வேதாகம வரலாறுகள்

லேவியராகமம் – என்று அழைக்கப்படும் மோசேயின் மூன்றாம் புத்தகம்

இந்த மூன்றாம் நியாயப்பிரமாணப் புத்தகத்தின் மூலமுதலான எபிரேய தலைப்பு – “மோசேயைக் கூப்பிட்டு” என்னும் முதல் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அனேக பழையஏற்பாட்டு புத்தகங்களும் இவ்வண்ணமே அவைகளின் எபிரேய தலைப்பினைப் பெறுகின்றன. (உதாரணமாக, ஆதியாகமம் - “ஆதியிலே”, யாத்திராகமம் – “இந்நாமங்களே இப்பொழுது” என்பதில் இருந்து பெறப்பட்டது. 

லேவியராகமம் என்னும் தலைப்பு கிரேக்க பழையஏற்பாட்டின் (LXX) லத்தீன் வுல்கேட் (Vulgate) பதிப்பின் லுட்டிகோன் என்பதில் இருந்து வருகிறது - அர்த்தம் ”லேவியர்களைப் பற்றியச் செய்திகள்” (25:32,33). இந்தப் புத்தகம் லேவியரின் பொறுப்புக்களில் காணப்படும் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கிறது. முக்கியமாக, ஆராதனையின் போது ஜனங்களுக்கு எவ்விதத்தில் உதவி செய்யவேண்டும், ஜனங்கள் பரிசுத்தமாக எப்படி வாழவேண்டும், என்ன கற்றுத் தர வேண்டும் என்ற கட்டளைகளை ஆசாரியர்களுக்குத் தருகிறது. புதிய ஏற்பாட்டை எழுதிய ஆசிரியர்கள் லேவியராகம புத்தகத்தை 15 முறை மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே (27:34) (cf 7:38; 25:1; 26:46), என்ற லேவியராகமத்தின் கடைசி வசனத்தின் அடிப்படையில் இந்த புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதியை குறித்த சந்தேகம் தீர்த்து வைக்கப்படுகிறது. இந்த பிரமாணங்களை மோசேக்கு தேவன் கொடுத்தார் (1:1) என்பது லேவியராகமத்தில் 56 முறை காணப்படுகிறது. விரிவான பிரமாணமுறைகளைக் குறித்து தந்திருப்பது மட்டுமல்ல, நியாயப்பிரமாணத்தின் வரலாற்றினைக் கால வரிசைப்படி வரிசைப்படுத்தியும் தந்துள்ளது. (8-10 அதிகாரம்; 24:10-23 பார்க்க). யாத்திராகமத்தின் வெளியேற்றம் கிமு  1445-வில் நிறைவேறியது. (யாத்திராகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி பகுதியைக் காண்க) ஆசாரிப்புக் கூடாரம் அச்சம்பவத்தின் ஒருவருடம் கழித்து அமைக்கப்பட்டது. (யாத்.40:17) லேவியராகமம் குறிப்பு பதிவுசெய்வதில் இருந்து தொடங்குகிறது, எகிப்தில் இருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டின் முதல் மாதம் (ஆபிப்/ நிசான்) இப்புத்தகம் வெளிப்பட்டிருக்கலாம். எண்ணாகமம் புத்தகம் இரண்டாம் மாதத்தில் இருந்து தொடங்குகிறது (ஜிவ் மாதம்; உறுதிப்படுத்துவது 1:1 வசனம்).

