வேதாகம வரலாறுகள்

கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபம்

தலைப்பு: 

இந்த நிருபம் எந்த சபையாருக்காக எழுதப்பட்டதோ அந்த சபை இருந்த பட்டணத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. பவுலின் நிருபங்களில் தீமோத்தேயு, தீத்து மற்றும் பிலேமோன் தவிர்த்து, மற்ற நிருபங்கள் அவர் எந்த சபையாருக்கு எழுதினாரோ, அந்த சபை எந்த பட்டணத்தில் இருந்ததோ, அதன் பெயரையே நிருபத்திற்கு சூட்டினார்கள். 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

முதல் வசனத்தில் குறிப்பிட்டிருப்பது போல, இந்த நிருபம் அப்போஸ்தலர் பவுலினால் எழுதப்பட்டது. இவர்தான் ஆசிரியரா என்ற கேள்விக்கே இடமில்லை!. இந்த நிருபம் எழுதப்பட்ட முதலாம் நூற்றாண்டில் இருந்தே இந்த நிருபத்தை பவுல்தான் எழுதினார் என்று உலகம் முழுவதும் உள்ள சபைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. நிருபத்தில் இருந்து அறிவது - பவுல், தானே இந்த நிருபத்தை எழுதினேன் என்று 1:1,13; 3:4-6; 4:15; 16:21 வசனங்களில் உரிமை பாராட்டுவதைக் காண்கிறோம்.  நிருபத்தின் வெளியில் இருந்து அறிவது – கி.பி. 95-ல் ரோமாபுரியைச் சேர்ந்த கிளமெண்ட் இந்த கடிதம் கொரிந்திய சபைக்கு தான் எழுதப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறார். ஏனைய தலைவர்கள் – இக்னே,   ஸியஸ் (கி.பி.110), பாலிகார்ப் (கி.பி.135), டெட்டுலியன் (கி.பி.200) பவுல் தான் இந்நிருபத்தை எழுதினார் என்று ஏற்றுக் கொண்டனர்.

ஆண்டு கி.பி.55 முதல்பாதியில் பெரும்பாலும் பவுல் தமது மூன்றாம் மிஷனரி பயணத்தை மேற்கொண்டபோது எபேசு பட்டணத்தில் இருந்து இந்நிருபத்தை எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அப்போஸ்தலர் தாம் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்ததை (அப்.20:31) நிறைவுசெய்யவும், பெந்தெகோஸ்தே (கி.பி. 55 மே/ஜூன்; அப்.16:8) நாள் பரியந்தம் எபேசு பட்டணத்தில் தங்கியிருக்க விரும்பினார். கொரிந்துவில் குளிர்கால நாட்களை கழித்திட விரும்பினார் (16:6; அப்.20:2) அவர் கொரிந்து பட்டணத்திற்கு பிரயாணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது இந்நிருபத்தினை எழுதும்போதே எதிர்பார்க்கப்பட்டது (4:19; 11:34; 16:8). 

பின்னணி மற்றும் அமைப்பு

ரோம சாம்ராஜ்யத்தின் அகாயா நாடு – ஏதேன்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் 45 மைல் தூரத்தில் இருந்தது, இதன் ஒருபகுதியாக இருந்த கிரீஸ் பட்டணத்தின் தெற்கே கொரிந்து பட்டணம் இருந்தது. போலொபொனெசஸ் என்னும் கீழ்ப்பகுதி ஏனைய கிரீஸ் நாட்டின் பகுதிகளுடன் 4 மைல் தூர பூசந்தியால்  (கடலை பிரிக்கும் குறுகிய நிலப்பகுதி) இணைக்கப்பட்டுள்ளது – கிழக்கில் சரோனிக் வளைகுடாவும் மேற்கில் கொரிந்து வளைகுடாவும் இருக்கின்றன. கொரிந்து பட்டணம் இந்த பூசந்தியின் (Isthmus) மைய்யப்பகுதிக்கு அருகில் உயர்ந்த பீடபூமியில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக, வடக்கு தெற்கு பயணங்கள் எல்லாம் இந்த பழங்கால பட்டணத்தின் ஊடாக அல்லது வழியாகத் தான் செல்ல வேண்டும். போலொபொனெசஸ் வழியாக கடல் மார்க்கமாக செல்வதற்கு 250 மைல் பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த பயணம் அபாயகரமானதும் நிச்சயமாக காலம் அதிகமாகச் செல்லும். அனேக கப்பல் தலைவர்கள் அவர்களது கப்பல்களை சறுக்கல் அல்லது உருளைகளை பயன்படுத்தி கொரிந்து அருகில் இருக்கும் பூசந்தி (Isthmus) வழியாக பயணம் செல்வர். இதினால் கொரிந்து பட்டணம் வியாபார பட்டணமாக கிரீஸ் பட்டணத்திற்கு மட்டுமல்ல, வட ஆப்பிரிக்கா, இத்தாலி மற்றும் சின்ன ஆசியாவில் செழித்தோங்கியது. ஒரு கணவாய் நீரோ மன்னனால் கி.பி. முதல் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்படாமல். 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் தான் முடிக்கப்பட்டது. 

