பாமாலைகள்

தூய, தூய, தூயா!

(Holy Holy Holy)

பாடல்: ரெஜினால்டு ஹீபர்

பாடல் பிறந்த கதை

 1. தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா!
தேவரீர்க் கெந்நாளும்  சங்கீதம் ஏறுமே;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!
 
2. தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
கேரூபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று,
இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே.
 
3. தூய, தூய, தூயா ! ஜோதி   பிரகாசா,
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோவாக்குக்கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்.
 
4. தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா!
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!

''மோசேயின் ஒளி எங்கே மறைந்தது?''

''நேபோ மலையில் தான். ஏனெனில், அங்கேதானே மோசேயின் வாழ்வின் ஒளி மறைந்தது !''  

கடினமான கேள்விக்கு, தயக்கமின்றி உடனே பதிலளித்தான்,  ஐந்தே வயது நிரம்பிய சிறுவன் ஹீபர்!

''உலகின் மிகச் சிறந்த பாடல்,''  என இங்கிலாந்து நாட்டின் பெரும் புலவர் டென்னிசன் பிரபு ஆல்பிரட்டால்  வர்ணிக்கப்பட்டது இப்பாடலாகும்.  புகழ்பெற்ற இப்பாடலை எழுதிய பேராயர் ரெஜினால்டு ஹீபர் பாடலாசிரியர்களுள் சிறப்பு மிக்கவர்.  அவர் அன்று எழுதிய பாடல்கள் அனைத்தும், இன்றும் பலரால் பாடப்படுகின்றன.  ஹீபரின் வாழ்க்கையோ, மெய்சிலிர்க்க வைக்கும் சவால் நிறைந்த சாட்சியாகும்.

சமுதாயத்தில் உயர் நிலையிலிருந்த, வசதி படைத்த குடும்பத்தில், ரெஜினால்டு ஹீபர் 21.04.1783 அன்று  பிறந்தார்.  தன் சிறுவயது முதல் தெய்வ பக்தி நிறைந்தவராக வளர்ந்தார்.  முழு வேதாகமத்தையும் தனது 5-வது வயதிற்குள் சிரத்தையுடன் வாசித்து முடித்தார்.  சிறுவனாயிருந்தபோதே, வேத வசனங்களை மேற்கோள் காட்டிப் பேசுமளவிற்கு, புத்தி கூர்மையுள்ளவராய் இருந்தார்.

ஹீபர் சிறுவயதிலேயே மிகுந்த தைரியமுடையவராக விளங்கினார்.  அவருக்கிருந்த கக்குவான் இருமல் நோயைக் குணப்படுத்த, மருத்துவர் அவரின் ரத்தத்தை எடுக்க வேண்டுமென்றார்.  ஹீபரின் தாதி பயந்து, மறுப்புத் தெரிவித்தார்.  ஆனால் சிறுவன் ஹீபரோ, '' என் அருமைத் தாதியை வெளியே அனுப்பிவிடுங்கள்.  நான் அசையாது இருப்பேன்.  என்னை யாரும் பிடிக்கத் தேவையில்லை '' என்று கூறித் தன் கையை டாக்டரிடம் நீட்டினார். 

இளகிய மனதுள்ள ஹீபர், பள்ளியில் படிக்கும்போது, தான் சந்திக்கும் வசதியற்ற எவருக்கும், தன்னிடமிருந்த பணமனைத்தையும், சிறிதும் தயக்கமின்றிக் கொடுத்து விடுவார்; சுயநலமற்ற மென்மையான உள்ளம் கொண்டவர்; தீய பழக்கங்கள் கல்லூரி மாணவர்களிடம் பரவி நின்ற அந்நாட்களில், பரிசுத்தத்தைப் பறைசாற்றும் வாலிபனாக வாழ்ந்து, சக மாணவர்களையும்  தூய்மை நிறைந்த வாழ்க்கையை மேற்கொள்ள உற்சாகப்படுத்தினார்.

ஹீபர் படிப்பில் முதன்மையான மாணவனெனப் பெயர் பெற்றார்.  தனது 17-வது வயதில் ஆக்ஸ்போர்டில்  கல்லூரிப் படிப்பை ஆரம்பித்த அவர், கவிதைப் போட்டியில் இரு பரிசுகளையும், லத்தீன் மொழிக் கட்டுரைப்  போட்டியில் பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பரிசையும் பெற்றார்.

