வேதாகமத்தை வாசி

பிரசங்கி 12

                   
புத்தகங்களைக் காட்டு
1நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்.,
2சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும்,
3மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,
4ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும்,
5மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம், பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீவனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,
6வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால்உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி,
7இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
8மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
9மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.
10இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.
11ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
12என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
13காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
14ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.