கட்டுரைகள்
ஆசிரியர்: சாம் ராமலிங்கம்
 
christ centered marriage

குடும்பம் என்பது தேவனுடைய உன்னதமான திட்டம் (ஆதி.1:27, ஆதி.2:18, 24, எபி. 13:4). தேவன் குடும்ப அமைப்பை விரும்பி உருவாக்கினார். மேலும் தேவன் ஒவ்வொரு குடும்பத்திலும் வசிக்க விரும்புகிறார்(ஆதி.3:8). குடும்பத்தை குறித்த தேவனுடைய உள்ளத்தை மாற்.10:9ல் ஆண்டவராகிய இயேசு இப்படி வெளிப்படுத்தினார் “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்கா திருக்கக்கடவன்” (மாற்.10:9). ஆனால் இன்று அற்பக்காரணங்களுக்காக கிறிஸ்தவ குடும்பங்கள் தேவனுடைய திருவுளச்சித்தத்திற்கு விரோதமாக உடைகின்றன. அதிலும், ஆச்சரியம் என்னவென்றால் குடும்ப நீதிமன்றங்களிலே கிறிஸ்தவ குடும்பங்களின் விவாகரத்துக் வழக்குகளே அதிகம் குவிந்து கிடக்கின்றன.

கிறிஸ்தவ திருமணங்கள் உடன்படிக்கைக்கு கட்டுப்பட்டவை என்பதை பல நேரம் கிறிஸ்தவ தம்பதியினர் மறந்துவிடுகின்றனர் அல்லது அலட்சியப்படுத்துகின்றனர். கிறிஸ்தவ திருமணம் ஒரு வாடகை ஒப்பந்தம் அல்ல. வாடகை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லையென்றால் அது முறித்துப்போடப்படும். கிறிஸ்தவ திருமணங்கள் முறிக்கப்பட முடியாத உடன்படிக்கைக்குட்பட்டது. ஆகவே தான் ஆண்டவர் தீர்க்கதரிசி மல்கியா மூலம் “தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்” (மல்.2:16) என்று திருவுளம் பற்றினார். இந்த பதிவை வாசிக்கும் நாம் அனைவரும் ஒருமுறை கூட திருமண உடன்படிக்கையின் பிரமாணத்தை நினைவுபடுத்திக் கொள்வது மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.

திருமண உடன்படிக்கை

மணமகன்: “தேவனுடைய சமூகத்தில் இங்கு வந்திருக்கும் யாவரும் சாட்சியாக …………………. ஆகிய நான், …………………… ஆகிய உன்னை, இன்று முதல் எனக்கு விவாக மனைவியாக (வாழ்க்கைத் துணைவியாக) ஏற்றுக்கொண்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின்படி நன்மையிலும், தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் சகவீனத்திலும், மரணம் நம்மை பிரிக்குமளவும் எல்லா நிலையிலும் உன்னை நேசிக்கவும், போஷித்துக் காப்பாற்றவும் வாக்குக் கொடுக்கிறேன்”.

மணமகள்: “தேவனுடைய சமூகத்தில் இங்கு வந்திருக்கும் யாவரும் சாட்சியாக …………………. ஆகிய நான், …………………… ஆகிய உங்களை, இன்று முதல் எனக்கு விவாக கணவராக (வாழ்க்கைத் துணைவராக) ஏற்றுக்கொண்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின்படி நன்மையிலும், தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் சகவீனத்திலும், மரணம் நம்மை பிரிக்குமளவும் எல்லா நிலையிலும் உங்களை நேசிக்கவும், பயபக்தியோடு கீழ்ப்படியவும் வாக்குக் கொடுக்கிறேன்”.
இந்த உடன்படிக்கையை படிக்கும் கிறிஸ்தவ தம்பதியினர் தங்களுடைய திருமண நாளை நினைவு கொண்டு இந்த உடன்படிக்கைக்கு தங்களை மறுபடி அற்பணித்து தொடர்ந்து இந்தப் பதிவைப் படிக்க நான் ஆசிக்கிறேன்.

“தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்”, “தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்” என்ற குடும்பத்தைக் குறித்த தேவனுடைய திருவுளத்தை நாம் இன்று நினைவுபடுத்திக் கொண்டோம். இதை நாம் எப்படி நிறைவேற்றலாம்?

தேவன் இணைத்த குடும்ப உறவை பிரிக்க வகைதேடாதேயுங்கள்!

ஆதியிலே தேவன் ஆதாமையும் ஏவாளையும் “அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (ஆதி.2:24) என ஆசீர்வதித்தார். எனவே எக்காரணம் கொண்டும் கணவன் - மனைவி உறவுக்கிடையில் எந்த ஒரு நபரையும் அனுமதியாதேயுங்கள். கணவன் - மனைவி உறவை பொருட்கள், பணம், சொத்து பிரிக்க இடம் கொடாதிருங்கள். உங்கள் தொழில் அல்லது வேலையினால் நீங்கள் பிரிந்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது கூடுமானவரை அதிக நாட்கள் அவ்வாறு பிரிந்திருக்;காதவாறு அடிக்கடி கூடி வாழுங்கள். தகாத ஆசை, இச்சைகளுக்கு இடங்கொடுத்து தேவன் இணைத்த உறவை பிரிக்க வகை தேடாதிருங்கள்.

பிசாசுக்கு இடங்கொடாதிருங்கள் (எபே. 4:27)

வேத வல்லுநர்கள்; இப்படிச் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். ஏவாள் ஆதாமோடு இல்லாத சமயம் பார்த்துத்தான் பிசாசு அவளை வஞ்சித்தான் என்று. கணவனும் - மனைவியும் கூடி வாழ்வதெற்கென்றும், ஒருவருக்கொருவர் தோழனாய், தோழியாய் இருந்து ஒருவரை ஒருவர் மேம்படுத்தி, ஆற்றல்படுத்தி குடும்பத்தைக் குறித்த தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற படைக்கப்பட்டவர்கள். எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சரீரத்தால், மனதால் பிரிந்து இருக்கும் போது நிச்சயமாக பிசாசுக்கு இடம் கிடைத்துவிடும். எனவே தொழில், வேலை சம்பந்தமாக சரீரத்தால் கணவன் - மனைவி பிரிந்திருந்தாலும், மனதால் ஒருமித்து வாழந்து பிசாசுக்கு இடங்கொடாதிருங்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பதாக நான் ஊழியத்தினிமித்தம் ஒரு மாதம் இலங்கை சென்றிருந்தேன். நானும் என் மனைவியும் அதிகாலையில் எழுந்து சபைக்காக, குடும்பங்களுக்காக, தேசத்திற்காக சேர்ந்து ஜெபிக்கும் பழக்கமுடையவர்கள். இந்த ஒரு மாதம் எப்படி ஜெபிப்பது என்ற கேள்வி என்னை வாட்டியது. இலங்கை சென்ற அடுத்த நாளே சட்டென ஒரு யோசனை தோன்றியது, “வாட்ஸ்அப்” மூலம் ஜெபிக்கலாமே! என் மனைவியும் உடனே சரியென்று சொன்னார்கள். ஒரு பிரச்சனையில்லை. காலை 4.40க்கு என் மனைவியை வாட்ஸ்சப்பில் எழுப்பிவிடுவேன். இருவரும் காலைக்கடன்களை முடித்து சரியாக காலை 5 மணிக்கு வாட்ஸ்அப்பில் இணைந்து ஜெபிக்கத் துவங்குவோம். ஒரு மாதமும் அருமையாக நாங்கள் இருவரும் வழக்கம் போல ஜெபித்தோம். ஒவ்வொரு நிமிடமும் நான் எங்கு இருக்கிறேன். எந்தசபையில் ஊழியம் செய்து கொண்டிருக்கிறேன். என்ன சாப்பிடுகிறேன் என்று கூட வாட்ஸப்பில் என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தெரிவித்து விடுவேன். ஆகவே நாங்கள் சரீரத்தில் பிரிந்திருந்தாலும், ஆவியிலே நாங்கள் ஒன்றாக இருந்தோம். பிசாசுக்கு அங்கே இடமில்லை.
கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்.

