வேதாகம வரலாறுகள்

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம்

தலைப்பு: 

“கர்த்தர் என் இரட்சிப்பு” என்று பொருள் தரும் ஆசிரியரின் பெயரில் இருந்து இந்த புத்தகம் தனது தலைப்பைப் பெறுகிறது. இந்தப் பெயர் யோசுவா, எலிசா மற்றும் இயேசு என்ற பெயர்களுக்கு ஒப்பாக இருக்கிறது. புதியஏற்பாட்டில் நேரடியாக 65 தடவைக்கும் மேலாக குறிப்புகளும் 20-க்கும் அதிகமான இடங்களில் ஏசாயாவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்தவொரு பழையஏற்பாட்டு தீர்க்கதரிசியைக் காட்டிலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

யூதா தேசத்தை அரசாண்ட (கி.மு 739-686) நான்கு ராஜாக்கள், உசியா (அசரியா என்று 2ராஜாக்களில் அழைக்கப்பட்டிருக்கிறார்), யோதாம், அகாஸ் மற்றும் எசேக்கியா (1:1) காலத்தில் ஆமோஸின் குமாரன் ஏசாயா, யூதா தேசத்து தீர்க்கதரிசியாக எருசலேமைச் சுற்றி ஊழியம் செய்துவந்தார். ராஜாவின் சமூகத்தில் எளிதில் பிரவேசிக்க தகுதி பெற்றிருந்த (7:3) அந்தஸ்து நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்திருந்தார். திருமணமானவர் இரண்டு மகன்கள் இவருக்கு உண்டு. மகன்கள் இருவருடைய அடையாளப் பெயர் – சேயார்யாசூபு” மிச்சம் இருப்பவர்கள் திரும்புவர்” மற்றும் மகேர்-சாலால்-அஷ்-பாஸ் “கொள்ளையிடவிரைந்தோடுகிறது, இரையைநோக்கி விரைகிறது” என்பதாகும். உசியா ராஜா மரித்த கி.மு.739-வில் தீர்க்கதரிசன ஊழியத்திற்கு அழைப்பைப் பெற்ற போது, ஆரம்பத்தில் இருந்தே அவரது ஊழியம் உடனே பலன் எதிர்பார்க்கமுடியாத எச்சரிக்கும் (6:9-13) உபதேச ஊழியம் என்பதை ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், மகிழ்வோடு பணிசெய்ய ஆயத்தமாக இருந்தார். எருசலேமிலேயே வளர்ந்தவராக இருந்தபடியால், தேசத்திற்கு அரசியல் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனை வழங்க பொருத்தமானவராக இருந்தார்.

ஏசாயா, ஓசியா மற்றும் மீகா தீர்க்கதரிசிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். அவரின் எழுத்துநடைக்கு எதிராளிகளே இல்லை எனலாம். மேலும் அவரின் எழுத்துநடை பல விதங்கள், கற்பனை, புத்திசாலித்தனம், சொல்வளம் நிறைந்து காணப்பட்டது. ஆதிதிருச்சபையில் இருந்த ஜெரோம் என்பவர் ஏசாயாவை பழம்பெரும் டெமஸ்தனீஸ் என்னும் கிரேக்க பேச்சாளருடன்  ஒப்பிட்டுப் பேசியுள்ளார். 

ஒப்பிட்டுப்பார்த்தால் எசேக்கியேலில் 1535 வார்த்தைகளும், எரேமியாவில் 1653 வார்த்தைகளும், சங்கீதங்களில் 2170 வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணும்போது, இவரது எழுத்துக்களில் 2,186 வித்தியாசமான வார்த்தைகள் எடுத்தாளப்பட்டுள்ளதன் சிறப்பு விளங்கும். 2நாளாகமம் 32:32 எசேக்கியா ராஜாவின் வாழ்க்கை வரலாற்றை ஏசாயா எழுதினார் எனக் குறிப்பிடுகிறது. தீர்க்கதரிசி குறைந்தது கி.மு.681-ம் வருடம் வரை வாழ்ந்திருப்பார் என நம்பலாம். இக்காலக்கட்டத்தில் சனகெரிப்பின் மரணம் குறித்து எழுதியுள்ளார் (37:38). மனாசே ராஜாவின் காலத்தில் (கி.மு.695-642) வாளால் அறுப்புண்டு மரித்தார் என பாரம்பரியம் கூறுகிறது (எபிரேயர் 11:37).

