முகப்பு
images/banners/slider/john3-16.jpg

capitalism church

2014 ஆண்டு ஆகஸ்டு மாதம் எனக்கு கம்யூனிஸ்டு பத்திரிக்கையின் ஆசிரியர் ஒருவரிடமிருந்து அவரை சந்திக்கச் சொல்லி தொலைப்பேசி அழைப்பு வந்தது. கிறிஸ்தவ மத போதகராகிய என்னை எதற்கு கம்யூனிஸ்டு பத்திரிக்கை ஆசிரியர் அழைக்கிறார் என்று சிந்தனையிலிருந்தேன். அவர் குறிப்பிட்ட அந்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மேற்கு மாம்பலத்திலிருந்த அந்த அலுவலகத்திற்கு சென்றேன். வரவேற்பறையிலிருந்த ஒரு சகோதரி வாங்க தோழர் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்டார். என்னை முதல்முறையாக ஒருவர் தோழர் என்று அழைத்தது வித்தியாசமாக இருந்தது. பதிலுக்கு அவர்களை தோழி என்று அழைக்க வேண்டுமோ என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் எல்லாருமே ஆண் பெண் வித்தியாசமில்லாமல் தோழர் என்றுதான் அழைத்துக் கொள்ளுகிறார்கள்.

ஆசிரியரை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். மூன்றாம் தளத்திற்கு செல்ல சொன்னார்கள். மூன்றாம் தளத்தில் ஆசிரியரின் அறையில் உள்ளே நுழைந்ததும் அவர் என்னை வரவேற்றார். அவருடைய மேஜைக்கு எதிரில் உள்ள நாற்காலியில் நான் அமர்ந்ததும் அவருடைய கையில் நான் எழுதிய எந்த வேலையை செய்யலாம் என்ற புத்தகம் இருந்ததை பார்த்தேன். அதை ஆட்டிகொண்டே இது வெறும் வேலையை தேர்வு செய்யும் வழிகாட்டி என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் வேலையை குறித்த கொள்கைகளை பேசியிருக்கிறீர்கள். புத்தகத்தின் பெயருக்கும் உள்ளடக்கத்திற்கும் பொருத்தமில்லை என்றார். அது உண்மைதான் எனக்கும் தெரியும் என்று நினைத்துக் கொண்டேன். இரண்டாவது அவர் சொன்னது இந்த புத்தகத்திலிருந்து பைபில் வார்த்தைகளை எடுத்துவிட்டால் இது ஒரு கம்யூனிஸ்ட் புத்தகம் என்றார். நான் சிரித்துக்கொண்டே எனக்கு கம்யூனிசம் தெரியாது. நான் எழுதியதெல்லாம் பைபிலிருந்தே எழுதியது. இயேசு கிறிஸ்துவின் வரலாறு இரண்டாயிரம் வருடங்கள், கம்யூனிசத்திற்கோ வயது 100 என்றேன். ஆகவே இயேசு கம்யூனிசத்திலிருந்து எடுத்து இருக்க முடியாது, கம்யூனிசம் வேண்டுமானால் இயேசுவின் போதனையிலிருந்து எடுத்து இருக்கலாம் என்றேன். சற்று நேரம் கிறிஸ்தவத்தை குறித்தும் கம்யூனிசத்தை குறித்தும் எங்கள் விவாதம் தொடர்ந்தது. கடைசியாக என்னுடை புத்தகத்திற்கு அவர்களின் ஜனசக்தி பத்திரிக்கையில் விமர்சனம் எழுத இருப்பதாகச் சொல்லி அவர்களின் நடைமுறையை சொன்னார்கள். அதே ஆண்டு செப்டம்பர் 15 அன்று அவர்களின் ஜனசக்தி பத்திரிக்கையில் அனைவரும் வாசிக்க வேண்டிய மிகவும் நல்ல புத்தகம் என்று கால் பக்கத்திற்கு விமர்சனம் எழுதியிருந்தார்கள். ஒரு கிறிஸ்தவ புத்தகத்திற்கு கம்யூனிஸ்டு பத்திரிகை அனைவரும் வாசிக்க வேண்டிய நல்ல புத்தகம் என்று விமர்சனம் எழுதியிருந்தது என்னை உற்சாகப்படுத்தியது.

ஏற்கனவே புதிய ஜனநாயகம் என்ற கம்யூனிச பத்திரிக்கையை படித்து கொண்டிருந்தேன். ஜனசக்தி ஆசிரியரை சந்தித்தப்பிறகு சில புத்தகங்களை படித்தேன், கிறிஸ்வத்தை குறித்த கம்யூனிசத்தின் கருத்து மதம் ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தது. ஆதிக்கவாதிகள் மனிதர்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க மதத்தை கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் அவர்களின் வாதம். ஆதிக்கவர்க்கம் என்ற குதிரையில் மீதுதான் முதலாளிவர்க்கம் பயணம் செய்கிறது. முதலாளித்துவத்தை சேர்ந்த பெரும்பாலும் நாடுகள் கிறிஸ்தவ நாடுகளாக இருப்பதால் கிறிஸ்தவம் முதலாளிவர்க்கத்தின் கைக்கூலி என்பது பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் நம்புகிறார்கள், உண்மையில் கிறிஸ்தவம் முதலாளித்துவத்தின் எதிரியே ஒழிய முதலாளித்துவத்தை ஆதரிக்கவில்லை என்பததான் உண்மை.

