முகப்பு
images/banners/slider/john3-16.jpg
ஆசிரியர்: சாம் ராமலிங்கம்

“நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்” (சங்கீதம் 34:19). இதை வசனத்தை வாசிக்கும் போது, நீதிமான்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்? நீதிமான்கள் ஏன் சோதிக்கப் படுகிறார்கள்? துன்மார்க்கரெல்லாரும் கொழுத்து எங்கும் சுற்றித் திரிகிறார்களே! இது என்ன நியாயம்? தேவன் அநியாயக்காரர்களுக்கே துணை செய்கிறாரோ? என்று நம்முடைய மனதில் கேள்விகள் எழலாம். இக்கேள்விகளுக்கு விடைகாணுமுன், நீதிமான்கள் துன்பப்பட்டதாக வேதத்தில் உதாரணங்கள் உண்டா என்றால், ஆதிப்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, தாவீது, சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ, தானியேல், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், மற்றும் சபைப்பிதாக்கள் நம் கண் முன் தெரிகின்றனர்.

கிறிஸ்துவைச் சேவிக்கிற நமக்கும் துன்பம் வருமா? “எனக்காக இயேசு துன்பப்பட்டுவிட்டார்... இனி நான் துன்பப்பட வேண்டிய அவசியமில்லை” என்பது சரியான போதனையா? வேதம் நமக்குச் சொல்வது, “அன்றியும் அவருடைய தீர்மானத்தின் அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிற வர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது” (ரோம.8:28).

பொதுவாக இறையியல் அறிஞர்கள் “பாவமே துன்பத்திற்கான காரணம்” என்று விளக்கம் கொடுத்தாலும், எப்போதுமே நீதிமான்களின் துன்பத்திற்கு பாவம் மட்டுமே காரணமல்ல என்பதையும் விளக்குகிறார்கள். எனவே நீதிமான்கள் துன்பப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை வேதவசனங்களின் மூலம் அறிந்து கொள்வது நமது ஆன்மீக வாழ்விற்கு பிரயோஜனமாகவும், சோர்ந்து போகாமல் கிறிஸ்துவுக்கேற்ற விசுவாச வாழ்க்கை வாழவும் வழிவகுக்கிறது.

நீதிமான்கள் துன்பப்படுவது ஏன்?

துன்பப்படுதல் ஒரு சிலாக்கியமாகும். (மத். 5:11, 12)

கிறிஸ்துவினிமித்தமும், நீதியினிமித்தமும் நாம் துன்பப்பட்டால் நாம் பாக்கியவான்கள் என்றும்; துன்பப்படும் நீதிமான்களுக்கு பரலோக இராஜ்யத்திலே பலன் மிகுதியாக உள்ளதென்றும் நம் ஆண்டவராகிய இயேசு மலைப்பிரசங்கத்தில் சொல்கிறார். எனவே பரலோக இராஜ்யத்தில் பங்கடைய நினைக்கும் நாம் துன்பப்படுதலை சிலாக்கியமாகக் கருத வேண்டும்.

துன்பப்படுதல் அவசியமானது (1 பேதுரு 1:6, 2 தீமோ.3:12)

கிறிஸ்துவிலுள்ள மகிமையின் நம்பிக்கையினிமித்தம் சிதறடிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டு பக்தர்களுக்கு அப்போதஸ்தலனாகிய பேதுரு எழுதும் போது துன்பப்படுதல் அவசியமானதால் கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துன்பப்படுகிறீர்கள் என்று எழுதுகிறார். அதே போல பவுலும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க விரும்புகிற யாவரும் துன்பப்படுவார்கள் என்று எழுதுகிறார். எனவே கிறிஸ்தவ வாழ்வில் துன்பம் அவசியமானதாகும்.

துன்பம் ஒரு படிப்பினையாகும் (எபி.12:5-11, ரோம.5:3-4)

கர்த்தருடைய சிட்சையை நாம் அற்பமாக எண்ணாமல், அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும்; கர்த்தர் தாம் நேசிக்கிற பிள்ளைகளை ஒரு தகப்பன் சிட்சிக்கிறது போல சிட்சிக்கிறார் என்றும், தம்முடைய பரிசுத்தத்திற்கு பங்குள்ளவர்களாகும் பொருட்டாகவும், நம்முடைய பிரயோஜனத்துக்காகவுமே சிட்சிக்கிறார் என வாசிக்கிறோம். மேலும், பவுல் ரோமத் திருச்சபைக்குக் கூறுகையில், உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும், உண்டாக்குகிறதென்று எழுதுவதால், துன்பம் நமது வாழ்க்கையில் படிப்பினைகளை ஏற்படுத்தித் தருகிறது. நம்மில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டவர்கள் யாராவது ஒருமுறை கூட கீழே விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றிருக்க இயலாது என்பதை உதாரணமாகச் சொல்ல விரும்புகிறேன்.

