கட்டுரைகள்

இயேசுகிறிஸ்துவை இரட்சகராக, பாவமன்னிப்பை அருளுகிறவராக உண்மையான, உயிருள்ள தெய்வமாக மற்றவர்களுக்கு அறிவிக்கும்போது, அறிக்கை செய்யும்போது மிஷனரிகள் கொல்லப்படுவதைஅவர்கள் இரத்தசாட்சிகளாய் மரித்தார்கள் என்று கூறக்கேள்விப்பட்டிருக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் எல்லாரும் கிறிஸ்துவை இரட்சகராக அறிவித்த காரணத்தால் அனைவருமே உயிரோடு கொல்லப்பட்டார்கள். ஆப்பிரிக்கா, நியூகினி தீவுகள், ரஷ்யா, சீனா இப்படிப்பட்ட நாடுகளில் இயேசுவை அறிவிக்க சென்ற பலர் அங்குள்ள மக்களால் கொல்லப்பட்டு இரத்த சாட்சிகளாய் மரித்தனர்.

ஆனால் மார்டீன் லூத்தர் கத்தோலிக்க சபையிலிருந்து புராட்டஸ்டன்ட் சீர்திருத்த பிரிவை தொடங்கிய காலத்தில் பலர் வேத புத்தகத்தின் அருமையை கர்த்தரின் வசனத்தின் வல்லமையை, வசனத்தின் ஆறுதலை ருசிக்கவும் அனுபவிக்கவும் வாஞ்சித்தார்கள். ஆனால் அந்த சீர்திருத்த கால ஆரம்பத்தில் பாரம்பரிய கிறிஸ்தவ கத்தோலிக்க சபையானது கிறிஸ்துவையும், மரியாளையும் மரித்த பரிசுத்தவான்களின் சிலைகளைமட்டும் வணங்கவும், சில கிறிஸ்தவ சடங்காசார முறைகளை பின்பற்றவும் கிறிஸ்தவத்திலேயே சில மூடநம்பிக்கைகளை பின்பற்றவும், கிறிஸ்தவ மத தலைவர்கள் சபை மக்களை கட்டாயப்படுத்தினர். நாட்டின் ஆளுகையும் அவர்கள் கையில்தான் இருந்தது. அவர்கள் கட்டளையின்படிதான் சபைகளும் நடத்தப்பட்டது.

வேதம் வாசித்ததால் கொல்லப்பட்ட இரத்தசாட்சி:

இங்கிலாந்து தேசத்தில் சீர்திருத்த சபை தொடங்கிய ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவ பெற்றோரால் உண்மையாய் சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படி வளர்த்தப்பட்ட வாலிபன்தான் வில்லியம் ஹன்டர் (William Hunter) என்ற வாலிபன் ஆவிக்குரிய பெற்றோர்களால் மெய்யான தெய்வ பக்தியுள்ள வழியில் வளர்க்கப்பட்டவன்.

ஒருநாள் லண்டனில் உள்ள எஸெக்ஸ் (Essex) பட்டிணத்தில் உள்ள பிரென்ட்உட் (Brent Wood) என்னும் இடத்தில் உள்ள ஆலயத்துக்கு ஆராதனையில் கலந்துக்கொள்ள ஆலயம் தொடங்கும் முன்பே ஆலயத்திற்குள் சென்றுவிட்டான். அங்கு மேசையின்மீது வைக்கப்பட்டிருந்த வேத புத்தகத்தை கண்ட அவன் ஆவலோடு அதை திறந்து வாசிக்க ஆரம்பித்தான்.