உலகமயமும், தாராளமயமும் கோளோச்சுகிற இந்நாட்களில் தனிமனித உழைப்பு பெருமளவில் சுரண்டப்படுகிறது, முதலாளி வர்க்கமும் அவர்களை தாங்கி பிடிக்கிற ஆதிக்கவர்க்கமும் தின்னுபெருத்து இரத்தத்தை உரிஞ்சும் இராட்சத அட்டைகளாக உருப்பெற்று வருகிறார்கள். பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்தவன் நாட்டைவிட்டு ஓடிபோய் பெண்களுடன் உல்லாசமாக இருக்கிறான். ஆனால் விவசாயத்திற்காக ட்ராக்டர் வாங்க வங்கியில் கடன் பெற்ற விவசாயி திரும்ப பணத்தை கொடுக்க முடியவில்லை என்று தற்கொலை செய்கிறான். முதலாளித்துவதின் கோரப் பசிக்கு இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கவும், வனப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை கொள்ளையடிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரங்களை வளர்ச்சி என்ற பெயராலே அழிக்கவும், பெரு நகரங்களில் பல தலைமுறைகளாக வசிக்கும் சேரி மக்களை, குப்பத்து மீனவர்களை அந்த பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கவும் தனக்கு சேவை செய்யும் அரசியல் அடிமைகளை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள். இவர்களை எதிர்த்து கேள்விகேட்போரை, அல்லது போராடுகிறவர்களை ஒடுக்க, நசுக்க காவல் துறையை ஆளுங்கட்சி குண்டர்களாகவே பயன்படுத்தி வருகிறதை நாம் அன்றாட நிகழ்ச்சியாக பார்த்து வருகிறோம்.

இவற்றை விரும்பியோ விரும்பாமலோ கிறிஸ்தவ திருச்சபைகளும் தலைவர்களும் கிறிஸ்தவ மக்களும் நமக்கென்ன என்று வேடிக்கை பார்த்து வருகிறோம். இவ்வித சமூகத்தீமைகளை கண்டும் அமைதியாக இருப்பதும் இந்த தீமைகளை ஆதரிப்பது ஒன்றுதான். உலகமயம் தாராளமயத்தின் மூலம் கர்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாபத்திற்காக எல்லா தேசங்களிலும் தங்கள் சந்தையை விரித்து வருகிறபடியினால் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ பெயரை கொண்டிருப் பதினாலோ அல்லது கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலிருந்து வருகிறபடியினாலும் கிறிஸ்தவம் முதலாளித்துவத்தின் ஒரு பிரிவாகவே பெரும்பாலோர் கருதுகிறார்கள். முதலாளித்துவத்தின் தலைமையிடத்தில் அமெரிக்கா உட்கார்ந்திருப்பதினாலும், அமெரிக்கா கிறிஸ்தவ நாடாக அறியப்பட்டிருப்பதாலும் (உண்மையில் அமெரிக்கா மதச் சார்ப்பற்ற நாடு) கிறிஸ்தவர்கள் முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் என்று எண்ணுகிறார்கள்.

கார்ப்பரேட் சாமியர்களும் கார்ப்பரேட் திருச்சபைகளும்

கோவை ஈஷா யோகா மையத்தின் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தைப் பற்றி ஒரு பிராமணப்பெண் YouTube-ல் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படுகிற சிவராத்திரி பண்டிகைக்கும் இந்து மதத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இதுவரை நமது வீடுகளில் எப்படி மகாசிவராத்திரியை கொண்டாடினோம், இப்போது இப்படி கொண்டாட வேண்டிய அவசியமென்ன? என்று பலகேள்விகளை அவர்கள் கேட்டிருக்கிறார்கள், உண்மையாகவே ஈஷா மையத்தின் நோக்கம் இந்து மதமோ அல்லது பக்தியோ மக்களை நல்வழிபடுத்துகிற நடவடிக்கையோ அல்ல. மாறாக, பெருமளவில் பணம் சம்பாதிப்பது தான் எனத்தெரிகிறது என்று சொல்லுகிறார். காரணம் அவர்களுடைய இணையதளத்தில் சாதாரண திருனூறு, குங்குமம், பஞ்சாமிர்தம், பிரசாதம் போன்றவை அதிக விலைக்கு வியாபாரம் நடக்கிறது. அதுபோலவே வடக்கே யோகா குரு ராம்தேவ் பல ஆயிரங்கோடி முதலீட்டில் பதஞ்சலி நிறுவனம் நடத்துகிறார். கார்ப்பரேட்டின் லாப நோக்கத்திற்காக மதத்தை, கல்வியை, தண்ணீரை, பூமியின் இயற்கை வளங்களை என யாரையும் எவற்றையும் வியாபாரப்பொருளாக மாற்ற தயங்க மாட்டார்கள். அவ்விதமே இன்று மதம் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறிவருகிறது.