பூசந்தி விளையாட்டுகள் – பிரபலமானதாக அந்நாட்களில் கொரிந்தியர்களால் நடத்தப்பட்டது (பிரபலமான மற்றொன்று ஒலிம்பிக் விளையாட்டு), இதினால் அனேகர் கொரிந்து பட்டணத்திற்கு வந்து சென்றனர். புறச்சமய கலாச்சார தரத்தின்படியும் கூட கொரிந்து பட்டணத்தாரின் ஒழுக்கமுறை – வரம்புமீறிய ஒழுக்ககேடாக, தார்மீக நெறியில் மிகவும் தரம் குறைந்து இருந்தனர். ஒழுக்க சீர்கேட்டை குறிப்பிட “கொரிந்தியன் ஆக்கு” என்று பயன்படுத்தப்படும் அளவிற்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுக்கசீர்கேடு அடைந்திருந்தனர். 6-ஆம் அதிகாரம் 9, 10-ஆம் வசனங்களில் பவுல் கொரிந்திய பட்டணத்தார் எந்த சில குறிப்பிட்ட பாவங்களுக்கு - அதில்  அக்காலத்து கொரிந்துபட்டண விசுவாசிகள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் முன் அடிமைப்பட்டு இருந்தனர் என்ற பட்டியலை குறிப்பிடுகிறார். சோகமான விஷயம் என்னவென்றால், அப்பட்டியலில் காணப்படும் சில பாவங்கள் சபை அங்கத்தினர்களிடையேயும் காணப்பட்டது. வசனம் 5:1-ல் ஒருவன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறான் என்று சொல்லப்படுகிறது – அது அஞ்ஞானிகளூக்குள்ளும் சொல்லப்பட்டாத பாவம் என்று பவுல் எழுதுகிறார். அனேக கிரேக்க பட்டணங்களில் காணப்பட்டது போல, 2000 அடி உயர அரண் ஒன்று கொரிந்து பட்டணத்திலும் இருந்தது. அது பாதுகாப்பிற்காகவும், ஆராதிப்பதற்காகவும் பயன்பட்டது. அந்த அரணில் முக்கிய கட்டிடம் அன்பு தேவதையின் அப்ரோதியர்களின் கோவில். அதில் 1000க்கும் மேலான அர்ச்சக பெண்மணிகள், அவர்கள் மதம் சார்ந்த ”விபச்சாரிகள்” அதில் வாழ்ந்து வேலை செய்துவந்தனர். மாலை வேலையில் கொரிந்து பட்டணத்தில் இருக்கும் ஆண் குடிமக்களுக்கும் அயல்நாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் தங்கள் சேவையை அளிக்க இறங்கி வந்தனர். 

கொரிந்து பட்டணத்தில் இருந்த சபை பவுலால் அவரது இரண்டாவது மிஷினரி பயணத்தின் போது ஸ்தாபிக்கப்பட்டது (அப். 18:1). வழக்கத்தின்படியே பவுலின் ஊழியம் ஜெபாலயத்தில் ஆரம்பித்தது. அங்கே அவருக்கு இரண்டு யூத விசுவாசிகள் உதவியாளராக இருந்தனர் – அவர்கள் பெயர் ஆக்கிலா மற்றும் பிரிஸில்லா, இவர்கள் யூதவியாபாரிகள், பவுல் சிலகாலம் இவர்களுடன் தங்கியிருந்தார். சிலகாலத்திற்கு பின் சீலாவும் தீமோத்தேயுவும் உடன் சேர்ந்து கொண்டனர். பவுல் ஜெப ஆலயத்தில் மிக தீவிரமாக பிரசங்கிக்கத் தொடங்கினார். அனேக யூதர்கள் சுவிசேஷத்தை எதிர்த்தனர். ஜெப ஆலயத்தலைவன் கிறிஸ்புவும் அவனுடைய குடும்பத்தாருக்கும் முன்பாக இல்லாமல், ஜெப ஆலயத்தை விட்டு பவுல் வெளியேறினார். கொரிந்து பட்டணத்தார் அனேகர் மனம் மாறினர் ( அப். 18:5-8).

