பாடல் பிறந்த கதைகள்

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்

1. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின் நோக்கேன் நான் (2)

2. சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே (3)
பின் நோக்கேன் நான் (2)

3. கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3)
பின் நோக்கேன் நான் (2)

4. யேசு என் நேசர் மாம்சம் என் தோஷம் (3)
பின் நோக்கேன் நான் (2)

5. யாரில்லையெனினும் பின் தொடர்வேனே (3)
பின்னோக்கேன் நான் (2)

 150 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் மிகப்பெரும் எழுப்புதல் உண்டாயிற்று. அதன் விளைவாக இங்கிலாந்திலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும் பல மிஷனெரிகள் வட-கிழக்கு இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தார்கள். அந்நாட்களில், வட-கிழக்கு இந்தியா இந்நாட்களில் உள்ளது போல பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்க வில்லை. நூற்றுக்கணக்கான மலைவாழ் பழங்குடி இனத்தவர்களை உள்ளடக்கிய அப்பகுதி, அஸ்ஸாம் என்று அழைக்கப்பட்டது.

அதில் நாகா என்ற ஒரு பழங்குடி இனம் இருந்தது. அவர்கள் ஆதிவாசிகளாயிருந்தார்கள். மிகவும் கொடூரமானவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் சமுதாய வழக்கப்படி அந்த இனத்தில் உள்ள ஆண்கள் தங்கள் வாழ் நாளில் எத்தனை மனிதத் தலைகளை (உயிரோடு உள்ளவர்களின் தலைகளை) வெட்டி சேகரிக்க முடியுமோ, அத்தனையையும் சேகரிக்க வேண்டும். அதனால் அவர்கள் தலை வெட்டுபவர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் தனது மனைவியை பாதுகாக்கும் அவனது வலிமையும் பெலமும், அவன் இதுவரை எத்தனை தலைகளை வெட்டி சேகரித்து வைத்துள்ளான் என்பதை வைத்து அளவிடுவார்கள். ஆகவே திருமண வயதில் இருக்கும் ஒரு வாலிபன் தன்னால் இயன்ற அளவு மனித தலைகளை வெட்டி தன்னுடைய வீட்டின் சுவரிலே மாட்டி வைத்திருப்பான்.

இந்த கொடூரமான ஆதிவாசிகளின் மத்தியில், இயேசு கிறிஸ்துவின் அன்பையும், சமாதானத்தையும், விசுவாசத்தையும் அறிவிக்க வேல்ஸ் மிஷனெரிகள் வந்தார்கள். எதிர்பார்த்தது போல அவர்கள் வரவேற்க்கப்படவில்லை.

ஒரு வேல்ஸ் மிஷனெரி வெற்றிகரமாக ஒரு நாகா ஆதிவாசி மனிதனையும், அவனது மனைவியையும், இரு பிள்ளைகளையும் கிறிஸ்துவண்டை நடத்தினார். இந்த மனிதனின் அசைக்க முடியா விசுவாசம் அந்த கிராமத்தில் இருந்த மற்றவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ள வைத்தது. இதனால் கடும் கோபமடைந்த கிராமத்தலைவன், அந்த முழு கிராமத்தையும் ஒன்று கூட்டினான். அந்த பிறகு, முதலாவதாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அந்த குடும்பத்தை முன்னால் அழைத்து, எல்லாருக்கும் முன்பாக உன் விசுவாசத்தை நீ மறுதலிக்க வேண்டும் அல்லது நீ மரணத்தை சந்திக்க வேண்டும் என்று சொன்னான்.

பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டவனாய், அந்த மனிதன் உடனடியாக ஒரு பாடலை பாடினான்.

அவன் பாடினான்:

இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன்
பின்னோக்கேன் நான், பின்னோக்கேன் நான்.

இதனால் கடும் கோபமடைந்த கிராமத்தலைவன், தன்னுடைய வீரர்களிடம், அவனது இரு பிள்ளைகளையும் அம்பெய்து கொல்லும்படி சொன்னான். இரு பிள்ளைகளும் தரையில் விழுந்து துடித்துக்கொண்டிருக்கையில் கிராமத்தலைவன் சொன்னான், “இப்பொழுதாவது உன்னுடைய விசுவாசத்தை மறுதலிப்பாயா? உன்னுடைய இரு மகன்களையும் இழந்துவிட்டாய், உன் மனைவியையும் இழக்கப்போகிறாய்” என்றான்.​

ஆனால் அந்த மனிதனோ பின்வரும் இரு வரிகளை அதற்கு பதிலாகப் பாடினான்:

யாரில்லையெனினும் பின் தொடர்வேனே
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்.

இதனால் மிகவும் கோபமடைந்த அந்த கிராமத்தலைவன், அவனது மனைவியை கொல்லும்படி உத்தரவிட்டான், அவளும் கொல்லப்பட்டாள். இப்பொழுது அந்த கிராமத்தலைவன் சொன்னான், உனக்கு இறுதி வாய்ப்புத் தருகிறேன். விசுவாசத்தை மறுதலித்து உயிர்வாழ் என்றான். மரணத்தை எதிர்கொண்டிருக்கும் அந்த மனிதன், நம் மனதைவிட்டு நீங்கா இந்த இறுதி வரிகளைப் பாடினான்.​

சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்.

அவனது பிள்ளைகள் மற்றும் மனைவியைப்போலவே அவனும் கொல்லப்பட்டான். ஆனால் அவனது அந்த அசாதாரணமான மரணம் ஒரு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வெகு தொலைவில் வாழ்ந்த ஒரு மனிதனுக்காக ஏன், இந்த மனிதனும், அவனது மனைவியும், பிள்ளைகளும் தங்கள் உயிரை இழக்க வேண்டும்? என்று அந்த கிராமத்தலைவன் வியந்தான்! இந்த குடும்பத்திற்கு பின்னால் ஏதோ ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு, எனக்கு அந்த சக்தி வேண்டும் என்று சொல்லி, உடனடியாக, “நானும் இயேசுவுக்கு சொந்தமானவன்!” என்று அறிக்கையிட்டான். இந்த வார்த்தைகளை அந்த கூட்டம் தங்கள் தலைவனின் வாயிலிருந்து கேட்ட உடனே, அந்த முழு கிராமமும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது.

இதுதான் நம் தேவனின் மாபெரும் வல்லமை என்பது!

சங்கீதம் 126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

அந்த நாகா இனம்தான் இன்றைய நாகலாந்து! இந்தியாவின் ஒரே முழு கிறிஸ்தவ மாநிலம்!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.