கார்ப்பரேட் திருச்சபைகள்

மெகா திருச்சபைகள் என்ற பெயராலே இன்று கார்ப்பரேட் திருச்சபைகள் உருவாகிவருகிறது. கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் போலவே இந்த சபைகள் லாபம் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. சேவை இங்கு நோக்கம் அல்ல. லாபம் மட்டுமே தாரகமந்திரம். ஒரு பகுதியில் கார்ப்பரேட் வியாபார நிறுவனம் வந்தால் அந்த பகுதியில் உள்ள சிறிய துணிகடைகள், சிறிய மளிகை கடைகள், சிறிய காய்கறி கடைகளை எல்லாம் விழுங்கி ஏப்பம் விடும். அதுபோலவே தான் கார்ப்பரேட் திருச்சபைகளும் தங்கள் பகுதியின் சுற்றுவட்டாரத்திலுள்ள சிறிய சபைகளை விழுங்கி ஏப்பம் விடும்.

மிஷனெரிகள் ஆரம்பித்த திருச்சபைகளெல்லாம் இலாப நோக்கமின்றி சேவை மையங்களாக செயல்பட்டன. ஆனால் மெகா திருச்சபை என்ற கார்ப்பரேட்டு திருச்சபைகள் இலாப நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவை இலாபத்திற்காகவே செயல்படுகிறவைகள். மிஷனெரிகளால் ஆரம்பிக்கப்பட்ட சபைகளை கவனியுங்கள் சுமார் 200 அல்லது 300 பேர் ஆராதிக்கக்கூடிய சபைகளாக இருக்கும். சபை வளரும்போது எந்த பகுதியிலிருந்து மக்கள் அதிகம் வருகிறார்களோ அங்கே ஒரு கிளை சபை ஆரம்பிப்பார்கள் சில காலங்களுக்கு பிறகு அது ஒரு சபையாக மாறும்.

கார்ப்பரேட் திருச்சபையின் முதலீடே பிராமாண்டம் தான். அதிக முதலீடு கொள்ளை லாபம். இந்த சபைகளுக்கு சுமார் 5,000 பேர் முதல் 20,000 பேர் வரை ஆராதனையில் பங்கு பெறுவார்கள். மிஷனெரிகள் ஆரம்பித்த சபைகளில் குறைந்தது ஒரு ஆரம்ப பள்ளியாகிலும் இருக்கும். ஒரு சிறிய மருத்துவமணை, ஒரு முதியோர் இல்லம், ஒரு சிறுவர் விடுதி இப்படி ஏழைகளுக்கு உதவக்கூடிய பல சேவைகளை செய்தது. சபையின் சொத்து சங்கங்ளாக பதிவு செய்யப்பட்டிருக்கும். எந்த தனிநபரும் சொந்தம் கொண்டாட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக சபையின் வருமானம் ஞாயிறுதோறும் சபையின் ஆராதனையில் வாசிக்கப்படும். மேலும் சபையின் அறிவிப்பு பலகையில் போடப்படும். வருடந்தோறும் ஆண்டறிக்கை வெளியிடப்படும். ஆனால் கார்ப்பரேட் திருச்சபைகள் சேவைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லுவார்கள். கடைகள் இருக்கும், ஓட்டல்கள் இருக்கும், பொழுது போக்கும் அம்சங்கள் இருக்கும். வரவு செலவு பற்றி கேட்கக்கூடாது. கேட்டால் கர்த்தருடைய ஊழியக்காரனை கேள்வி கேட்க நீ யார்? அவன் கர்த்தர் ஒருவருக்குதான் கணக்கு கொடுக்க வேண்டியவன் என்று பயமுறுத்தப்படுவார் அல்லது ஒரே சாபங்கொடுத்து பிரசங்கம் செய்வார். சபையின் கோடிக்கணக்கான காணிக்கையும் போதகருக்குத்தான். சபையின் சொத்து போதகர் அவருடைய மனைவி அவருடைய பிள்ளைகள் அல்லது மருமகன்கள் அல்லது மருமகள்கள் இவர்கள் அடங்கிய ஒரு அறக்கட்டளை செயல்படும். அது அவர்களுடைய குடும்ப சொத்து. இதை மறுக்கும் கார்ப்பரேட் திருச்சபையின் வாடிக்கையாளர்கள் உங்கள் கார்ப்பரேட் திருச்சபையின் மாதாந்திர அல்லது வருடாந்திர வரவு செலவு அறிக்கையை எனக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுகொள்ளுகிறேன்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளை அவ்வளவு எளிதாக யாரும் சந்திக்க முடியாது. தொழில் சம்பந்தமாக யாராவது பார்க்க வேண்டுமானால் தரகர்கள் இருப்பார்கள் அவர்களை அணுகவேண்டும். அவர்கள் முதலாளியை சந்தித்து இவர்களை சந்திப்பதினால் கிடைக்கும் லாபத்தை சொல்லுவார்கள், அப்படியே கார்ப்பரேட் திருச்சபையின் முதலாளி போதகருக்கு ஏரிய பாஸ்டர்கள் என்ற தரகர்கள் இருப்பார்கள் அவர்கள் தலைமை போதகருக்கு குறிப்பிட்ட நபரை சந்திப்பதினால் கிடைக்கக்கூடிய இலாபத்தை விளக்குவார். இலாபம் கிடைக்கும் என்றால் மாத்திரமே சம்பந்தப்பட்டவரை அவர் நேரில் சந்திப்பார். மற்றபடி அந்த கார்ப்பரேட் போதகரின் தொடர்பு எல்லாம் கோட்டீஸ்வர நண்பர்களுடன்தான்.

