பாமாலைகள்
(I will sing of my Redeemer)
பாடல்: பிலிப். P. பிளிஸ்

பாடல் பிறந்த கதை

1. பாடுவேன் என் மீட்பரையே,
அவர் அன்பின் மாட்சிமை;
சாபக்கேட்டினின்று மீட்க
ஈனக் குருசேறினார்.
 
  பாடுவேன் என் மீட்பரையே;
  கிரயமாய் தம் ரத்தத்தை
  சிலுவையிலே செலுத்தித் தீர்த்தார்;
  மன்னித்தீந்தார் விடுதலை.
 
2. பாவச்சேற்றில் வீழ்ந்த என்னை
எல்லையில்லா அன்பாலும்,
இரக்கத்தாலும் இலவசமாய்
மீட்ட அன்பைக் கூறுவேன்.
- பாடுவேன்
 
3. போற்றுவேன் என் மீட்பரையே;
வெல்லும் வல்லமை சொல்வேன்;
பாவம் சாவு நரகமீது
வெற்றியைத் தருவாரே.
- பாடுவேன்
 
4. பாடுவேன் என் மீட்பரையே;
தெய்வ அன்பால் நேசித்தார்;
சாவினின்று ஜீவன் தந்து
தேவ மைந்தனாக்கினார்.
- பாடுவேன்

1876-ம் ஆண்டின் கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களை, பென்சில்வேனியாவிலுள்ள தன் சொந்த ஊரான ரோமில் கழித்துவிட்டு, பிரபல அமெரிக்க பாடலாசிரியர் பிலிப். P. பிளிஸ் தன் மனைவியுடன் ரயிலில் சிக்காகோவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  ஓகியோவிலுள்ள அஷ்டபுலாவுக்கருகே இருந்த ஒரு பாலத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, அப்பாலம் உடைந்தது.  ரயில் 60 அடி ஆழத்தில் விழுந்து, நெருப்புக் பற்றிக்கொண்டது.

ஆச்சரியவிதமாக அடிபடாமல் தப்பின பிளிஸ், எரிந்து கொண்டிருந்த ரயில் பெட்டியின் ஜன்னல் வழியே வெளிவந்தார்.  ஆனால், தன் மனைவி எரியும் ரயில் வண்டிக்குள் சிக்கியிருப்பதை அறிந்து, மனைவியைக் காப்பாற்ற, மீண்டும் எரியும் நெருப்புக்குள் சென்றார்.  சென்றவர் மீண்டும் வரவேயில்லை.

விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்களுள், பிளிஸ்ஸின் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.  உடையாமல் இருந்த  அப்பெட்டியில் இப்பாடல் இருந்தது.  பிளிஸ் எழுதின இக்கடைசிப் பாடலை, அவர் அதுவரை செய்துவந்த, மேஜர் விட்டிலின் ஊழிய இசைப்பணியைத் தொடர அழைக்கப்பட்ட மெக்ரனகன் பெற்றார்.  தகுந்ததோர் ராகம் அமைத்தார்.

இக்கோர விபத்து நடந்த சில நாட்களுக்குப்பின் மேஜர் விட்டில் சிக்காகோவில் நற்செய்திக் கூட்டம் நடத்தினார்.  அதில் இப்பாடல் கண்டுபிடிக்கப்பட்டதின் பின்னணியைச் சொல்லிவிட்டு, அதற்கு இசை அமைத்த மெக்ரனகனை  அறிமுகம் செய்து வைத்தார்.  இப்பாடலைக் கேட்ட மாத்திரத்தில், அனைவரும் ஆவியில் அனலுற்றனர்.

இப்பாடலை எழுதிய பிளிஸ், அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவின் கிளீயர்பீல்ட் கவுன்ட்டியில் 9.7.1838 அன்று பிறந்தார். சிறுவயது முதல் ஏழ்மையிலே வளர்ந்தார்.  தன் இளமைப் பருவத்தில், மரம் அறுக்கும் தொழிலாளராக வேலை செய்தார்.  வயதுக்குமீறிய வளர்ச்சியும், வித்தியாசமான நடையுடை பாவனையும் கொண்டவராகத் தோற்றமளித்தார். 

1850-ல் இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதன் பின், அருகிலுள்ள பாப்டிஸ்ட் சபையில் சேர்ந்தார்.

தன் வாழ்வின் ஆரம்ப காலத்திலிருந்தே, பிளிஸ் இசையில் சிறந்த தாலந்து படைத்தவராக  விளங்கினார்.  குறைந்த கால இசைப்பயிற்சியை மேற்கொண்டார்.  பின்னர் சிக்காகோ சென்று டாக்டர் ஜார்ஜ் ரூட் என்பவருடன் சேர்ந்து கொண்டார்.  10 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து இசைப்பயிற்சி அளிப்பதிலும், இசைக் கருத்தரங்குகள்  நடத்துவதிலும் ஈடுபட்டார்.

1874-ம் ஆண்டு, பிரபல நற்செய்திப் பிரசங்கியார்களான ஈ.க. மூடியும், மேஜர் தானியேல் ர. விட்டிலும் அவரை அணுகி, தங்களோடு முழுநேர ஊழியத்தில் ஈடுபடுமாறு அழைத்தனர்.  அந்நாள் முதல், இத்தகைய நற்செய்திக் கூட்டங்களில் சிறப்புப் பாடல்கள் பாடியும், மக்களை உற்சாகப்படுத்திப் பாட வைத்தும், தேவனுக்கு மகத்தான ஊழியம் செய்தார்.  இவ்வாறு முழுநேர ஊழியனாகி இரண்டே ஆண்டுகளில், தனது முப்பத்தெட்டாம் வயதிலேயே மரித்தார்.

இப்பாடல் 1877-ம் ஆண்டு  ''வெல்கம் டைடிங்ஸ்''  என்ற புதிய ஞாயிறுபள்ளிப் பாடல் புத்தகத்தில் வெளியானது.  அற்பமான ஆயுள் காலத்திற்குள்  அற்புதமாக ஆண்டவரைச் சேவித்த ஊழியர் இவர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.