கட்டுரைகள்

bible study guide

இருபத்து நான்கு சரித்திர நாவல்களை எழுதிய ஸ்காட்லாந்தின் வால்டர் ஸ்காட் என்பவர் மரண தருவாயில் இருந்தார். தனக்கு உதவிசெய்து கொண்டிருந்த மனிதனை பார்த்து, எடுத்து வாசி, எடுத்து வாசி என்றார். அந்த மனிதன் புத்தக அலமாரியைத் தடவியவனாக, ஐயா, எந்தப் புத்தகத்தை வாசிக்க சொல்கிறீர்கள்? என்றான். என்ன நீ இப்படி கேட்கிறாய்... புத்தகம் என்றாலே வேதப்புத்தகம் தான் என்றார் வால்டர் ஸ்காட். மரிக்கும் ஒரு மனிதனுக்கும் வாழத் துவங்கும் ஒரு மனிதனுக்கும் ஒரே விதமான பயன் தரும் ஒரே புத்தகம் வேதப்புத்தகம் தான்! இன்றைக்கு அனேகர் தங்கள் வாழ்க்கையில் நெருக்கப்படும் காலம் வரை, கஷ்டத்தை சந்திக்கும் வரை வேதப்புத்தகத்தை நாடுகிறதில்லை. இந்த கடினமான நாட்களிலும் நாம் வாழ்வை சந்திக்க, நம்மை அனுதினமும் ஆயத்தப் படுத்தும் புத்தகம் இந்த வேதப்புத்தகம் தான். நாம் இந்த உலகத்தை விட்டு கடந்து போக போகிறோம். ஆனால், வேதப்புத்தகத்தை வாசித்து, கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கும்போது நாம் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கிறோம். வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று அறிந்திருக்கிறீர்களே என்று இயேசு கூறி இருக்கிறார். இந்த வேதப்புத்தகத்தை எப்படி நாம் சரியாக கற்றுக்கொள்வது என்று நான்கு குறிப்புகளின் கீழ் பார்ப்போம்.

1. வேதத்தின் முழு நோக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்: ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு கொள்கை அளவிலான முடிவுக்கு வரும்முன்னர், முழு வேதாகமத்திலும் அதைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிற வசனங்களைப் படித்து அதிலிருந்து நாம் சத்தியத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்.

2. குறிப்பிட்ட ஒரு வசனத்தை படிக்கும்பொழுது அந்த வசனம் யாருக்கு சொல்லப்பட்டது என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்: உதாரணமாக, யோசுவா 1:2ல் தேவன் யோசுவாவை நோக்கி, இஸ்ரவேல் ஜனங்களுடன் யோர்தானை கடந்து போகும்படி சொல்கிறார். இன்றைக்கும் அனேகர் இந்த யோர்தான் நதியை கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். இது அந்த வேதவசன நிறைவேறுதலா? இல்லை. இது யோசுவாவுக்கு சொல்லப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருந்த போதிலும் இதிலே சிறந்த வேத சத்தியங்களை தேவன் வைத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டியது அவசியம். எல்லா வேத வசனங்களும் எனக்கு சொல்லப்படவில்லை, ஆனால் எனக்காக சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும். வேத வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விதி இது என்று சொல்லலாம்.

3. அந்த வேதப்பகுதி சொல்லப்பட்ட சந்தர்பத்தை நாம் கவனிக்க வேண்டியது அவசியம்: ஒரு குறிப்பிட்ட வேதப்பகுதிக்கு விளக்கம் கொடுக்கும் முன்னர், அதன் முன்னும், பின்னும் வாசித்து, அந்த வேதப்பகுதியின் முழு சந்தர்ப்பத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த பகுதி எதைப்பற்றி சொல்கிறது? வேதத்தின் மற்ற பகுதிகள், அந்த பகுதியை குறித்து என்ன சொல்கிறது என்பதை எல்லாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