மக்கள் மனநிலையும் பிரமாண்டமும்

ஏழை வயதான ஒரு தாய் எங்களுடைய ஆராதனையில் பங்குப்பெற்று வந்தார்கள் அவர்களை சிலநாட்களாக காணவில்லை. ஒரு நாள் தெருவில் அவர்களை சந்தித்தபோது அவர்களிடம் ஏன் ஆராதனைக்கு வரவில்லை என்று கேட்டேன். அவர்கள் சின்னைமலையில் உள்ள கார்ப்பரேட் திருச்சபைக்கு போவதாக சொன்னார்கள். மேலும் அந்த சபையை குறித்து பிரம்மிப்போடும் ஆச்சரியத்தோடும் சொன்னதுமில்லாமல் அந்த சபைக்குத்தான் செல்லப்போவதாக சொன்னார்கள். நான் அவர்களை வாழ்த்தி அனுப்பிவிட்டேன்.

சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து ஒரு நாள் விடியற்காலையில் என் வீட்டின் வாசலில் அந்த தாயாரும் சில பெண்களும் அழுது கொண்டு நின்றார்கள், என்னவென்று கேட்டேன். அவருடைய மகனை யாரோ கொலை செய்து விட்டார்கள், அடக்கம் செய்ய பணம் இல்லை என்று கேட்டார்கள். அடக்க ஏற்பாடுகளை செய்ய சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு விடிந்த பிறகு என்னுடைய மனைவி நகையை அடமானம் வைத்து அவருக்கு 5000 ரூபாய் கொடுத்தேன். அவர்களும் அந்த பணத்தை கொஞ்ச கொஞ்சமாக திருப்பி கொடுத்துவிட்டார்கள். ஒரு நாள் அந்த தாயாரிடம், ஏன் உங்கள் கார்ப்பரேட் திருச்சபையினிடம் உதவி கேட்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரவெல்லாம் ஏரியா போதகர் முயற்சிசெய்தார், அடக்கம் செய்வதற்கு உதவி செய்கிற திட்டமெதுவும் அவர்களிடம் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள் என்றார். அவசரத்திற்கு உதவிசெய்யாத அந்த சபைக்கு தான் இன்னும் அந்த தாய் செல்லுகிறார், காரணம், பிரமாண்டம் அவர்களின் கண்ணுக்கு பெரிதாக தெரிகிறது.

பிரமாண்டம் என்னும் போதை

மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிற இன்னும் ஒரு உதாரணத்தை சொல்லுகிறேன். ஒரு திருமணத்திற்காக சென்னையிலிருந்து உறவினர்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றிருந்தேன். ஒரு புடவை எடுக்கும்படி சென்னை பெண்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய டவுன் கருங்கல், அதிலுள்ள பெரிய கடைகளில் நுழைந்து வந்தார்கள். அவர்களால் ஒரு புடவையையும் எடுக்க முடியவில்லை. காரணம் என்னவென்றால் இவர்கள் எல்லாரும் சென்னை வாசிகள், சென்னையில் சரவணா, ஜெயச்சந்திரன், சென்னை சில்க்ஸ், போதீஸ் போன்ற பிரமாண்ட கடைகளில் 2000 புடவைகளை அலசிபார்த்து, ஒரு புடவையை தேர்தெடுப்பவர்கள். ஆகவே, இவர்களால் 50 அல்லது 100 புடவைகளில் ஒரு புடவையைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஆகவே, கார்ப்பரேட் திருச்சபைக்கு போன கிறிஸ்தவர்கள், மற்ற சபைகளை ஒரு சபையாகவே கருதமாட்டார்கள். ஆனால் கடவுளோ எங்கே என்னுடைய நாமத்தினாலே இரண்டு அல்லது மூன்று பேர் கூடுகிறீர்களோ அவர்கள் மத்தியில் நானிருப்பேன் என்று சொல்லுகிறார். ஆனால் கார்ப்பரேட் திருச்சபை வாடிக்கயாளர்களோ பிரமாண்டம் என்ற போதையில் இருக்கிறார்கள் அந்த போதையிலிருந்து அவர்களை எப்படி வெளியே கொண்டுவருவது என்பதுதான் தற்போதைய பெரிய பிரச்சனை.

எது திருச்சபை?