பிண்ணனி மற்றும் அமைப்பு

உசியா ராஜாவின் செழிப்பான 52 வருட அரசாட்சியில் (கி.மு.790-739), யூதா தேசம் வர்த்தக மற்றும் இராணுவ பிராந்தியமாக வளர்ந்து, செங்கடலில் ஒரு துறைமுகத்தையும் பெற்றிருந்தது. சுவர்கள், கோபுரங்கள் மற்றும் கோட்டைகள் (2நாளா. 26:3-5,8-10,13-15) கட்டுவதில் சிறந்து இருந்தது. ஆனாலும் இந்த காலகட்டத்தில் யூதா தேசம் ஆவிக்குரிய வாழ்க்கையில் தரம் குறைந்திருந்தது. பலிபீடத்தில் ஆசாரியர்கள் செய்யும் தகனபலியினை தான் செய்யவேண்டும் என உசியா ராஜா முயற்சி செய்தது, அவனது ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது (2ராஜா.15:3,4; 2நாளா.26:16-19). கர்த்தர் அவனை அடித்ததினால், மரணநாள் மட்டும் அவனை குஷ்டரோகம் பிடித்தது (2ராஜா.15:5; 2நாளா.26:20,21).

அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான் (கி.மு.750-731). திகிலாத்பிலேசர் தலைமையில் அசீரியா தேசம் சர்வதேசங்களிலும் வல்லமை நிறைந்த தேசமாக வளர்ந்தது. யோதாம் யூதாவின் ராஜாவாக இருந்தான் (2ராஜா.15:19), அந்நாட்களில் யூதாவிற்கு வடபகுதியில் இருந்து இஸ்ரவேல் மற்றும் சிரியாவின் எதிர்ப்பு தோன்றியது (2ராஜா.15:37). யோதாம் அவன் தகப்பனைப் போல கட்டிடங்கள் கட்டுவதில் வல்லவனாக, யுத்தத்தில் வல்லவனாக இருந்தான்; ஆனால், தேசத்தின் ஆவிக்குரிய வாழ்க்கையில் சீர்கேடு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது (2ராஜா.15:34,35; 2நாளா.27:1,2).

ஆகாஸ் தனது 25-வது வயதில் ராஜாவாகி, யூதா தேசத்தை தனது 41-வது வயது வரை 16 வருடம் அரசாண்டான் (2நாளா.28:1,8; கி.மு.735-715). கிழக்கு பகுதியில் இருந்து எழும்பிய அசீரியர்களின் அச்சுறுத்தலை எதிர்க்கும்படி இஸ்ரவேலும் சிரியா தேசமும் கூட்டு சேர்ந்தனர், ஆனால் ஆகாஸ் யூதாவை இந்த கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டார். இதினால் வடக்கில் இருந்த அண்டை தேசத்தார் பகைமை கொண்டு, ஆகாஸை சிங்காசனத்தில் இருந்து இறக்க, யுத்தம் செய்தனர் (கி.மு.734).                                                               

திகிலடைந்த ஆகாஸ், அசீரிய ராஜாவினிடத்தில் உதவி கேட்டு ஆள் அனுப்பினான் (2ராஜா.16:7), அதற்கு அசீரிய ராஜா காசா நகரில் இருந்தோரை பதவியில் இருந்து தள்ளிவிட்டு, கலிலேயா மற்றும் கிலேயாத் முழுவதையும் சிறைப்படுத்தி, தமஸ்குவையும் (கி.மு.732) கைப்பற்றி அவனது வேண்டுகோளுக்கு மகிழ்வாக பதிலளித்தான். அசீரியர்களுடன் ஆகாஸ் செய்து கொண்ட கூட்டணி - அந்நிய தேவர்களின் பலிபீடத்தை ஆகாஸ் அறிமுகம் செய்து, சாலொமோனின் ஆலயத்திற்குள் கொண்டுவர ஏது உண்டாக்கியது (2ராஜா.16:10-16; 2நாளா.28:3). ஆகாஸின் ஆட்சி காலத்தில் (கி.மு.722) வடதேச ராஜ்ஜியத்தின் தலைநகர் சமாரியாவை அசீரியர் கைப்பற்றினர், மேலும் இஸ்ரவேலின் மிகவும் பலசாலிகளாக இருந்தவர்களை சிறைபிடித்துக் கொண்டு போயினர் (2ராஜா.17:6,24).

