கேள்வி பதில்கள்

இந்த கேள்விக்குப் பதில் சொல்வதற்குமுன் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒரு நிமிடம் மனதில் நினைவுக்கூறக் கேட்கிறோம். விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும், பொங்கலுக்கும் வரிந்து கட்டிக்கொண்டு முன்னேபோய் வாழ்த்துத் தெரிவிக்கும் கிறிஸ்தவர்களை நாம் நம் அலுவலகங்களிலும், தெருக்களிலும், ஏன் நம் சபைகளில் கூடப் பார்த்திருக்கிறோம். அவர்கள் அந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை என்றாலும் அதற்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா? வாழ்த்துத் தெரிவிப்பதனால் நாம் அந்தப் பண்டிகைகளையும் அவை உருவான பின்னணியையும் ஆமோதிக்கிறோம் என்றாகிவிடுமா? இது ஒரு புறம் இருக்கட்டும், நாம் தலைப்பில் எழுப்பியுள்ள கேள்விக்கே திரும்ப வருவோம். விக்கிரகப் படையலைக் கிறிஸ்தவன் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா?.

இந்த கேள்வியை நீங்கள் உங்களுக்குத் தெரிந்த நான்கு கிறிஸ்தவர்களிடத்தில் கேட்டால் நான்கு விதமான பதில்கள் வரும். நம் மனதுகளில் விசுவாசத்தைக்குறித்தும் வேதாகம போதனைகளைக்குறித்தும், கிறிஸ்தவ வாழ்க்கை நெறிகளை குறித்தும் இன்னும் சந்தேகங்கள் எழுந்த வண்ணம் இருப்பதினால்தான் இந்த விஷயத்தை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தீர்மானித்தோம். மேலும் இனி வரும் நாட்களில் (கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல்) அதிகமாக விக்கிரகப் படையல்கள் நம் வீட்டிற்கு வரும். அப்போது அவற்றை ஏற்பதா அல்லது மறுப்பதா என்பதை தீர்மானிக்க நமது முயற்சி உதவும் என்றும் நாம் விசுவாசிக்கிறோம்.

விக்கிரகப் படையலைக்குறித்து வேதம் என்ன கூறுகிறது? வெளிப்படுத்தின விசேஷம் 2:20 வசனத்திலே ஆண்டவர் இயேசு தியத்தீரா சபையின் பேரில் தமக்கு இருக்கும் குறையை இப்படி வெளிப்படுத்தினார்... "தன்னை தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும்அவர்களுக்குப் போதித்து அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்".

தியத்தீரா சபையோர் விக்கிரங்களுக்குப் படைத்தவைகளைப் புசித்ததும் வேசித்தனம் செய்ததும் தவறு என்று சொன்ன ஆண்டவர், அந்த செயல்களைச் செய்யத் தூண்டிய தவறான வஞ்சனையானபோதனைகளுக்கு இடங்கொடுத்ததையும் கடுமையாக விமர்சிக்கிறார் என்பதை கவனியுங்கள். வேசித்தனம் செய்ததும், விக்கிரகங்களுக்கு படையலைப் புசித்ததும் கண்டிப்பாகத் தவறு - ஆனால் இவைகளை செய்ய அவர்களைத் தூண்டின போதனைகளை சபையிலே அனுமதித்தது அதைவிட பெரிய தவறு. மீட்கப்பட்ட தம்முடைய ஜனம் - "மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை" ஆராய்ந்து பார்த்த பெரோயா பட்டணத்தாரைப்போல (அப் 17:11) இருக்கவேண்டும் என்றுதான் இயேசு கிறிஸ்து எதிர்ப்பார்க்கிறார். அதனால் நூதனமாக எந்த உபதேசத்தையோ, போதனையையோ கேட்டாலும் அவைகளை வேத வாக்கியங்களின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கிறவர்களாக நாம் இருக்கவேண்டும்.