கொரிந்து பட்டணத்தில் ஏறக்குறைய ஒன்றரை வருடம் பவுல் ஊழியம் செய்தபின் சில யூதமத தலைவர்கள் பவுலை ரோம தீர்ப்பாயத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தினர். அவர்கள் சாட்டின குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் மதரீதியானதாகவும் குடியியல் சம்பந்தப்பட்டதாக இல்லாதிருந்ததால், மாகாணத்து முதல்வர் – கல்லியோ, வழக்கை தள்ளுபடிச் செய்தார். இதற்குபின் குறுகியகாலத்தில் பவுல் ப்ரிஸில்லாவையும் ஆக்கிலாவையும் அவருடன் கூட்டிக்கொண்டு எபேசுவிற்குச் சென்றார். அங்கிருந்து இஸ்ரவேல் தேசத்திற்குத் திரும்பினார் (அதிகாரம் 18-22). கொரிந்துவில் இருந்த சபை அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்ததோ, அதன் பழக்கவழக்கங்களை முறிக்க முடியாமல் உட்கட்சி பிரிவுகளால் நிறைந்து இருந்ததைக் காணும் போது, அதன் காழ்ப்புணர்ச்சியையும் முதிர்ச்சியற்ற தன்மையையும் காணமுடியும். வரங்கள் பல பெற்றிருந்த அப்பல்லோ சில காலம் சபையில் ஊழியம் செய்தபின், அவரை வியந்து பாராட்டுகிற சிலர் சபையின் வேறு பிரிவினருடன் கருத்து வேறுபாடு கொண்டு கலவாமல் இருந்தனர். வேறொரு கூட்டம் பவுலுக்கு உண்மை விசுவாசிகளாக கூடியது, வேறொரு கூட்டம் பேதுருவுக்கு விசேஷ அர்ப்பணிப்பைக் காட்டியது, வேறு ஒருகூட்டம் கிறிஸ்துவுக்கு மட்டும் தங்கள் விசுவாசத்தைக் காட்டியது (1:10 -13; 3:1-9).

கொரிந்து சபையில் காணப்பட்ட மிக மோசமான பிரச்சினை அவர்களில் காணப்பட்ட உலகத்தன்மை, தங்களைச் சுற்றியிருந்தவர்களின் கலாச்சாரத்தை ஒதுக்கிதள்ள மறுத்தனர். கொரிந்து சபையின் பழைய விசுவாசிகள் தங்கள் பழைய, சுயநலமான, அநீதியான, புறஜாதியாரின் பழக்க வழக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக வெளிவர முடியவில்லை. இந்த சீர்கேட்டை திருத்துவதற்காக பவுல் நிருபத்தை எழுத வேண்டிய அவசியமாயிற்று, அதேவேளையில், சபையில் உண்மையான விசுவாசத்துடன் இருந்த விசுவாசிகள் கீழ்ப்படியாத மற்றும் மனம்திரும்பாத சபை அங்கத்தினர்களுடன் ஐக்கியம் கொள்ள வேண்டாம் என்றும் அந்த அங்கத்தினர்களை சபையை விட்டு விலக்கி வைக்க வேண்டும் என எழுதுகிறார் ( 5:9-13).

பவுல் தெய்வீக உள்ளுணர்வு பெற்று இந்த நிருபத்தை எழுதுவதற்கு முன்பதாக, பவுல் அவர்களை சீர்திருத்த வேறொரு நிருபத்தையும் எழுதியிருந்தார் (5:9), அதனுடைய நகல் கிடைக்காதபடியால் அது “தொலைந்து போன நிருபம்” என்று அழைக்கப்படுகிறது. 1கொரிந்தியருக்கு பின் அங்கீகரிக்கப்பட்ட வேத புத்தகங்களின் வரிசையில் இல்லாத –  ”வருத்தத்துடன் எழுதிய” நிருபம் ஒன்றும் இருக்கிறது என்று 2கொரி. 2:4ல் பவுல் எழுதியிருப்பதைக் காண்கிறோம்.