எசேக்கியா யூதாதேசத்தை கி.மு. 721 வருடத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்து 29 ஆண்டுகள் (கி.மு. 686 வரை) ஆட்சி செய்தான் (2ராஜா.18:1,2). சீரமைப்பதற்கு இவரது ஆட்சிகாலத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது (2ராஜா.18:4,22; 2நாளா.30:1). அசீரியர்களின் படையெடுப்பு, கிழக்கத்திய தேசத்திற்கு அதிக அளவில் கப்பம் கட்டும்படி யூதாதேசத்தை வற்புறுத்தியது. கி.மு.701ல் எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு மரணதருவாயில் இருந்தார். அப்போது அவர் ஜெபித்ததும் கிருபையாய் தேவன் அவருடைய வாழ்நாளில் 15 வருடங்களை கூட்டிச் சேர்த்து தந்தார் (கி.மு.686 வரை; 2ராஜா.20; ஏசாயா38).  கி.மு.686 வரை எசேக்கியாவின் வியாதிப்படுதல் மற்றும் அவர் அதில் இருந்து மீண்டுவரும் நாட்களை பாபிலோனை ஆட்சிசெய்தவர்கள் பயன்படுத்தி, யூதாவுடன் கூட்டணி அமைத்து அசீரியாவிற்கு எதிராக ஒரு படையை திரட்ட முடியுமா என முயன்று வந்தனர் (2ராஜா.20:12; ஏசாயா 39). அசீரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு சண்டையினால் அதன் பெலன் குன்றி வந்தபோது எசேக்கியா ராஜா அத்தேசத்திற்கு கப்பம் கட்டுவதை நிறுத்திவிட்டான் (2ராஜா.18:7). அதினால், கி.மு.701ல் அசீரியா ராஜா, சனகெரிப் இஸ்ரவேலின் கடற்கரை பிரதேசங்களின் மீது படையெடுத்து, இஸ்ரவேலின் தெற்கு பக்கவாட்டில் எகிப்து தேசம் நோக்கி முன்னேறினான். இதில் யூதாவின் அனேக பட்டணங்களை கொள்ளையிட்டு, அதில் இருந்த ஜனங்களை அசீரியாவிற்கு சிறை பிடித்துக் கொண்டு போனான். ஆகீசினை முற்றுகையிட்ட வேளையில், அவன் எருசலேமை முற்றுகையிட ஒரு ராணுவ பிரிவை அனுப்புகிறான் (2ராஜா.18:17 – 19:8; ஏசாயா 36:2-37:8). பக்கத்து தேச விரிவாக்கம் தோற்றுப்போன போது, அவன் இரண்டாவது முறை உடனடியாக சரண் அடையச்சொல்லி எருசலேமிற்கு தூதுவர்களை அனுப்புகிறான் (2ராஜா.19:9; ஏசாயா 37:9). ஏசாயா உற்சாகபடுத்தினதினால், எசேக்கியா சரணடைய மறுத்தான், அதே வேளையில், சனகெரிப்பின் சேனை திடீரென்று ஏற்பட்ட பேரழிவை சந்தித்ததால் அதற்குப்பின் யூதாவிற்கு அச்சுறுத்தலாக அவன் இருக்கவில்லை.

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

ராஜ்ஜியங்கள் பிளவுபட்டிருந்த வேளையில் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். குறிப்பாக, அவரது செய்திகள் தெற்கு ராஜ்ஜியமாகிய யூதா தேசத்தை மைய்யப்படுத்தி இருந்தன. அவரது நாட்களில் காணப்பட்ட வெற்று சடங்குகள் (உதாரணமாக, 1:10-15) மற்றும் ஜனங்கள் விக்கிரக ஆராதனையில் வீழ்ந்து கிடந்ததைக் (40:18-20) கண்டித்தார். கர்த்தரை விட்டு விலகிச் சென்றுவிட்டபடியால் யூதா தேசம் பாபிலோனியரால் சிறைபிடிக்கப்படப் போகிறது என்பதை முன்னமே அறிந்திருந்தார் (39:5,7). 