சரீரமும் அவயவங்களும்

திருச்சபை இயேசுவின் சரீரத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது. ஒரு சரீரத்தின் அவயவங்களாக சபை மக்களை ஒப்பிடுகிறது. சரீரத்தில் ஒருஅவயவம் பாடுபட்டால் எல்லா அவயவமும் பாடுபடும். ஓரிடத்தில் கூடிவருகிற திருச்சபை மக்களில் ஒருவருக்கு துன்பம் என்றால் அங்கு கூடிவருகிற எல்லா அங்கத்தினரையும் அது பாதிக்கும். எல்லாருமாக சேர்ந்து அவருக்காக பிரயாசப்படும்போது அந்த முயற்சி பலன் தரும். அந்த துன்பத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கும். சென்னை பொது மருத்துவமனையில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு மருத்துவர் இரவு 10 மணிக்கு ஒரு முதியோர் இல்லத்திற்கு வந்து அங்கு அவருக்காக காத்திருக்கிற முதியோர்களை ஒவ்வொருவரையும் தனித்தனியாக பரிசோதனை செய்துவிட்டு மருந்துகளையும் வழங்கிவிட்டு வீட்டுக்கு போகிறார். இலவசமாக இந்த சேவையை அவர் செய்கிறார். காரணம் அந்த முதியோர் இல்லம் அவர் சார்ந்த திருச்சபை நடத்துகிறது. ஒரு பணக்கார் அவர் சபைக்கு வரும் வேலையில்லாத வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம். ஒரு ஆசிரியர் தன்னுடைய சபைக்கு வருகிற ஏழை பிள்ளைகள் படிக்க உதவி செய்யலாம். இதுதான் ஒரு சரீரத்தின் பல அவயவங்கள் என்பது. அதுபோலவே அந்த சபைக்கு வருகிற ஒருவர் தவறான நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்றால் அவரை கண்டிக்கவோ அல்லது நல்வழிபடுத்தவோ மற்றவர்கள் உதவலாம். இதுதான் திருச்சபையை குறித்து கடவுளின் திட்டம்.

மேய்ப்பனும் மந்தையும்

பாஸ்டர் என்ற வார்த்தைக்கு போதகர் என்று தமிழில் சொல்லுகிறார்கள். உண்மையிலேயே அந்த வார்த்தையின் அர்த்தம் மேய்ப்பன் என்பதாகும். பாரம்பரிய சபையிலே நல்ல தமிழில் ஆயர் என்கிறார்கள். பிஷப் என்ற வார்த்தைக்கு பேராயர் (பெரிய ஆயர்) பெரிய மேய்ப்பன் என்ற அர்த்தமாகும். சபை மந்தையாக கருதப்படுகிறது. ஒரு மேய்ப்பன் எத்தனை ஆடுகளை பராமரிக்க முடியும்? சிறப்பாக பராமரிக்க முடியுமானால் சுமார் 100 ஆடுகளை பராமரிக்கலாம். 5,000 அல்லது 10,000 ஆடுகளை ஒரு மேய்ப்பனால் சிறப்பாக பராமரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனென்றால் ஆண்டவராகிய இயேசு சொல்லுகிற மேய்ப்பன் ஒவ்வொரு ஆட்டையும் பேர்ச் சொல்லி அழைக்கிறான், அவைகள் அவன் பின் செல்லுகின்றன. அந்நியனின் குரலை அவை அறியாததினாலே அவைகள் அவனை விட்டு ஓடிப்போம் என்று சொல்லுகிறார். ஒரு பாஸ்டர் தன்னுடைய சபைக்கு வருகிற ஒவ்வொரு சபை அங்கத்தினர்களையும் பெயர் பெயராக அறிந்திருக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தை பற்றியும் அவர்களின் பிரச்சனைப் பற்றியும் அவர்களின் தேவையை பற்றியும் அறிந்திருந்தால் மட்டுமே அவர் இயேசு போதிக்கும் நல்ல மேய்ப்பனாக இருக்க முடியும். 100 குடும்பங்களை சிறப்பாக அறிந்திருக்கலாம் 5,000 அல்லது 10,000 குடும்பங்களை அறிந்திருக்க முடியுமா?

கார்ப்பரேட் திருச்சபையின் போதகர்கள் அதாவது முதலாளிகள் இதற்குதான் நாங்கள் ஏரியா போதகர்கள் வைத்திருக்கிறோமே என்பார்கள். ஆண்டவர் இவர்களைதான் கூலிக்காரன் என்கிறார். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் உயிரை கொடுக்கிறான். கூலிக்காரன் ஓநாய் வருகிறதை கண்டு ஓடிப்போகிறான். ஏனென்றால் அந்த ஆடுகள் அவனுடைய ஆடுகள் அல்ல. கிறிஸ்தவ உபதேசத்தின் அடிப்படையில் மெகா சபைகள், கிறிஸ்தவ சபைகள் அல்ல. அது ஒரு கார்ப்பரேட் வியாபார நிறுவனமே. அங்கு சேவைக்கு இடமில்லை லாபமே நோக்கம்.

