கருத்து துணுக்குகள்

ஒரு கற்பனைத் திருச்சபை

ஆசிரியர்: யோசுவா தானியேல்
 

ஒரு கற்பனை திருச்சபை

இந்த சபையில் உள்ள அனைவரும் மீட்பின் அனுபவத்தை ருசித்தவர்கள். அனைவருக்கும் கடவுளோடு நெருங்கிய உறவு உண்டு. அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு, அவரது சத்தத்தைக் கேட்கிறவர்கள். நாளுக்கு நாள் பரிசுத்தத்திலும் தேவ பக்தியிலும் வளர்ந்து கொண்டிருப்பவர்கள்.
இவர்களுக்குள் எந்தவித ஏற்றத்தாழ்வும், பேதங்களும் இருப்பதில்லை. இங்கு ஒருவர் ஏழ்மையில் இருந்தால், ஒட்டுமொத்த சபையாரும் துடிதுடித்துப் போய்விடுவார்கள். ஓடிச் சென்று தங்களாலான உதவியைச் செய்து தூக்கிவிடுவார்கள்.
 
இவர்களது மேய்ப்பர் கடவுளால் நியமிக்கப்பட்டு, உறுதிபண்ணப்பட்டு, சபையாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். (இறையியல் கல்வியின் துணையோடு மட்டும் காலம் தள்ளாமல்) கடவுளின் வார்த்தையைக் கலப்பில்லாமல் பகிர்ந்து கொள்ளுகிறவர். இவருக்குத் தன் திருச்சபையாரின் மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் உண்டு. ஒவ்வொரு குடும்பத்தினரின் நிலையையும் அறிந்து, அவர்களின் ஆறுதலுக்காக ஜெபிக்கவும், உதவவும் அயராது உழைப்பவர்.
 
இவர்களது சபையில் தீர்க்கதரிசன வரம் பெற்ற அனேகர் உண்டு. இவர்கள் வெறும் சுனாமி/பூகம்பம்/தேர்தல் தீர்க்கர்கள் அல்ல, மாறாக சபையின் பக்திவிருத்திக்கேற்ற இறைவாக்கு அருள்பவர்கள். இவர்களிடம் விசுவாசிகள் ஒன்றையும் மறைப்பதில்லை. காரணம், கடவுள் இவர்களுக்கு எப்படியும் வெளிப்படுத்திவிடுவார்! சபைக்குள் புதிதாக ஒருவர் வந்தாலும், அவர்களது அந்தரங்கம் வெளிப்படுத்தப்பட்டு, அந்தக்கனமே தங்கள் இருதயத்தை ஊற்றி மனந்திரும்பி, விடுதலையைப் பெற்றுக் கொள்வார்கள்.
 
இதனால் சபையில் ஒருமனமும் ஒற்றுமையும் மிகுந்து காணப்படும். கடவுளால் நியமிக்கப்பட்ட தலைமைகளுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் விசுவாசிகள் எப்போதும் கட்டுப்பட்டு நடப்பவர்கள், ஏதோ பயத்தால் அல்ல, ஆவியானவரின் அன்பு இவர்களுக்குள் ஊற்றப்பட்டிருப்பதால்!
 
இந்த சபையை நிர்வாகம் செய்பவர்கள் சபையிலும் சமுதாயத்திலும் நற்சாட்சி பெற்றவர்கள். இவர்கள் தங்கள் சுய பெலத்தையும் ஞானத்தையும் சார்ந்திராமல், ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அனுதினமும் நடத்தப்படுபவர்கள்.
 
குறித்த காலம் நிறைவு பெற்றவுடன், இவர்களாகவே குழுவைக் கலைத்துவிட்டு, மறுபடியும் ஒன்றுகூடி ஜெபித்து கடவுளின் வழிகாட்டுதலின் படி ஒரு புதிய குழுவைத் தேர்ந்தெடுப்பார்கள். பதவிக்காக போட்டி பொறாமையா? அந்தப் பேச்சுக்கே இடமில்லை. யார் வந்தாலும் சபைக்காகத் தானே உழைக்கப் போகிறார்கள், அப்புறம் என்ன போட்டி! இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு சுழற்சி முறையில் தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கத் தானே போகிறது என்று இருந்துவிடுவார்கள்.
 
இவர்களின் ஒன்றுபட்ட உழைப்பால், சபை வருடா வருடம் ஒரு குட்டி போட்டுவிடும். புதிய சபைகளைக் கட்டுவதற்கே பணப் பற்றாக்குறை ஏற்படுவதால் கோபுரம், அலங்காரம், சொகுசு போன்றவற்றைப் பற்றி சிந்திப்பதற்கே வழி இருக்காது!
 
இந்த சபையைக் குறித்து சமுதாயத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. சமூகப் பணிகளில் இவர்களை மிஞ்ச ஆளில்லை. அரசாங்கமே இவர்களைக் கண்டு நடுங்கும் என்றால் பாருங்களேன்! சமுதாயப் பணி, பேரிடர் மேலாண்மை என்று வந்துவிட்டால், அந்த மாவட்ட அதிகாரிகளே சபையாரைத் தொடர்பு கொண்டு உதவியை நாடி நிற்பார்கள்!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.