கீர்த்தனைகள்
பாடல் : ஞா. சாமுவேல்

பாடல் பிறந்த கதை

பல்லவி
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறையுண்டு நீ சொல், மனமே
 
சரணங்கள்
1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுலகுயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,
மித்திரனே சுகபத்திர மருளும்.
             - என் மீட்பர்
2. பாபமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் :
சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய்.
             - என் மீட்பர்
3. ஆசிசெய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும்.
             - என் மீட்பர்
4. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்;
கடைசி மட்டுங் கைவிடாதிருப்பார் ;
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்.
             - என் மீட்பர்.
5. போனது போகட்டும், புவி வசை பேசட்டும்,
பொல்லான் அம்புக ளெய்திடட்டும்,
ஆனது ஆகட்டும், அருள் மழை பெய்திடும்,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்.
             - என் மீட்பர்.

அருள்திரு. ஞா.சாமுவேல் ஐயர் ஒரு சிறந்த வேத நிபுணர்.  தமிழ் மொழிப்பற்று மிக்கவர்.  அதுமட்டுமன்றி கர்நாடக இசையையும் முறைப்படி கற்றவர்.  இப்படிப்பட்ட சிறந்த மேதை எழுதிய பாடலே இப்பாடல்.

போதகர் சாமுவேல் தரங்கம்பாடி, மற்றும் பெங்களூர் இறையியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.  தன் வாழ்க்கையில் சோதனைகள் பலவற்றை அனுபவித்தார்.  தொடர்ந்து வந்த துன்பங்களால் வேதனையுற்று, சோர்வு மேலிட, ஒரு நாள் மாலை மயங்கும் வேளையில், ஓரிடத்தில் நடந்து  சென்று கொண்டிருந்தார்.  அப்போது, அவர் பாதையில் கிடந்த ஒரு சிறு காகிதத்துண்டைப் பார்த்துக் கையிலெடுத்தார். அதில் "என் மீட்பர் உயிரோடிருக்கிறார்," என்ற வேத வசனம் எழுதப்பட்டிருந்தது.

வேத அறிஞராகிய சாமுவேலின் மனக்கண்முன், யோபுவின் வாழ்க்கை திரைப்படம் போல ஓடியது. யோபு கடந்து வந்த பாடுகளைத் தான் அனுபவிக்கும் வேதனைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அத்தனை பாடுகள் மத்தியிலும், மனந்தளராது, இவ்வசனத்தின் மூலம் சாட்சி பகர்ந்த விசுவாச வீரன் யோபுவின் சவால், சாமுவேலுக்குப் புத்துணர்ச்சியையும், தெம்பையும் அளித்தது.

தனது வேதனைப் புலம்பல்களினின்று விடுபெற்ற போதகரின் உள்ளம், புதிய உற்சாகத்தால் நிறைந்தது. இவ்வசனம் அவர் உள்ளத்தில் தந்த நம்பிக்கையே, இப்பாடலாக உருவெடுத்தது. தன் வாழ்க்கையின் சோர்வுகளை, இப்பாடலைக் கொண்டு மேற்கொண்டு, வெற்றி பெற்றார்.

கருத்து மிகுந்த இப்பாடல், இன்றும் சோர்ந்து போகும் மக்களுக்கு, நம்பிக்கையூட்டும் பாடலாக விளங்குகிறது. சாமுவேல் ஐயர் எழுதிய "குணப்படு பாவி," என்ற மற்றொரு கீர்த்தனை, திருச்சபை வழிபாட்டில், பாவ அறிக்கைக்கு வழிநடத்தும் பாடலாக உபயோகிக்கப்படுகிறது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.