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

இந்த நிருபத்தில் – சபை மக்கள் நடவடிக்கைகளில் திருத்தம் வரவேண்டும் என்பதற்கே அதிகமான உந்துதல் அளிக்கப்பட்டது அல்லாமல், உபதேச கருத்துக்களுக்கு அல்ல. உபதேசங்கள் அனேகமானவை பாவம் மற்றும் நீதிக்கு சம்பந்தப்பட்டவைகளாகவும், எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் போதனைகளைத் தருகிறார். எந்த வழியிலாவது தவறான வாழ்க்கை வாழ்கிறோம் என்றால் அது நாம் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கையில் இருந்தே புறப்படுகிறது. உதாரணமாக,  பாலியல் பாவங்கள் விவாகரத்து முதற்கொண்டு, தேவன் திருமணம் மற்றும் குடும்பத்திற்கு என்று வைத்திருக்கும் திட்டத்திற்கு கீழ்ப்படியாததாலும்-பாவத்தின் கட்டாய விளைவாகவும் ஏற்படுகிறது (7:1-40). தேவனுடைய பரிசுத்த குணத்தினை நாம் அங்கீகரித்தல் (3:17), சபையின் ஆவிக்குரிய அடையாளம் (12:12-27) மற்றும் கர்த்தருடைய பந்தியில் சுத்தமாக பங்குபெறுதல் (11:17-34) போன்றவற்றை பொருத்து தான் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆராதனை இது என்பது உறுதிசெய்யப்படுகிறது. சபை விசுவாசிகள் ஆவிக்குரிய வரங்களை புரிந்து கொண்டு, வரங்களை பயன்படுத்தும் போது தான் சபை மாறுபாடின்றி, பலன்தரும் பக்திவிருத்தியை அடைய முடியும்(12:1 – 14:40). நிச்சயமாக, உயிர்த்தெழுதலின் உபதேசத்தின் மதிப்பை குறைத்து விடக்கூடாது, ஏனென்றால், மரித்தவர் உயிர்த்தெழுதல் இல்லை என்றால், கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றாகிறது. கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால், பிரசங்கிப்பது வெறுமையானது, அதுபோலவே விசுவாசித்தலும் வெறுமையானதாக இருக்கும் (15:13,14).  இந்த கருப்பொருட்களுடன், விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு குறித்தும் பவுல் சுருக்கமாக இடைபடுகிறார் – இந்த சத்தியத்தை நாம் புரிந்து கொண்டால், தெய்வீக வாழ்க்கை நாம் வாழ்வதற்குத் தேவையான சரியான நோக்கம் நமக்குள் உருவாக்கும் (3:13-15). விக்கிரங்களை குறித்தும் போலியான தேவர்களை குறித்தும் சரியான புரிந்துகொள்ளுதலைப் பெற்றிருப்பது, முதிர்ச்சியற்ற கொரிந்தியர்கள் - இப்பட்டிப்பட்ட விஷயங்கள் குறித்து முதிர்ச்சியுடன் சிந்திப்பதற்கும், விக்கிரங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிப்பதில் சரியாக செயல்படுவதற்கும் உதவும் (8:1-11:1). மெய்யான, தெய்வீக அன்பை குறித்து சரியான புரிந்து கொள்ளுதல் கொண்டிருப்பது, அதனை வெளிப்படுத்துவது வரங்களை சரியான வகையில் பயன்படுத்துவதற்கு அவசியம். சொல்லப்போனால், தேவனைப் பற்றி அனைத்து காரியங்களையும் சரியாகப் புரிந்து கொள்வதற்கும் அவசியம் (13:1-13).

ஆகையால், பவுல் சிலுவை, தெய்வீக ஞானம் மற்றும் மனுஷ ஞானம், மனக்கண்களை பிரகாசிப்பிப்பதில் ஆவியானவரின் செயல்பாடு,  மாம்சீகத்தனம், நித்திய பலன்கள், இரட்சிப்பினால் உண்டாகும் மறுரூபம், குற்றமற்ற தன்மையை சார்ந்து இருத்தல், கிறிஸ்துவின் சுபாவம். கிறிஸ்துவோடு இணைந்து இருத்தல், தெய்வீக பணியில் பெண்களின் பங்கு, விவாகமும் விவாகரத்தும், பரிசுத்த அவியானவரின் ஞானஸ்நானம், தேவன் உள்ளே வாசம் செய்தல் மர்றும் வரங்களை அளித்தல், ஒரே சரீரமாக சபை இசைந்திருத்தல், அன்பினை குறித்த ஆராய்ச்சியியல், உயிர்த்தெழுதல் பற்றிய உபதேசம் இந்த உபதேசக் கருத்துக்கள் குறித்துப் பேசுகிறார். இவைகள் எல்லாம் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருப்போருக்கான மற்றும் நல்லொழுக்கத்தின் அடிப்படை சத்தியங்கள் ஆகும். 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

