கீர்த்தனைகள்
பாடல் : தே. தேவசகாயம்

பாடல் பிறந்த கதை 

பல்லவி
நீயுனக்குச் சொந்தமல்லவே; மீட்கப்பட்ட பாவி,
நீயுனக்குச் சொந்தமல்லவே.
 
அனு பல்லவி
நீயுனக்குச் சொந்தமல்லவே,
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
                                               - நீயுனக்குச்
 
சரணங்கள்
1. சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே - திரு ரத்தம் ரத்தம்
திரு விலாவில் வடியுது, பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே.
                                     - நீயுனக்குச்
 
2. இந்த நன்றியை மறந்து போனாயோ? யேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்தத முனதிதயங் காயமும்,
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ?
                                    - நீயுனக்குச்
 
3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக்கடல் தள்ளுவானேன்?
                                     - நீயுனக்குச்
 
4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகை விட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
 உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்.
                                      - நீயுனக்குச்

கவிஞர் தே. தேவசகாயம் சாட்சியாபுரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மேசியாதாஸ், தேவநேசன் என்று இரு குமாரர்கள் உண்டு. ஒரு நாள் இவ்விரு பையன்களும் பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில், ஏதோ ஒரு பொருளுக்காக, "இது என்னுடையது; உன்னுடையதல்ல,'' என்று கூச்சலிட்டுச் சண்டை போட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற தந்தையின் உள்ளத்தில், மேலே குறிப்பிட்ட பவுலடியாரின் வேத அறிவுரை நினைவில் வந்தது.

இந்நிகழ்ச்சியால் உள்ளக்கிளர்ச்சி பெற்ற இக்கவிஞர், இந்தப் பாடலின் முதல் வரியை, "நீ உனக்குச் சொந்தமல்லவே, தாசா, நேசா,'' என்பதாக எழுதினார். "ஒவ்வொரு கிறிஸ்தவனும் இறைவன் இயேசுவின் விலையேறப்பெற்ற ரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்ட அடிமை. எனவே, தனக்கென்று உரிமை பாராட்டத் தகுதியற்றவன்."

இக்கருத்தை மையமாகக்கொண்டு, இந்த அருமையான பாடலை, தேவசகாயம் தன் பிள்ளைகளுக்கென எழுதினார். அதையே, திருச்சபைப் பிள்ளைகளாகிய நம் அனைவருக்கும் பயன்படும் வகையில், "தாசா.. நேசா..'' என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு, ''மீட்கப்பட்ட பாவி'' என்ற வார்த்தைகள் அவ்விடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

"தம் ஜீவனையே ஈனச் சிலுவையில் கிரயமாகச் செலுத்தி, பாவிகளாகிய நம்மை மீட்டெடுத்த இயேசுவுக்கே நாம் சொந்தம். எனவே, பழைய ஏற்பாட்டுக் கால "விருப்ப அடிமைகளைப்" போல, நாமும், தொடர்ந்து ஜீவ காலம் முழுவதும், அவரையே அண்டி வாழ வேண்டும். அவரை விட்டு ஓட முயற்சிக்கலாகாது. பழைய வாழ்க்கையின் மீது மீண்டும் நாட்டம் கொள்ளக் கூடாது'' என்ற கிறிஸ்தவத் தத்துவக் கருத்துக்களை அழகாக, தெளிவாக, இப்பாடலில் தமது மைந்தர்களுக்காக இக்கவிஞர் எழுதியிருக்கிறார்.

இப்பாடலின் கடைசிச் சரணத்தைச் சார்ந்த ஒரு நிகழ்ச்சியைக் கிறிஸ்தவ அருட்கவிஞராகிய அருட்திரு டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் இவ்வாறு எழுதுகிறார்: "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த Dr. D.T நைல்ஸ் என்ற பெரியார், வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்குப் புற்றுநோய் கண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டபோது, அவர், எவ்வித மனக்கலக்கமும் அடையாமல், மருத்துவர்களையும், நண்பர்களையும் பார்த்து, "நாம் பிழைத்தாலும், மரித்தாலும், ஆண்டவருக்குச் சொந்தமானவர்கள்," என்று கூறினார்.

இந்த நிலையான கிறிஸ்தவ நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் இப்பாடலை, கவிஞர் தேவசகாயம் எவ்வளவு நேர்த்தியாக எழுதியிருக்கிறார்! கவிஞர் தேவசகாயம் இயற்றிய மற்றுமிரு பாடல்களும் திருச்சபை மக்களால் விரும்பிப் பாடப்படுகின்றன. அவை, "வா, பாவி, மலைத்து நில்லாதே, வா'' என்ற அன்பின் அழைப்புப் பாடலும், "அடைக்கலம் அடைக்கலமே'' என்ற நம்பிக்கையூட்டும் பாடலுமாகும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.