அவர் சொன்ன தீர்க்கதரிசனங்கள் அவரது வாழ்நாட்களிலேயே நிறைவேறியது, அவரது தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு நல்ல சாட்சியாக இருந்தது. ஏசாயா சொன்னபடியே, எருசலேமைக் கைப்பற்ற சனகெரிப் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன (37:6,7,36-38). ஏசாயா முன்னமே சொன்னபடி மரணத்திற்கு நேராக எசேக்கியாவைக் கொண்டுசென்ற வியாதிப்படுக்கை, மாற்றிப்போடப்பட்டதும் நிறைவேறியது (38:5; 2ராஜா.20:7). பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு தலைமையேற்று வந்தபோது, ஏசாயா பாபிலோனியரின் கரத்தில் இருந்து யூதாவை விடுவிக்கப்போகிறவர் இவர் எனக் குறிப்பிடுகிறார் (44:28;45:1). கிறிஸ்து இயேசுவின் முதலாம் வருகையைக் குறித்து ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறினது, ஏசாயா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி என்பதை உறுதிப்படுத்தியது. ஏசாயா ஏற்கெனவே சொல்லிய தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலை வைத்துப் பார்க்கும் போது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து உரைத்திருக்கும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும் என்ற நிச்சயத்தைத் தருகின்றது. 

வரும் காலங்களில் உள்ள கர்த்தருடைய நாள் மற்றும் அதனைத் தொடரும் நாட்களைக் குறித்து ஏசாயா தகவல்களைத் தருகிறார். நாம் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என எதிலும் காணமுடியாத இஸ்ரவேலரின் எதிர்கால ராஜ்ஜியத்தின் அம்சங்களான இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, விலங்குகளின் உலகம் பற்றி, மற்ற தேசங்களுக்கு நடுவில் எருசலேம் தேசத்தின் நிலை, பாடு அனுபவிக்கும் சேவகனின் தலைமை என வெவ்வேறு அம்சங்களைக் குறித்து ஏசாயா பேசியிருக்கிறார். 

”தீர்க்கதரிசன முன்னறிவிப்பு” என்ற இலக்கிய சாதனத்தின் உதவியுடன், ஏசாயா எந்த வரிசையில் நிகழும் என்று வரையறுக்காமல், அவைகளுக்கு இடையில் என்ன கால இடைவெளி இருக்கும் என்பதை குறித்தும் பேசாமல் எதிர்கால சம்பவங்களை முன்னறிவிக்கிறார். உதாரணமாக, மேசியாவின் இரண்டு வருகைகளுக்கு இடையில் எவ்வளவு கால இடைவெளி இருக்கும் என்பதை வெளிப்படுத்தவில்லை. யோவான் வெளிப்படுத்தலில் (20:1-10; 21:1-22:5) எவ்விதமாக வரவிருக்கும் தாற்காலிக ராஜ்ஜியம் மற்றும் நித்திய ராஜ்ஜியத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை தெளிவுபட கூறவில்லையோ, அவ்விதமாகவே, ஏசாயாவும் கூறவில்லை. இந்த இரண்டிற்கும் உள்ள தொடர்பு கடைசி கால தீர்க்கதரிசிகள் மூலமாக, தீர்க்கதரிசன வெளிப்பாடுகளின் தொடர்ச்சி என்னும் தேவனின் திட்டத்தின்படி பின்நாட்களில் வெளிப்படும்படி மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.

இஸ்ரவேலிடம் தேவன் காட்டும் கிருபையைக் குறித்து விசேஷமாக அவரது கடைசி 27 அதிகாரங்கள் பேசுவதால், ”சுவிசேஷ தீர்க்கதரிசி” எனவும் ஏசாயா அழைக்கப்படுகிறார். ஏசாயாவின் ஒப்பில்லா 53-ஆம் அதிகாரம் கிறிஸ்து நமக்கு பதிலீடாக வந்த தேவ ஆட்டுக்குட்டியானவர் என எடுத்துக்காட்டுவது, இவரின் தீர்க்கதரிசன வார்த்தைகளின் சிறப்பான பகுதியாக இருக்கின்றது. 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

நீளமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஏசாயா புத்தகத்தில் விளக்கம் அளிப்பதில் அனேக சவால்கள் இருக்கின்றன. ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நேரடியாக இயற்கை உலகில் நிறைவேறக் காண்போமா இல்லையா என்பது அவைகளில் மிகஅதிக விமர்சனத்திற்கு உள்ளான கருத்து. மற்றொன்று, கர்த்தர், தமது திட்டத்தின்படி இஸ்ரவேல் தேசத்தை அடியோடு கைவிட்டுவிட்டு, தேசத்திற்கு பதிலாக சபையை நித்தியமாக அந்த இடத்தில் வைத்திப்பதால் இஸ்ரவேல் தேசத்திற்கு எதிர்காலம் இல்லை என்ற கருத்து மிகஅதிக விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

மேலே சொல்லப்பட்டிருக்கும் இரண்டாவது கருத்திற்கு எதிராகவும், தேவன் பூகோளப்படியான இஸ்ரவேல் தேசத்திற்குப் பதிலாக “இருக்கலாம் எனக் கருதப்படும் புதிய இஸ்ரவேலினால்” நிரப்பி விடவில்லை என்பதற்கு ஆதாரமாக, ஏசாயாவில் இருந்தே அனேக வசனங்களை/பகுதிகளைச் சொல்லலாம். தேவன் தாம் உருவாக்கினவரும், பெயர் சொல்லி அழைத்தவர்களுமான (43:1) இஸ்ரவேல் ஜனங்களை உதறித் தள்ளிவிடமாட்டார் என்பதற்கும் அதிகமாய், ஏசாயா இஸ்ரவேலின் நம்பிக்கைக்குரியவர் தேவன் எனச் சொல்லியிருக்கிறார்.                                                        இதோ, என் உள்ளங்கைகளில் (இஸ்ரவேல் தேசம்) உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது (49:16) என்று அவர் வாக்குத்தத்தமாக இஸ்ரவேலருக்கு கொடுத்த வார்த்தையின்படியே, அவர் இஸ்ரவேலரை திரும்ப தம் பக்கமாக திருப்பவேண்டும், மேலும் அவர்களை வரும் காலங்களில் ஆசீர்வதிக்க வேண்டும் (55:10-12).

முதலில் சொன்ன விமர்சனத்திற்கு பதில்: ஏசாயாவின் தீர்க்கதரினசங்கள் அனேகமானவை - இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள் பகுதியில் நாம் ஏற்கெனவே கண்டதுபோல நிறைவேறிவிட்டன. இன்னும் நிறைவேறாத தீர்க்கதரிசன வார்த்தைகள் எழுத்தின்படியல்லாத ஒரு நிறைவேறுதலைக் காணும் என வாதிடுவது வேதாகமத்தின் அடிப்படையிலானது அல்ல. இஸ்ரவேலருக்கு முதன்முதலில் வாக்குபண்ணப்பட்ட சில வாக்குதத்தங்களை இன்று சபை பெற்று வருகிறது என முன்வைக்கும் முன்மொழிவை இது தகுதிநீக்கம் செய்கிறது. தாவீதிற்கு வாக்குத்தத்தம் செய்து தரப்பட்ட ராஜ்ஜியம் இஸ்ரவேலருக்கு உரியது, சபைக்கு உரியது அல்ல. எதிர்காலத்தில் எருசலேம் உயர்த்தப்படுதல் பூலோகத்தில் தான் ஏற்படும், பரலோகத்தில் அல்ல. நாம் அறிந்திருக்கிறபடி கிறிஸ்துவின் ஆட்சி தனிப்பட்ட முறையில் பூமியில் நடைபெறும், அதே வேளையில் புதிய வானம் புதிய பூமியிலும் நடைபெறும் (வெளி.22:1,3).