4. மூல பாஷையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்: இதற்கு கிரேக்க, எபிரேய வேதாகமங்களைப் பயன்படுத்த வேண்டும். இதை உங்களால் படிக்க முடியவில்லை என்றால், அதை பயன்படுத்தக் கூடிய நல்ல அகராதிகளை வாங்கி நாம் அதை பயன்படுத்த வேண்டும். சில மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தும் போது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், சிலர் தங்கள் சொந்த கொள்கைகளின் அடிப்படையில் வேதாகமத்தை தங்களுக்கு சாதகமாகவும் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். வேதப்புத்தகம் மற்ற புத்தகங்களைப் போல் அல்லாமல், ஒரு வித்தியாசமான புத்தகம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே நாம் வேதத்தை தியானிக்கும் போது சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வேதத்தை ஒரு கிரமத்தோடு வாசிக்க வேண்டியது அவசியம். ஒரு மருந்து பாட்டிலை எடுத்து கொள்ளுங்கள். அது சாதாரண மருந்தாக இருந்தாலும், அதை எப்படி, எப்பொழுது, எத்தனை முறை, எவ்வளவு பயன் படுத்த வேண்டும் என்கிற ஒழுங்குமுறை இருக்கிறது அல்லவா? உலகப் பொருள்களைப் பயன் படுத்த நாம் இவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்றால் நாம் வேதத்தை பயன்படுத்துவதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

வேதத்தை கிரமமாக படிக்க ஏழு விதிமுறைகளை நாம் கற்றுக் கொள்வோம்.

1. ஜெபத்தோடு ஆரம்பிக்க வேண்டும்: முதலாவது நாம் வேதத்தை படிக்க ஆரம்பிக்கும்பொழுது, உமது வேதத்திலுள்ள அதிசங்களை நான் காணும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும் என்ற சங்கீதக் காரனுடைய ஜெபத்துடன் துவங்க வேண்டும். ஏனெனில் பரிசுத்த வேதாகமத்தின் ஆக்கியோன் பாரிசுத்த ஆவியானவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே, அவர் நம்முடைய உள்ளக் கண்களைத் திறக்காவிட்டால் நம்மால் வேதத்தை புரிந்து கொள்ள முடியாது. மேலும், அவர் நமக்கு போதிக்க விரும்புகிறார். யோவான் 16:13ல், சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் என்று இயேசு கிறிஸ்துவே கூறியிருக்கிறார். நம்முடைய ஆவிக்குறிய கண்கள் திறக்கும்படியாக நாம் ஜெபிக்க வேண்டும். தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வதே மிகவும் முக்கியமான காரியம்.

2. வேதத்தை கவனமாக வாசிக்க வேண்டும்: வேதப்புத்தகம் உங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறது என்பதை அறிய விருப்பமா? வேதத்தை நீங்கள் கவனமாக படிக்க வேண்டும். வேத வசனங்களை என்னதான் உங்கள் போதகர் உங்களுக்கு எடுத்து கூறினாலும், நீங்கள் அதை தனியாக கவனமாக படிக்க வேண்டும். தேவ மனிதரான கேம்பல் மார்கன் என்பவர் வேதத்தின் 66 புத்தகங்களுக்கும் சிறந்த விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிடும்பொழுது, அவர் ஒவ்வொரு புத்தகத்திற்கும் விளக்கவுரை எழுத ஆரம்பிக்கும் முன்னதாக, அந்த புத்தகத்தை குறைந்தது 50 முறையாவது படிக்காமல் நான் எழுதுகோலைத் தொடமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். பிரியமாவர்களே வேதத்தை நன்றாக வாசியுங்கள். ஒருமுறை புரியாவிட்டால், இரண்டாவது முறை வாசியுங்கள், இரண்டாவது முறையும் புரியாவிட்டால் மூன்றாவது முறை வாசியுங்கள். மூன்றாவது முறையும் புரியாவிட்டால், உங்களுக்கு புரியும் வரை வாசித்துக்கொண்டே இருங்கள்.

3. வேதத்தை நாம் படிக்க வேண்டும்: வேதத்தை நாம் ஆழ்ந்து படிக்க வேண்டும். அவர் சோம்பேறியான மனிதனுக்கு வேதத்தை விளக்கி காட்டுவதில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்ற உள்ளத்தோடு நாம் வேதத்தை படிக்க வேண்டும். அவசரப்படாமல், நிதானமாக வேதத்தை படியுங்கள். அதிக நேரம் எடுத்து வேதத்தை படியுங்கள். அதிகாலையிலே ஒரு மணி நேரமாவது வேதத்தை படிக்க வேண்டும்.

4. வேதத்தை தியானிக்க வேண்டும்: சங்கீதம் 1:2ல் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று வாசிக்கிறோம். கர்த்தருடைய வார்த்தையை தியானிப்பது என்றால், அதை ஆழ்ந்து சிந்திப்பது, அசைபோடுவது என்று பொருள்படும். சிந்தைக்கு கொண்டுவந்து, அதைக் குறித்து மீண்டும் மீண்டும் யோசிப்பது. இப்படி நாம் செய்யும்பொழுது, வேதத்திலிருந்து நாம் சிறந்த காரியங்களை கற்றுக் கொள்ளமுடியும். வேதப்புத்தகத்திற்குள்ளாக சென்று நாம் புதையல்களை எடுக்க முடியும்.