பிண்ணனி மற்றும் அமைப்பு

சீனாய் மலையில் இஸ்ரவேலர் கூடாரமிட்டு தங்கியிருந்த ஆண்டிற்கு முன்பு: 1) தேவனுடைய மகிமை இஸ்ரவேலர்களின் மத்தியில் முன் ஒருபோதும் முறைப்படி தங்கியிருந்தது இல்லை. 2) ஆசரிப்புக் கூடாரம், போன்ற ஆராதிக்கும் மைய்ய இடம் முன்பு இருந்ததில்லை. 3) முறையான பலிசெலுத்தும் முறைகள் மற்றும் பண்டிகை கால ஆசரிப்பு இதற்கு முன் கொடுக்கப்படவில்லை. 4) பிரதான ஆசாரியர், முறைப்படியான ஆசாரியத்துவம், ஆசாரிப்புக்கூடாரத்தில் பணிசெய்பவர்கள் என ஒருவரும் இதற்கு முன் நியமிக்கப்பட்டதில்லை. எகிப்தில் இருந்து வெளியேறிய பின்பு முதலில் சொன்ன இரண்டும் செயல்பாட்டில் வந்து விட்டபடியால் அடுத்துச் சொன்ன இரண்டு அம்சங்களின் தொடக்கம் தேவைப்பட்டது, இந்த இடத்தில் தான் லேவியராகமத்தின் அவசியம் ஏற்படுகிறது. யாத்திராகமம் 19:6-ல், தேவன் இஸ்ரவேல் புத்திரரிடம் – “நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்” என்றார். எனவே, லேவியராகம புத்தகம் அவருடைய புதிதாக மீட்கப்பட்ட ஜனத்திற்கு - தேவன் அளித்த கட்டளைகளின் புத்தகமாக மாறியது – எப்படி அவரை ஆராதிக்க மற்றும் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதைக் கற்றுத் தரும் கட்டளைப் புத்தகம் லேவியராகமம்.

இஸ்ரவேல் அன்றைய தினம் வரை, அவர்களின் முற்பிதாக்களிடம் இருந்து பெற்ற கடந்த கால குறிப்புகளில் இருந்து - எப்படி தேவனுக்கு முன்பதாக வாழ வேண்டும், அவரை எப்படி ஆராதிக்க வேண்டும் என்ற குறிப்பினை மட்டும் பெற்றிருந்தார்கள். எகிப்தில் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்ததினாலும், அவர்கள் வாழ்ந்த தேசம்  எண்ணற்ற தேவர்களினால் நிறைந்திருந்ததினாலும், அவர்களின் ஆராதனை மற்றும் தேவனைக்குறித்த பயம் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. பல தேவர்களை வழிபடுதல் மற்றும் அன்னிய தேவர்களின் சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபடுவது அவர்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்த போது அதிகமாக அவர்களில் காணப்பட்டது. (உதாரணமாக பொன் கன்றுக்குட்டியை வணங்குதல் யாத்.32 உறுதிபடுத்துகிறது). அவர்களின் அண்டை தேசமாகிய எகிப்தியரைப் போல் இஸ்ரவேலர் தன்னை ஆராதிக்க தேவன் அனுமதிக்க மாட்டார், மேலும் ஒழுக்கநெறி மற்றும் பாவத்தினைக் குறித்து  எகிப்தியர்களின் நிலைப்பாட்டை பொறுத்துக் கொள்ளவே மாட்டார். லேவியராகம புத்தகத்தின் கட்டளைகளைப் பின்பற்றி, கர்த்தருக்கு ஏற்ற முறையின்படி இஸ்ரவேல் தேசத்தாரை   ஆராதிக்கும்படி ஆசாரியர்கள் வழிநடத்த முடியும்.

நியாயப்பிரமாணங்களைக் குறித்தே இப்புத்தகம் அதிகமாகப் பேசினாலும், இது ஒரு வரலாற்றுப் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மோசேயின் மேற்பார்வையில் ஆசரிப்புக் கூடாரம் கட்டப்பட்ட உடனே, தேவன் தம் மகிமையோடு அதில் வந்து வாசம் செய்யும்படி இறங்கினார் என்று கூறி யாத்திராகம புத்தகம் நிறைவடைகிறது (40: 34-38). “கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்தில் இருந்து மோசேயைக் கூப்பிட்டு” என்று ஆரம்பித்து, ”இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய் மலையில் இருந்து மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே” என லேவியராகம புத்தகம் முடிவடைகிறது. இஸ்ரவேலின் ராஜா அவரது அரமணையில் தங்கி (ஆசரிப்புக் கூடாரம்), அவருடைய பிரமாணங்களை நிலைப்படுத்தி, ஓர் உடன்படிக்கையின் பங்காளராக அவர் தம்மைத் தாமே தமது ஜனத்திற்கு உறுதியாக கூறுகிறார்.