சிறிய திருச்சபையில்தான் உண்மையான அன்பு இருக்கும், ஒருவரை ஒருவர் அறிந்திருப்பார்கள், ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் எல்லாரும் ஓடிவருவார்கள். சபைக்கு வருகிறவர் நடவடிக்கை சரியில்லை என்றால் பெரியவர்கள் கண்டிப்பார்கள் அல்லது திருத்துவார்கள். ஆனால் கார்ப்பரேட் திருச்சபையில் 5,000 முதல் 20,000 பேர் வருகிறபடியினால், யார் யாருடைய மனைவியை அழைத்து கொண்டுவருகிறார் என்பதே தெரியாது. அங்கே நடைபெறும் ஆராதனையும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே இருக்கிறபடியினால் பயபக்தியோ பரிசுத்தமோ காணப்படுவதில்லை.

வரலாற்று ரீதியான திருச்சபை

கி.மு. 598 முதல் 538 வரை, சுமார் 60 ஆண்டுகள் யூதர்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்த போது கடவுளை வழிபட எருசலேமில் இருந்தது போல அவர்களுக்கு ஆலயம் இல்லை. ஆகவே தங்கள் பிள்ளைகள் கடவுளையும் மத வழிபாடுகளையும் மறந்துவிட கூடாது என்பதற்காக பத்து குடும்பத்திற்கு ஒரு ஜெபாலயம் (சினகாக்) ஏற்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு நியாயபிரமாணத்தை கற்றுக்கொடுத்தார்கள். இந்த காலங்களில் தான் நியாயபிரமாணத்தை தோல் சுருள்களில் நகல் எழுதும் பழக்கம் ஏற்பட்டு சுழற்சி முறையில் தோல் சுருள்கள் ஜெபாலயங்களுக்கு அனுப்பப்பட்டது. தோல் சுருள்களில் நகல் எடுப்பது ஒரு தொழிலாகவே ஆரம்பித்தது அப்படி தோன்றியவர்கள்தான் புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கிற வேதபாரகர்கள்.

பாபிலோனிய சிறையிருப்பு முடிந்து இவர்கள் எருசலேம் திரும்பிய பிறகும் இந்த ஜெபாலய வழிபாட்டு முறை யூதேயா கலிலேயா மற்றும் சமாரியாவிலும் தொடர்ந்தன. யூதர்கள் எங்கெல்லாம் சிதறப்பட்டார்களோ அங்கெல்லாம் ஜெபாலய வழிபாடு செய்தனர். இன்றும் கொச்சியிலும், கோவாவிலும் இப்படிப்பட்ட ஜெபாலயங்கள் காணப்படுகின்றன. இந்த ஜெபாலயங்களைதான் ஆண்டவராகிய இயேசு தான் உபதேசம் செய்வதற்கு பயன்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பவுலடியாரும் ஆண்டவராகிய இயேசுவின் சீடர்களும் ஜெபாலயங்களையே பயன்படுத்தினர். இந்த ஜெபாலயங்கள்தான் பிற்காலத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களாக மாறியது. ஆதித் திருச்சபையில் 2,000 பேர் 5,000 பேர் என்று இருந்தாலும் அப்படி இருப்பது கடவுளின் திட்டமல்ல, அவர்களை சிதறடித்தார். அவர்கள் எங்கும் திரிந்து சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள் என்று வாசிக்கிறோம்.

கிறிஸ்தவம் முதலாளித்துவத்திற்கு எதிரானது

கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடிப்படையாக இருக்கிற விவிலியம், எகிப்தில் அடிமைகளாகவும் அதன் அரசன் எபிரேய மக்களை கொடுமைப் படுத்தியதினால் கடவுளை நோக்கி கூக்குரல் இட்டதின் நிமித்தம் அவர்களை காப்பற்ற இரட்சகனாகிய மோசே என்பவனை அனுப்பியதிலிருந்து ஆரம்பமாகிறது. அப்படி அவர்களை மீட்ட மோசே தங்களுக்குரிய ஒரு தேசத்தை அவர்கள் அடைந்த போது அவர்களின் நம்பிகைக்கு அடித்தளமாகிய இந்த உலகம், அதைப் படைத்த கடவுள், அவரை வணங்கும் முறைகள் அந்த நாட்டின் சட்டதிட்டங்களை எழுதுகிறார். அதையே முதல் புத்தகமாக விவிலியத்தில் அமைத்திருக்கிறார்கள். ஆகவே விவிலியத்தின் ஆரம்பமே அடிமைத்தன மக்களின் விடுதலையிலிருந்து தான் ஆரம்பமாகிறது.

