பாமாலைகள்

என் முன்னே மேய்ப்பர் போகிறார்

(He leadeth me)

பாடல்: ஜோசப் H. கில்மோர்

பாடல் பிறந்த கதை

 1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்;
நல் மேய்ப்பராகக் காக்கிறார்;
ஓர்காலும் என்னைக் கைவிடார்!
நேர் பாதை காட்டிப் போகிறார்.
முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!
  என் முன்னே சென்று போகிறார்!
  நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்,
  அன்போடு பின் சென்றேகுவேன்.
 
2. கார்மேகம் வந்து மூடினும்,
சீர் ஜோதி தோன்றி வீசினும்,
என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்;
என்றைக்கும் முன்னே போகிறார்.
            - முன் செல்கின்றார்.
 
3. மெய்ப்பாதை காட்டி! பின் செல்வேன்,
தெய்வீகக் கையால் தாங்குமேன்,
எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழை முன்னே போகிறீர்.
           - முன் செல்கின்றார்.
 
4. ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்
நீர் சாவை வெல்லச் செய்குவீர்,
பேரின்பம் காட்டி முன் செல்வீர்.
          - முன் செல்கின்றார்.

இப்பாடல் உருவான சம்பவத்தை அதின் ஆசிரியர் ஜோசப் H. கில்மோர் இவ்வாறு கூறுகிறார் :-

"நான் பிலடெல்பியாவிலுள்ள முதல் பாப்டிஸ்ட் சபையின் புதன் மாலைக் கூட்டத்தில், சங்கீதம் 23-ப் பற்றிப் பிரசங்கிக்க அழைப்புப் பெற்றேன். தேவனால் வழிநடத்தப்படுவதின் ஆசீர்வாதங்களை எண்ணி வியந்தவனாய் தேவசெய்தி அளித்தேன். ஆராதனை முடிவில் போதகர் வாட்சனின் வீட்டில் எங்களை உபசரித்தார்கள். அப்போது எங்கள் கலந்துரையாடலின்போது, மீண்டும் "தேவனின் வழிநடத்துதலின் ஆசீர்வாதங்கள்" என்ற எண்ணம் என் உள்ளத்தில் தொனிக்கவே, ஒரு பென்சிலை எடுத்து, மட மடவென்று இப்பாடலை எழுதி, என் மனைவியின் கரத்தில் கொடுத்தேன். அதன்பின் அதை மறந்துவிட்டேன். என் மனைவி, எனக்கே தெரியாமல், அதை "" வாட்ச்மன் அண்டு ரிபிளெக்டர் '' என்ற பத்திரிக்கைக்கு அனுப்ப, அவர்கள் அதை வெளியிட்டிருந்தனர்.

மூன்று வருடங்கள் கழித்து, நியூயார்க்கிலுள்ள ரோச்செஸ்டரின் இரண்டாம் பாப்டிஸ்ட் சபையில் நியமனம் பெற, செய்தி கொடுக்கச் சென்றேன். அங்குள்ளவர்கள் பாடும் பாடல்கள் என்னவென்பதை அறிய, அவர்கள் பாடல் புத்தகத்தைத் திறந்தேன். திறந்த பக்கத்தில் இப்பாடல் இருந்தது. அப்போது தான் இப்பாடல் திருச்சபையின் பாடல்களில் ஒன்றாக மாறியிருப்பதை நான் அறிந்தேன்.''

கில்மோர், மாசாசூசெட்ஸிலுள்ள போஸ்டனில் 29.4.1834-ல் பிறந்தார். அவருடைய தந்தை நியூஹாம்ஷையர் மாகாணத்தின் கவர்னராக இருந்தார். 1861-ல் கில்மோர் நியூட்டன் மறையியல் கல்லூரியில் பட்டம் பெற்று, பல பாப்டிஸ்ட் சபைகளில் போதகராகப் பணியாற்றினார். பின்னர், கவர்னரான தன் தந்தையின் செயலாளராகவும், தான் படித்த கல்லூரியிலேயே எபிரேய மொழிப் பேராசிரியராகவும் வேலை செய்தார். அதன் பின், ரோச்செஸ்டர் பல்கலைக் கழக இலக்கியப் பேராசியராகப் பணிபுரிந்து, பல பாடப்புத்தகங்களைக் கல்லூரி மாணவர்களுக்கு எழுதி வெளியிட்டார்.

இப்பாடலை அவர் தமது 28-வது வயதில் 26.3.1862-ல் எழுதினார். பல பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். எனினும், அவற்றில் இப்பாடலே பிரபலமானது.

1863-ம் ஆண்டு பத்திரிக்கையில் வெளியான இப்பாடலைப் பார்த்த வில்லியம் B. பிராட்பரி, இதற்கு இசையமைத்ததுடன், இதின் பல்லவியையும் எழுதி இணைத்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.