1807-ம் ஆண்டு, 24 வயதே நிரம்பிய ஹீபர், தன் தந்தையின் ஹாட்னட் ஆலயப் போதகரானார்.  தொடர்ந்து 16 ஆண்டுகள் அக்கிராமத்தின் தலைவராகவும், போதகராகவும் பணியாற்றினார்.  அத்திருச்சபையின் பாடல் ஊழியத்தை முன்னேற்றுவதற்காக பல பாடல்கள் எழுதினார்.  அவரது புலமைமிக்க நண்பர்களான வால்டர் ஸ்காட், சவுதே, மில்மன் ஆகியோரையும், பாடல் எழுதித்தருமாறு கேட்டுக் கொண்டார்.  இவர்களில் மில்மன் அவருக்கு உற்சாகமாய் உதவினார்.

ஹீபர் தனது ஹாட்னட் சிற்றாலய மக்களை அதிகமாய் நேசித்தார்.  பிரச்சனையுள்ளவர்களைச் சந்தித்து, நல் ஆலோசனைகள் வழங்கினார் ; வியாதியுற்றோரின் இல்லங்களுக்குச் சென்று, ஜெபித்து உற்சாகமூட்டினார்; சண்டை சச்சரவுகளை சுமூகமாய் தீர்த்து வைத்து, அமைதி காத்தார்; தேவையுள்ள மக்களுக்கு பொருளுதவியும் செய்தார்; மொத்தத்தில் ,தன் தாலந்துகள் அனைத்தையும், இத்திருப்பணியில் முற்றுமாய்ச் செலவழித்தார்.

ஹீபரின் மாமனார் டாக்டர் ஷிப்லி, தூய ஆசாப் ஆலயப் போதகராவார்.  அவர் 1819-ம் ஆண்டு பரிசுத்த ஆவியின் பண்டிகைக்கு முன்தினம், அப்பண்டிகையின் ஞாயிறு காலை ஆராதனையில் பாடுவதற்கென, ஒரு புதுப்பாடலை இயற்றிக் கொடுக்குமாறு, ஹீபரைக் கேட்டுக் கொண்டார்.  இப்பொறுப்பை மேற்கொண்ட ஹீபர் , சில மணி நேரத்தில் இப்பாடலை எழுதி முடித்தார்.  மறுநாள் பண்டிகை ஆராதனையில், இப்பாடல் பாடப்பட்டது.  பின்னர் இப்பாடல், உலகெங்குமுள்ள  திருச்சபைகளில், பரிசுத்த ஆவியின் பண்டிகையிலும், திரித்துவத் திருநாள் பண்டிகையிலும் பாடப்படும் சிறப்புப் பாடலாக பிரபலமானது.

இப்பாடல் நிசேயா விசுவாசப் பிரமாணத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.  நாம் வணங்கும் திரித்துவ தெய்வமாகிய, பிதா, குமாரன், தூய ஆவியானவரைப் போற்றி ஆராதிக்க, நம்மை வழிநடத்துகிறது. திரித்துவ தெய்வத்தின் தன்மைகளை ஒவ்வொன்றாக அழகாக வர்ணித்து, அவரைப் போற்றி வணங்க, நம்மை இப்பாடல் ஏவுகிறது.  அவர் தூயாதி தூயவர் ; கர்த்தாதி கர்த்தர்; மாட்சிமை நிறைந்தவர்; சர்வ வல்லவர் ; கிருபை நிறைந்தவர்; பராக்கிரமமுள்ளவர்; இவ்வாறு, அன்பிலும், பரிசுத்தத்திலும், வல்லமையிலும் முழுமையான நிறைவுடையவராக, ஒன்றாய் அரசாட்சி செய்கிற, திரியேக தெய்வத்தை, நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து, நன்றியுடன் போற்றி வாழ்த்திப் பாட, இப்பாடல் நம்மை உற்சாகப்படுத்துகிறது.

ஹாட்னட் திருச்சபையில் சிறப்பாக ஊழியம் செய்த ஹீபருக்கு, கல்கத்தாவின் பேராயராகப் பொறுப்பேற்க இருமுறை அழைப்பு வந்தது.  முதலில் ஏற்க மறுத்த ஹீபர்,  மிஷனரி வாஞ்சை நிறைந்தவராய் இருந்தபடியால், பின்னர் அதை தெய்வ சித்தமென உணர்ந்து, ஏற்றுக் கொண்டார்.   1823-ம் ஆண்டு,  மிஷனரிப்  பேராயராக, தன் குடும்பத்துடன்  இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

பரந்துகிடந்த அவரது திருமண்டலத்தின் எல்லை, இந்தியா முழுவதுமன்றி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா தேசங்களும் சேர்ந்ததாகும்.  எனவே, தமது திருமண்டலத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, திருச்சபைகளை ஊக்குவிக்கும் பணியை  மேற்கொண்டார்.  மூன்று ஆண்டுகள், தொடர்ந்து, பல்லாயிரம் மைல்கள், கடினமான பாதைகளில் பயணம் செய்து, வேறுபட்ட காலநிலைகளில் ஊழியம் செய்தார்.  எனவே, அவரது சரீôம் களைப்புற்று, பெலவீனமானது.  ஆயினும், விடா முயற்சியுடனும், முழு அர்ப்பணத்துடனும் இப்பணியைத் தொடர்ந்தார்.

