முகப்பு
images/banners/slider/john3-16.jpg

உங்களால்தான் நாங்கள் கெட்டோம் கிறிஸ்தவ உலகில் ஊழியக்காரர்கள் சிலரை குறிப்பாக வரம் பெற்றவர் என்று கூறிக்கொள்ளும் சிலரை அவர் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்கள் அல்லது அவர் மூலமாக கூட்டத்தில் சுகம் பெற்றவர்கள். அந்த குறிப்பிட்ட ஊழியரை அளவுக்குமீறி நம்பிவிடுவதால், எல்லை மீறி அந்த ஊழியரை வெறித்தனமாக நேசிக்கவும் தொடங்கிவிடுகிறார்கள். அந்த நேசம் அல்லது நன்றி அந்த ஊழியர்கள் தவறு செய்கிறார்கள் அல்லது பாவத்தில் விழுந்துவிட்டார்கள் என்றாலும் அதை பெரிதாக நினைக்காமல் தொடர்ந்து அவர்களை நேசிக்கிறார்கள். அந்த ஊழியர்கள் பொய் பேசுகிறார்கள் என்று தெளிவாக அறிந்தாலும் அதை அவர்கள் பொருட்டாக நினைப்பதில்லை. மட்டுமல்ல, தொடர்ந்து அவர்கள் பணம் அனுப்பி தாங்குவதால் அந்த குறிப்பிட்ட ஊழியர்கள் மேலும் மேலும் தவறு செய்ய இந்த விசுவாசிகளே காரணமாயிருக்கிறார்கள். தீர்க்கதரிசனம் என்ற பெயரில் அவர்கள் துணிந்து பொய் பேசுகிறார்கள் என்று அறிந்தாலும் பரவாயில்லை பிரதர் அவர் கூட்டத்தில்தான் நான் இரட்சிக்கப்பட்டேன் என்று களங்கமில்லாமல் அந்த ஊழியரின் பொய்யை பெரிதுபடுத்துவதில்லை. மேலும் மேலும் அந்த ஊழியர்கள் இவர்கள் கண்மூடித்தனமாக காட்டும் பரிவு அந்த ஊழியரை அதல பாதாளத்தில் தள்ளுகிறது என்பதை இந்த விசுவாசிகள் உணருவதில்லை. இப்படிப்பட்ட விசுவாசிகள் காண்பிக்கும் வெறித்தனமாக அன்பு பல ஊழியர்களை தொடர்ந்து பாவம் செய்ய தூண்டுகிறது. இவர்களாலேயே அந்த ஊழியர்கள் நரகத்துக்கு பயனிக்கிறார்கள். பாண்டிச்சேரி ஊழியர் சகோ.சாம்சன்பால் அவர்கள் ஜீவநீரோடை என்ற தன் பத்திரிக்கையில் மிகவும் நாசூக்காக இடித்துரைத்திருக்கிறார். வாசித்துப்பாருங்கள். நரகத்திலிருந்து ஒரு ஊழியன் எழுதும் கடிதம் ஏனென்றால் நீங்கள் என்னை நேசித்தீர்கள்: நான் சொன்ன பல விஷயங்கள் உண்மைகள் அல்ல. ஆனால் நீங்கள் நான் சொல்வதெல்லாம் உண்மையைத்தான் இருக்கும் என்றீர்கள். ஏனென்றால் என்னை நீங்கள் நேசித்தீர்கள். ஆனால் உங்களின் நேசம் நான் பொய்களில் வளர காரணமாகிவிட்டது. ​ நான் ஊழியத்தில் நடத்திய பல செயல்கள் தவறானவை. ஆனால் நீங்களோ இதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி என் தவறுக்கு ஆதரவாயிருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் என்னை நேசித்தீர்கள். ஆனால் உங்களின் நேசம் நான் செய்த தவறுகளைநியாயப்படுத்தி வாழ என்னை பழக்கிவிட்டது. ​ நான் ஜீரோவாயிருந்த தவறான என் ஊழிய விஷயங்களில் நான் விரும்பியபடி என்னை ஒரு ஹீரோ என்று சொன்னீர்கள். ஏனென்றால் என்னை நீங்கள் நேசித்தீர்கள். ஆனால் உங்களின் நேசம் உங்களுக்கு நான் ஜீரோவாயிருந்தாலும் ஹீரோவாக நான் மதிக்கப்படவேண்டும் என்ற சிந்தையை எனக்குள் வளர்த்துவிட்டது. என் வாழ்வில் பாவங்கள் பல செய்து பிசாசுக்கு அருகே நான் இருந்தேன். ஆனாலும் என்னை பரலோகத்துக்கு போய்வரும் ஒரு தேவ தூதனாகவே உங்களுக்கு நான் என்னை காண்பித்தேன். ஆனால் நீங்களாக என்னை ஆராய்ந்து பார்க்க விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் என்னை நேசித்தீர்கள். ஆனால் உங்களின் நேசம் என்னை நிரந்தர மாய்மாலக்காரனாக்கிவிட்டது. ​ நான் பரலோகம் போய்வந்ததாக பொய் சொன்னேன். தேவனை நேரடியாக சந்தித்து பேசி வந்ததாகவும பொய் சொன்னேன். நீங்களோ பரவசத்தோடு என்னை புகழந்து கை தட்டினீர்கள். வேதம்சொல்வதைவிட நான் சொன்னதுதான் உங்களால் கேள்வியின்றி நம்பப்பட்டது. ஏனென்றால் நீங்கள் என்னை