கிறிஸ்தவ வேதத்தின் மையம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இயேசு என்பதற்கு விடுதலை செய்பவர் என்று அர்த்தம். கிறிஸ்து என்பதற்கு அந்த பணியை செய்ய அபிஷேகிக்கப்பட்டவர் (தெரிந்து கொள்ளப்பட்டவர்) என்று அர்த்தம். இயேசு, தான் ஏன் இந்த உலகத்திற்கு வந்தேன் என்ன பணியை நான் செய்யப் போகிறேன் என்பதை நாசரேத் அறிக்கை மூலம் வெளிப்படுத்தினார். அதில் தரித்திரர்க்கு நற்செய்தி, (தரித்திரருக்கு எது நற்செய்தியாக இருக்க முடியும், அவர்களை அந்த தரித்திரத்திலிருந்து விடுதலை செய்வதற்கான செய்திதான் நற்செய்தியாக இருக்க முடியும்) இருதயம் நறுங்குண்டவர்களை குணமாக்கவும் (மனரீதியாக உடைந்து போனவர்களை ஆறுதல் அளிப்பது, நம்பிகை கொடுப்பது,) சிறைப்பட்டவர்களை விடுதலை செய்யவும் (அரசில், பொருளாதார, தனிமனித அடிமைத்தனத்திலிருந்து விடுதலை) காயம்பட்டவர்களை காயம் கட்டவும் வந்தேன் என்று சொல்லுகிறார்.

இந்த வாழ்க்கையின் முடிவுப் பற்றி இயேசு சொல்லும்போது எதன் அடிப்படையில் மனிதனை நியாயந்தீர்ப்பார் என்றால், நான் பசியாயிருந்தேன் எனக்கு ஆகாரம் கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன் என் தாகத்தை தீர்த்தீர்கள், அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள், ஆடையில்லாமல் இருந்தேன் எனக்கு உடுத்த கொடுத்தீர்கள், வியாதியாயிருந்தேன் என்னை விசாரிக்க வந்தீர்கள், காவலிலிருந்தேன் என்னைப் பார்க்க வந்தீர்கள் என்று கடைசிநாளில் இயேசு மனித குலத்திற்கு சேவை செய்தவர்களை பார்த்து கூறுகிறார். அப்போது அவர்கள் நீர் எப்போது அப்படியிருந்தீர், நாங்கள் எப்போது உமக்கு இந்த உதவிகளை செய்தோம் என்று கூறுகிறார்கள். அதற்கு அவர் மிகவும் சிறியவராகிய என் சகோதரர்களில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்றார். இப்படி செய்தர்களுக்குதான் மோட்சம் அல்லது சொர்க்கம் என்று சொல்லுகிறார்.

மதத்தலைவர்களாகிய போப்புக்கு அல்லது மார்டரேட்டர்களுக்கு, போராயர்களுக்கு, ஆயர்களுக்கு, அல்லது போதர்களுக்கு அல்லது நற்செய்தி அறிவிப்பவர்களுக்கு ஊழியக்காரர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு என்று அவர் குறிப்பிடாமல் ஏழை எளிய மக்களுக்கு அவர்களுடைய தேவையில் அவர்களுக்கு உதவி செய்கிறவர் களைத்தான் பரலோக ராஜ்ஜியத்தில் அனுமதிப்பார் என்று திட்டவட்டமாக இயேசு கூறுகிறார். அவருடைய போதனையில் ஐஸ்வரியவான் (பணக்காரன்) பரலோக ராஜ்ஜியத்தில் (கடவுளுடைய ராஜ்ஜியத்தில்) பிரவேசிப்பதை விட ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது எளிதாக இருக்கும் என்றார். மேலும் ஐஸ்வரியவான் லாசரு உதாரணத்தில் ஐஸ்வரியவான் வீட்டு வாசலில் உடலெல்லாம் புண் வந்து நாய்கள் நக்கி செல்லும் நிலையில் உள்ள ஏழையும் ஐஸ்வரியவானும் மரித்து ஐஸ்வரியவான் நரகத்திற்கும் லாசரு பரலோகத்திற்கும் செல்வதாக கூறுகிறார்.

மத நடவடிக்கைக்களை விட நீதி நியாயமுமே முக்கியம் என்பதை வலியுறுத்துகிற அநேக வேதபகுதிகள் உண்டு. குறிப்பாக ஏசாயா 1:13-17, இனி வீண் காணிக்கைகளை கொண்டுவர வேண்டாம், தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது, நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஒய்வுநாளையும் சபைக்கூட்டத்தையும் நான் இனி சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது, அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது, அவைகளை சுமந்து இளைத்துப்போனேன். நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணாலும் கேட்க மாட்டேன், உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது, தீமை செய்வதைவிட்டு ஓயுங்கள், நன்மை செய்ய படியுங்கள், நியாயத்தேடுங்கள், ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். இந்த வேதப்பகுதிகள் மத நடவடிக்கைகளா அல்லது சமூகத்தின் நீதி நியாயமா? எது என்று கேட்கும்போது சமூகத்தின் நீதிநியாயமே முக்கியத்துவம் என்று கடவுள் சொல்லுகிறார். ஆகவேதான் உலக பிரசித்திப்பெற்ற கம்யூனிஸ்டு தலைவர் கியூபா அதிபர் பெடல்கேஸ்ட்ரோ அவர்கள் ஒரு பாதிரியார்கள் மாநாட்டில் பேசும்போது முதலாளிவர்க்கம் கிறிஸ்துவத்தை பாராட்ட ஆயிரம் காரணம் இருக்குமானால் கம்யூனிஸ்டுகள் கிறிஸ்தவத்தை பாராட்ட பத்தாயிரம் காரணங்கள் இருக்கிறது என்றார்.

