பாமாலைகள்

என் அருள்நாதா இயேசுவே

(When I survey the wondrous cross)

பாடல் : ஐசக் வாட்ஸ்

பாடல் பிறந்த கதை

 1. என் அருள் நாதா இயேசுவே!
சிலுவைக் காட்சி பார்க்கையில்,
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்.
 
2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்?
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்.
 
3. கை, தலை, காலிலும், இதோ!
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே.
 
4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்.
 
5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே,
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே!

போதகர் டாக்டர் ஐசக் வாட்ஸ் ஒரு புகழ் பெற்ற கவிஞர். அவரது வாலிப நாட்களில், அவரை நேரில் பார்த்திராத ஓர் அழகான நாகரீகமான பெண், அவர் எழுதிய கவிதையின் அழகில் மயங்கினாள். அவரைக் காண ஆவலாய் ஓடி வந்தாள். அந்த நேரிடைச் சந்திப்பில், வாட்ஸ் அவளது அழகில் மயங்கி நிற்க, அவளோ அவரைப் பார்க்கச் சகிக்க முடியாமல், தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். வாட்ஸ் அவளிடம் தன்னைத் திருமணம் செய்ய வேண்டினார். அவளோ, "வாட்ஸ், இந்த விலையேறப்பெற்ற ஆபரணத்தை நான்  மிகவும் நேசிக்கிறேன். ஆனால், அது அமைந்திருக்கும் பெட்டகத்தை என்னால் விரும்ப முடியவில்லையே," என்று கூறினாள்.

ஆம், வளர்ச்சி முற்றுப்பெறாத, அவலட்சணமான தோற்றமுடையவர்தான் ஐசக் வாட்ஸ். 5 அடி உயரத்தில், குள்ளமானவராய் இருந்தார். அவருடைய பெரிய தலையும், நீண்டு வளைந்த மூக்கும், அவருக்கு விகாரத் தோற்றமளித்தன. தன்னை நிராகரித்த அப்பெண்ணின் பதிலால் துவண்டு விடாமல், பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும், 30 ஆண்டுகளுக்கு மேலாக, சிறந்த நண்பர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப்பின், ஐசக் வாட்ஸ் தன் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை.

பெலவீனமான சரீரமுடைய வாட்ஸ் தன் 9வது வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். தனது

14 - வது வயதில் இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். தனக்காக, சிலுவையில் தம்மையே தியாக பலியாக அளித்த இயேசுவின் அன்பை வியந்து, தன் நன்றியை வெளிப்படுத்தும்  வகையில் இப்பாடலை எழுதினார்.

அந்நாட்களில், சுய அனுபவங்களையோ, உள்ளத்தின் உணர்ச்சிகளையோ, அடிப்படையாகக் கொண்டு பாடல் எழுதுவதற்கு, மிகுந்த எதிர்ப்புகள் இருந்தன. எனினும், தன் உள்ளத்தில் சிலுவைக் காட்சியை நிறுத்தியவராக, வாட்ஸ் இப்பாடலை எழுதியிருக்கிறார். பிரபல வேதாகம வல்லுனராகிய மத்தேயு அர்னால்ட்,  "ஆங்கில மொழியில் எழுதப்பட்ட திருச்சபைப் பாடல்களில், இப்பாடல் மிகச் சிறந்தது," எனக் கூறுகிறார்.

இப்பாடலை வாட்ஸ் 1707-ம் ஆண்டு, தான் நடத்திய நற்கருணை ஆராதனைக்கென்று எழுதினார். அதே ஆண்டிலேயே வாட்ஸ் வெளியிட்ட, "பாடல்களும் ஆவிக்குரிய கீதங்களும்" என்ற பாடல் புத்தகத்தில் இப்பாடல் இடம் பெற்றது. இப்பாடலுக்கு வாட்ஸ் கொடுத்த தலைப்பு, "கிறிஸ்துவின் சிலுவையால், உலகிற்குச் சிலுவையில் அறையப்படுதல்" என்பதாகும்.

இப்பாடலுக்கு, புகழ்பெற்ற அமெரிக்க இசை வல்லுனராகிய லோவல் மேசன், "ஹாம்பர்க்" என்ற ராகத்தை அமைத்தார். எபிரெயர்கள் தேவாலயத்திலும், ஜெப ஆலயங்களிலும் பாடும் பாடல் ராகங்களின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டுள்ளது. லோவல் மேசன், "உம்மண்டை கர்த்தரே" போன்ற பிரபல பாடல்களுக்கு ராகம் அமைத்தவராவார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.