சூரியன் அஸ்தமிக்குமுன் உங்கள் எரிச்சல் தணியக்கடவது (எபே.4:26)

கோபம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவரால் கொடுக்கப்பட்ட ஒரு உணர்வு. கோபப்படாமலே இருப்பது மிகவும் கடினம். நம்முடைய பெலவீனத்தை ஆண்டவர் அறிந்தபடியானாலே தான், “கோபத்தை நெகிழ்ந்து உக்கிரத்தை விட்டுவிடு” (சங்.37:8), “கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதே! சூரியன் அஸ்தமிக்குமுன் எரிச்சலை விட்டுவிடு” (எபே. 4:26) என்று அவர் அறிவுறுத்துகிறார். எனவே கோபத்தை விட்டு விடுவோம்! ஒருவேளை கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருப்போம்! சூரியன் அஸ்தமிக்குமுன் எரிச்சலை தணித்துவிடுவோம். எரிச்சலோடே ஒருநாளும் நித்திரைக்குச் செல்ல வேண்டாம். மனைவியின் மீது கணவனும், கணவனின் மீது மனைவியும் கோபத்தினால் எரிச்சலோடே நித்திரைக்குச் செல்லும் போது அங்கே இருவரும் ஒரே படுக்கையில் உறங்கினாலும், உடலால் உள்ளத்தால் அவர்கள் பிரிந்திருப்பர். அந்தப் பிரிவை பார்க்கும் சாத்தான் அவர்கள் இருவருக்கும் இடையில் வந்து படுத்திருப்பான். நிச்சயமாக அவன் இருவரையும் உடலால் உள்ளத்தால் ஒன்று சேர விடமாட்டான். கணவனைக் குறித்த எரிச்சலால் மனைவியும், மனைவியைக் குறித்த எரிச்சலால் கணவனும் உறங்காமல் ஒருவருக்கொருவர் விரோதமாய் திட்டமிட்டுக்கொண்டிருப்பர். இது பிரிவினையில் கொண்டுபோய் விடும். எனவே, சூரியன் அஸ்தமிக்குமுன், “Sorry” என்ற ஐந்து எழுத்து வார்த்தையை ஒருவருக்கொருவர் சொல்லுவது பிரிவினையைத் தடுக்கும். இந்த “Sorry” என்ற வார்த்தையை அவசியம் சொல்ல வேண்டுமா? யார் முதலில் சொல்லுவது? இது போன்ற “Ego” (Edging God Out) நம்மைத் தடுக்கும். “Ego” வுக்கு இடம் கொடுக்காமல் தேவனுக்கு இடம் கொடுப்போம். “Sorry” சொல்வதில் முந்திக் கொள்வோம்.

குடும்பத்தை உங்கள் புத்தியின்மையால் இடித்துப் போடாதிருங்கள் (நீதி.14:1)

குடும்பத்தைக் கட்டுவதில் கணவன் - மனைவி புத்தியாய் நடந்து கொள்வோம். குடும்ப வளர்ச்சி, பொருட்கள் வாங்குவது, சொத்துக்கள் வாங்குவது, பிள்ளைகளை வளர்ப்பது, அவர்கள் படிப்பு, வேலை, திருமண விஷயங்களில் புத்தியாய் ஒருமனப்பட்டு ஜெபித்து தேவ சித்தத்துடன் காரியங்களைச் செய்வது நலம். இன்றைய காலக்கட்டங்களில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறோம். இருவரும் நல்ல உத்யோகத்தில் இருக்கும் போது நல்ல வருவாய் கிடைக்கிறது. அந்த வருவாய் நம்முடைய குடும்பத்தைக் கட்டப் பயன்பட வேண்டும். கணவன் மனைவி இருவரும் தங்கள் சம்பளப் பணத்தை ஒன்றாக வைத்து ஜெபித்து, தேவனுக்கு கொடுப்பதை எடுத்து தனியே பிரித்து வைத்து விட்டு, அந்த மாதத்தின் தேவைகளைப் பட்டியலிட்டு எடுத்து செலவு செய்ய வேண்டும். “இது என்னுடைய சம்பளம், என் இஷ்டத்துக்கு செலவழிக்க எனக்கு உரிமையுண்டு” என்று ஊதாரித்தனமாக கணவனோ, மனைவியோ செலவழிக்கும் போது, நாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றாமல், நம்முடைய புத்தியின்மையால் குடும்பத்தை இடித்துப் போட காரணமாகிவிடுவோம்.