அதிகாரங்கள் 12-14-ல் வரங்களின் அடையாளங்கள் தான் குறிப்பாக, அற்புதம் செய்யும் வரம் மற்றும் அந்நிய பாஷையில் பேசுதல் என்பவையே இதுவரை விளக்கம் அளிப்பதில் முரண்பட்டு அதிக சவாலாக காணப்படுகிறது. வரங்கள் நிலையானவை, நிறைவானது வரும்போது (வசனம்10) மட்டுமே தீர்க்கதரிசனம் சொல்லுதலும், அறிவானாலும் ஒழிந்து போம்; அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம் (13:8) என்று அனேகர் நம்புகின்றனர். சபையில் இன்றைக்கும் அந்நிய பாஷையில் பேசுதல் அற்புதம் நடப்பித்தல் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவிக்குரிய வரங்கள் என்பவர்கள் புதியஏற்பாட்டு அப்போஸ்தலர்கள் எப்படிப்பட்ட வல்லமையோடு செயல்பட்டார்களோ அப்படிப்பட்ட வல்லமையோடு இன்றைக்கும் செயல்படுத்த வேண்டும் என்று நம்புகின்றனர். மற்றொரு கூட்டத்தார் ஆவிக்குரிய வரங்களின் அற்புத அடையாளங்கள் ஓழிந்து போய் விட்டன என நம்புகின்றனர். 

விவாகரத்து குறித்த விஷயம் அனேகருக்கு பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. அதிகாரம் 7 இதுகுறித்து பேசுகிறது – ஆனால், முரண்படாத வேதாகமம் கற்றுத் தரும் உபதேசத்தில் நிலைத்திருக்கும்படிக்கு இந்த விஷயம் குறித்து விளக்கம் தரப்படவேண்டும். உலகத்தில் இருக்கும் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்ற வாதத்தை எடுத்து முன்வைப்பவர்கள் வசனம் 15:22-ஐ அதற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆதாமுக்குள் எல்லோரும் ஆவியில் மரித்தது போல, இயேசுவின் நீதியினிமித்தம் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று உரிமைகொண்டாடுகின்றனர். இந்த “அனைவரும்” என்ற வாதத்தின் சவாலை நாம் சரியான புரிந்து கொள்ளுதலோடு  சந்திக்க வேண்டும். 

அதே அதிகாரத்தில் இருந்து, ”மரித்தவர்களுக்காக உயிருடன் இருக்கும் ஒருவர் ஞானஸ்நானம் பெறலாம்” என்ற கருத்தை வலியுறுத்த வசனம் 29ல் இருக்கும் எளிதிற்புரியாத வாக்கியம் எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. 40க்கும் மேலான கருத்துக்கள் இப்படித்தரும் ஞானஸ்நானம் குறித்து இருக்கின்றன. இது போன்ற ஞானஸ்நானத்தினால், மரித்தவர்கள் இரட்சிக்கப்பட வழி இல்லை என்ற கருத்து மிக தெளிவாக இருக்கும் மற்ற வேதாகம வசனங்களினால் மிக தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வசனம் 6:4 அவிசுவாசிகளுக்கு முன் விசுவாசிகள் மற்ற விசுவாசிகளுடன் வழக்குகளை தீர்த்துக்கொள்வது குறித்து பேசுகிறது. இந்த வசனத்திற்கு விளக்கம் அளிப்பதிலும் சவால் இருக்கிறது. குழப்பமில்லாத வசனத்திற்கு கீழ்ப்படிவதனால் இந்தவித குழப்பங்களுக்கு தீர்வு காணமுடியும். 

சுருக்கம்

I. அறிமுகம்: பரிசுத்தவான் ஆவதற்கு அழைப்பு மற்றுன் அதனால் வரும் பலன்கள் (1:1-9)
 
II.சபைக்குள் ஒற்றுமை இல்லாது காணப்படுதல் (1:10-4:21)
 
III. சபையில் ஒழுக்கமின்மை (5:1-6:20)
 
IV. சபையில் விவாகம் (7:1-40)
 
V. சபையில் சுதந்திரம் (8:1 -11:1)
 
VI. சபையில் ஆராதனை (11:2 -14:40)
  அ. சபையில் ஆண்கள் மற்றும் பெண்களின் பங்கு (11:2-16)
  ஆ. கர்த்தருடைய பந்தி (11:7-34)
 
VII. சபையின் நம்பிக்கை: உயிர்த்தெழுதல் (15:1-58)
 
VIII.சபைக்கு அறிவுறுத்திக் கூறும் அறிவுரை (16:1-24)
  அ. உக்கிராணத்துவம் (16:1-4)
  ஆ. பவுலின் சொந்த திட்டங்கள் மற்றும் வாழ்த்துதல்கள் (16:5-24)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.