பூகோள ரீதியான எந்தவொரு நகர்தலும் இந்த புத்தகத்தில் இல்லை. இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் அவரது கட்டளைகளைத் தரும்படி இறங்கிவந்த சீனாய் மலை அடிவாரத்தில் தங்கி இருக்கின்றனர் (25:1; 26:46; 27:34). அவர்கள் அங்கேயே ஒருமாத காலம் தங்கியிருந்தனர் - அதற்குப் பின், எண்ணாகம புத்தகம் தனது பதிவினைத் தொடங்குகிறது (எண்ணாகமம்1:1).

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

பரிசுத்தம் தேவனின் குணாதிசயம், இஸ்ரவேலின் பரிசுத்தத்தைக் குறித்த தேவனுடைய சித்தம் – இந்த இரண்டு அடிப்படைக் கருத்துக்களின் அடிப்படையிலேயே லேவியராகம புத்தகத்தின் கருத்துக்கள் அனைத்தும் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. தேவனின் பரிசுத்தம், மனுக்குலத்தின் பாவகுணம், பலிசெலுத்துதல் மற்றும் பரிசுத்த ஸ்தலத்தில் தேவனுடைய பிரசன்னம் இவைகளே இப்புத்தகத்தில் அதிகமாக காணப்படும் கருப்பொருட்கள். இப்புத்தகம் தெளிவாக மற்றும் அதிகாரத்துடன், தனிநபர் பரிசுத்ததிற்கான கட்டளைகளை தேவனின் தூண்டுதலின்படி வடிவமைத்துத் தருகிறது (11:44,45; 19:2; 20:7,26; உறுதிபடுத்துவது 1 பேதுரு 1:14—16). இஸ்ரவேலின் தனிநபர் பரிசுத்தத்தைக்காட்டிலும் மேலானதாக ஆசரிப்புகளின் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலின் விசுவாச வாழ்க்கையின் கருப்பொருள் என்பதின் அடிப்படையில் அமைந்துள்ளது. உண்மையில், தேவனுடைய பரிசுத்தத்திற்கு பதில் அளிக்கும் வண்ணமாக  தனிநபரின் பரிசுத்த வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதற்கு, தொடர்ச்சியாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். (இந்த வற்புறுத்தலை லேவியராகமம் 17 முதல் 27ம் அதிகாரங்களின் வசனங்களில் காணலாம்). இப்புத்தகம், லேவியராகமம் மனுக்குலத்தின் பரிசுத்தமற்ற தன்மையை சுத்திகரிப்பது எப்படி என்பதற்கான கட்டளையையும் 125 க்கும் மேலான குறிப்புகளில்  தருகிறது. பரிசுத்தத்தினை பாதுகாக்க வேண்டிய அவசியத்தினை இரண்டு வாக்கியங்களை திரும்பத்திரும்ப சொல்வதின் மூலமாக கற்பிக்கிறது. அவை “நானே கர்த்தர்” மற்றும் “நான் பரிசுத்தர்” என்னும் வார்த்தைகளே. இந்த வாக்கியங்கள் 50 தடவைகளுக்கு மேலாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. (பார்க்கவும் 11:44, 45)