 உங்கள் பொருளாசையினால் வீட்டைக் கலைக்காதேயுங்கள் (நீதி.15:27)

இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான எல்லாத் தேவைகளையும் கர்த்தர் சந்திக்கிறார். ஆனால், தேவன் ஒரு நாளும் நமது பேராசையை நிறைவேற்றுகிறவரல்ல. வேலையில் உண்மையில்லாதிருத்தல், லஞ்சம் வாங்குதல், அலுவலகப் பொருட்களை, பணத்தை கையாடுதல், தகாத தொழில்களைச் செய்தல் போன்ற பொருளாசையினால் நம் வீட்டைக் கலைக்காதிருப்போமாக! சமீப காலங்களில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் பிடிபடுவதை தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். கடந்த மாதத்தில் ஒரு பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கி பிடிபட்டுவிட்டார். முகத்தை மூடிக்கொண்டு அவர் காவல்துறை வாகனத்தில் ஏறுவதை தொலைக்காட்சியில் காண்பித்தனர். நிச்சயமாக அப்பெண்ணின் கணவன், பிள்ளைகள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கக்கூடும். இந்த விஷயம் அந்தக் குடும்பத்தை மிக மோசமான நிலையில் பாதிக்கும் என்பதை நாம் அறிவோம். எனவே பொருளாசை நிச்சயமாக குடும்பத்தை கலைத்துவிடும் என்று அறிவோமாக!
பல வருடங்களுக்கு முன் பெங்களுர் பட்டணத்தில் என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற போது, ஒரு சபையில் நான் ஆராதனையில் கலந்து கொண்டேன். காணிக்கை வேளையின் போது, சபையின் போதகர் இவ்வாறு சொன்னார். “நீங்கள் 30 நாளும் ஒழுங்காக தேவனுக்கு பயந்து உங்கள் வேலை ஸ்தலத்தில் வேலை செய்தீர்களா? அல்லது நேரத்தை வீணாக்கினீர்களா? 30 நாளும் ஒழுங்காக தேவனுக்குப் பயந்து வேலை செய்தவர்கள் தசமபாகம் செலுத்துங்கள். உங்கள் நியாயமான வருமானத்திலிருந்து தசமபாகம் செலுத்துங்கள், சாபத்தீடானதை காணிக்கைப் பெட்டியில் போடாதீர்கள்! ஒரு வேளை அரசு வேலையில் நீங்கள் இருப்பீர்கள் என்றால் நீங்கள் காணிக்கை அல்லது தசமபாகம் செலுத்தும் பணம் உங்கள் நியாயமான வருவாய் தானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். பொருளாசையினால் உங்கள் குடும்பத்தை கலைக்காதிருங்கள்.

“தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” (மாற்.10:9), “தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்”(மல்.2:16) என்ற குடும்பத்தை குறித்த தேவனுடைய திருவுளச்சித்தத்தை அறிந்தவர்களாக கணவன் - மனைவி இருவரும் தேவனுடைய தலைமையை ஏற்று அவருடைய ஆளுகைக்குக் கட்டுப்பட்டு குடும்பத்தை நடத்திச் செல்வோம். குடும்பம், தேவன் - கணவன் - மனைவி என்ற முப்புரிநூலால் கட்டப்படட்டும். “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (பிரச.4:12).

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.