அந்த காலத்தில் பிஷப் அரண்மனை, அலுவலகம், அதை அடுத்து பிஷப் நீதிமன்றம் என்று அமைந்திருக்கும். இப்போது சிஎஸ்ஐ டையோசிஸ் கோர்ட், சிஎஸ்ஐ சினாட் கோர்ட் என்று ஒன்று பெயருக்கு இயங்கிக்கொண்டிருப்பதுபோல் அல்ல. அக்காலத்தில் பிஷப் கோர்ட்டுக்கு மரண தண்டனைதீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் இருந்தது. அந்த காலத்தில் வேதத்தை மிகமிக பரிசுத்த புத்தகமாக மாத்திரம்காட்சிபொருளாக மாத்திரம் வைத்திருந்தனர். பிஷப் குறிப்பிட்டவர்கள் தவிர வேறு யாரும் வேத புத்தகத்தை தொட்டுவிடகூடாது. அத்தனை பரிசுத்த புத்தகமாக மக்களை பயமுறுத்தி நம்ப வைத்திருந்தனர். இந்த வாலிபன் அன்று ஆலயத்துக்குள் இருந்த வேத புத்தகத்தை திறந்து வாசித்தான். வாசிக்க வாசிக்க அவனுள் சொல்லமுடியாத சந்தோஷம் பெருகியது. இச்சமயத்தில் பிஷப் நீதிமன்ற அதிகாரி ஒருவர் அந்த பையன் வேதபுத்தகத்தை கையால் தொட்டு திறந்து வாசிப்பதை பார்த்து அந்த புனிதமான புத்தகத்தை நீ எப்படி தொடலாம்?. இது பெரும் குற்றமாக சபை சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. உடனே வில்லியம் ஹன்டர் பிஷப் காவலாளர்களால் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவனோ அந்த வேதம் வாசிக்க வாசிக்க மிக ஆறுதலாகவும், உலகில் வாழ பல நல்ல பரிசுத்த வழிகள் அதில் எழுதப்பட்டுள்ளதாகவும் ஆவிக்குரிய முன்னேற்றத்துக்காக நான் அதை வாசித்தேன் என்றான்.

அந்த அதிகாரி அந்த வாலிபனை பிஷப் முன்பாக கொண்டுபோய் நிறுத்தினார். (இப்போதும் கேரள மாநிலத்தில் உள்ள சில கிறிஸ்தவ சபைகளின் பிஷப்மார்களின் வீட்டை அரண்மனை என்றுதான் அழைக்கப்படுகிறது. மார்தோமா, ஜேக்கபைட், கத்தோலிக்க சபைகளின் பிஷப் இல்லம் அரண்மனை என்றுதான் அழைக்கப்படுகிறது. பிஷப் அவர்களை திருமேனி என்றுதான் அழைக்கிறார்கள். திருமேனி என்றால் உயர்ந்த பரிசுத்த சரீரம் உள்ளவர் என்று அர்த்தமாகும். அந்த அர்த்தத்தில்தான் பழையகால கேரள உயர்ஜாதி பிராமணர்கள் எல்லாரையும் கேரள நாட்டிலுள்ள அனைவரும் திருமேனி என்றுதான் அழைப்பார்கள். இப்போதும் இந்த நவீன காலத்திலும் பலர் அப்படியே அழைக்கின்றனர்.

சில இடங்களில் சிஎஸ்ஐ பிஷப்மார்களும், தங்களையும் திருமேனி என்று அழைக்கப்படுவதை விரும்புகின்றனர். (அது ராஜ ஸ்தானத்து பெருமைக்குரிய பெயர்). பிஷப் அவர்கள் வாலிபனைப் பார்த்து மகா பரிசுத்த வேதபுத்தகத்தை நீ தொட்டு வாசிக்க அனுமதியளித்தது யார்? என்று ஆத்திரத்துடன் கேட்டார். அதற்கு அந்த வாலிபன் முன்பு பிஷப் நீதிமன்ற அதிகாரியிடம் கூறிய பதிலையே பிஷப்பிடமும் கூறினான்.

