பாமாலைகள்
(When all my labours and trials)
பாடல் : சார்லெஸ் H. காபிரியேல்

பாடல் பிறந்த கதை

 1. பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்,
துன்பமும் துக்கமும் மாறியே போம்;
நன்மைச் சொரூபியைத் தரிசிப்போம்,
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.
 
   பேரின்பமாம், பூரிப்புண்டாம்,
   பேரின்பமாம், பூரிப்புண்டாம்,
   மேலுலகில் - (மேல்) - அவர் சந்நிதியில்
   மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்.
 
2. மாட்சிமையான காருணியத்தால்
மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்,
சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்,
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.
- பேரின்பமாம்
 
3. அன்பராம் இஷ்டரைக் கண்டு கொள்வோம்,
இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்,
என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்,
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.
- பேரின்பமாம்.

''அம்மா! நான் உலகெங்கும் பிரபலமாகும் ஒரு பாடலை எழுத விரும்புகிறேன்''.

''ரொம்ப நல்லது, மகனே! நீ அமெரிக்க ஜனாதிபதியாவதைக் காட்டிலும், அனைவருக்கும் உதவும் நல்ல பாடலை எழுதுவதுதான் மிகச் சிறந்தது.''

ஆம், அச்சிறுவனின் வாஞ்சை நிறைவேறியது. அவன் தாயின் கணிப்பும் தவறவில்லை. ஓரிரு சந்ததிகளால் மட்டும் அறியப்பட்டு, போற்றப்படும் அமெரிக்க ஜனாதிபதியைக் காட்டிலும், வழி வழியாய்ப் பல சந்ததிகளால், பல தேசங்களில், பல்வேறு மொழிகளில் விரும்பிப் பாடப்படும் இப்பாடலை இயற்றி, அதிகப் புகழ்பெற்றான் அந்த சிறுவன், சார்லெஸ் H. காபிரியேல்.

18.8.1856 அன்று அயோவாவிலுள்ள வில்ட்டனில்  சார்லெஸ் பிறந்தார். சிறுவன் சார்லெஸின் இல்லம், அநேக மக்கள் கூடி, உற்சாகமாய் தேவனைத் துதித்துப் பாடி, ஆராதிக்கும் இடமாக விளங்கியது. எனவே, அவர் சிறுவயதிலிருந்தே, இசையில் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார். இதனால், கிரமமாக சங்கீதக் கல்வி பெறாதபோதிலும், இசைப் பள்ளிகளை நிறுவிப் போதிக்குமளவிற்கு இசை ஞானம் பெற்றிருந்தார். இந்த இசைப் பள்ளிகளின் மூலம், சார்லெஸ் பலருக்கு இசைப்பயிற்சி அளித்தார்.

சார்லெசுக்கு, எட்கார்டு என்ற நண்பருண்டு. அவர் மிஸ்úஸôரியிலுள்ள ''சூரியக் கதிரொளி மீட்பகம்'' என்ற ஸ்தாபனத்தின் தலைவர். ஒரு நல்ல விசுவாசி. அவர் முகம் எப்பொழுதும், ஆனந்தக் களிப்புடன் பளிச்சிடும். அவர் கலந்துகொள்ளும் நற்செய்திக் கூட்டங்களிலும், ஜெபக் கூட்டங்களிலும், திடீர் திடீரென்று, ''மகிமை'' என்ற உற்சாக ஆரவாரம், அவர் வாயிலிருந்து புறப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

புன்னகை பூத்த முகம் கொண்ட எட்கார்டை, அனைவரும் ''பளிச்சிடும் முகம்'' என்றே அழைத்தனர். அவர் ஜெபிக்கும்போது, ஒவ்வொரு முறையும், ''அது எனக்கு மகிமையின் பூரிப்பைத் தருவதாக'' என்று கூறி முடிப்பார்.

இந்த சொற்றொடர்களை, மீண்டும் மீண்டும், பல சந்தர்ப்பங்களில் எட்கார்டு கூறக் கேட்ட சார்லெஸ், அதையே தலைப்பாகக் கொண்டு, இப்பாடலை எழுதினார். எட்கார்டு இவ்வுலக வாழ்வை முடித்து, பரலோகம் செல்லும் நாள் வந்தபோது, இப்பாடலையே தன் வாழ்வின் அனுபவ சாட்சியாகப் பாடி மரித்தார்.

சார்லெஸ் எழுதிய பாடல்களுக்கு, அவரே ராகத்தையும் அமைப்பார். சிறந்த இசை வல்லுனராக விளங்கிய சார்லெஸின் பாடல்களை, பிரபல பாடகரான ஹோமர் ரோட்ஹீவர், பில்லி சன்டேயின் நற்செய்திக் கூட்டங்களில் பாடி, பிரபலமாக்கினார். தன் வாழ்நாள் முழுவதையும், இறைவனின் இசைப் பணிக்கென அர்ப்பணித்த சார்லெஸ், 35 நற்செய்திப் பாடல் புத்தகங்களையும், 8 ஞாயிறு பள்ளிப் பாடல் புத்தகங்களையும், ஆண்களுக்கான 7 பல்லவிப் புத்தகங்களையும், பெண்களுக்கான 6 பாடல் புத்தகங்களையும், 10 சிறுவர் கீதப் புத்தகங்களையும், மற்றும் அநேக பாடகர் குழு இசைப் புத்தகங்களையும் எழுதினார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.