பாமாலைகள்
(Rock of ages)
பாடல்: அகஸ்டஸ் ங. டாப்லடி

பாடல் பிறந்த கதை

1. பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும்,
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவ தோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்.
 
2. எந்த கிரியை செய்துமே,
உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும்,
பாவம் நீங்க மாட்டாதே;
நீரே மீட்பர் இயேசுவே.
 
3.யாதுமற்ற ஏழை நான்,
நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே,
உந்தன் நீதி ஆடையே;
தூய ஊற்றை அண்டினேன்,
தூய்மையாக்கேல் மாளுவேன்.
 
4. நிழல் போன்ற வாழ்விலே,
கண்ணை மூடும் சாவிலே,
கண்ணுக்கெட்டா லோகத்தில்,
நடுத்தீர்வைத் தினத்தில்,
பிளவுண்ட மலையே,
புகலிடம் ஈயுமே.

 

1776-ம் ஆண்டு, "நற்செய்தி மலர்" என்ற பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாக எழுதப்பட்ட இப்பாடலுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு:

"உலகிலேயே மிகுந்த பரிசுத்தமுள்ள விசுவாசிக்கு, வாழ்விலும் சாவிலும் உதவும் ஜெபம்."

பல பாடல்கள் ஒரு மனிதனின் உள்ளார்ந்த தேவைகளையோ, அனுபவங்களையோ,  அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. ஆனால், இப்பாடலோ,  ஆவிக்குரிய தத்துவத்தில் எழுந்த கருத்துவேறுபாடுகளின் உச்ச நிலையில் எழுதப்பட்டது. ஆகிலும், ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பாடல்களில் பிரபலமானதாக இது விளங்குகிறது. பலதரப்பு மக்களின் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்கும் பெருமையும் வாய்ந்தது.

இப்பாடலை எழுதிய அகஸ்டஸ் மான்டேகு டாப்லடி, இங்கிலாந்திலுள்ள பார்ன்ஹாமில், 04-11-1740 அன்று பிறந்தார். அவரது தந்தை மேஜர் ரிச்சர்டு டாப்லடி, அகஸ்டஸ் சிறுகுழந்தையாக இருக்கும்போதே, யுத்தத்தில் மரணமடைந்தார். சிறுவயதிலிருந்தே பெலவீனமாயிருந்த அகஸ்டûஸ, அவரது தாயார் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியில் சேர்த்தார். கடினமான சூழ்நிலையின் மத்தியிலும், முழு முயற்சியுடன் படித்த டாப்லடி, தனது 11வது வயதிலேயே மத வைராக்கியமுள்ளவராக விளங்கினார். 14-ம் வயதிலே பாடல்கள் எழுத ஆரம்பித்தார். பின்னர், டப்ளினிலுள்ள திரித்துவக் கல்லூரியில் படிக்கும்போது, சில மெதடிஸ்ட் ஊழியர்களின் வழிநடத்துதலால், தமது 16-வது வயதில், இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றார். ஜான், மற்றும் சார்லெஸ் வெஸ்லியின் ஊழியங்களில் ஆர்வம் கொண்டார்.

பின்னர், ஊழியம் செய்வதற்குத் தன்னை அர்ப்பணம் செய்து, தன் படிப்பைத் தொடர்ந்தபோது, ரட்சிப்பின் அனுபவ தத்துவத்தில், ஜான் கால்வினின் "தெரிந்தெடுப்பு வழி" யே சரியெனக் கருதினார். எனவே, "அனைவருக்கும் ரட்சிப்புப் பெற வாய்ப்புண்டு," என்ற வெஸ்லியின் ஆர்மீனியப் போதனையை எதிர்த்துப் போராடினார். நேரிடைப் பொது தர்க்கங்கள் மூலமாகவும், துண்டுப் பிரதிகள் மூலமாகவும், பிரசங்க மேடைகளின் வாயிலாகவும், வெஸ்லிகளுடன் மதக் கருத்துப் போராட்டங்களை நடத்தினார்.

இந்தக் கருத்து வேறுபாட்டில், தன் நிலையை விரிவாக எடுத்துக்காட்டவே, இக்கட்டுரையையும், பாடலையும் எழுதி வெளியிட்டார். இப்பாடலின் இரண்டாம் சரணம் வெஸ்லியின் ஆர்மீனியக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி எழுதப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஒரு வினோதமான காரியம் என்னவென்றால், தனது கருத்தை நிலை நாட்ட இப்பாடலை எழுதிய டாப்லடி, சார்லெஸ் வெஸ்லி 30 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு பாடலின் முன்னுரையையே, இப்பாடலில் உபயோகித்தார்.

டாப்லடி, 1762-ம் ஆண்டு, ஆங்கிலிக்கன் திருச்சபையின் போதகராக நியமிக்கப்பட்ட நாள் முதல், பல திருச்சபைகளில், வல்லமை நிறைந்த நற்செய்திப் போதகராக ஊழியம் செய்தார். அவருடைய பெலவீனமான தேகம், எலும்புருக்கி நோயால் தாக்கப்பட்டதால், தமது 38-வது வயதிலேயே மரித்தார். ஆர்மீனிய ரட்சிப்புக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடினாலும், ஆவிக்குரிய ஆழ்ந்த அனுபவம் பெற்ற, ஒரு மாபெரும் நற்செய்தித் தலைவரென, அனைவராலும் அவர் மதிக்கப்பட்டார். தன் மரண நேரத்தில், டாப்லடி பின்வருமாறு கூறியது அவரது முதிர்ந்த ஆவிக்குரிய நிலையைக் காட்டுகிறது:

"என் இதயம் நாளுக்கு நாள், மகிமையை நோக்கித் துரிதமாய்த் துடிக்கின்றது. சுகவீனமோ, வேதனையோ, மரணமோ, என்னை சிறிதும் பாதிக்க முடியாது. என்னுடைய ஜெபங்களெல்லாம், துதியின் சத்தமாக மாறிவிட்டன."

இப்பாடலுக்கு, 1830-ம் ஆண்டு, அமெரிக்க திருச்சபை இசைமேதையான தாமஸ் ஹேஸ்டிங்ஸ், "டாப்லடி" என்ற தலைப்பிலேயே, ராகம் அமைத்தார். இப்பாடல் எழுதப்பட்டதின் நோக்கம் சிறப்பானதாக இல்லாவிட்டாலும், கடந்த பல நூற்றாண்டுகளாக, அநேக விசுவாசிகளின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் ஊன்றுகோலாய் அமைந்தது. இங்கிலாந்தின் பிரதமர் கிளாட்ஸ்டனின் விருப்பப் பாடலாக, அவரது அடக்க ஆராதனையிலும் இப்பாடல் பாடப்பட்டது. ஆல்பெர்ட் என்ற இளவரசர், தன் மரணப்படுக்கையில் ஆறுதல் பெற, இப்பாடலை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டே இருந்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.