சுருக்கம்

I. நியாயத்தீர்ப்பு (1:1-35:10)

அ. யூதா மற்றும் எருசலேம் குறித்ததான தீர்க்கதரிசனங்கள் (1:1-12:6)
1. யூதாவின் பாவங்கள் (1:1-6:13)
2. யூதாவின் அரசியல் சிக்கல்கள் (7:1-12:6)

ஆ. நியாயத்தீர்ப்பு மற்றும் இரட்சிப்பு குறித்த தேவ வார்த்தைகள் (13:1-23:18)

1. பாபிலோன் மற்றும் அசீரியா (13:1-14:27)
2. பெலிஸ்தியா (14:28-32)
3. மோவாப் (15:1-16:14)
4. சிரியா மற்றும் இஸ்ரவேல் (17:1-14)
5. எத்தியோப்பியா (18:1-7)
6. எகிப்து (19:1-20:6)
7. பாபிலோன் தொடர்ச்சி (21:1-10)
8. ஏதோம் (21:11,12)
9. அரேபியா (21:13-17)
10. எருசலேம் (22:1-25)
11. தீரு (23:1-18)

 

இ. உலக இரட்சிப்பின் வழியாக இஸ்ரவேலர் மீட்கப்படுதல் (24:1-27:13)

1. தேவன் பூமியை அழித்தல் (24:1-23)
2. மீட்பினிமித்தம் ஏறெடுக்கப்பட்ட முதல் ஸ்தோத்திர பாடல் (25:1-12)
3. மீட்பினிமித்தம் ஏறெடுக்கப்பட்ட இரண்டாம் ஸ்தோத்திர பாடல் (26:1-19)
4. இஸ்ரவேலின் சிட்சை மற்றும் இறுதியில் செல்வசெழிப்பு (926:20-27:13)

ஈ. எகிப்துடன் கூட்டணி ஏற்படுத்தினதற்கு விரோதமான எச்சரிக்கை    (28:1-35:10)

1. மதுபானம் குடித்து வெறிக்கும் அரசியல்வாதிகளுக்கு ஐயோ (28:1-29)
2. மதச் சம்பிரதாயங்களுக்கு ஐயோ (29:1-14)
3. தேவனிடத்தில் இருந்து திட்டங்களை மறைக்கிறவர்களுக்கு ஐயோ (29:15-24)
4. எகிப்தை ஆதரிக்கிற கூட்டத்தாருக்கு ஐயோ (30:1-33)
5. குதிரைகளிலும் இரதங்களிலும் நம்பிக்கை வைப்பவர்களுக்கு ஐயோ (31:1-32:20)
6 அசீரியரை அழிப்பவருக்கு ஐயோ (33:1-24)
7. குறிப்பாக ஏதோம் மற்றும் இதர தேசங்களுக்கு விரோதமாக நியாயம் கிடைக்க கதறிச்சொல்லும் வார்த்தைகள் (34:1-35:10)

II. வரலாற்று இடைச்சொருகல்கள் (36:1-39:8)

அ. எருசலேமை கைப்பற்ற சனகெரிப்பின் முயற்சி (36:1 -37:38)
ஆ. எசேக்கியா வியாதிப்படுதல் மற்றும் சுகம்பெறுதல் (38:1-22)
இ. எருசலேமுக்கு அனுப்பப்பட்ட பாபிலோனிய தூதுவர்கள் (39:1-8)

III. இரட்சிப்பு (40:1-66:24)

அ. சிறையிருப்பிலிருந்து விடுதலை (40:1-48:22)
1. பாபிலோனில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு ஆறுதல் (40:1-31)
2. இஸ்ரவேலின் துயரத்திற்கு முடிவு (41:1 -48:22)

ஆ. கர்த்தருடைய ஊழியக்காரரின் பாடுகள் (49:1 -52:12)

1. ஊழியக்காரரின் பணி (49:1 – 52:12)
2. பாடு அனுபவிக்கும் ஊழியக்காரனால் மீட்க்கப்படுதல் (52:13-53:12)
3. பாடு அனுபவிக்கும் ஊழியக்காரனால் மீட்கப்படதன் பலன்கள் (54:1-57:21)

இ. தேவஜனத்தின் எதிர்கால மகிமை (58:1 -66:24)

1. சமயங்களில் இரண்டு விதம் (58:1-14)
2. இஸ்ரவேலரிடம் அவர்கள் பாவங்களை விட்டொழிக்க வேண்டுதல் (59:1-19)
3. சீயோனின் எதிர்கால ஆசீர்வாதம் (59:20 - 61:1)
4. சீயோனின் விடுதலை நெருக்கமாக இருத்தல் (62:1-63:6)
5. தேசத்தின் விடுதலைக்காக விண்ணப்பம் (63:7 – 64:12)
6. இஸ்ரவேலரின் வேண்டுகோளுக்கு தேவனின் பதில் (65:1 – 66:24)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.