இனி நீ வேதத்தை தொடுவதோ, வாசிப்பதோ கூடாது என்று கண்டிப்பாக அவனுக்கு கட்டளையிட்டார். ஆனால் அந்த பையனோ சற்றும் பயப்படாமல் நான் உயிரோடு இருக்கும் காலம் வரை வேதத்தை எங்கிருந்தாலும் இரகசியமாக வாங்கி படிக்க புதிய தீர்மானம் எடுத்திருப்பதாகவும் அது என்னை பரிசுத்தமாகவும், உண்மையுள்ளவனாகவும் வாழவைக்க உதவும் என்று தான் நம்புவதாகவும் கூறினான்.

அவனின் தீர்க்கமான பதிலால் பிஷப் கோபமுற்று இவன் ஒரு கிறிஸ்தவ மத விரோதி என்று குற்றஞ்சாட்டி பிஷப்பின் குற்றசாட்டுடன் நீதிபதிமுன் நிறுத்தப்பட்டான். கிறிஸ்தவ சபைக்கு எதிரான வேத புரட்டன் என்று அவன்மேல் குற்றஞ்சாட்டப்பட்டு லண்டனிலிருந்து பெரிய பிஷப்புக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. செயின்பால்ஸ் என்ற இடத்திலிருந்த கிறிஸ்தவ மத சம்பந்தமான நீதிமன்றத்துக்குமுன் அவன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டது. இங்கு அவனை உயிரோடு எரிக்கப்படவேண்டும் என்றும் உடனே தீர்ப்பும் வழங்கப்பட்டது.

கிறிஸ்தவ சமூகம் - ஒரு நல்ல கிறிஸ்தவனையே கொல்லும் கொடுமை அங்கு நடந்தது அந்த வாலிபன் மரணதண்டனை நிறைவேற்றும் வரை ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். பல நண்பர்கள், உறவினர்கள் அவனை சந்தித்து போனார்கள். பரிதாபப்பட்டார்கள் அவ்வளவே! ஆனால் அந்த பையனை பெற்ற தாயும் - தகப்பனும் ஜெயிலில் அவனை பார்க்க வரும்போதெல்லாம் தன் மகன் மன்னிப்பு கேட்டு மரண தண்டனையிலிருந்து தப்பிக்கும் ஆலோசனையை கூறாமல், மகனே நீ தொடங்கிய ஆவிக்குரிய ஜீவிய வழியிலேயே கடைசிவரை தொடர்ந்து நில் என்று அவன் சோர்ந்துபோகாதபடியும் மரணத்துக்கு அவனை ஆயத்தப்படுத்தும் வண்ணமாகவும் ஜெபம் செய்தார்கள். கிறிஸ்துவினிமித்தம் தன் ஜீவனையே இழக்க முன்வந்த தன் மகனுக்காக அந்த பெற்றோர் பெருமையடைந்து இப்படி ஒரு மகனை எங்களுக்கு கொடுத்தீரே என்று தேவனை துதித்ததை ஜெயில் அதிகாரிகள் கண்டு அதிசயித்தார்கள்.

அந்த வாலிபன் பெற்றோரோடு கூறினான். அம்மா என்னை ஒரு மர கம்பத்தில் இருக்க கட்டி கீழே நெருப்பை எரிய விட்டு கொல்லப்போகிறார்கள். அந்த நெருப்பு சூடும், எரிச்சலும் கொஞ்சநேரம் மட்டும்தானே! அதற்குள் நான் மரித்து கர்த்தரின் சமூகத்தில்போய் சேர்ந்துவிடுவேன். அங்கு வேதனையோ, எரிச்சலோ இல்லாத அந்த இடத்தில்போய் நிலையான பேரின்பத்தை அனுபவிப்பேனே! அப்படித்தானே நம் வேத புத்தகத்தில் எழுதியிருக்கிறது. கொஞ்சகாலம் பாடு அனுபவிக்கிறவர்கள் என்று வசனத்தில் குறிப்பிட்டுள்ளதை ஞாபகப்படுத்தி மகன் பெற்றோரை ஆறுதல்படுத்தினான். அந்த கொஞ்சநேரம் அனுபவிக்கபோகிற நெருப்பின் வேதனைக்குபின் கிறிஸ்து எனக்கு மகிமையின் கிரீடத்தை வாக்கு பண்ணியிருக்கிறார் என்று எல்லாரிடடும் கூறி மகிழ்ந்தான்.

