பாமாலைகள்

கர்த்தாவே, யுகயுகமாய்

(O God, our help in ages past)

பாடல்: ஐசக் வாட்ஸ்

பாடல் பிறந்த கதை

 1. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்:
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.
 
2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்;
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.
 
3. பூலோகம் உருவாகியே,
மலைகள் தோன்றுமுன்,
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.
 
4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே.
 
5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார் ;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.
 
6. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர் ;
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்.

''ஆங்கிலத் திருச்சபைப் பாடல்களின் தந்தை'' என்று அழைக்கப்படும் போதகர் டாக்டர் ஐசக் வாட்ஸ், 17.07.1674 அன்று இங்கிலாந்திலுள்ள சௌத்தாம்டனில் பிறந்தார்.  அவரது தந்தை ஒரு மறுமலர்ச்சித் திருச்சபையின் போதகர்.  கல்வியறிவு நிறைந்த அவர், வாட்ஸ் பிறந்த நாட்களில், தனது புரட்சிகரமான மறுமலர்ச்சிக் கொள்கைகளுக்காகச்  சிறையிலிருந்தார்.  அவரது 9 பிள்ளைகளில் மூத்த மகன்தான் வாட்ஸ்.

சிறுவயதிலிருந்தே, வாட்ஸ் கவிதை இயற்றுவதில் சிறந்த தாலந்து படைத்தவராக விளங்கினார்.  அவர் சாதாரணமாகப் பேசுவது கூட கேட்போரின் பொறுமையைச் சோதிக்குமளவிற்குக் கவிதை நயமாக இருந்தது.  இந்தப் பழக்கத்தை விட்டுவிடும்படி, ஒரு முறை அவர் தந்தை அவரைத் திட்டினார். அப்போது வாட்ஸ் அழுதுகொண்டே,

'' இரக்கம் காட்டுங்கள் தந்தையே

கவிதை புனையேன் இனியே ''

என்று கவிதை நயத்திலேயே பதிலளித்தார்!

வாட்ஸ் தமது 5-வது வயதில் லத்தீன் மொழியையும், 9-வது வயதில் கிரேக்க மொழியையும், 11வது வயதில் பிரெஞ்சு மொழியையும், 13-வது வயதில் எபிரெய மொழியையும், தம் தந்தையிடம் கற்றுத் தேறினார்.  பல துறைகளிலும் சிறந்த  மேதையாக விளங்கினார்.  இவர் எழுதிய பாடல்கள், புதுமையான கோணத்தில் இருந்ததால், இவர், அக்காலத்தின் புரட்சிக் கவிஞராகக் கருதப்பட்டார்.  இவருடைய புத்தகங்கள் இவர் வாழ்ந்த 17-ம், 18-ம், நூற்றாண்டு மக்களின்  கண்ணோட்டத்தையே மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்தவைகளாக விளங்கின.

இப்பாடல், மோசேயின் சங்கீதமாகிய,  90-ம் சங்கீதத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது.  காலத்தின் அருமையை அழகாகச் சித்தரிக்கும்  இச்சங்கீதத்தை,  வாட்சின் இப்பாடல் இன்னும்  மதிப்பு மிக்கதாக உயர்த்தியுள்ளது.  எனவே, இது ஆங்கிலத் திருச்சபைப் பாடல்களில், உயர்வாய் மதிக்கப்படும் உன்னதப் பாடலாய் இன்றும் விளங்குகிறது. 9 சரணங்களோடு எழுதப்பட்ட இப்பாடலின் 1, 2, 3, 5, 9-ம் சரணங்களே, இப்போது பொதுவாகப் பாடப்படுகின்றன.  இப்பாடலை 1719-ம் ஆண்டு, வாட்ஸ்'' புதிய ஏற்பாட்டு நடையிலுள்ள தாவீதின் சங்கீதங்கள்'' என்ற பாடல் புத்தகத்தில் வெளியிட்டார்.

இப்பாடலுக்கு வாட்ஸ் கொடுத்த பெயர் ''மனிதனின் பெலவீனமும், தேவனின் நித்திய தன்மையும்.'' அந்நாட்களில் இங்கிலாந்தின் ஆன் அரசி, 1.8.1714 அன்று திடீரென மரித்ததைத் தொடர்ந்து தோன்றிய, நிலையில்லாத அரசியல் நிலையும், வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யூத ராஜாவாகிய யோசியா,  கி.மு. 609-ல், தனது வாலிப வயதில், எகிப்தின் ராஜாவால் கொல்லப்பட்டபோது,  யூதேயா நாட்டில் நிலவிய  குழப்பநிலையும் வாட்சை மனிதனின் நிலையற்ற தன்மையைப்பற்றிச் சிந்திக்கச் செய்து, இப்பாடலை எழுதத் தூண்டின.

இப்பாடல், ஐசக் வாட்ஸ் எழுதிய 600-க்கும் மேற்பட்ட பாடல்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  இங்கிலாந்து தேசத்தின் எல்லாப் பண்டிகை நாட்களிலும் இப்பாடல் பாடப்படுகிறது.  எனவே, 1748-ல் தனது

74-வது வயதில் வாட்ஸ் மரித்தபோது, அவரது தாய்நாடு வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைத்துக் கௌரவித்தது.

இப்பாடலுக்கு வில்லியம் கிராப்ட் அமைத்த, ''தூய ஆன் '' என்ற ராகம் இணைக்கப்பட்டது.  இப்பாடலினால் அந்த ராகம் பிரபல்யமாகி, பின்னர் இசை மேதைகளான ஜார்ஜ் F. ஹாண்டல், J.S. பாக் ஆகியோர் அந்த ராகத்தை விரும்பித் தங்கள் பாடல்களில் உபயோகித்தனர். 

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.