முதலாளி வர்க்கத்துக்கு கைமாறிய திருச்சபை

முதல் மூன்று நூற்றாண்டுகளில் ரோம பேரரசினால் பல்வேறு கொடுமைகளை சந்தித்த கிறிஸ்தவம். அசுர வளர்ச்சி கண்டது. குறிப்பாக நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை கொதிக்கும் மெழுகு அல்லது தார் தொட்டிகளில் முக்கியெடுத்து அவர்களை எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் குதிரை சவாரி செய்வான். கிளேடியேட்டர் என்ற அரங்குகளில் பசியுடன் இருக்கும் விலங்குகளுக்கு இரையாக கிறிஸ்தவர்களை கொடுப்பான். மரித்துப் போன சடலத்தை உயிருடன் இருக்கும் கிறிஸ்தவர்களின் முகத்தோடு முகத்தை இணைத்து கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்தான். ஆனால் எவ்வளவுக்கெவ்வளவு நசுக்கப்பட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு பெருகினார்கள். நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சிக்கு வந்த கான்ஸ்டான்டின் நோபில் இனி கிறிஸ்தவத்தை எதிர்ப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தார். ஆகவே, அதை தன் வசப்படுத்த வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவத்தை ரோம அரசின் அங்கிகரிக்கப்பட்ட மதமாக அறிவித்தார். கூடவே தான் கிறிஸ்தவ ஆதரவாளன் என்பதை காண்பித்துக் கொள்ள கிறிஸ்தவ மதத்தில் பல்வேறு பண்டிகைகளை பல்வேறு விழாக்களை அறிமுகப்படுத்தினான். கூடவே பல்வேறு சிலைவழிப்பாட்டையும், புனிதர்களை வணங்கும் முறைகளையும் அறிமுகப்படுத்தினான். படிப்படியாக கிறிஸ்தவ மதத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆதிக்க வர்க்கம் தன்னை எதிர்க்கும் சக்திகளை அழிக்கும். அது அழிக்கக்கூடாதபடி பலம் வாய்ந்ததாக இருந்தால் அதனுடன் தன்னை இணைத்துக் கொள்ளும். பின்பு அதன் தலைமையை கைப்பற்றும் பின்பு மீண்டும் அதை தனக்கு அடிமையாக மாற்றும். இதற்கு உதாரணமாக, தமிழ்நாட்டில் பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகதான் திராவிட இயக்கங்கள் எழும்பின ஆரம்பத்திலேயே அதை அழிக்க ஆரியம் பல்வேறு உபாய தந்திரங்களை மேற்கொண்டது. சர். பி,டி, தியாகராஜர், நாயர், ஈ.வே.ரா. பெரியார், அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் தீவிர பிரச்சாரங்களினால் அது வேகமாக வளர்ந்தது. ஒரு கட்டத்தில் திராவிட இயக்கங்களை அழிக்க முடியாது என்ற நிலைக்கு வந்தபிறகு திராவிட இயக்க பற்றாளர்களை போல நடித்த பிராமணப் பெண் எம்.ஜி.ஆர் மூலம் உள்ளே நுழைந்து எந்த ஆரிய ஆதிக்கசக்திக்கு எதிராக திராவிட இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அதே ஆரியப் பெண் திராவிட இயக்கத்தின் தலைமையை கைப்பற்றி திராவிடர்களை தன் காலில் விழவைத்ததும், திராவிடர்களை மீண்டும் அடிமைகளாக மாற்றியதும் நாம் யாவரும் அறிந்ததே. ஆரியப்பெண்ணால் வளர்க்கப்பட்ட திராவிட அடிமைகள் இன்று வடநாட்டு ஆரிய மேலாதிக்க வார்க்கத்திற்கு அடிமை சேவைகள் செய்வது அறிந்ததே. அதாவது திராவிடர்களின் கையை வைத்தே திராவிடர்களின் கண்களை குத்துவததான் ஆரியத்தின் சூழ்ச்சி அது இன்றும் தொடருகிறது. அதேவண்ணமாகத்தான் அரசியல் மேலாதிக்கத்திற்கும், மதமேலாதிக்கத்திற்கும் எதிரான கிறிஸ்தவம், முதலாவதாக ரோம பேரரசன் கான்ஸ்டான்டின் நோபில் மூலம் அரசியல் மேலாதிக்கம் கைப்பற்றியது. பின்பு போப்புகள் மூலம் மத மேலாதிக்கம் கிறிஸ்தவத்தை கைப்பற்றியது.

ஆகவே வேதம் போதிக்காத, இயேசு சொல்லாத, நம்மை அடிமைப்படுத்தும் ஆதிக்க வர்க்கத்தின் பிரதிநிதியாக இருக்கிற கர்ப்பரேட் திருச்சபையின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்று முழு சுதந்திரோடு ஆண்டவரை தொழுது கொளுவோம்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.