1925ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி பொழுது விடிந்தவுடன் அவன் நண்பன் ஒருவன் ஜெயிலுக்கு வந்து அந்த வாலிபனைக்கண்டு பயப்படாதே என்று உனக்கு ஆறுதல் கூற வந்தேன் என்று மிகவும் துயரத்துடன் கூறினான். நான் எதற்கும் பயப்படவில்லை என்னை கடைசிவரை தாங்கக்கூடிய ஒன்று என் இருதயத்தில் இருக்கிறது என்று கூறினான். இதை கேட்ட அவன் நண்பன் அதற்குமேல் அவனிடம் பேசமுடியாமல் கதறி அழுதான்.

கொலைகளத்துக்கு அந்த வாலிபன் கொண்டுபோகப்பட்டான். அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளின்மேல் முழங்கால் படியிட்டான். அந்த வாலிபன் ஹன்டருடைய சொந்த சகோதரன் நல்ல விசுவாசி. அவன் அருகே நின்று மரணசோர்வு தம்பிக்கு உண்டாகாமல் இருக்க வசனங்களை ஞாபகப்படுத்திசொல்லி அவனை ஊக்குவித்தான். நெருப்பு பற்றவைக்கப்பட்டது. அப்போது உடனே அவன் சகோதரன் தம்பி.வில்லியம் திடன்கொள்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று மாத்திரம் சொல் என்றான். நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்போது அந்த வாலிபன் வில்லியம் கர்த்தாவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்றான். இதுவே அந்த வாலிபனின் கடைசி வார்த்தையாக இருந்தது. அந்த இரத்தசாட்சியின் பொறுமையுடனும் முறுமுறுப்பில்லாமலும் தைரியத்துடனும் தன் ஜீவனை விட்டான்.

அந்த ஆரம்ப நாட்களில் வேத புத்தகம் யாரோ ஒரு சிலரிடம்தான் இருந்தது. அதை இரகசியமாய் சென்று வாசிப்பார்கள். வேதம் புத்தகம் வைத்திருந்தாலும், வேதாகமம் வாசித்தாலும் தண்டனை என்று அறிவிக்கப்பட்ட காலம் அது. காரணம், மக்கள் அதை வாசித்தால் கேள்வி கேட்பார்கள். வேதம் வாசித்து மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டால் அன்றைய ஆயர்கள், பிஷப்மார் பணம் கேட்டு மக்களை ஏமாற்ற முடியாது. அந்த முறையில்தான் மரித்துப்போன மூதாதையர் பெயரில் பாவமன்னிப்பு சீட்டு விலைக்கு விற்கப்பட்டது. ஆகவே வேதபுத்தகம் புனிதமானது. அதை யாரும் தொடக்கூடாது, படிக்கக்கூடாது என்றெல்லாம் ஜனங்களை ஏமாற பண்ணினார்கள். அதையும்மீறி மார்ட்டீன் லூத்தர் போல் திருட்டுதனமாக வேதத்தை படித்து உண்மையை தெரிந்து மற்றவர்களுக்கு அதை அறிவித்தததால்தானே புரட்சி வெடித்தது, புராட்டஸ்ட்ன்ட் உருவானது. ஆகவே வேதத்தை தொட்டால் தண்டனை, படித்தால் மரணதண்டனை என்று மக்களை பயமுறுத்தி வைத்திருந்த காலம் அது.

ஆனால் இன்றைக்கு விலை அதிகம் கொடுத்து விலை உயர்ந்த வேத புத்தகத்தை வாங்கி அதை வாசிக்க மனமில்லா பெயர்கிறிஸ்தவர்கள் எத்தனைப்பேர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.