1826-ம் ஆண்டு, ஹீபர் தன் மனைவியையும், இரு பெண்குழந்தைகளையும் பம்பாயில் விட்டுவிட்டு, தென்னிந்தியா, மற்றும் இலங்கைப் பகுதிகளிலுள்ள திருச்சபைகளைச் சந்திக்கப் புறப்பட்டார்.  மிகுந்த உஷ்ணமான வெப்ப நிலையில், பல நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து, 31.03.1826 அன்று நள்ளிரவில், திருச்சி வந்தடைந்தார்.  மறுநாள் காலை 8 மணிக்கு முன்னரே, அங்குள்ள திருச்சபைத் தலைவர்களுடன் கலந்துரையாடி, பல இடங்களைச் சுற்றிப் பார்த்து, அநேக கடிதங்களை எழுதினார்.  இந்திய கிறிஸ்தவர்களின் கல்வி முன்னேற்றத் திட்டங்களையும் ஆலோசித்தார்.

02.04.1826 அன்று ஞாயிறு காலை, தூய யோவான் ஆலயத்தில், அவரது செய்தியைக் கேட்கவும், 42 இந்திய  கிறிஸ்தவர்களுக்காக  நடத்தப்பட்ட திடப்படுத்தல் ஆராதனையில் கலந்து கொள்ளவும், திரளான மக்கள் கூடிவந்தனர்.  ஆராதனையை நடத்தி முடித்த ஹீபர், சுகவீனமாயிருந்த உதவிகுருவின் வீட்டிற்குச் சென்று ஜெபித்துவிட்டு, பல கடிதங்களை எழுதினார்.  பின்னர் மாலை ஆராதனையையும் தாமே நடத்தினார்.

03.04.1826 அன்று திங்கள் காலை ஆகாரத்திற்கு முன்பே, 4 மணிநேரம், தொடர்ந்து பல வேலைகளில் ஈடுபட்டார்.  காலை 10 மணிக்கு,  சுவார்ட்ஸ் சிற்றாலயத்தில் (தற்போதுள்ள கோட்டை கிறிஸ்து நாதர் ஆலயம்) மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அக்கூட்டத்தைத் திறந்த  வெளியில் நடத்தினார்.  அங்குள்ள மிஷன் வீட்டுப் படிகளில் நின்று, ஜாதி வேற்றுமையின் தீமைகளை, வேதத்தின் அடிப்படையில் எடுத்துக்கூறி, சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படி, அங்கு கூடியிருந்த இந்திய கிறிஸ்தவ சபையோரை, வெகுநேரம் உற்சாகப்படுத்தினார்.  அப்போது அவர் வெயிலில் தொடர்ந்து நின்றதால், சூரிய வெப்பத்தின் பாதிப்பு அவருக்கு நேரிட்டது.

ஹீபர் தன் ஊழியத்தை நிறைவேற்றி முடித்துவிட்டு, காலை உணவருந்த, மத்தியான வேளையில் நீதிபதி பேர்டின் இல்லம் சென்றார்.  உணவருந்துமுன் களைப்பாற, அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்துவரச் சென்றவர், மீண்டும் திரும்பி வரவில்லை.  அரைமணி நேரத்திற்குப் பின், நீச்சல் குளத்தில் பிணமாய் அவர் மிதப்பதைக் கண்டனர். 

43 வயது கூட நிறைவு பெறுமுன், இவ்வுலக வாழ்வைக் கடந்து சென்ற ஹீபரை, தூய யோவான் ஆலயத்தில் அடக்கம் செய்தனர்.  இன்றும் அவரது ஊழியத்தின் நினைவுச் சின்னமாக, அவர் பெயரில் ஒரு முதல்தரக் கல்லூரியும், இரு உயர்நிலைப் பள்ளிகளும் திருச்சியில் உள்ளன.

''விடியற்காலத்து வெள்ளியே தோன்றி'' என்ற கிறிஸ்மஸ் பாடலையும் ஹீபர் எழுதினார்.

திரித்துவ தேவனை ஆராதிக்கும் இப்பாடலுக்கு,

''நிசேயா'' என்ற ராகத்தை, டாக்டர் ஜான் பக்கஸ்

டைக்ஸ் என்ற பிரபல இசை வல்லுனர், 1861-ம் ஆண்டு அமைத்தார்.  இவர், ''இயேசுவே உம்மை தியானித்தால்'' போன்ற பாடல்களுக்கும் இசை அமைத்தவராவார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.