துன்பம் நம்மை சீர்படுத்துகிறது (யாக்கோபு 1:2-3, யோபு 23:10)

விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குகிறதென்று யாக்கோபு எழுதுகிறார். “அவர் என்னை சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்” என்று யோபு சொல்கிறார். எனவே பரீட்சையானது நாம் சீர்படவும், சுத்தமாகவும் வழிவகுக்கிறது. எனவே பரீட்சிக்கப்படுதலை நாம் மிகுந்த சந்தோஷமாகவே எண்ண வேண்டும். தேர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் பரீட்சை வைக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

துன்பப்படுவது நல்லது (சங்கீதம் 119:71, 67)

119ம் சங்கீதத்தை தொகுத்து எழுதிய எஸ்றா “நான் உபத்திரப்பட்டது நல்லது” என்றும் “நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன், இப்பொழுதே உம்முடைய பிரமாணங்களைக் கற்றுக் கொள்கிறேன்” என்றும் எழுதுகிறார். எனவே துன்பப்படுதல் நல்லது என்பதைக் கற்றுக் கொள்கிறோம். பல நேரங்களில் நாம் நமது வாழ்க்கையிலும் சில தவறான பாதைகளில் சென்று உபத்திரவப்பட்டு அதின் மூலம் சரியான பாதையை நாம் தெரிந்து கொள்கிறோம்.

நமது துன்பத்தின் மூலம் தேவனுக்கு சாட்சியுண்டாகிறது 

யோவான் 9:3ல் பிறவிக்குருடனைப் பற்றிச் சொல்லும் போது, “தேவனுடைய கிரியைகள் தன்னிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்” என்று இயேசு சீடர்களிடம் சொன்னார். யோவான் 11:4ல் லாசரு வியாதிப்பட்டது தேவனுடைய மகிமை வெளிப்பட ஏதுவாயிருக்கிறதென்று இயேசு சொன்னார். 11 கொரி12:9ல் பாடுகள் மூலம் தேவ கிருபை பெருகுகிறது என்று பவுல் சொல்கிறார். பிலி.1:12ல் தனக்கு வந்த பாடுகள் சுவிசேஷம் பரவுவதற்கு ஏதுவாயிற்றென்று பவுல் சொல்கிறார்.

துன்பப்படுகிறவன் இயேசுவோடு பங்கடைகிறான் 

1 பேதுரு 4:13ல் இயேசு கிறிஸ்துவின் மகிமையைப் பார்க்கவிருக்கும் நாம் அவருடைய பாடுகளுக்கும் பங்காளிகளாளென்று வாசிக்கிறோம். 2 தீமோ.2:12ல் அவரோடு பாடுகளைச் சகிக்கிறவன், அவரோடு கூட ஆளுகை செய்வான் என வாசிக்கிறோம். யோவான் 16:33ல் பாடுகளைச் சகிக்கிறவனுக்கு அவருடைய ஜெயத்திலும் பங்குண்டு என்று வாசிக்கிறோம்.

துன்பப்படுகிறவன் தன் ஆசீர்வாதங்களை மீட்டுக் கொள்வான்

யோபு 42:10-17 சோதிக்கப்பட்ட பின்பு யோபின் பின்னிலமை முன்னிலமையைக் காட்டிலும் ஆசீர்வாதமாக இருந்தது. அவனுக்கு இருந்த சொத்துக்களெல்லாம் கர்த்தர் இரண்டத்தனையாக மாற்றினார் என வாசிக்கிறோம். இயேசுவினிமித்தமும், சுவிசேஷத்தனிமித்தம் எதை இழந்தாலும் நூறத்தனையாகப் பெற்றுக் கொள்வீர்கள் என்று இயேசுவும் கூறியுள்ளார்.

இந்த கட்டுரையை வாசிக்கிற நீ;ங்கள் முகாந்திரமின்றி துன்பப்படுகிறீர்களோ? உங்கள் துன்பத்திற்கு பாவம் தான் காரணம் என்று நினைப்பதை ஒதுக்கிவைத்து வேதவசனத்தின் வெளிச்சத்தில் உங்களைப் பாருங்கள்! இப்போது துன்பத்தை அனுபவிக்கிற நீங்கள் பாக்கியவான்கள், நீங்கள் சோதிக்கப்பட்ட பின்பு சுத்த பொன்னாக்கப்படுகிறீர்கள்! உங்களுடை பாடுகள் தேவனுக்கு சாட்சியாகவும், சுவிசேஷம் விருத்தியடைய காரணமாகவும் அமையப்போகிறது. நீங்கள் இயேசுவோடு உடன் சுதந்தரவாளிகள்! அவரோடு பங்கடைவதுடன், சுவிசேஷத்தினிமித்தம் நீங்கள் இழந்த ஆசீர்வாதங்களையெல்லாம் இரட்டத்தனையாக அல்ல... பாடுகளுடன் நூறத்தனையாக பெற்றுக் கொள்வீர்கள்! என்ற வேத வாக்கியங்கள் உங்களை உற்சாகப்படுத்துவதாக! மறைந்த பெயர் தெரியாத சகோதரி அவர்கள் எழுதிய பாடல் வரிகளோடு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்!

துன்பப்பாதை செல்ல துணிந்திடுவாய்,
அன்பர் சென்ற பாதை அதுவேதான்
துன்பமே உன் பங்கு;
துன்ப மூலம் தேவஇராஜ்ஜியம் சேர்வாய்
 
என் ஆத்துமாவே கலங்கிடாதே!
உன்னத தேவன் உன் அடைக்கலமே!

 

 

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.