நிபந்தனைக்குட்பட்ட மோசேயின் உடன்படிக்கையின் கருப்பொருள், இப்புத்தகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக, 26ம்-அதிகாரத்தில் மீண்டும் எழுகிறது. புதிய தேசத்தின் உடன்படிக்கை, உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிதல் மற்றும் கீழ்ப்படியாமையினால் விளையும் விளைவுகளின் விபரத்தைக் குறிப்பிடுவது மட்டுமல்ல, இஸ்ரவேலின் வரலாற்றினை உறுதிச்செய்ய வல்ல விதத்தில் எழுதப்பட்டுள்ளது. கீழ்ப்படியாமைக்குரிய தண்டனையின் விபரம் அது எவ்வளவு தீர்க்கதரிசனமாக சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டுள்ளது என்பதையும் காணலாம். மோசே லேவியராகமம் எழுதிய (கிமு. 538) வருடத்திற்கு ஏறக்குறைய 900 ஆண்டுகளுக்குப் பின் பாபிலோனுக்கு நாடு கடத்தப்படுதல், சிறைபிடிக்கப்படுதல் மற்றும் தேசத்திற்கு திரும்ப வருதல் போன்ற சம்பவங்களைக் குறிக்கிறது. தனது ராஜ்ஜியத்தை அறிமுகப்படுத்த மேசியா வருதல், லேவியரகமம் 26 மற்றும் உபாகமம் 28-ல் (உறுதிபடுத்துவது சகரியா14:11) சொல்லப்பட்டுள்ள சாபங்களின் முடிவு உண்டாகும் வரை இஸ்ரவேலின் கீழ்ப்படியாமையை கடைசிகால சம்பவங்களுடன் சம்பந்தப்படுத்திப் பார்ப்பது முடிவுக்கு வராது. வருத்தம் தெரிவிக்கும் மற்றும் நன்றியறிதலுடன் ஆராதிப்பவர் இந்த சடங்குகளை ஆசரிப்பதன் மூலம் - நாங்கள் தேவனை விசுவாசிக்கிறோம் அவரில் அன்பு கூறுகிறோம் என்பதை வெளிப்படுத்தினர். அவர்களின் இருதயம் விசுவாசத்துடனோ அல்லது அன்புடனோ இல்லாது இருக்கும் வேளையில் அவர்கள் சடங்குகளை ஆசரிப்பதில் தேவன் பிரியமாக இருக்கவில்லை (ஆமோஸ் 5:21-27). பலிகள் சுட்டெரிக்கப்பட்டதன் அடையாளம் - அவர்கள் பாவம் கழுவப்பட வேண்டும் என்ற ஆராதிப்பவரின் விருப்பத்தையும், அவர்கள் தேவனுக்கு முன் ஏறெடுக்கும் மெய்ஆராதனையின் சுகந்த வாசனை மேலே எழும்புவதைக் குறிக்கிறது. அவர்கள் ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய பிரமாணங்களுக்கு எவ்வளவு தூரம் துல்லியமாக கீழ்ப்படிய வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க மற்றும் அவரது வார்த்தையின் ஒவ்வொரு தனிச்சிறப்பிற்கும் அவர்கள் மதிப்பு அளிக்க வழிவகுக்கும் என்பதே, சடங்குகள் செய்வதில் எண்ணற்ற விபரங்களைத் துல்லியமாக தந்திருப்பதின் காரணம். 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

இஸ்ரவேலர் தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதற்கான பாடபுத்தகமாகவும் பழைய உடன்படிக்கையின் ஆசரிப்பு முறைகளைச் சொல்லும் இறையியல் புத்தகமாகவும் லேவியராகம புத்தகம் இருக்கிறது. மோசே இந்த புத்தகத்தை எழுதினபோது அந்த நாட்களில் இருந்த சில வரலாற்று உண்மைகள் தெரிந்திருக்கும் என கருதுவதாக எடுத்துக் கொண்டு எழுதினபடியால், இந்நாட்களில் இதில் சொல்லப்பட்டிருக்கும் சடங்குகள், நியாயப்பிரமாணங்கள் ஏனைய சம்பிரதாயங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. விரிவான விளக்கத்தை நாம் ஒருவழியாக புரிந்து கொண்டபின், திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் இதற்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பது அடுத்துவரும் கேள்வி. ஏனென்றால், சடங்குகளின் பிரமாணம், (அப் 10:1-16; கொலோ 2:16,17), லேவியர்களின் ஆசாரியத்துவம் (1பேதுரு 2:9; வெளி.1:6; 5:10; 20:6), பரிசுத்தஸ்தலம் (மத்தேயு 27:51) போன்றவற்றை தெளிவாக, புதியஏற்பாடு ரத்து செய்கிறது; அதேநேரத்தில்,  புதிய உடன்படிக்கையையும் நிறுவுகிறது. (மத்.26:28; 2கொரி.3:6-8; எபிரேயர்7-10). பழைய சடங்குகளை கடைபிடிக்க அல்லது அதற்குள் என்ன ஆழமான ஆவிக்குரிய சத்தியம் இருக்கிறது எனத் தேட முயற்சிப்பதற்குப் பதிலாக, அவற்றில் மறைந்திருக்கும் பரிசுத்த மற்றும் தெய்வீக குணங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதினால் தான் - மோசே அடிக்கடி “தேவனுடைய அடிப்படை நோக்கம் “பரிசுத்தமே”, சடங்குகளை ஆசரிப்பது அல்ல என பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். சடங்குகளில் வேரூன்றி இருக்கும் நியதிகள் காலத்தைக் கடந்தவை – ஏனென்றால் அவை தேவனுடைய இயல்பினோடு புதைந்துள்ளன. தெளிவாக பெந்தெகோஸ்தே நாளுக்குப் பின்வரும் நாட்களில் இருந்து (அப்.2), திருச்சபையானது புதிய உடன்படிக்கையின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது, பழைய உடன்படிக்கைக்கு கீழ் அல்ல என புதியஏற்பாடு வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது.

