கருத்து துணுக்குகள்
 
ஆசிரியர்: A.P. ஜெனிபர்
 
விடமுடியாத பாவம்

உலகம் அறிவியல் , விஞ்ஞானம் , புதிய கண்டுப்பிடிப்புகள் என்று வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் உலகம் முழுவதும் கைபேசி மற்றும் இணையதளம் தான் வாழ்க்கை என்று முடங்கிக்கிடக்கிறது.இப்படிப்பட்ட உலகத்தில் உங்களால் பாவத்திற்கு விலகி பரிசுத்தமாக வாழ முடியுமா என்று கேட்டால் அநேகர் அது சாத்தியமில்லாத ஒன்று என்று தான் சொல்வார்கள். காரணம் இன்றைய உலகம் எங்கு பார்த்தாலும் பாவத்தால் நிறைந்துள்ளது. தண்ணீரை குடிப்பது போல மனிதன் பாவத்தை பருகி கொண்டிருக்கிறான். எனவே தூய்மையான வாழ்க்கை வாழ்வது முடியாத காரியம் என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

        இப்பொழுது 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த நோவா என்கிற மனிதனுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை உங்களுக்கு காண்பித்து கொடுக்க விரும்புகிறேன். கடவுள் நோவாவிடம் , நான் முழு உலகத்தையம் தன்ணீரினால் அழிக்க போகிறேன். நீயும் உன் குடும்பமும் சேர்ந்து பேழை (கப்பல் போன்ற) ஒன்றை உருவாக்குங்கள். பேழைக்குள்ளே நீயும் , உன்னுடைய குடும்பமும் உள்ளே செல்லுங்கள். மேலும் எல்லா மிருகங்களிலும் பறவைகளிலும் ஒவ்வொரு ஜோடி பேழைக்குள்ளே செல்ல வேண்டும் என்றும் கடவுள் நோவாவிடம் சொன்னார்.

        இப்பொழுது ஒரு காரியத்தை கற்பனை செய்து பாருங்கள்.

        நோவாவின் மனதில் இப்பொழுது என்ன யோசனை ஓடிக்கொண்டிருக்கும்? நானும் எனது குடும்பமும் பேழைக்குள் சென்றுவிடுவோம். ஆடு , மாடு , கோழி போன்றவற்றை எல்லாம் உள்ளே கொண்டு சென்றுவிடலாம். ஆனால் சிங்கம் எப்படி பேழைக்குள்ளே வரும்; புலி , கரடி , யானை எல்லாம் எப்படி உள்ளே வரும் . இவைகளை உள்ளே வரவைப்பது முடியாத காரியம் , இதற்கு வாய்ப்பே இல்லை என்று நோவா அன்று நினைத்திருக்கலாம். ஆனால் , நடந்தது என்ன தெரியுமா? நோவாவும் , அவரது குடும்பமும் பேழைக்குள் சென்ற பொழுது , எல்லா விலங்குகளும் பறவைகளும் ஒவ்வொரு ஜோடியாய் பேழையை நோக்கி வந்ததாம் (ஆதி 7:13,14). இவைகள் பேழைக்குள் வருவது சாத்தியமில்லை , இது முடியாத காரியம் என்று நினைத்த கொடிய விலங்குகள் சிங்கம் , புலி , கரடி எல்லாம் இப்பொழுது பேழையை நோக்கி வருகிறது. நோவாவும் அவரது குடும்பமும் பேழைக்குள் செல்ல செல்ல இந்த விலங்குகள் , பறவைகள் எல்லாம் உள்ளே சென்று கொண்டிருக்கிறது.

என்ன ஆச்சரியம் !!

        சிங்கம் , புலி , கரடி போன்ற கொடிய விலங்குகள் பேழைக்குள் செல்வது மிகவும் கடினமான ஒன்று , முடியாத காரியம். ஆனால் நோவாவும் அவரது குடும்பமும் பேழைக்குள்ளே செல்ல செல்ல அந்த விலங்குகளும் உள்ளே வந்தது.அதுபோல தான் நாமும் ஆண்டவருக்குள் செல்ல செல்ல நம்முடைய வாழ்க்கையில் விட முடியாத பாவங்கள் மாறும். இயேசுவோடு கூட நீங்கள் நடக்க நடக்க பெரிய மாற்றதை நம்முடைய வாழ்க்கையில் கண்டு கொள்ள முடியும். எனவே முடியாது என்று சோர்ந்து போக வேண்டாம். இயேசுவோடு இணைந்து முடித்து காட்டுங்கள். ஆமென்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.