்தைக் கொடுக்கிறார். பூமியும், அதின் குடிகளும், சமுத்திரமும், அதின் நிறைவும், முழங்கிக் கெம்பீரித்து பெத்லெகேம் பாலகனைப் போற்றுவதாக, வாட்ஸ் தெளிவுபடுத்துகிறார். அத்துடன், பிலிப்பியர் 4:4 ல், பவுல் எழுப்பும் மகிழ்ச்சி மணி ஓசையை, இந்தக் கருத்துடன் இணைத்து, இப்பாடலை 1719-ம் ஆண்டு எழுதினார்.

இந்த இனிய கிறிஸ்மஸ் பாடலுக்கு, ஜார்ஜ் பிரடெரிக் ஹாண்டல் ராகம் அமைத்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.