5. வேதத்தைக் குறித்து மற்றவர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் வாசிக்க வேண்டும்: இதை சற்று எச்சரிக்கையுடன் நாம் செய்ய வேண்டும். மற்றவர்கள் வேதத்தைக்குறித்து என்ன சொல்லியிருக்கிறார்களோ அதை மட்டுமே நாம் சார்ந்து கொள்ள கூடாது. மட்டுமல்ல, இன்றைக்கு அனேக புத்தகங்கள் வேதத்தை பற்றி தவறான கருத்துக்களையும் கூறுகின்றன. இவைகளை நாம் வேதத்தைக் கொண்டே சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ள வேண்டும். நல்ல வேத விளக்கவுரை புத்தகங்களைப் படிக்க வேண்டும். இவற்றை நாம் படிக்கும்பொழுது, அதை எழுதியவர்கள் தேவனிடத்தில் பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் காத்திருந்து பெற்றுக்கொண்ட சத்தியங்களை நாமும் அறிந்து அதன் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். வேதாகம அகராதி ஒன்றையும் நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். அனேக காரியங்களை அதின் துணையோடு அறிந்து கொள்ளலாம். அதின் அர்த்தங்களை அறிந்து கொள்ளலாம்.

6. வேதத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்: வேத வாசிப்பிற்கும், புரிந்து கொள்ளுதலுக்கும் கீழ்ப்படிதல் அவசியமாகிறது. ஆபிரகாம் இதற்கு சிறந்த உதாரணம். ஆபிரகாமுக்கு தேவன் ஊர் என்ற கல்தேயருடைய தேசத்திலிருந்தும், வாக்குத்தத்த பூமியிலிருந்தும் தோன்றினார். ஆனால் ஆபிரகாம் பஞ்சம் வந்த போது எகிப்திற்கு ஓடிப்போனபோது ஒரு வார்த்தையும் அவருடன் பேசவில்லை. வாக்குத்தத்த பூமிக்கு திரும்ப வரும்வரை தேவன் அவருக்கு தோன்றவில்லை. ஏனென்றால் அவர் தேவனுக்கு கீழ்ப்படியாத்தினால் தான். தேவன் ஏற்கனவே ஆபிரகாமுக்கு என்ன சொல்லி இருந்தாரோ அதற்கு கீழ்படியும் வரை, தேவன் அவருக்கு எந்த புதிய காரியத்தையும் சொல்லவில்லை. நம்முடைய வாழ்க்கையிலும் அப்படிதான், ஏற்கனவே நம்மோடு பேசிய காரியங்களுக்கு நாம் கீழ்ப்படியும்போது தான், தேவன் நம்மோடு புதிய காரியங்களைப் பேசுவார்.

7. நாம் கற்று கொண்ட வேத சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்: மற்றவர்கள் வேதவசனத்தை அறியாமல் இருளில் வாழும்போது, நீங்கள் மட்டும் வேதத்தை அறிந்து, மக்கள் கூட்டத்தை விட்டு தனியாக நடமாடும் ஒரு அகராதியாக இருக்க தேவன் உங்களை விட்டுவிடுகிறதில்லை. எனவே தான் எபிரேயர் 10:25லே சபை கூடுதலை சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய் பார்க்கிறீர்களோ அவ்வளவாய் புத்தி சொல்ல வேண்டும் என்று நாம் வாசிக்கிறோம்.

பிரியமானவர்களே, நாம் கிறிஸ்துவின் சாட்சிகளாயிருக்க வேண்டும். எனவே நாம் வேதத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்தே ஆகவேண்டும். இந்த வழிமுறைகளோடு நீங்கள் வேதத்தை படிப்பீர்களென்றால், வேதப்புத்தகம் உங்கள் வாழ்கையிலேயும் சிறந்த காரியங்களை செயல்படுத்த முடியும்.

இந்தக் கட்டுரையானது டிரான்ஸ் வேல்டு ரேடியோவின் வேதத்தை தியாக்கும் வழிமுறைகள் என்ற வானொலி செய்தியிலிருந்து தொகுக்கப்பட்டது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.