சீரியா நாட்டின் அந்தியோகியாவிலிருந்த ஆதித்திருச்சபையிலே, புறஜாதியிலிருந்தும், யூதர்களிலுமிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். இவர்களிடையே நாம் எழுப்பிய இதே கேள்வி அன்று விவாதிக்கப்பட்டது. பேதுருவும், யாக்கோபும், பவுலும், பர்னபாவும் மற்ற அப்போஸ்தலர்களும், மூப்பரும் எருசலேமில் கூடியிருந்த இடத்திலே இந்த தர்க்கத்தை முடிக்க விரும்பிய யாக்கோபு எடுத்த தீர்மானத்தை அப் 15:18-20ல் வசனங்களில் நாம் வாசிக்கிறோம். அங்கே "விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும் நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும் விலகியிருக்கும்படி" நான் தீர்மானிக்கிறேன் என்று சொன்ன யாக்கோபு, முகவுரையாக எதைச் சொன்னார் என்று கவனித்தீர்களா? 19வது வசனத்தில் "புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாது" என்று நோக்கத்திலேதான் அந்த தீர்மானத்தை யாக்கோபு எடுத்தார். விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கலாகாது என்ற மக்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட தீர்மானம் அது. ஆனால் யூதர்களும், புறஜாதியரும் சபையிலே கைகோர்த்து ஒன்றாக தேவனை வழிபடக்கூடி வர அது ஏதுவாக அமைந்தது.

சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும் (தீத்து 1:15). ஆனால் விசுவாசித்திலே நம்மைவிட கீழுள்ளவர்களுக்காக, நாம் நல்லது என்று கருதுவதையும், அவர்கள் இடறலடையாதபடிக்குவிட்டுவிலகுவது நல்லது. இந்த விஷயத்தைக்குறித்து பவுல் 1 கொரிந்தியர் 8:4-13 வசனங்களில் கீழ்காணும் காரியங்களைத் தெளிவுப்படுத்தினார். இரட்சிக்கப்பட்ட நமக்கு விக்கிரகம் ஒன்றுமில்லை. ஆனால் இரட்சிக்கப்படாதவர்களுக்கு அது ஒரு பொருள் (ஒரு வல்லமை, தேவன் அல்லது தேவி) கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நமக்கு உலகமும், அதிலுள்ள சகலதும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தராலும், அவர் மூலமாயும் உண்டாயிருக்கிறது என்பது தெரியும். ஆனால், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது. காரணம், புசிப்பதினால் நமக்கு மேன்மையுமில்லை. புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை. இருப்பினும் இந்த விஷயத்தில் நமக்கு இருக்கும் அதிகாரம் பலவீனருக்கு (சரீரப்பிரகாரமல்ல, விசுவாசப் பிரகாரமாக) எந்த விதத்திலும் தடையாகவோ, ஊறு விளைவிப்பதாகவோ இருக்கக்கூடாது.

நம் நிமித்தம் பலவீனமுள்ள சகோதரன் கெட்டுப்போகக்கூடாது என்பதே இந்த போதனையின் கருப்பொருள். காரணம். கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. இங்கே பலவீனமுள்ள சகோதரன் என்பவன் ஒரு நடக்கையை எதிர்ப்பவனோ, கேள்வி கேட்பவனோ அல்ல, மாறாக பலட்சயமான விசுவாசத்தினால் எளிதில் பாவத்தில் தவறி விழுபவனே பலவீனமான சகோதரனாகும் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். விக்கிரகப் படையலைக் குறித்து குறிப்பாக சொல்லாவிட்டாலும் பவுல் ரோமர் 14ம் அதிகாரத்தில் கூறின சில கருத்துக்களையும் நாம் இங்கே மனதிற்கொள்ளவேண்டும். புசிக்கிறவன், புசியாதிருக்கிறவனை அற்பமா எண்ணாதிருப்பானாக, புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக. தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே (வசனம் 3).

ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயத்திருக்கிறேன். ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும். (வச 14). போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால் நீ அன்பாய் நடக்கிறவனல்ல, அவனை உன் போஜனத்தினால் கெடுக்காதே. கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே (வசன 15) மேலும் ரோம 14:20-2 பார்க்கவும். விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டவைகளைக் குறித்து 1கொரி 10:19-21ல் சில காரியங்களை வெளிப்படுத்தின. பிறகு பவுல் சொல்வதைக் கவனியுங்கள். "எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு. ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது" (வச 23).

விக்கிரகப் படையலின் காரியத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டிய விஷயங்கள்: இந்த விஷயத்தில் என் வேதம், என் விசுவாசம், பிறர் மனசாட்சி என்ன சொல்கிறது? (1 கொரி 15:20, ரோம 14:14, 1கொரி 10:27029). என்று உணரவேண்டும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.