இந்த புத்தகத்தின் தனிச்சிறப்புக்களில் இருந்து புதியஏற்பாட்டு ஆசிரியர்கள் எடுத்துக் காட்டும் ஆசரிப்புக்கூடாரம் மற்றும் அதன் சடங்கு சம்பிரதயங்களின் வகைப்பாடு, ஒப்புமை போன்றவற்றை பயன்படுத்தி, கிறிஸ்துவை குறித்து பயனுள்ள பாடங்களையும், புதியஏற்பாட்டின் உண்மைநிலைப்பாட்டையும் அறிவது என்பது விளக்கம் அளிப்பவருக்கு முன் இருக்கும் சவாலாகும். கிறிஸ்துவிற்கும் அவரது மீட்பின் செயலுக்கும் முன்னடையாளமாக (எபி.10:1) சடங்குகளின் பிரமாணம் இருந்ததே அல்லாமல், அதைவிட்டுவிட்டு அதிகப்படியான ஆராய்ச்சியினை இதில் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். புதியஏற்பாட்டு ஆசிரியர்கள் எந்த வகைப்பாடுகள் கிறிஸ்துவிற்குப் பொருந்துகின்றன எனச் சொல்லியிருக்கிறார்களோ அவைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். (உதாரணமாக, 1கொரி.5:7; “கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே”).

லேவியராகமத்தில் இருந்து நாம் படித்துக் கொள்ளும் மிகப் பயனுள்ள படிப்பினை என்னவென்றால்: பாவம், குற்ற உணர்ச்சி, பதிலீடாக மரித்தல், பரிகாரம் போன்றவற்றைக் குறித்த சத்தியத்தைப் புரிந்துகொள்கிறோம். பழையஏற்பாட்டின் வேறு எந்த வேதவசனமும் இவ்வளவு அழகாக உதாரணத்துடன் இந்த சத்தியத்தின் அம்சத்திற்கு விளக்கம் தருவதில்லை. பின்நாட்களில் வரும் பழைய ஏற்பாட்டு ஆசிரியர்களும் விசேஷமாக புதியஏற்பாட்டு ஆசிரியர்கள், லேவியராகமம் அமைத்துள்ள அஸ்திபாரத்தினை புரிந்துகொண்டு அதன் அடிப்படையிலேயே கட்டியெழுப்பியுள்ளார்கள். லேவியராகமத்தின் கண்ணோட்டதில் இருந்து இறுதியாக பலிசெலுத்துதலின் தனிச்சிறப்பைப் புரிந்துகொண்டு, இயேசு கிறிஸ்து ஒரே தரம் மனுக்குலத்திற்கு பதிலீடாக மரித்து நிறைவேற்றினார் என்பதை திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுருக்கம்:

லேவியராகமம் 1-16 அதிகாரங்க்கள் தேவனுக்குப் பொருத்தமான ஆராதனையின் மூலமாக, தனிப்பட்ட விதத்தில் தேவனை எப்படி அணுக முடியும் என்பதை விளக்குகிறது. லேவியராகமம் 17-27 அதிகாரங்கள் தேவன் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவிக்குரிய மற்றும் கீழ்ப்படிதலான வாழ்க்கை எப்படி வாழ முடியும் என்பதனை விளக்குகிறது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.