பாடல் பிறந்த கதைகள்

அமைதியாய் தேவனோடு

(O for a Closer Walk with God)

பாடல் : வில்லியம் கூப்பர்

பாடல் பிறந்த கதை

1. அமைதியாய் தேவனோடு
நெருங்கி நடப்பேன்;
ஆட்டுக் குட்டியை நோக்கியே
நடத்தும் ஒளியே.

2. கர்த்தரைப் பார்த்த நாளிலே
பெற்ற பாக்கியம் எங்கே?
இயேசுவின் வார்த்தை தந்திடும்
புத்துணர்வு எங்கே?

3. சமாதான அனுபவ
இனிய நினைவை
ஈடு செய்ய இயலாதே
உலகின் மேன்மைகள்.

4. தூய புறாவே, வாருமே;
ஆற்றாமை போக்குமே;
உம்மை வருத்தி விரட்டும்
பாவத்தை வெறுத்தேன்.
 
5. நான் நேசிக்கும் சொரூபமோ,
எதுவானாலுமே,
அகற்றி உம்மை மட்டுமே
சேவிக்கச் செய்யுமே.

6. அமைதியாய் தேவனோடு
நெருங்கி நடப்பேன்;
தூய ஒளி நடத்துமே
ஆட்டுக்குட்டியிடம்.

பிறந்தது முதல் பெலவீனங்கள், மனச்சோர்புகள், மனக்குழப்பங்கள்! பின்னர் அவன் மதி மயங்கியே போனான்!

அந்த வாலிபன் தான் வில்லியம் கூப்பர். ராஜ குலத்தில் வந்த தன் தாயைத் தனது ஆறாவது வயதில் இழந்தவன்! ஒருபோதகரின் மகன்! சட்டப்படிப்பை மேற்கொண்டு, இறுதித் தேர்வை எழுத பயந்து, புத்தி பேதலித்தவனாய், தன் வாழ்க்கையை முடிக்க, விஷத்தையும் பேனாக்கத்தியையும் நாடினான். ஆனால், தற்கொலை செய்து கொள்ளவும் பயம்! தூக்குப் போட்டுக்கொள்ள முயன்றான். ஆனால், கயிறு அறுந்து விழவே, அதிலும் தோல்வி!

இத்தனை சோர்வுகளையும், தோல்விகளையும், தன் இளமையிலேயே அனுபவித்த கூப்பரை, புத்தி பேதலித்தோர் காப்பகத்தில் சேர்த்தனர். 18 மாதங்கள் அங்கே தங்கியிருந்தபோது, 1764 - ம் ஆண்டு, தன் 33-வது வயதில், கூப்பர் இயேசுவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். அங்கிருந்து சுகம் பெற்று வெளியேறிய கூப்பரை, மார்லி அன்வின் என்ற போதகரும் அவர் மனைவியும் தங்கள் இல்லத்தில் ஏற்றுக்கொண்டு உற்சாகப்படுத்தினார்கள்.

அன்வின் தம்பதியரின் அன்பான பராமரிப்பால் புதுவாழ்வை மேற்கொண்ட கூப்பருக்கு, இன்னும் ஏமாற்றங்கள் காத்திருந்தன. போதகர் அன்வின் திடீரென்று மரித்துப்போனார். போதகரின் மனைவியையும், கூப்பரையும் பராமரிக்கும் பொறுப்பை, ஓல்னியின் புகழ்பெற்ற போதகர் ஜான் நியூட்டன் ஏற்றுக்கொண்டார். ஓல்னியில் ஜான் நியூட்டனின் ஊக்குவிப்பால், கூப்பரின் கவிதைத் தாலந்து சிறப்பான விளைவுகளைத் தந்தது, இங்கிலாந்து தேசத்தின் சிறந்த கவிஞரெனப் புகழ் பெற்றார். 1799 - ல் நியூட்டனும், கூப்பரும் இணைந்து தயாரித்த, பிரபல ""ஓல்னி பாடல் புத்தகம்'' வெளியிடப்பட்டது.

மகிழ்வுடன் வாழ்ந்த கூப்பருக்கு மற்றுமொரு சோதனை! 1769 டிசம்பர் மாதம், கூப்பர் அதிகமாய் நேசித்த அன்வின் அம்மையார் மிகுந்த சுகவீனமடைந்தார். மரணம் அவரையும் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்று கலங்கித் தவித்த கூப்பர், "எனக்கு அருமையான உறவுகளையும், அரவணைப்புகளையும், நான் இழக்க நேரிட்டாலும், அது என் பிதாவின் சித்தமென்று ஏற்றுக் கொள்கிறேன். இந்த அனுபவமே என் வாழ்வை இன்னும் தூய்மைப்படுத்துவதாக" என்று எழுதினார்.

இந்த நிலையில், ஆண்டவரின் நெருங்கிய வழிநடத்துதலை வேண்டி, 9-12-1769 அன்று அதிகாலை நேரத்தில், இப்பாடலின் முதலிரண்டு வரிகளை கூப்பர் எழுதினார். பின்னர் தூங்கிவிட்டார். விழித்து எழுந்தபோது, தன் உள்ளத்தில் ஒலித்த மெல்லிய சத்தத்தைக் கேட்டு மூன்றாம் நான்காம் வரிகளை எழுதினார்.

பின்னர் 1773-ம் ஆண்டு, மீண்டும் மனநோயால் தாக்கப்பட்டு, தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். அதன்பின் தன் சுயபுத்தியுடன், 20 ஆண்டுகள் கவிதைகளையும், பிறபாடல்களையும் எழுதினார். பெலவீனங்கள் நிறைந்த கூப்பர், அடிக்கடி, "ஆண்டவர் என்னை ஒருவேளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவாரோ?" என்று பயந்து கூறுவார். ஆனால், அவர் தனது மரணப்படுக்கையில், உயிர் பிரியும் போது, புன்முறுவலுடன் கூறிய இறுதி வார்த்தைகள் "பரலோகத்தைவிட்டு ஆண்டவர் என்னைத் தள்ளிவிடவில்லை" என்பதே.

பெலவீனங்கள் மத்தியிலும் ஆண்டவரின் பெலன் பூரணமாய் விளங்கும் என்பதற்கு, கூப்பரின் வாழ்க்கை ஒரு சிறந்த சாட்சியாகும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.