நேசித்தீர்கள். ஆனால் உங்களின் நேசம் வேதத்திற்கு புறம்பாககதை சொல்லும் திறமையில் என்னை மிக அதிகம் வளர்த்துவிட்டது. நான் தேவன் எனக்கு ஒரு திட்டம் தந்தார் என்று கூறியபோதெல்லாம் நீங்கள் கைதட்டிகரகோஷம் செய்து வரவேற்றீர்கள். நான் எனக்கு நீங்கள் அள்ளிக்கொடுத்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் வரும் என்று கூறிபோதெல்லாம் என்னுடைய பையை நீங்கள் தாராளமாய் நிரப்பினீர்கள். ஏனென்றால் நீங்கள் என்னை நேசித்தீர்கள். ஆனால் அந்த நேசம் என்னை புதுப் புதுப் பொய்திட்டங்களை உருவாக்கி கடவுள் பேரில் பொய் சொல்லவைத்தது என்னை பெரும் பணக்காரானாக்கிக்கொள்ளும் ஆசையை வளர்த்துவிட்டது. ​ நான் என் மனதிலிருந்து பேச விரும்பியவைகளையெல்லாம் கர்த்தர் பேசினார் என்று பொய் சொன்னேன். நீங்களும் அதனை அப்படியே நம்பிவிட்டீர்கள். அப்படி நம்புவதுதான் விசுவாசம் என நினைத்தீர்கள். ஏனென்றால் நீங்கள் என்னை நேசித்தீர்கள். ஆனால் நீங்கள் என்னை நேசித்த காலம் முழுவதும்,நான் பேசுவதை கடவுள் பேசியதாக தொடர்ந்து பொய் சொல்லும் துணிகரத்தை வலுப்படுத்திவிட்டது. நான் சொன்ன 10 தீர்க்கதரிசனங்களில் ஒன்பது நிறைவேறவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நான் சொன்னபடியே எப்படியோ எதேச்சையாக நிறைவேறியது. ஆனால் நீங்களோ நிறைவேறாத 9 தீர்க்கதரிசனங்களைகுறித்து என்னை நீங்கள் நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று நிதானிக்காமல், நிறைவேறின ஒன்றைவைத்து என்னை மிகப்பெரிய தீர்க்கதரிசி என்று புகழ்ந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் என்னை நேசித்தீர்கள். ஆனால் உங்களின் நேசம் என்னை கள்ளத்தீர்க்கதரிசியாகவே வாழ்ந்து முடிக்க வகை செய்துவிட்டதே! நான் கர்த்தரின் பேரைச்சொல்லி கள்ளத்தனமான வழிகளில் என்னை சாலொமோனைப்போல செல்வவளம் மிக்கவனாக மாற்றினேன். நீங்களோ கர்த்தர் என்னை ஆபிரகாமைப்போல ஆசீர்வதித்திருப்பதாக சொன்னீர்கள். நான் ஆஸ்தி சேர்ப்பதிலும், ஆடம்பர வாழ்வில் திளைப்பதிலும் குறியாயிருந்தேன். நீங்களோ என்னை கர்த்தர் எவ்வளவாய் ஆசீர்வதித்திருக்கிறார் என்று கூறி கர்த்தரை துதித்தீர்கள். ஏனென்றால் நீங்கள் என்னை நேசித்தீர்கள். ஆனால் உங்களின் நேசம் இன்னும் இன்னும் காணிக்கைகளால் என்னை சவுகரியவான் ஆக்கவும், மக்களின் கடின உழைப்பைக்கொண்டு என்னைஆடம்பரங்களில் ஊறிப்போகவும் பாதை அமைத்துக்கொடுத்தது. ​ ஆம், நீங்கள் என்னை கர்த்தரின் ஊழியர் என்று நம்பி ரொம்பவும் நேசித்தீர்கள். ஆனால் ஒரு தேவ ஊழியன் வேத வார்த்தைகளை விடவும் தேவனுடைய சத்தியங்கைளவிடவும் மனுஷரால் அதிகமாக நேசிக்கப்படும்போது என்ன நடக்குமோ, அது எனக்கும் நிகழ்ந்துவிட்டது. உங்களின் நேசம்என்னை நான் ஒரு போதும் ஆராய்ந்து பார்த்து சரிசெய்யமுடியாதபடி என்னை கடினப்படுத்தியது. அந்த கடின மனம் இன்று என்னை நரகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும்பரலோகத்திற்கு போய்வந்ததாக பலமுறை பொய் சொன்ன நான் இப்போது நான் தள்ளப்பட்டிருப்பதோ நரகத்தில். இதற்ககெல்லாம் காரணம் உங்களின் கண்மூடித்தனமான சத்திய சார்பற்ற என்மேல் வைத்த அன்பும், நம்பிக்கையும் முக்கியமான காரணம் ஆகும். இப்படியே நீங்கள் தொடர்ந்தால் நீங்களும் நானிருக்கும் இடத்திற்குதான் வந்துசேர்வீர்கள் என்பது திண்ணம். இதனை உங்களுக்கு அறிவிப்பது எப்படி என்று தெரியாமல் இங்கேயே முனகிக்கொண்டிருக்கிறேன்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.